Book of Common Prayer
தாவீதின் ஒரு பாடல்
103 என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி!
என் ஒவ்வொரு அவயவங்களே அவரது பரிசுத்த நாமத்தைத் துதியங்கள்.
2 என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி!
அவர் உண்மையிலேயே தயவுள்ளவர் என்பதை மறக்காதே.
3 நாம் செய்யும் பாவங்களையெல்லாம் தேவன் மன்னிக்கிறார்.
அவர் நமது நோய்களையெல்லாம் குணமாக்குகிறார்.
4 தேவன் கல்லறையிலிருந்து நம் உயிரை மீட்கிறார்.
அவர் நமக்கு அன்பையும் தயவையும் தருகிறார்.
5 தேவன் நமக்கு மிகுதியான நல்ல பொருட்களைத் தருகிறார்.
அவர் நம்மைக் கழுகைப் போன்று இளமையாக்குகிறார்.
6 கர்த்தர் நியாயமானவர்.
பிறரால் புண்படுத்தப் பட்டிருக்கிறவர்களுக்கு தேவன் நியாயத்தைக் கொண்டு வருகிறார்.
7 தேவன் அவரது சட்டங்களை மோசேக்குக் கற்பித்தார்.
அவர் செய்யத்தக்க வல்லமையுள்ள காரியங்களை இஸ்ரவேல் காணுமாறு தேவன் செய்தார்.
8 கர்த்தர் தயவும் இரக்கமும் உள்ளவர்.
தேவன் பொறுமையும் மிகுந்த அன்பும் உடையவர்.
9 கர்த்தர் எப்போதும் குற்றங்காண்பதில்லை.
கர்த்தர் என்றென்றும் நம்மிடம் கோபங்கொண்டிருப்பதில்லை.
10 நாங்கள் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தோம்,
ஆனால், நமக்குரிய தண்டனையை தேவன் வழங்கவில்லை.
11 வானம் பூமிக்கு எவ்வளவு உயரத்தில் உள்ளதோ,
அதைப்போன்று தம்மைப் பின்பற்றுவோரிடம் தேவன் காட்டும் அன்பும் மிக மேலானது.
12 மேற்கிலிருந்து கிழக்கு எவ்வளவு தூரமோ
அந்த அளவு தேவன் நமது பாவங்களை நம்மை விட்டு வெகுதூரத்திற்கு விலக்கிவிட்டார்.
13 தந்தை தனது பிள்ளைகளிடம் இருப்பதைப் போன்று
கர்த்தரும், அவரைப் பின் பற்றுவோரிடம் இரக்கமாக இருக்கிறார்.
14 தேவன் நம்மைப்பற்றிய எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார்.
நாம் மண்ணிலிருந்து படைக்கப்பட்டவர்கள் என்பதையும் தேவன் அறிகிறார்.
15 நம் வாழ்க்கை குறுகியது என்பதை தேவன் அறிகிறார்.
நம் வாழ்க்கை புல்லைப்போன்றது என்பதை அவர் அறிகிறார்.
16 நாம் சிறிய காட்டுப் பூக்களைப் போன்றவர்கள் என்பதை தேவன் அறிகிறார்.
அம்மலர் சீக்கிரம் மலர்கிறது.
வெப்பமான காற்று வீசும்போது, அம்மலர் மடிகிறது.
பின்னர் அம்மலர் இருந்த இடத்தைக் கூட உன்னால் கூற முடியாது.
17 ஆனால் தேவன் எப்போதும் தம்மைப் பின் பற்றுவோரை நேசிக்கிறார்.
என்றென்றைக்கும் எப்போதும் அவர் தம்மைப் பின்பற்றுவோரை நேசிப்பார்.
தேவன் அவர்களுடைய பிள்ளைகளுக்கும், அவர்களின் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் நல்லவர்.
18 அவரது உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிகிற ஜனங்களுக்கு தேவன் நல்லவர்.
அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிற ஜனங்களுக்கு தேவன் நல்லவர்.
19 பரலோகத்தில் தேவனுடைய சிங்காசனம் உள்ளது.
அவர் எல்லாவற்றின் மீதும் அரசாள்கிறார்.
20 தேவதூதர்களே, கர்த்தரைத் துதியுங்கள்!
தேவ தூதர்களாகிய நீங்கள் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிற வல்லமை வாய்ந்த வீரர்களாவீர்கள்.
நீங்கள் தேவனுக்குச் செவி கொடுத்து அவர் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியங்கள்.
21 அவரது எல்லா சேனைகளே, கர்த்தரைத் துதியுங்கள்.
நீங்கள் அவரது பணியாட்கள்.
தேவன் விரும்புகிற காரியங்களை நீங்கள் செய்யுங்கள்.
22 எல்லா இடத்திலுமுள்ள எல்லாவற்றையும் கர்த்தர் உண்டாக்கினர்.
எல்லா இடத்திலுமுள்ள எல்லாவற்றையும் தேவன் ஆளுகிறார்.
அவை அனைத்தும் கர்த்தரைத் துதிக்கவேண்டும்.
என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி.
ஆலயத்திலிருந்து வெளியே வழிந்தோடும் தண்ணீர்
47 அம்மனிதன் என்னை ஆலயத்தின் வாசலுக்குத் திரும்ப வரச்செய்தான். ஆலயத்தின் கிழக்கு வாசலின் கீழிருந்து தண்ணீர் கிழக்கே ஓடுவதைப் பார்த்தேன். ஆலயத்தின் முகப்பு கிழக்கு நோக்கியிருந்தது. அந்தத் தண்ணீர் ஆலயத்தின் வலதுபுறமாய் பலிபீடத்திற்குத் தெற்கே பாய்ந்தது. 2 அம்மனிதன் என்னை வடக்கு வாசல் வழியாக வெளியே நடத்திச் சென்றான். அவன் என்னை வெளியே கீழ்த்திசையின் புறவாசல் வரை சுற்றி நடத்திக் கொண்டு போனான். அங்கே தண்ணீர் வாசலின் தெற்கே பாய்ந்தது.
3 அம்மனிதன் தனது கையில் நூலைப் பிடித்துக்கொண்டு கிழக்கே நடந்தான். அவன் 1,000 முழம் (1/3 மைல்) அங்கே அளந்தான். பிறகு அவன் என்னிடம் அந்த இடத்தில் தண்ணீரைக் கடக்கச் சொன்னான். அத்தண்ணீர் என் கணுக்கால் அளவுக்கு இருந்தது. 4 அம்மனிதன் இன்னும் 1,000 முழம் (1/3 மைல்) அளந்தான். அங்கே அவன் என்னைத் தண்ணீரைக் கடக்கும்படிச் சொன்னான். அங்கே தண்ணீர் முழங்கால் அளவாய் இருந்தது. பிறகு, அவன் இன்னொரு 1,000 முழம் (1/3 மைல்) அளந்து, அந்த இடத்தில் என்னிடம் தண்ணீரைக் கடக்கும்படிச் சொன்னான். அங்கே தண்ணீர் என் இடுப்பளவிற்கு இருந்தது. 5 அம்மனிதன் இன்னும் 1,000 முழம் (1/3 மைல்) அளந்தான். ஆனால் அங்கே தண்ணீர் கடக்க முடியாத அளவிற்கு ஆழமாக இருந்தது. அது ஆறு போல இருந்தது. அந்தத் தண்ணீர் நீந்துகிற அளவிற்கு ஆழமாயிருந்தது. 6 பிறகு அம்மனிதன் என்னிடம், “மனுபுத்திரனே, நீ பார்த்ததை உன்னிப்பாகக் கவனித்தாயா?” என்றான்.
பிறகு என்னை, நதியோரமாகத் திரும்ப நடத்திக்கொண்டு போனான். 7 நான் நடந்து வரும்போது இதோ நதியோரத்தில் இக்கரையிலும் அக்கரையிலும் அநேக மரங்கள் இருந்தன. 8 அம்மனிதன் என்னிடம், “இந்தத் தண்ணீர் புறப்பட்டு கிழக்கே போய், கீழே அரபா பள்ளத்தாக்கிற்கு போகிறது. 9 இந்தத் தண்ணீர் சவக்கடலுக்குள் பாயும். அதனால் அக்கடலிலுள்ள தண்ணீர் புத்துயிரும் சுத்தமும் அடையும். இத்தண்ணீரில் ஏராளமான மீன்கள் உள்ளன. இந்த ஆறு போகிற இடங்களில் எல்லாம் எல்லா வகை மிருகங்களும் உள்ளன. 10 என்கேதி முதல் எனெக்லாயிம் வரை மீன் பிடிக்கிறவர்கள் ஆற்றங்கரையில் நிற்பதை நீ பார்க்கமுடியும். அவர்கள் தம் வலையை வீசி பலவகை மீன்கள் பிடிப்பதை நீ பார்க்க முடியும். சவக்கடலிலுள்ள மீன்கள் மத்திய தரைக் கடலில் உள்ள மீன்களைப்போன்று பலவகைகளாகவும் மிகுதியாகவும் இருக்கும். 11 ஆனாலும் அதனுடைய உளையான பள்ளங்களும் மேடுகளும் வளம் பெறாமல் உப்பு நிலமாகவே விடப்படும். 12 எல்லாவகையான பழ மரங்களும் ஆற்றின் இரு கரைகளிலும் வளரும். அவற்றின் இலைகள் காய்ந்து உதிர்வதில்லை. அம்மரங்களில் பழங்கள் பழுப்பது நிற்பதில்லை. ஒவ்வொரு மாதமும் மரங்களில் பழங்கள் வரும். ஏனென்றால், இம்மரங்களுக்கான தண்ணீர் ஆலயத்திலிருந்து வருகின்றது. அம்மரங்களின் கனிகள் உணவாகவும் அவற்றின் இலைகள் மருந்தாகவும் பயன்படும்.”
லூக்காவின் நோக்கம்
1 அன்பான தெயோப்பிலுவே,
நம்மிடையே நடந்த பல நிகழ்ச்சிகளின் வரலாற்றைத் தொகுத்தளிக்க பலர் முயற்சி செய்தனர். 2 வேறு சில மக்களிடமிருந்து நாம் கேட்டறிந்த செய்திகளையே அவர்கள் எழுதியிருந்தார்கள். இம்மக்கள் தொடக்கத்திலிருந்து எல்லாவற்றையும் கண்டவர்களும், தேவனுடைய நற்செய்தியை மற்றவர்களுக்குப் போதிப்பதின் மூலம் தேவனுக்கு சேவை செய்துகொண்டிருந்தவர்களும் ஆவார்கள். 3 மதிப்புக்குரிய தெயோப்பிலுவே, துவக்கத்திலிருந்தே எல்லாவற்றையும் நானும் கவனமாகக் கற்று அறிந்தேன். அவற்றை உங்களுக்காக எழுதவேண்டும் என்று எண்ணினேன். எனவே அவற்றை ஒரு நூலில் முறைப்படுத்தி எழுதினேன். 4 உங்களுக்குப் போதிக்கப்பட்டிருக்கிற அனைத்தும் உண்மையே என்பதை நீங்கள் அறியும்பொருட்டு இவற்றை எழுதுகிறேன்.
இசைக்கருவிகளை இசைக்கும் இராகத் தலைவனுக்கு ஒரு துதிப் பாடல்.
67 தேவனே, என்னிடம் இரக்கம் காட்டி என்னை ஆசீர்வதியும்.
தயவாய் எங்களை ஏற்றுக்கொள்ளும்!
2 தேவனே, பூமியிலுள்ள ஒவ்வொருவனும் உம்மைக் குறித்துத் தெரிந்துக்கொள்கிறான் என நம்புகிறேன்.
நீர் எவ்வாறு ஜனங்களை மீட்கிறீரென்று ஒவ்வொரு தேசமும் பார்க்கட்டும்.
3 தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிக்கட்டும்!
எல்லா ஜனங்களும் உம்மைத் துதிக்கட்டும்.
4 எல்லா தேசங்களும் களிக்கூர்ந்து மகிழட்டும்!
ஏனெனில் நீர் ஜனங்களைத் தகுதியாக நியாயந்தீர்க்கிறீர்.
நீர் ஒவ்வொரு தேசத்தையும் அரசாளுகிறீர்.
5 தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிக்கட்டும்.
எல்லா ஜனங்களும் உம்மைத் துதிக்கட்டும்.
6 தேவனே, எங்கள் தேவனே, எங்களை ஆசீர்வதியும்.
எங்கள் தேசம் நல்ல அறுவடையை எங்களுக்குக் கொடுக்கட்டும்.
7 தேவன் நம்மை ஆசீர்வதிக்கட்டும்.
பூமியிலுள்ள எல்லா மனிதரும் தேவனுக்குப் பயந்து அவரை மதிக்கட்டும்.
96 கர்த்தர் செய்த புதுகாரியங்களைப்பற்றி ஒரு புதுப்பாடலைப் பாடுங்கள்!
உலகம் முழுவதும் கர்த்தரை நோக்கிப் பாடட்டும்.
2 கர்த்தரை நோக்கிப் பாடுங்கள்!
அவரது நாமத்தை ஸ்தோத்தரியுங்கள்!
ஒவ்வொரு நாளும் அவர் நம்மை பாதுகாப்பதைப் பற்றிச் சொல்லுங்கள்!
3 தேவன் உண்மையிலேயே அற்புதமானவர் என்பதை ஜனங்களுக்குக் கூறுங்கள்.
தேவன் செய்கிற வியப்பிற்குரிய காரியங்களை எங்குமுள்ள ஜனங்களுக்குச் சொல்லுங்கள்.
4 கர்த்தர் மேன்மையானவர், துதிகளுக்குரியவர்.
வேறெந்த “தெய்வங்களைக்” காட்டிலும் அவர் அஞ்சத்தக்கவர்.
5 பிற தேசங்களின் “தெய்வங்கள்” எல்லாரும் வெறும் சிலைகளே.
ஆனால் கர்த்தரோ வானங்களை உண்டாகினவர்.
6 அவருக்கு முன்னே அழகிய மகிமை ஒளி வீசும்.
தேவனுடைய பரிசுத்த ஆலயத்தில் பெலனும் அழகும் விளங்கும்.
7 குடும்பங்களும் தேசங்களும்
கர்த்தருக்கு மகிமையும், துதியும் நிரம்பிய பாடல்களைப் பாடுவார்கள்.
8 கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்.
உங்கள் காணிக்கைகளோடு ஆலயத்திற்குச் செல்லுங்கள்.
9 கர்த்தருடைய அழகான ஆலயத்தில் அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.
கர்த்தரைப் பூமியிலுள்ள ஒவ்வொருவரும் தொழுதுகொள்ளுங்கள்.
10 கர்த்தரே அரசரென்று தேசங்களுக்கெல்லாம் அறிவியுங்கள்!
அதனால் உலகம் அழிக்கப்படுவதில்லை.
கர்த்தர் ஜனங்களை நியாயமாக அரசாளுவார்.
11 விண்ணுலகங்களே!
மகிழ்ச்சிகொள்ளுங்கள்.
பூமியே! களிகூரு.
கடலும் அதிலுள்ளவையும் களிப்பால் குரல் எழுப்பட்டும்!
12 வயல்களும் அதில் விளைந்துள்ள அனைத்தும் மகிழ்ச்சிகொள்ளட்டும்!
வனத்தின் மரங்களே, பாடி மகிழுங்கள்!
13 கர்த்தர் வருகிறார், ஆதலால் மகிழ்ச்சியடையுங்கள்.
கர்த்தர் உலகை ஆளுகை செய்ய வந்துகொண்டிருக்கிறார்.
நீதியோடும் நியாயத்தோடும்
அவர் உலகை ஆளுகை செய்வார்.
லூக்காவின் இரண்டாவது புத்தகம்
1 அன்பான தேயோப்பிலுவே, நான் எழுதிய முதல் புத்தகத்தில் இயேசு செய்தவைகளையும், கற்பித்தவைகளையும் எல்லாம் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். 2 நான் இயேசுவின் வாழ்க்கை முழுவதையும் தொடக்கத்திலிருந்து இறுதியில் அவர் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது வரைக்கும் எழுதியிருந்தேன். இது நடக்கும் முன் இயேசு தான் தேர்ந்தெடுத்த அப்போஸ்தலர்களிடம் பேசினார். பரிசுத்த ஆவியின் வல்லமையால் அப்போஸ்தலர்கள் செய்யவேண்டியவற்றை இயேசு அவர்களுக்குக் கூறினார். 3 இது இயேசுவின் மரணத்திற்குப் பின்னர் நிகழ்ந்தது. ஆனால் அவர் அப்போஸ்தலருக்குத் தான் உயிரோடிருப்பதைக் காட்டினார். வல்லமைமிக்க செயல்கள் பலவற்றைச் செய்து இயேசு இதை நிரூபித்தார். இயேசு மரணத்தினின்று எழுந்த பின்பு 40 நாட்களில் அப்போஸ்தலர்கள் பலமுறை இயேசுவைப் பார்த்தனர். தேவனுடைய இராஜ்யத்தைப்பற்றி இயேசு அப்போஸ்தலர்களிடம் பேசினார். 4 ஒருமுறை இயேசு அவர்களோடு உணவு உட்கொண்டு இருக்கும்போது எருசலேமை விட்டுப் போக வேண்டாமென அவர்களுக்குக் கூறினார். இயேசு, “பிதா உங்களுக்குச் சிலவற்றைக் குறித்து வாக்குறுதி அளித்துள்ளார். இதைக் குறித்து முன்னரே நான் உங்களுக்குக் கூறினேன். இங்கேயே எருசலேமில் இந்த வாக்குறுதியைப் பெறுவதற்காகக் காத்திருங்கள். 5 யோவான் மக்களுக்கு, தண்ணீரால் ஞானஸ்நானம் வழங்கினான். ஆனால் ஒரு சில நாட்களில் நீங்கள் பரிசுத்த ஆவியால் ஞானஸ்நானம் பெறுவீர்கள்” என்று சொன்னார்.
இயேசுவின் பரமேறுதல்
6 அப்போஸ்தலர்கள் எல்லோரும் ஒருமித்துக் கூடியிருந்தார்கள். அவர்கள் இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நீங்கள் யூதர்களுக்கு அவர்களது இராஜ்யத்தை மீண்டும் கொடுக்கும் காலம் இதுவா?” என்று வினவினார்கள்.
7 இயேசு அவர்களை நோக்கி “நாட்களையும் நேரத்தையும் பற்றிய முடிவெடுக்கும் அதிகாரம் உடையவர் பிதா ஒருவரே. உங்களால் இந்தக் காரியங்களை அறிந்துகொள்ள முடியாது. 8 ஆனால் பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் வருவார். வரும்போது நீங்கள் வல்லமையைப் பெறுவீர்கள். நீங்கள் எனது சாட்சிகளாக இருப்பீர்கள். மக்களுக்கு என்னைப்பற்றிக் கூறுவீர்கள். முதலில் எருசலேமின் மக்களுக்குக் கூறுவீர்கள். பின் யூதேயா முழுவதும். சமாரியாவிலும், உலகத்தின் எல்லாப் பகுதியிலும் நீங்கள் மக்களுக்குக் கூறுவீர்கள்” என்றார்.
2008 by World Bible Translation Center