Book of Common Prayer
“சோஷனீம்” என்னும் இசைக்கருவியில் வாசிக்க கோரா குடும்பத்தினரின் இராகத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட, ஒரு நேசத்தின் பாடல்.
45 ராஜாவுக்கு இவற்றை எழுதுகையில் அழகு சொற்கள் என் இதயத்தை நிரப்பும்.
தேர்ந்த எழுத்தாளனின் எழுதுகோல் வெளிப்படுத்தும் சொற்களாய் என் நாவிலிருந்து சொற்கள் வெளிப்படுகின்றன.
2 நீரே யாவரினும் அழகானவர்!
நீர் பேச்சில் வல்லவர், எனவே தேவன் உம்மை என்றென்றும் ஆசீர்வதிப்பார்.
3 வாளை எடும்.
மேன்மையான ஆடைகளை அணியும்.
4 நீர் அற்புதமாகக் காட்சியளிக்கிறீர்!
நன்மைக்காகவும், நீதிக்காகவும் சென்று போரில் வெல்லும்.
அதிசயங்களைச் செய்வதற்கு வல்லமைமிக்க உமது வலக்கரத்தைப் பயன்படுத்தும்.
5 உமது அம்புகள் ஆயத்தமாயுள்ளன.
நீர் பலரைத் தோற்கடிப்பீர். உமது பகைவர்கள் மீது ராஜாவாயிரும்.
6 தேவனே, உமது ஆட்சி என்றென்றும் தொடரும்.
நன்மையே உமது செங்கோலாகும்.
7 நீர் நன்மையை விரும்பித் தீமையைப் பகைக்கிறீர்.
எனவே உமது தேவன் உம் நண்பர்களுக்கு மேலாக உம்மை ராஜாவாக்கினார்.
8 வெள்ளைப்போளம், இலவங்கம், சந்தனம் ஆகியவற்றின் நறுமணம் உம் ஆடைகளில் வீசும்.
தந்தத்தால் மூடப்பட்ட அரண்மனைகளிலிருந்து உம்மை மகிழ்வூட்டும் இசை பரவும்.
9 மணத்தோழியரே ராஜாவின் குமாரத்திகள் ஆவர்.
உமது வலப் பக்கத்தில் மணப்பெண் பொன்கிரீடம் சூடி நிற்கிறாள்.
10 மகளே, கேள்,
கவனமாகக் கேள், நீ புரிந்துகொள்வாய்.
உன் ஜனங்களையும், உன் தந்தையின் குடும்பத்தையும் மறந்துவிடு.
11 ராஜா உன் அழகை விரும்புகிறார்.
அவர் உன் புது மணமகன்.
நீ அவரைப் பெருமைப்படுத்துவாய்.
12 தீருவின் செல்வந்தர்கள் ஜனங்கள் உனக்குப் பரிசுகள் தருவார்கள்.
அவர்கள் உன்னைக் காண விரும்புவார்கள்.
13 அரச குமாரத்தி
பொன்னில் பதிக்கப் பெற்ற விலையுயர்ந்த அழகிய மணியைப் போன்றவள்.
14 மணமகள் அழகிய ஆடையணிந்து ராஜாவிடம் அழைத்துவரப்பட்டாள்.
மணத் தோழியர் அவளைத் தொடர்ந்தனர்.
15 அவர்கள் மகிழ்ச்சி பொங்க வந்தனர்.
மனமகிழ்வோடு அரண்மனைக்குள் நுழைந்தனர்.
16 ராஜாவே, உம் குமாரர்கள் உமக்குப் பின் ஆட்சி செய்வார்கள்.
தேசம் முழுவதும் அவர்களை ஆளச் செய்வீர்.
17 உமது நாமத்தை என்றென்றும் புகழ் பெறச் செய்வேன்.
என்றென்றும் ஜனங்கள் உம்மைத் துதிப்பார்கள்.
கோராகின் குடும்பத்தின் இராகத் தலைவனுக்கு அளிக்கப்பட்ட ஒரு பாடல்.
47 சகல ஜனங்களே, கைகளைத் தட்டுங்கள்,
தேவனை நோக்கி மகிழ்ச்சியால் சத்தமிடுங்கள்.
2 உன்னதமான கர்த்தர் நமது பயத்திற்குரியவர்.
பூமியெங்கும் அவர் பேரரசர்.
3 பிறரைத் தோற்கடிக்க அவர் நமக்கு உதவுகிறார்.
அத்தேசங்களை நம் ஆளுகைக்குட்படுத்துகிறார்.
4 தேவன் நம் தேசத்தை நமக்காகத் தேர்ந்தெடுத்தார்.
தான் நேசித்த யாக்கோபிற்காக அந்த அதிசய தேசத்தைத் தேர்ந்தெடுத்தார்.
5 எக்காளமும் கொம்பும் முழங்க,
கர்த்தர் அவரது சிங்காசனத்தில் ஏறுகிறார்.
6 தேவனைத் துதித்துப் பாடுங்கள், துதித்துப் பாடுங்கள்.
நம் அரசரைத் துதித்துப் பாடுங்கள், துதித்துப் பாடுங்கள்.
7 அகில உலகத்திற்கும் தேவனே ராஜா.
துதிப் பாடல்களைப் பாடுங்கள்.
8 பரிசுத்த சிங்காசனத்தில் தேவன் அமருகிறார்.
எல்லாத் தேசங்களையும் தேவன் ஆளுகிறார்.
9 ஆபிரகாமின் தேவனுடைய ஜனங்களைத்
தேசங்களின் தலைவர்கள் சந்திப்பார்கள்.
எல்லாத் தேசங்களின் எல்லாத் தலைவர்களும் தேவனுக்குரியவர்கள்.
தேவனே எல்லோரிலும் மேன்மையானவர்.
கோராகின் புத்திரருக்கு அளிக்கப்பட்ட ஒரு துதியின் பாடல்.
48 கர்த்தர் மேன்மையானவர்.
தேவன் தமது பரிசுத்த நகரில் துதிக்குரியவர்.
2 தேவனுடைய பரிசுத்த நகரம் அழகானது.
அது உலகை சுற்றியுள்ள அனைத்து ஜனங்களையும் மகிழ்ச்சியடைச் செய்யும்.
சீயோன் மலை உயர்ந்த, பரிசுத்த மலை.
அதுவே பேரரசரின் நகரமாகும்.
3 அந்நகரத்து அரண்மனைகளில்
தேவனே கோட்டை என்று எண்ணப்படுவார்.
4 ஒருமுறை, சில ராஜாக்கள் சந்தித்து,
இந்நகரைத் தாக்கத் திட்டமிட்டார்கள்.
அவர்கள் ஒருமித்து நகரை நோக்கி அணிவகுத்தார்கள்.
5 அவ்வரசர்கள் அந்நகரைக் கண்டதும், ஆச்சரியமடைந்து, பயந்து, திரும்பி ஓடினார்கள்.
6 அச்சம் அவர்களை ஆட்கொண்டது.
அவர்கள் பயத்தால் நடுங்கினார்கள்.
7 தேவனே, நீர் வலிய கிழக்குக் காற்றால்
பெருங்கப்பல்களை உடைத்தீர்.
8 ஆம், உமது வல்லமையான காரியங்களை நாங்கள் கேள்விப்பட்டோம்.
ஆனால், சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய நகரில், எங்கள் தேவனுடைய நகரில் அது நிகழக்கண்டோம்.
தேவன் அந்நகரை என்றும் வலிமையுள்ள நகராக்கினார்.
9 தேவனே, உமது ஆலயத்தில் உமது அன்பான தயவைக் கவனமாக நினைத்துப் பார்த்தோம்.
10 தேவனே, நீர் புகழ் வாய்ந்தவர்,
பூமியெங்கும் ஜனங்கள் உம்மைத் துதிக்கின்றனர்.
நீர் மிக நல்லவர் என்பதை அனைவரும் அறிவோம்.
11 தேவனே, உமது நல்ல முடிவுகளால் சீயோன் மலை மகிழ்கிறது.
யூதாவின் ஊர்கள் களிகூருகின்றன.
12 சீயோனைச் சுற்றி நட.
நகரைப் பார். கோபுரங்களை எண்ணிப்பார்.
13 அந்த உயர்ந்த சுவர்களைப் பார்.
சீயோனின் அரண்மனைகளை வியப்புடன் பார்.
வரும் தலைமுறைக்கு அதைப்பற்றி நீ கூறலாம்.
14 இந்த தேவன் என்றென்றும் உண்மையாகவே நமது தேவன்.
அவர் என்றென்றும் நம்மை வழி நடத்துவார்.
23 யூதாவின் ராஜாவாக ஆசா ஆட்சி புரிந்த 31வது ஆண்டில் இஸ்ரவேலின் ராஜாவாக உம்ரி ஆனான். உம்ரி 12 ஆண்டுகள் ஆண்டான். இதில் 6 ஆண்டு காலம் அவன் திர்சாவிலிருந்து ஆண்டான். 24 உம்ரி சமாரியா மலையை சேமேரிடமிருந்து வாங்கினான். அதன் விலை 2 தாலந்து வெள்ளி. அதில் நகரத்தைக் கட்டி அதன் சொந்தக்காரனான சேமேரின் பெயரால் சமாரியா என்று பெயரிட்டான்.
25 உம்ரி கர்த்தருக்கு எதிராகப் பாவங்களைச் செய்தான். அவனுக்கு முன்னால் உள்ளவர்களை விட மோசமாக இருந்தான். 26 நேபாத்தின் குமாரனான யெரொபெயாம் செய்த பாவங்களையெல்லாம் இவனும் செய்தான். யெரொபெயாம் தானும் பாவம் செய்து, ஜனங்களையும் பாவம்செய்யத் தூண்டி இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய கோபத்துக்கு ஆளானான். பயனற்ற விக்கிரகங்களையும் தொழுதுகொண்டான்.
27 இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் உம்ரி செய்த மற்ற செயல்களையும் அவர் செய்த அருஞ்செயல்களும் எழுதப்பட்டுள்ளன. 28 உம்ரி மரித்து சமாரியா நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். இவனது குமாரன் ஆகாப் புதிய ராஜாவானான்.
இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப்
29 யூதாவின் ராஜாவாகிய ஆசா 38வது ஆண்டில் இருக்கும்போது ஆகாப் இஸ்ரவேலின் புதிய ராஜாவானான். இவன் சமாரியாவில் இருந்து 22 ஆண்டுகள் ஆண்டான். 30 இவனும் கர்த்தருக்கு விரோதமாகப் பாவங்களைச் செய்தான். அவனுக்கு முன்னால் உள்ளவர்களைவிட மோசமாக இருந்தான். 31 நேபாத்தின் குமாரனான யெரொபெயாம் செய்த அதே பாவங்களைச் செய்வது இவனுக்குப் போதுமானதாயிருக்கவில்லை. அவன் சீதோனியரின் ராஜாவாகிய ஏத்பாகாலின் குமாரத்தி யேசபேலை மணந்து பாகாலையும் தொழுதுகொண்டான். 32 சமாரியாவில் பாகாலுக்கு ஆலயத்தைக் கட்டினான். ஆலயத்தில் பலிபீடமும் அமைத்தான். 33 ஒரு சிறப்பான தூணையும் அஷெராவை தொழுதுகொள்ள உருவாக்கினான். அவனுக்கு முன்பு இஸ்ரவேலின் ராஜாவாக இருந்த மற்றவர்களைவிட இவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை அதிகமாகக் கோபப்படுத்தினான்.
34 இவனது காலத்தில், ஈயேல் எனும் பெத்தேல் ஊரான் எரிகோவைக்கட்டினான். அப்போது, அவனது மூத்தகுமாரனான அபிராம் மரித்தான். நகர வாயில்களை அமைக்கும் போது, இளைய குமாரன் செகூப் மரித்தான். நூனின் குமாரனான யோசுவாவின் மூலமாகப் பேசியபொழுது இது நடக்குமென்று கர்த்தர் சொன்னைதைப்போலவே இது நடந்தது.
பவுலின் துன்பங்கள் உதவியது
12 சகோதர சகோதரிகளே! எனக்கு ஏற்பட்ட அந்தத் துன்பங்கள் எல்லாம் நற்செய்தியைப் பரப்புகிற பணிக்கே உதவியது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறேன். 13 சிறைக்குள் நான் ஏன் இருக்கிறேன் என்பது தெளிவாகிறது. ஏனென்றால் நான் கிறிஸ்துவின் நம்பிக்கையாளன். காவலர்களுக்கும் மற்ற மக்களுக்கும் இது தெரியும். 14 இன்னும் நான் சிறைப்பட்டிருக்கிறேன். அது நன்மைக்குத்தான் என்று பல விசுவாசிகள் இப்போது எண்ணுகின்றனர். எனவே கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அச்சமில்லாமல் பரப்புவதில் மேலும் தைரியம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.
15 கிறிஸ்துவைப் பற்றிச் சிலர் பிரச்சாரம் செய்கிறார்கள், என்றாலும் அவர்கள் பொறாமையும், கசப்புணர்வும் கொண்டவர்களாக உள்ளார்கள். இன்னும் சிலர் உதவி செய்யும் விருப்பத்தோடு கிறிஸ்துவைப் பற்றி பிரச்சாரம் செய்கிறார்கள். 16 இவர்கள், அன்பினால் கிறிஸ்துவைப்பற்றி பிரச்சாரம் செய்கின்றனர். தேவன் எனக்கு இந்தப் பணியை நற்செய்தியைப் பாதுகாப்பதற்காகத் தந்துள்ளார் என்பதை இவர்கள் அறிவர். 17 மற்றவர்களோ தன்னலம் காரணமாக கிறிஸ்துவைப் பற்றி பிரச்சாரம் செய்கின்றனர். அவர்களின் பிரச்சார நோக்கம் தவறானது. சிறைக்குள் எனக்குத் தொல்லைகளை உருவாக்க அவர்கள் விரும்புகின்றனர். 18 அவர்கள் எனக்குத் தொல்லை கொடுத்தால் அதைப் பற்றி நான் கவலைப்படப் போவதில்லை. மக்களிடம் அவர்கள் இயேசுவைப் பற்றிக் கூறுகிறார்கள் என்பதுதான் முக்கியமான விஷயம். நானும் இயேசுவைப் பற்றி அவர்கள் மக்களிடம் சொல்ல வேண்டும் என்றே விரும்புகிறேன். அவர்கள் அதைச் சரியான நோக்கத்தோடு செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் தவறான நோக்கத்தோடு போலியாகப் பிரச்சாரம் செய்தாலும் கூட நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால் அவர்கள் கிறிஸ்துவைப் பற்றிப் பேசுகிறார்கள்.
இதனால் தொடர்ந்து நான் மகிழ்ச்சியடைவேன். 19 எனக்காக நீங்கள் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறீர்கள். இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த ஆவியானவர் எனக்கு உதவுகிறார். ஆகையால் இந்தத் துன்பங்கள் எனக்கு விடுதலையைத் தரும் என்று எனக்குத் தெரியும். 20 எதிலும் நான் கிறிஸ்துவிடம் தவறமாட்டேன். இதுவே நான் விரும்புவதும், நம்புவதும் கூட. இந்த உலகத்தில் என் வாழ்வில் நான் இயேசுவின் உயர்வைக் காட்ட வேண்டும். அதனை வெளிப்படுத்தும் தைரியத்தை எப்போதும் போல இப்போதும் பெறுவேன் என்று நான் நம்புகிறேன். நான் வாழ்ந்தாலும் சரி, மரித்தாலும் சரி, இதைச் செய்ய விரும்புகிறேன். 21 கிறிஸ்துவை என் வாழ்வின் ஜீவனாக நம்புகிறேன். இதனால் நான் இறந்து போனாலும் எனக்கு லாபம்தான். 22 இந்த சரீரத்தில் நான் தொடர்ந்து வாழ்ந்தால் கர்த்தருக்குத் தொண்டு செய்ய என்னால் முடியும். ஆனால் வாழ்வு, சாவு என்பவற்றில் எதைத் தேர்ந்தெடுப்பது? எனக்குத் தெரியவில்லை. 23 வாழ்வு, சாவு இரண்டிலொன்றைத் தேர்ந்தெடுப்பது கடினமானது. இந்த வாழ்க்கையை விட்டுவிட்டு நான் கிறிஸ்துவோடு வாழ விரும்புகிறேன். அது சிறந்தது. 24 ஆனால் நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு மிக அவசியம். 25 உங்களுக்கு நான் தேவையானவன் என்பதை அறிவேன். அதனால் உங்களோடு இருக்க நான் விரும்புகிறேன். உங்கள் நம்பிக்கையில் நீங்கள் மகிழ்ச்சியுடன் வளரவும் நான் உதவுவேன். 26 மீண்டும் உங்களோடு நான் இருக்கும்போது நீங்கள் கிறிஸ்துவாகிய இயேசுவுக்குள் மிகவும் மகிழ்ச்சியாய் இருப்பீர்கள்.
27 நற்செய்திக்குப் பொருந்துகிற வாழ்வை வாழ்வது பற்றி உறுதி செய்துகொள்ளுங்கள். பிறகு உங்களைப் பார்வையிட நான் வந்தாலோஅல்லது உங்களை விட்டு நான் தூரம் போனாலோ உங்களைப் பற்றி நான் நல்ல செய்திகளையே கேள்விப்படுவேன். நற்செய்தியிலிருந்து வரும் நம்பிக்கைக்காக நீங்கள் தொடர்ந்து பலத்தோடு பொது நோக்கத்துக்காக ஒன்று சேர்ந்து குழுவாகப் பணியாற்றுகிறீர்கள் என்று நான் கேள்விப்படுவேன். 28 உங்களுக்கு எதிரான மக்களைப் பற்றி நீங்கள் அச்சப்பட வேண்டாம். உங்கள் பகைவர்கள் இழப்புக்குள்ளாவர். நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள். இச்சான்றுகள் தேவனிடமிருந்து வந்தன. 29 ஏனென்றால் கிறிஸ்துவினிடத்தில் நம்பிக்கை செலுத்துவதற்கு மாத்திரமல்ல, அவர் நிமித்தமாகப் பாடுபடுவதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. 30 நான் உங்களோடு இருந்தபோது நற்செய்திக்கு எதிராக இருந்த மக்களுடன் நான் எதிர்கொள்ள நேர்ந்த போராட்டங்களை நீங்கள் பார்த்தீர்கள். இப்போது நான் எதிர்கொண்டுவரும் போராட்டங்களைப் பற்றியும் நீங்கள் கேள்விப்படுகிறீர்கள். நீங்களும் இது போன்ற போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டும்.
இயேசுவின் உயிர்த்தெழுதல்
(மத்தேயு 28:1-8; லூக்கா 24:1-12; யோவான் 20:1-10)
16 ஓய்வு நாள் முடிந்த பிறகு மகதலேனா மரியாள், சலோமி, யாக்கோபின் தாயான மரியாள் ஆகியோர் சில வாசனைப் பொருள்களை வாங்கினர். அவற்றை இயேசுவின் சரீரத்தின் மீது பூச விரும்பினர். 2 வாரத்தின் முதல்நாளில் அப்பெண்கள் கல்லறைக்குச் சென்றனர். சூரியன் தோன்றிய காலை நேரம் அது. 3 அப்பெண்கள் ஒருவருக்கொருவர், “கல்லறையை மூடுவதற்கு பெரிய கல்லை வைத்திருந்தார்களே. நமக்காக அக்கல்லை யார் அகற்றுவார்?” என்று பேசிக்கொண்டனர்.
4 அவர்கள் கல்லறையின் அருகில் வந்தபோது வாசலில் வைத்திருந்த கல் விலக்கப்பட்டிருந்தது. அது மிகப் பெரிய கல். 5 அப்பெண்கள் கல்லறைக்குள் நுழைந்தனர். அங்கே வெள்ளை ஆடை அணிந்த ஒருவனைப் பார்த்தனர். அவன் கல்லறையின் வலதுபக்கத்தில் உட்கார்ந்து இருந்தான். அப்பெண்கள் அஞ்சினர்.
6 ஆனால் அந்த மனிதன், “அஞ்ச வேண்டாம். நீங்கள் நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள். அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்துவிட்டார். சிலுவையில் அறையப்பட்ட அவர் இங்கில்லை. அதுதான் அவரைக் கிடத்திய இடம். 7 இப்போது சென்று அவரது சீஷர்களிடம் கூறுங்கள். பேதுருவிடம் கட்டாயம் கூறுங்கள். இயேசு கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார். உங்களுக்கு முன்னால் அவர் அங்கிருப்பார். உங்களுக்கு ஏற்கெனவே சொன்னபடி நீங்கள் அவரைப் பார்ப்பீர்கள்” என்றான்.
8 அப்பெண்கள் மிகவும் பயந்து குழப்பம் அடைந்தனர். அவர்கள் கல்லறையைவிட்டு ஓடிப் போனார்கள். அவர்கள் அச்சத்தால் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை.[a]
சீஷர்கள் இயேசுவைப் பார்த்தல்
(மத்தேயு 28:9-10; யோவான் 20:11-18; லூக்கா 24:13-35)
9 இயேசு மரணத்தில் இருந்து வாரத்தின் முதல் நாளே உயிர்த்தெழுந்து விட்டார். முதன் முதலாக இயேசு மகதலேனா மரியாளுக்குத் தரிசனமானார். ஒரு முறை, ஏழு பேய்களை மரியாளைவிட்டு இயேசு விரட்டினார். 10 இயேசுவைப் பார்த்தபின் மரியாள் சீஷர்களிடம் போய்ச் சொன்னாள். அச்சீஷர்கள் வெகு துக்கப்பட்டு அழுதுகொண்டிருந்தனர். 11 ஆனால் மரியாளோ, “இயேசு உயிரோடு இருக்கிறார். நான் அவரைப் பார்த்தேன்” என்றாள். அவர்களோ அவள் சொன்னதை நம்பவில்லை.
12 பின்னர் இயேசு, சீஷர்களில் இரண்டுபேர் நகரத்திற்கு நடந்துபோய்க்கொண்டிருக்கும்போது காட்சி தந்தார். இயேசு இறப்பதற்கு முன்னர் இருந்த விதமாக அவர் பார்ப்பதற்கு இல்லை. 13 அந்த இருவரும் போய் ஏனைய சீஷர்களிடம் கூறினர். எனினும் அவர்களையும் அவர்கள் நம்பவில்லை.
இயேசு சீஷர்களிடம் பேசுதல்
(மத்தேயு 28:16-20; லூக்கா 24:36-49; யோவான் 20:19-23; அப்போ. 1:6-8)
14 பின்னர் இயேசு பதினொரு சீஷர்களுக்கும், அவர்கள் உணவு உண்ணும் தருணத்தில் காட்சியளித்தார். உயிர்த்தெழுந்திருந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமல் போனதினிமித்தம் அவர்களுடைய அவநம்பிக்கையைக் குறித்தும் இதயக் கடினத்தைக் குறித்தும் அவர்களைக் கடிந்து கொண்டார்.
15 பின்பு அவர்களிடம், “உலகின் எல்லா பாகங்களுக்கும் செல்லுங்கள். எல்லாரிடமும் நற்செய்தியைக் கூறுங்கள். 16 எவனொருவன் இதனை விசுவாசித்து ஞானஸ்நானம் பெறுகிறானோ அவன் இரட்சிக்கப்படுவான். எவனோருவன் விசுவாசிக்கவில்லையோ அவன் கண்டிக்கப்படுவான். 17 விசுவாசிப்பவர்கள் பல அரிய செயல்களைச் செய்ய முடியும். அவர்கள் என் பெயரால் பிசாசுகளை விரட்டுவர், அவர்கள் இதுவரை இல்லாத மொழிகளைப் பேசுவர், 18 அவர்கள் எவ்விதத் துன்பமும் இல்லாமல் பாம்புகளைப் பிடிப்பர், சாவுக்குரிய நஞ்சைக் குடித்தாலும் அவர்களுக்கு ஆபத்து இல்லை, அவர்கள் தொட்டால் நோயாளிகள் குணம் பெறுவர்” என்று தம்மைப் பின்பற்றினோருக்குக் கூறினார்.
இயேசு பரலோகத்திற்குத் திரும்புதல்
(லூக்கா 24:50-53; அப்போ. 1:9-11)
19 சீஷர்களிடம் இவற்றைச் சொன்ன பிறகு, இயேசு பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். அங்கு அவர் தேவனுடைய வலதுபக்கத்தில் அமர்ந்தார். 20 அவரது சீஷர்கள் எல்லா இடங்களுக்கும் சென்று நற்செய்தியைச் சொன்னார்கள். தேவன் அவர்களுக்கு உதவினார். அவர்கள் சொல்வது உண்மை என தேவன் நிரூபித்தார். சீஷர்களுக்கு அற்புதங்கள் செய்ய அதிகாரம் கொடுத்து இதை தேவன் நிரூபித்தார்.
2008 by World Bible Translation Center