Book of Common Prayer
தாவீதின் ஒரு சங்கீதம்.
101 நான் அன்பையும் நியாயத்தையும் பற்றிப் பாடுவேன்.
கர்த்தாவே, நான் உம்மை நோக்கிப் பாடுவேன்.
2 நான் கவனமாகப் பரிசுத்த வாழ்க்கை வாழுவேன்.
என் வீட்டில் நான் பரிசுத்த வாழ்க்கை வாழுவேன்.
கர்த்தாவே, நீர் எப்போது என்னிடம் வருவீர்.
3 என் முன்னால் நான் விக்கிரகங்களை வைக்கமாட்டேன்.
ஜனங்கள் அப்படி உமக்கு எதிராகத் திரும்புவதை நான் வெறுக்கிறேன்.
நான் அதைச் செய்யமாட்டேன்!
4 நான் நேர்மையாக இருப்பேன்.
நான் தீயக் காரியங்களைச் செய்யமாட்டேன்.
5 யாராவது ஒருவன் தனது அயலானைக் குறித்து இரகசியமாகத் தீயக் காரியங்களைக் கூறினால் நான் அவனைத் தடுத்துவிடுவேன்.
நான் பிறரைப் பெருமைப்படவோ, தாங்கள் பிறரை காட்டிலும் சிறந்தவர்கள் என்று எண்ணவோ விடமாட்டேன்.
6 நம்பத்தக்க ஜனங்களைத் தேசம் முழுவதும் தேடிப்பார்ப்பேன்.
அவர்கள் மட்டுமே எனக்கு சேவைச் செய்ய அனுமதிப்பேன்.
பரிசுத்த வாழ்க்கை வாழும் ஜனங்கள் மட்டுமே என் பணியாட்களாக முடியும்.
7 பொய்யர்கள் என் வீட்டில் வாழ நான் அனுமதிக்கமாட்டேன்.
என் அருகே பொய்யர்கள் தங்கவும் அனுமதியேன்.
8 இந்நாட்டில் வாழும் தீயோரை நான் எப்போதும் அழிப்பேன்.
கர்த்தருடைய நகரை விட்டுத் தீயோர் நீங்குமாறு நான் வற்புறுத்துவேன்.
இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த துதிப் பாடல்களில் ஒன்று.
109 தேவனே, என் ஜெபத்திற்கு உமது காதுகளை மூடிக்கொள்ளாதேயும்.
2 தீயோர் என்னைப்பற்றிப் பொய்களைக் கூறுகிறார்கள்.
உண்மையற்ற காரியங்களை அவர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
3 என்னைப்பற்றி ஜனங்கள் வெறுப்படையும் காரியங்களைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
எந்தக் காரணமுமின்றி அவர்கள் என்னைத் தாக்குகிறார்கள்.
4 நான் அவர்களை நேசித்தேன், அவர்களோ என்னைப் பகைக்கிறார்கள்.
எனவே இப்போது, தேவனே, உம்மை நோக்கி ஜெபம் செய்கிறேன்.
5 நான் அந்த ஜனங்களுக்கு நன்மையான காரியங்களைச் செய்தேன்.
ஆனால் அவர்களோ எனக்குத் தீய காரியங்களைச் செய்கிறார்கள்.
நான் அவர்களை நேசித்தேன்.
ஆனால் அவர்களோ, என்னைப் பகைத்தார்கள்.
6 அவன் செய்த தீயக் காரியங்களுக்காக எனது பகைவனைத் தண்டியும்.
அவன் தவறானவனென்று நிரூபிக்கும் ஒருவனைக் கண்டுபிடியும்.
7 என் பகைவன் தவறு செய்ததையும், அவனே குற்றவாளி என்பதையும் நீதிபதி முடிவு செய்யட்டும்.
என் பகைவன் கூறுபவை யாவும் அவனுக்கே மேலும் தீமையைத் தேடித்தரட்டும்.
8 என் பகைவன் உடனே மடியட்டும்.
அவன் பதவியை மற்றொருவன் பெறட்டும்.
9 என் பகைவனின் குழந்தைகள், அநாதைகளாகி, அவன் மனைவி விதவையாகட்டும்.
10 அவர்கள் தங்கள் வீட்டை இழந்து பிச்சைக்காரர்களாகட்டும்.
11 என் பகைவனிடம் கடன்பட்டிருக்கிற ஜனங்கள் அவனுக்குச் சொந்தமான பொருட்களை எடுத்துக்கொள்ளட்டும்.
அவன் உழைத்த எல்லாப் பொருட்களையும் எவராவது எடுத்துக்கொள்ளட்டும்.
12 என் பகைவனுக்கு ஒருவனும் இரக்கம் காட்டமாட்டான் என நான் நம்புகிறேன்.
ஒருவனும் அவனது குழந்தைகளுக்குக் கிருபை காட்டமாட்டான் எனவும் நான் நம்புகிறேன்.
13 என் பகைவனை முற்றிலும் அழியும்.
அடுத்த தலைமுறையினர் அவன் பெயரை எல்லாவற்றிலிருந்தும் அகற்றிப்போடட்டும்.
14 என் பகைவனின் தந்தையின் பாவங்களை கர்த்தர் நினைவில்கொள்வார் என்று நான் நம்புகிறேன்.
அவனது தாயின் பாவங்கள் என்றும் நீக்கப்படுவதில்லை என நான் நம்புகிறேன்.
15 கர்த்தர் அப்பாவங்களை என்றென்றும் நினைவு கூருவார் என நான் நம்புகிறேன்.
ஜனங்கள் என் பகைவனை முற்றிலும் மறந்துப்போகும்படி அவர் ஜனங்களை வற்புறுத்துவார் என நான் நம்புகிறேன்.
16 ஏனெனில் அத்தீய மனிதன் ஒருபோதும் நன்மை செய்ததில்லை.
அவன் ஒருபோதும் எவரையும் நேசித்ததில்லை.
அவன் ஏழைகள், திக்கற்றோர் ஆகியோரின் வாழ்க்கை கடினமாகும்படி செய்தான்.
17 பிறருக்குத் தீயவை நிகழ வேண்டுமெனக் கேட்பதில் அத்தீயவன் ஆர்வமுடையவனாக இருந்தான்.
எனவே அத்தீமைகள் அவனுக்கு நேரிடட்டும்.
அத்தீய மனிதன் ஒருபோதும் ஜனங்களுக்கு நல்லவை நிகழ வேண்டுமெனக் கேட்டதில்லை.
18 சாபங்கள் அவன் ஆடைகளாகட்டும்.
சாபங்கள் அவன் பருகும் தண்ணீராகட்டும்.
சாபங்கள் அவன் சரீரத்தின் மீது எண்ணெயாகட்டும்.
19 சாபங்கள் அத்தீயோனைச் சுற்றியிருக்கும் ஆடைகளாகட்டும்.
சாபங்கள் அவன் இடுப்பைச் சுற்றியிருக்கும் கச்சையாகட்டும்.
20 என் பகைவனுக்கு அக்காரியங்கள் அனைத்தையும் கர்த்தர் செய்வார் என நான் நம்புகிறேன்.
என்னைக் கொல்ல முயன்றுக்கொண்டிருக்கிற எல்லா ஜனங்களுக்கும் கர்த்தர் அவற்றைச் செய்வார் என நான் நம்புகிறேன்.
21 கர்த்தாவே, நீரே என் ஆண்டவர்.
எனவே உமது நாமத்துக்குப் பெருமைதரும் வழியில் என்னைக் கவனியும்.
உமக்கு மிகுதியான அன்பு உண்டு எனவே என்னைக் காப்பாற்றும்.
22 நான் ஏழையும் திக்கற்றவனுமான மனிதன்.
நான் உண்மையிலேயே கவலையடைகிறேன்.
என் இருதயம் நொறுங்கிப்போகிறது.
23 என் வாழ்க்கை பகலின் முடிவை அறிவிக்கும் நீண்ட நிழலைப்போன்றது என நான் உணர்கிறேன்.
சிலர் தள்ளிவிடும் பூச்சியைப்போல் உணருகிறேன்.
24 நான் பசியாயிருப்பதால் என் முழங்கால்கள் சோர்ந்துள்ளன.
நான் எடை குறைந்து மெலிந்து போகிறேன்.
25 தீய ஜனங்கள் என்னை அவமானப்படுத்துகிறார்கள்.
அவர்கள் என்னைப் பார்த்துத் தலையைக் குலுக்கிக்கொள்கிறார்கள்.
26 என் தேவனாகிய கர்த்தாவே, எனக்கு உதவும்!
உமது உண்மையான அன்பை வெளிப்படுத்தி, என்னைக் காப்பாற்றும்!
27 நீர் எனக்கு உதவினீரென்று அப்போது அந்த ஜனங்கள் அறிவார்கள்.
உமது வல்லமை எனக்கு உதவிற்று என்பதையும் அவர்கள் அப்போது அறிவார்கள்.
28 அத்தீயோர் என்னைச் சபித்தனர். ஆனாலும் கர்த்தாவே, நீர் என்னை ஆசீர்வதிக்க முடியும்.
அவர்கள் என்னைத் தாக்கினார்கள், அவர்களைத் தோற்கடியும்.
அப்போது உமது ஊழியனாகிய நான் சந்தோஷமடைவேன்.
29 என் பகைவர்களை வெட்கப்படுத்தும்!
அவர்கள் தங்கள் வெட்கத்தை ஒரு மேலாடையைப் போல் அணிந்துகொள்ளட்டும்.
30 நான் கர்த்தருக்கு நன்றிக் கூறுகிறேன்.
பலர் முன்னிலையில் நான் அவரைத் துதிப்பேன்.
ஆயின்
121 நான் நியாயமும் நல்லதுமானவற்றைச் செய்கிறேன்.
கர்த்தாவே, என்னைத் துன்புறுத்த விரும்புவோரிடம் என்னை ஒப்புவியாதேயும்.
122 என்னிடம் நல்லவராக இருக்க உறுதியளியும்.
நான் உமது ஊழியன். கர்த்தாவே, அந்தப் பெருமைக்காரர்கள் என்னைத் துன்புறுத்தவிடாதேயும்.
123 கர்த்தாவே, உம்மிடமிருந்து உதவியை எதிர் நோக்கியும், ஒரு நல்ல வார்த்தையை எதிர்பார்த்தும்,
என் கண்கள் தளர்ந்து போய்விட்டன.
124 நான் உமது ஊழியன்.
உமது உண்மை அன்பை எனக்குக் காட்டும்.
உமது சட்டங்களை எனக்குப் போதியும்.
125 நான் உமது ஊழியன்.
உமது உடன்படிக்கையை நான் அறிந்துகொள்ளும்படியான புரிந்துகொள்ளுதலைப் பெற எனக்கு உதவும்.
126 கர்த்தாவே, நீர் ஏதேனும் செய்வதற்கு இதுவே தக்கநேரம்.
ஜனங்கள் உமது சட்டத்தை மீறிவிட்டார்கள்.
127 கர்த்தாவே, மிகவும் தூய்மையான பொன்னைக் காட்டிலும்
நான் உமது கட்டளைகளை நேசிக்கிறேன்.
128 நான் உமது கட்டளைகளுக்கெல்லாம் கவனமாகக் கீழ்ப்படிகிறேன்.
தவறான போதனைகளை நான் வெறுக்கிறேன்.
பே
129 கர்த்தாவே, உமது உடன்படிக்கை அற்புதமானது.
அதனால் நான் அதைப் பின்பற்றுகிறேன்.
130 ஜனங்கள் உமது வார்த்தையைப் புரிந்துகொள்ளத் தொடங்கும்போது அது சரியானபடி வாழ்வதற்கு வழிகாட்டும் ஒளியைப் போன்றிருக்கிறது.
உமது வார்த்தை சாதாரண ஜனங்களையும் ஞானமுள்ளோராக்கும்.
131 கர்த்தாவே, நான் உண்மையாகவே உமது கட்டளைகளைக் கற்க விரும்புகிறேன்.
நான் சிரமமாய் மூச்சுவிட்டுக்கொண்டு பொறுமையின்றிக் காத்திருக்கும் மனிதனைப் போல் இருக்கிறேன்.
132 தேவனே, என்னைப் பாரும், என்னிடம் தயவாயிரும்.
உமது நாமத்தை நேசிக்கும் ஜனங்களுக்குத் தகுந்தவையான காரியங்களைச் செய்யும்.
133 கர்த்தாவே, நீர் வாக்குறுதி அளித்தபடி என்னை வழிநடத்தும்.
தீமையேதும் எனக்கு நிகழாதபடி பார்த்துக்கொள்ளும்.
134 கர்த்தாவே, என்னைத் துன்புறுத்துவோரிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவேன்.
135 கர்த்தாவே, உமது ஊழியனை ஏற்றுக் கொள்ளும்.
உமது சட்டங்களை எனக்குப் போதியும்.
136 ஜனங்கள் உமது போதனைகளுக்குக் கீழ்ப்படியாததால்
என் கண்ணீர் ஆற்றைப்போல பெருக்கெடுத்து ஓடுகிறது.
த்சாதே
137 கர்த்தாவே, நீர் நல்லவர்,
உமது சட்டங்கள் நியாயமானவை.
138 நீர் உமது உடன்படிக்கையில் எங்களுக்கு நல்ல சட்டங்களைத் தந்தீர்.
நாங்கள் அவற்றை உண்மையாகவே நம்பமுடியும்.
139 என் ஆழமான உணர்வுகள் என்னை சோர்வடையச் செய்கின்றன.
என் பகைவர்கள் உமது கட்டளைகளை மறந்தபடியால் நான் மிகவும் கலங்கியிருக்கிறேன்.
140 கர்த்தாவே, உமது வார்த்தைகளை நாங்கள் நம்பமுடியும் என்பதற்கு சான்றுகள் இருக்கிறது.
நான் அதை நேசிக்கிறேன்.
141 நான் ஒரு இளைஞன், ஜனங்கள் என்னை மதிப்பதில்லை.
ஆனால் நான் உமது கட்டளைகளை மறக்கமாட்டேன்.
142 கர்த்தாவே, உமது நன்மை என்றென்றைக்கும் இருக்கும்.
உமது போதனைகள் நம்பக் கூடியவை.
143 எனக்குத் தொல்லைகளும் கொடிய காலங்களும் இருந்தன.
ஆனால் நான் உமது கட்டளைகளில் களிப்படைகிறேன்.
144 உமது உடன்படிக்கை என்றென்றைக்கும் நல்லது.
நான் வாழும்படி, அதைப் புரிந்துக்கொள்ள எனக்கு உதவும்.
அப்சலோம் எருசலேம் திரும்புதல்
21 ராஜா யோவாபை நோக்கி, “இதோ, நான் வாக்களித்தபடியே செய்வேன். போய் இளைஞனாகிய அப்சலோமை இப்போதே அழைத்து வாருங்கள்” என்றான்.
22 யோவாப் முகங்குப்புற விழுந்து வணங்கினான். அவன் தாவீது ராஜாவை வாழ்த்தியபடியே, “நீங்கள் என்னிடம் கருணைக் காட்டுகிறீர்கள் என்பதை இன்று அறிகிறேன். நான் கேட்டதை நீர் நிறைவேற்றுகிறபடியால் அதை நான் அறிகிறேன்” என்றான்.
23 பின்பு யோவாப் எழுந்து கேசூருக்குப் போய் அப்சலோமை எருசலேமுக்கு அழைத்து வந்தான். 24 ஆனால் தாவீது ராஜா, “அப்சலோம் தனது வீட்டிற்குப் போகலாம். ஆனால் அவன் என்னைப் பார்க்க வரமுடியாது” என்றான். எனவே அப்சலோம் தனது வீட்டிற்குப் போனான். அப்சலோம் ராஜாவைப் பார்க்கபோக முடியவில்லை.
25 அப்சலோமின் அழகைக்கண்ட ஜனங்கள் வியந்தனர். இஸ்ரவேலில் ஒருவனும் அப்சலோமைப்போல் அழகுடையவனாக இருக்கவில்லை. தலையிலிருந்து பாதம்வரைக்கும், அவனது உடம்பில் ஒரு பழுதும் இல்லாதிருந்தது. 26 ஒவ்வோராண்டின் இறுதியிலும் அப்சலோம் தனது தலையைச் சிரைத்துக்கொண்டான். அவன் சிரைத்தப் பின் தலைமயிரை எடுத்து, நிறுத்துப்பார்த்தான். அது 5 பவுண்டு எடையுள்ளதாக இருந்தது. 27 அப்சலோமுக்கு மூன்று குமாரர்களும் ஒரு குமாரத்தியும் இருந்தனர். இந்த குமாரத்தியின் பெயர் தாமார். தாமார் ஒரு அழகிய பெண்மணி.
யோவாபுக்கு அப்சலோம் தன்னை வந்து பார்க்குமாறு வற்புறுத்தல்
28 அப்சலோம் இரண்டு ஆண்டுகள் வரை தாவீது ராஜாவைப் பார்க்க அனுமதியின்றி எருசலேமில் வாழ்ந்தான். 29 அப்சலோம் யோவாபிடம் ஆட்களை அனுப்பினான். அவர்கள் யோவாபிடம் அப்சலோமை ராஜாவிடம் அனுப்புமாறு கூறினார்கள். ஆனால் யோவாப் அப்சலோமிடம் வரவில்லை. இரண்டாவது முறையும் அப்சலோம் ஒரு செய்தியை அனுப்பினான். ஆனால் யோவாப் இம்முறையும் மறுத்தான்.
30 அப்போது அப்சலோம் தனது வேலையாட்களிடம், “பாருங்கள், யோவாபின் வயல் எனது வயலுக்கு அருகிலுள்ளது. அவனது வயலில் பார்லியைப் பயிரிட்டிருக்கிறான். போய் அந்த பார்லி பயிரை எரித்துவிடுங்கள்” என்றான்.
எனவே அப்சலோமின் வேலையாட்கள் போய் யோவாபின் வயலுக்கு நெருப்புமூட்டினர். 31 யோவாப் புறப்பட்டு அப்சலோமின் வீட்டிற்கு வந்தான். யோவாப் அப்சலோமிடம், “உன் வேலையாட்கள் எதற்காக என் வயலைக் கொளுத்தினர்?” என்று கேட்டான்.
32 அப்சலோம் யோவாபிடம், “நான் உனக்குச் செய்தி சொல்லியனுப்பினேன். நான் உன்னை இங்கு வருமாறு அழைத்தேன். உன்னை ராஜாவிடம் அனுப்ப விரும்பினேன். கேசூரிலிருந்து என்னை இங்கு ஏன் வரவழைத்தார் என்று எனக்காக நீ அவரைக் கேட்க வேண்டும். நான் அவரை நேரில் பார்க்கமுடியாது, எனவே நான் கேசூரில் தங்கியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இப்போது நான் போய் ராஜாவைக் காணவிடுங்கள். நான் பாவம் செய்திருந்தால் அவர் என்னைக் கொல்லட்டும்!” என்றான்.
அப்சலோம் தாவீது ராஜாவை சந்தித்தல்
33 பின்பு யோவாப் ராஜாவிடம் வந்து அப்சலோமின் வார்த்தைகளைக் கூறினான். ராஜா அப்சலோமை வரவழைத்தான். அப்போது அப்சலோம் ராஜாவிடம் வந்தான். அப்சலோம் ராஜாவுக்கு முன்பு தரையில் விழுந்து வணங்கினான். ராஜா அப்சலோமை முத்தமிட்டான்.
15 இதன் பிறகு நாங்கள் தயாராகி எருசலேமுக்குப் புறப்பட்டோம். 16 செசரியாவிலுள்ள சீஷர்களில் சிலர் எங்களோடு சென்றனர். இந்தச் சீஷர்கள் செசரியாவிலிருந்த எங்களை சீப்புருவிலிருந்து வந்த மினாசோனின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். முதன் முதலாக இயேசுவின் சீஷர்களாக மாறியவர்களில் இந்த மினாசோனும் ஒருவன். நாங்கள் அவனோடு தங்கும்படியாக அவர்கள் எங்களை அவனது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
பவுல் யாக்கோபைச் சந்தித்தல்
17 எருசலேமிலே விசுவாசிகள் எங்களைக் கண்டு, சந்தோஷம் அடைந்தனர். 18 மறுநாள் பவுல் யாக்கோபைக் காண எங்களோடு வந்தான். எல்லா மூப்பர்களும் அங்கிருந்தனர். 19 பவுல் அவர்கள் எல்லோரையும் வாழ்த்தினான். யூதரல்லாத மக்கள் மத்தியில் பல காரியங்களைச் செய்வதற்கு தேவன் அவனை எவ்வாறு பயன்படுத்தினார் என்பதை அவன் அவர்களுக்குக் கூறினான். தேவன் அவன் மூலமாகச் செய்தவற்றையெல்லாம் அவன் அவர்களுக்குச் சொன்னான்.
20 மூப்பர்கள் இவற்றைக் கேட்டபோது, அவர்கள் தேவனை வாழ்த்தினர். பின் அவர்கள் பவுலை நோக்கி, “சகோதரரே, ஆயிரக்கணக்கான யூதர்கள் விசுவாசிகளாக மாறியதை நீங்கள் பார்க்க முடிகிறது. ஆனால் அவர்கள் மோசேயின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதை முக்கியமானதாக நினைக்கிறார்கள். 21 உங்கள் போதனையைக் குறித்து இந்த யூதர்கள் கேள்விப்பட்டிருக்கிறார்கள். யூதர்கள் அவர்கள் பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டாமென்றும், யூத வழக்கங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டாம் எனவும் நீர் கூறுவதாகக் கேட்டிருக்கிறார்கள்.
22 “நாங்கள் என்ன செய்வோம்? நீர் வந்திருப்பதை இங்குள்ள யூத விசுவாசிகள் அறிந்துகொள்வர். 23 எனவே நீங்கள் செய்ய வேண்டியதை நாங்கள் உங்களுக்குக் கூறுகிறோம். எங்களுடனிருப்போரில் நான்கு பேர் தேவனுக்கு ஒரு வாக்குறுதி அளித்துள்ளனர். 24 இம்மனிதர்களை உங்களோடு அழைத்துச் சென்று அவர்களின் தூய்மைப்படுத்தும் சடங்கில் பங்கு பெறுங்கள். அவர்கள் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள். எனவே அவர்கள் தங்கள் தலை முடியை சிரைத்துக்கொள்ள[a] முடியும். இதைச் செய்யுங்கள். உங்களைப்பற்றி அவர்கள் கேள்விப்பட்ட விஷயங்கள் பொய்யானவை என்று அது எல்லோருக்கும் நிரூபித்துக் காட்டும். உங்கள் சொந்த வாழ்க்கையில் மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்படிகிறீர்கள் என்பதை அவர்கள் காண்பார்கள்.
25 “யூதரல்லாத விசுவாசிகளுக்கு நாங்கள் ஏற்கெனவே ஒரு கடிதம் அனுப்பியுள்ளோம். அக்கடிதம்,
‘விக்கிரகங்களுக்குக் கொடுக்கப்பட்ட உணவை உண்ணாதீர்கள்.
இரத்தத்தை ருசிக்காதீர்கள், நெரித்துக்கொல்லப்பட்ட மிருகங்களை உண்ணாதீர்கள்,
பாலியல் தொடர்பான பாவங்களைச் செய்யாதீர்கள்’ என்று கூறிற்று” என்றார்கள்.
பவுல் கைதுசெய்யப்படுகிறார்
26 பின்பு பவுல் அந்த நான்கு மனிதர்களையும் அவனோடு அழைத்துச் சென்றான். மறுநாள் பவுல் தூய்மைப்படுத்தும் சடங்கில் பங்கேற்றான். பின் அவன் தேவாலயத்துக்குச் சென்றான். தூய்மைப்படுத்தும் சடங்கு முடிய வேண்டிய காலத்தைப் பவுல் பிறருக்கு அறிவித்தான். கடைசி நாளில் ஒவ்வொரு மனிதனுக்காகவும் ஒரு காணிக்கை கொடுக்கப்படும்.
பணக்காரனும் இயேசுவும்
(மத்தேயு 19:16-30; லூக்கா 18:18-30)
17 இயேசு அவ்விடத்திலிருந்து புறப்பட ஆரம்பித்தார். அப்போது ஒரு மனிதன் ஓடி வந்து அவருக்கு முன்னால் முழங்காலிட்டு வணங்கினான். அவன், “நல்ல போதகரே! நான் நித்திய வாழ்வைப் பெற என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான்.
18 அதற்கு இயேசு, “என்னை நீ நல்லவர் என்று ஏன் அழைக்கிறாய்? தேவன் மட்டுமே நல்லவர். 19 ஆனால் உனது வினாவுக்கு விடையளிக்கிறேன். நீ எவரையும் கொலை செய்யாமல் இருப்பாயாக; விபச்சாரம் செய்யாமல் இருப்பாயாக, களவு செய்யாமல் இருப்பாயாக; பொய்சாட்சி சொல்லாமல் இருப்பாயாக; நீ உன் தந்தையையும் தாயையும் மரியாதை செய்வாயாக(A) என்று கட்டளைகள் சொல்வது உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார்.
20 அதற்கு அந்த மனிதன், “போதகரே! நான் குழந்தைப் பருவத்தில் இருந்தே இக்கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வருகிறேன்” என்றான்.
21 இயேசு அவனைக் கவனித்தார். இயேசுவுக்கு அவன் மீது அன்பு பிறந்தது. இயேசு அவனிடம், “நீ செய்வதற்கு உரிய காரியம் இன்னும் ஒன்று உள்ளது. நீ போய் உனக்கு உரியவற்றையெல்லாம் விற்றுவிடு. அப்பணத்தை ஏழை மக்களுக்குக் கொடு. உனக்குப் பரலோகத்தில் நிச்சயம் பொக்கிஷமிருக்கும். பிறகு என்னைப் பின்பற்றி வா” என்றார்.
22 இயேசு இவற்றைச் சொன்னதும் அந்த மனிதன் மிகவும் வருத்தப்பட்டு அப்புறம் போனான். அவனது வருத்தத்துக்குக் காரணம் அவன் பெருஞ் செல்வந்தனாய் இருந்ததுதான்; அதோடு அச்செல்வத்தைப் பாதுகாக்கவும் நினைத்ததுதான்.
23 பிறகு இயேசு சுற்றிலும் பார்த்து தன் சீஷர்களிடம் “ஒரு பணக்காரன் தேவனுடைய இராஜ்யத்துக்குள் நுழைவது மிகவும் கடினமான ஒன்று” என்றார்.
24 இயேசு சொன்னதைக் குறித்து சீஷர்கள் அதிசயப்பட்டார்கள். இயேசு மீண்டும், “என் பிள்ளைகளே! தேவனுடைய இராஜ்யத்துக்குள் நுழைவது கடினமானது. 25 அதிலும் தேவனுடைய இராஜ்யத்துக்குள் ஒரு பணக்காரன் நுழைவது மிகவும் கடினமானது. இதைவிட, ஊசியின் காதிற்குள் ஒரு ஒட்டகம் எளிதாக நுழைந்து விடும்” என்றார்.
26 சீஷர்கள் பெரிதும் அதிசயப்பட்டார்கள். அவர்கள் தங்களுக்குள், “பிறகு யார் இரட்சிக்கப்படுவார்?” என்று கேட்டனர்.
27 இயேசு தன் சீஷர்களைப் பார்த்து, “மக்கள் தங்களால் எதுவும் செய்துகொள்ள இயலாது. அது தேவனிடமிருந்துதான் வரவேண்டும். தேவனே எல்லாவற்றையும் செய்ய வல்லவர்” என்றார்.
28 பேதுரு இயேசுவைப் பார்த்து, “நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, விட்டு உங்களைப் பின் தொடர்ந்து வந்திருக்கிறோம்” என்றான்.
29 இயேசு “நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். எவன் ஒருவன் தனது வீட்டையும், சகோதரர்களையும், சகோதரிகளையும், தந்தையையும், தாயையும், குழந்தைகளையும், பண்ணைகளையும் எனக்காகவும், நற்செய்திக்காகவும், தியாகம் செய்கிறானோ 30 அவனுக்கு அவன் விட்டதைவிட நூறு மடங்கு கிடைக்கும். இங்கே இந்த உலகத்தில் அவன் மிகுதியான வீடுகளையும், சகோதரர்களையும், சகோதரிகளையும், தாயார்களையும், குழந்தைகளையும், பண்ணைகளையும், பெறுவான். அதோடு பல துன்பங்களையும் அடைவான். ஆனால் அவன் நித்தியவாழ்வு என்னும் பரிசினை வரப்போகும் உலகில் பெறுவான். 31 இப்போது மிக உயர்ந்த இடத்தில் உள்ள பலர் எதிர்காலத்தில் மிகத் தாழ்ந்த இடத்துக்குச் செல்வர், மிகத் தாழ்ந்த இடத்திலுள்ள பலர் மிக உயர்ந்த இடத்துக்குச் செல்வர்” என்றார்.
2008 by World Bible Translation Center