Book of Common Prayer
தாவீதின் பாடல்.
24 பூமியும் அதிலுள்ள எல்லாப் பொருள்களும் கர்த்தருடையவை.
உலகமும் அதன் ஜனங்களும் அவருக்கே உரிமையாம்.
2 கர்த்தர் பூமியை தண்ணீரின் மேல் உண்டாக்கினார்.
ஆறுகளின் மீது அதை உண்டாக்கினார்.
3 கர்த்தருடைய மலைகளின் மேல் யார் ஏறக்கூடும்?
கர்த்தருடைய பரிசுத்த ஆலயத்தில் யார் நிற்கக்கூடும்?
யார் அங்கு வழிபட முடியும்?
4 தீயவை செய்யாத ஜனங்களும்,
பரிசுத்த இருதயம் உடையோரும்,
பொய்யை உண்மையெனக் கூறுவதற்கு என் பெயரைப்[a] பயன்படுத்தாதோரும், பொய்யும்,
பொய்யான வாக்குறுதிகளும் அளிக்காதோரும், மட்டுமே அங்கு தொழுதுகொள்ள முடியும்.
5 நல்ல ஜனங்கள் கர்த்தரிடம் மற்ற ஜனங்களை ஆசீர்வதிக்கச் சொல்வார்கள்.
அந்த நல்ல ஜனங்கள் தங்கள் இரட்சகராகிய தேவனை நல்லக் காரியங்களைச் செய்யச் சொல்வார்கள்.
6 அந்த நல்லோர் தேவனைப் பின்பற்ற முயல்வார்கள்.
யாக்கோபின் தேவனிடம் உதவி வேண்டி அவர்கள் செல்வார்கள்.
7 வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்!
பழைமையான கதவுகளே! திறவுங்கள்!
மகிமை வாய்ந்த ராஜா உள்ளே வருவார்.
8 யார் இந்த மகிமைமிக்க ராஜா?
கர்த்தரே அந்த ராஜா. அவரே வல்லமையுள்ள வீரர்.
கர்த்தரே அந்த ராஜா. அவரே போரின் நாயகன்.
9 வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்!
பழைமையான கதவுகளே, திறவுங்கள்!
மகிமை மிக்க ராஜா உள்ளே வருவார்.
10 யார் அந்த மகிமை மிக்க ராஜா?
சர்வ வல்லமையுள்ள கர்த்தரே அந்த ராஜா.
அவரே மகிமை மிக்க ராஜா.
தாவீதின் பாடல்.
29 தேவனுடைய புத்திரரே, கர்த்தரைத் துதியுங்கள்!
அவரது மகிமையையும் வல்லமையையும் துதியுங்கள்.
2 கர்த்தரைத் துதித்து அவர் நாமத்தை கனப்படுத்துங்கள்!
உங்கள் விசேஷ ஆடைகளை அணிந்து அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.
3 கடலின்மேல் கர்த்தர் தமது குரலை எழுப்புகிறார்.
மகிமைபொருந்திய தேவனுடைய குரல் பெரும் சமுத்திரத்தின்மேல் இடியாய் முழங்கும்.
4 கர்த்தருடைய குரல் அவர் வல்லமையைக் காட்டும்.
அவரது குரல் அவர் மகிமையைக் காட்டும்.
5 கர்த்தருடைய குரல் பெரிய கேதுரு மரங்களையும் சின்னஞ்சிறு துண்டுகளாக்கும்.
லீபனோனின் பெரிய கேதுரு மரங்களை கர்த்தர் உடைத்தெறிகிறார்.
6 கர்த்தர் லீபனோனைக் குலுக்குகிறார்.
இளங்கன்று நடனமாடினாற்போன்று அது தோன்றுகிறது.
எர்மோன் மலை நடுங்குகிறது.
இளமையான வெள்ளாடு குதிப்பதைப்போன்று அது தோன்றுகிறது.
7 கர்த்தருடைய குரல் மின்னலைப்போல் ஒளிவிட்டுத் தாக்குகிறது.
8 கர்த்தருடைய குரல் பாலைவனத்தைக் குலுக்குகிறது.
கர்த்தருடைய குரலால் காதேஸ் பாலைவனம் நடுங்குகிறது.
9 கர்த்தருடைய குரல் மானை அஞ்சச்செய்யும்.
கர்த்தர் காடுகளை அழிக்கிறார்.
அவரது அரண்மனையில், ஜனங்கள் அவரது மகிமையைப் பாடுகிறார்கள்.
10 வெள்ளப்பெருக்கின்போது கர்த்தர் ராஜாவாயிருந்தார்.
என்றென்றும் கர்த்தரே ராஜா.
11 கர்த்தர்தாமே அவரது ஜனங்களைப் பாதுகாப்பாராக.
கர்த்தர் அவரது ஜனங்களை சமாதானத்தோடு வாழும்படி ஆசீர்வதிப்பாராக.
கித்தீத் என்ற இசைக் கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்குத் தந்த தாவீதின் சங்கீதம்.
8 எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உமது நாமம் பூமியின் எல்லா இடத்திலும் மிகுந்த அற்புதமானது!
விண்ணுலகிலும் உமது நாமம் உமக்குத் துதிகளைக் கொண்டு வருகிறது.
2 பிள்ளைகள், குழந்தைகள் வாயிலுமிருந்து உம்மைத் துதிக்கும் பாடல்கள் வெளிப்படும்.
உம் பகைவரை அமைதிப்படுத்த இவ்வல்லமையான பாடல்களைக் கொடுத்தீர்.
3 கர்த்தாவே, உமது கைகளால் நீர் செய்த வானங்களை நான் கண்டேன்.
நீர் படைத்த நிலாவையும், நட்சத்திரங்களையும் நான் கண்டு ஆச்சரியமடைந்தேன்.
4 ஏன் மனிதர்கள் உமக்கு முக்கியமாயினர்?
ஏன் அவர்களை நீர் நினைவுகூருகிறீர்?
ஏன் அவர்களைக் கவனிக்கிறீர்?
5 ஆனால் மனிதர்கள் உமக்கு முக்கியமாயினர்!
அவர்களை ஏறக்குறைய தேவர்களைப் போலவே உண்டாக்கினீர்.
மனிதரை மகிமையாலும், மேன்மையாலும் முடிசூட்டினீர்.
6 நீர் உண்டாக்கின எல்லாவற்றிற்கும் அவர்களை அதிகாரிகளாக வைத்தீர்.
7 ஆடுகள், பசுக்கள், காட்டு மிருகங்கள் அனைத்தையும் மனிதர்கள் ஆண்டனர்.
8 வானத்துப் பறவைகளையும்
சமுத்திரத்தில் நீந்தும் மீன்களையும் அவர்கள் ஆண்டனர்.
9 எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உமது நாமம் உலகத்தில் எங்கும் மிகவும், மிகவும் அற்புதமானது!
கீத்தித் என்னும் வாத்தியத்தில் இசைக்கும் இராகத் தலைவனுக்குக் கோராகின் குடும்பம் அளித்த ஒரு துதிப் பாடல்.
84 சர்வ வல்லமையுள்ள தேவனே, உமது ஆலயம் உண்மையிலேயே இனிமையானது.
2 கர்த்தாவே, உமது ஆலயத்திற்குள் நுழைவதற்கு என்னால் காத்திருக்க முடியாது.
ஏனெனில் நான் மிகுந்த ஆவலாய் இருக்கிறேன்.
என் அவயவங்கள் ஒவ்வொன்றும் ஜீவனுள்ள தேவனோடு இருப்பதையே விரும்புகிறது.
3 என் ராஜாவே, என் தேவனே, சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே, குருவிகளுக்கும், அடைக்கலான் குருவிகளுக்கும் உம்முடைய ஆலயத்தில் வீடுகள் உண்டு.
உமது பலிபீடத்தருகே அப்பறவைகள் தங்கள் கூடுகளை அமைக்கும், அங்கு அவற்றின் குஞ்சுகளைப் பெறும்.
4 உமது ஆலயத்தில் வாழும் ஜனங்கள் மிகுந்த பாக்கியமுள்ளவர்களாக இருக்கிறார்கள்.
அவர்கள் எப்போதும் உம்மைத் துதித்துக்கொண்டிருக்கிறார்கள்.
5 தங்கள் இருதயத்தில் கீதங்களைப் பாடிக் கொண்டு
ஆலயத்திற்கு வருகிற ஜனங்கள் மிகுந்த சந்தோஷமாயிருக்கிறார்கள்.
6 அவர்கள் அழுகையின் பள்ளத்தாக்கின் வழியாகப் பயணம் செய்கிறார்கள்.
தேவன் அதை ஒரு நீரூற்றாகச் செய்கிறார்.
இலையுதிர்கால மழையின் தண்ணீரால் குளங்கள் தோன்றும்.
7 தேவனைச் சந்திப்பதற்காக சீயோனுக்குச் செல்லும் வழியில்
ஜனங்கள் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு பயணமாகிறார்கள்.
8 சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேளும்.
யாக்கோபின் தேவனே, எனக்குச் செவிகொடும்.
9 தேவனே, எங்கள் பாதுகாவலரைப் (கேடகத்தைப்) பாதுகாத்துக்கொள்ளும்.
நீர் தேர்ந்தெடுத்த ராஜா மீது இரக்கமாயிரும்.
10 வேறிடங்களில் செலவிடும் ஆயிரம் நாட்களைக் காட்டிலும் உமது ஆலயத்தில் இருக்கும் ஒரே நாள் நல்லது.
எனது தேவனுடைய வீட்டின் வாசலில் நிற்பதோ தீயவனின் வீட்டில் வாழ்வதைக் காட்டிலும் நல்லது.
11 கர்த்தர் நமது கேடகமும் மகிமை வாய்ந்த அரசருமானவர்.[a]
தயவினாலும் மகிமையாலும் தேவன் நம்மை ஆசீர்வதிக்கிறார்.
அவரைப் பின்பற்றிக் கீழ்ப்படிகிற ஜனங்களுக்கு
தேவன் எல்லா நல்ல பொருள்களையும் தருகிறார்.
12 சர்வ வல்லமையுள்ள தேவனே,
உம்மை நம்புகிற ஜனங்கள் உண்மையாகவே சந்தோஷமானவர்கள்.
27 நீங்கள் எல்லாரும் இணைந்து கிறிஸ்துவின் சரீரமாக இருக்கிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சரீரத்தின் உறுப்பாக அமைகிறீர்கள். 28 முதலில் அப்போஸ்தலராகச் சிலரையும், இரண்டாவதாகத் தீர்க்கதரிசிகளாகவும், மூன்றாவதாகப் போதகர்களாகவும், பிறகு அதிசயங்களைச் செய்கிறவர்களாகவும், மற்றவர்களுக்கு உதவுகிறவர்களாகவும், வழி நடத்த வல்லவர்களாகவும் பல்வேறு மொழிகளைப் பேச வல்லவர்களாகவும் சபையில் நியமிக்கிறார். 29 எல்லா மனிதர்களும் அப்போஸ்தலர்கள் அல்ல. எல்லா மனிதர்களும் தீர்க்கதரிசிகளல்ல. எல்லா மனிதர்களும் போதகர்களுமல்ல. எல்லாரும் அதிசயங்களைச் செய்ய முடியாது. 30 குணப்படுத்தும் ஆற்றலும் எல்லார்க்கும் வாய்ப்பதில்லை. எல்லாருக்கும் வெவ்வேறு வகையான மொழிகளைப் பேசமுடியாது. எல்லாரும் அவற்றை விளக்கவும் முடியாது. 31 ஆவியானவரின் சிறந்த வரங்களைப் பெற நீங்கள் உண்மையாகவே விரும்ப வேண்டும்.
அன்பே சிறந்த வரம்
13 நான் இப்போது மிகச் சிறந்த வழியைக் காட்டுவேன். மனிதர்களுடையதும், தேவ தூதர்களுடையதுமான வெவ்வேறு மொழிகளை நான் பேசக்கூடும். ஆனால் என்னிடம் அன்பு இல்லையானால் நான் சப்தமிடும் மணியைப் போலவும், தாளமிடும் கருவியைப் போலவும் இருப்பேன். 2 தீர்க்கதரிசனம் உரைக்கும் வரம் எனக்கு இருக்கலாம். தேவனுடைய இரகசியமான காரியங்களை நான் உணர்ந்துகொள்ளக் கூடும். எல்லாம் அறிந்திருக்கக்கூடும். மலைகளை அசைக்க வல்ல அரிய விசுவாசம் எனக்கு இருக்கக் கூடும். ஆனால் இவையிருந்தும் என்னிடம் அன்பு இல்லையானால் மேற்கண்ட செய்கைகளைச் செய்வதால் எனக்கு எவ்வித பயனுமில்லை. 3 மக்களுக்கு உணவுகொடுக்க என்னிடமிருக்கிற ஒவ்வொன்றையும் நான் கொடுக்கலாம். என் சரீரத்தையே கூட காணிக்கைப் பொருளாகக் கொடுக்கலாம். ஆனால் என்னிடம் அன்பு இல்லையென்றால் இக்காரியங்களைச் செய்வதன் மூலம் எனக்கு எவ்வித லாபமும் இல்லை.
4 அன்பு பொறுமை உள்ளது. தன்னைப் புகழாது, அன்பு தற்பெருமை பாராட்டாது. அன்பு பொறாமை அற்றது. 5 அன்பு கடுமையானதன்று. அன்பு தன்னலமற்றது. அன்பு எளிதாகக் கோபம் அடையாது. தனக்கு எதிராக இழைக்கப்படும் தீங்குகளையும் அன்பு நினைவுகொள்ளாது. 6 அன்பு தீமையைக் கண்டு மகிழ்வதில்லை. ஆனால் உண்மையைக் கண்டு மகிழ்கிறது. 7 அன்பு எல்லாவற்றையும் பொறுமையாய் ஏற்கும். அன்பு எப்போதும் நம்பும். அன்பு கைவிடுவதில்லை, எப்போதும் உறுதியுடன் தொடரும்.
8 அன்பு முடிவற்றது. தீர்க்கதரிசன வரங்கள் முடிவுடையவை. பல மொழிகளைப் பேசும் வரங்களும் உண்டு. அவற்றிற்கும் முடிவுண்டு. அறிவென்னும் வரமும் உண்டு. ஆனால் அதுவும் முடிவு கொண்டது. 9 நமது அறிவும் தீர்க்கதரிசனம் கூறும் திறனும் முழுமையுறாதவை. எனவே அவற்றிற்கு முடிவு உண்டு. 10 முழுமையான ஒன்று வருகிறபொழுது முழுமையுறாத பொருள்கள் முடிவுறும்.
11 நான் குழந்தையாய் இருந்தபோது, குழந்தையைப்போலப் பேசினேன். குழந்தையைப் போல சிந்தித்தேன். குழந்தையைப் போலவே திட்டமிட்டேன். நான் பெரிய மனிதனானபோது குழந்தைத்தனமான வழிகளை விட்டுவிட்டேன். 12 அதுவே நம் அனைவருக்கும் பொருந்தும். தெளிவற்ற கண்ணாடிக்குள் பார்ப்பதுபோல நாம் இப்போது பார்க்கிறோம். எதிர்காலத்தில் தெளிவான பார்வை நமக்கு உருவாகும். இப்போது ஒரு பகுதியே எனக்குத் தெரியும். தேவன் என்னை அறிந்துகொண்டதுபோல அப்போது நான் முழுக்க அறிவேன். 13 எனவே இந்த மூன்றும் நிலைத்திருக்கிறது. விசுவாசம், நம்பிக்கை, அன்பு. இவற்றுள் அன்பே மிக மேன்மையானது.
மன்னிப்பைப்பற்றிய உவமை
21 அப்பொழுது, பேதுரு இயேசுவிடம் வந்து, “ஆண்டவரே, என் சகோதரன் எனக்குத் தொடர்ந்து தீமை செய்தால் நான் அவனை எத்தனை முறை மன்னிக்க வேண்டும்? ஏழுமுறை மன்னித்தால் போதுமா?” என்று கேட்டான்.
22 அதற்கு இயேசு அவனுக்கு, “நீ அவனை ஏழு முறைக்கும் அதிகமாக மன்னிக்க வேண்டும் என்று நான் கூறுகிறேன். அவன் எழுபத்தேழு முறை[a] தீமை செய்தாலும் நீ தொடர்ந்து மன்னிக்க வேண்டும்” என்று பதில் அளித்தார்.
23 “எனவே, பரலோகமானது தன் வேலைக்காரர்களுடன் கணக்கை சரி செய்ய முடிவெடுத்த மன்னனைப் போன்றது. 24 மன்னன் வேலைக்காரர்களின் கணக்கை சரி செய்யத் துவங்கினான். ஒரு வேலைக்காரன் அம்மன்னனுக்கு ஆயிரக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டியிருந்தது. 25 ஆனால், அவ்வேலைக்காரனால், தன் எஜமானனான மன்னனுக்குப் பணத்தைத் திருப்பிச் செலுத்த இயலவில்லை. எனவே, அவ்வேலைக்காரனுக்குச் சொந்தமான அனைத்தையும் மனைவி குழந்தைகள் உட்பட ஏலம் போட மன்னன் ஆணையிட்டான். அதிலிருந்து தனக்குத் தரவேண்டிய பணத்தைத் தரவேண்டும் என்றான்.
26 “ஆனால், அந்த வேலைக்காரன் மன்னனின் கால்களில் விழுந்து, ‘என்னைப் பொறுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்குத் தர வேண்டிய அனைத்தையும் நான் கொடுத்து விடுகிறேன்’ என்று கெஞ்சினான். 27 மன்னன் அவ்வேலைக்காரனுக்காக வருந்தினான். எனவே, மன்னன் அவ்வேலைக்காரன் பணம் ஏதும் தரத் தேவையில்லை என கூறி அவ்வேலைக்காரனை விடுவித்தான்.
28 “பின்னர், அதே வேலைக்காரன் தனக்குச் சிறிதளவே பணம் தரவேண்டிய வேறொரு வேலைக்காரனைக் கண்டான். அவன் உடனே, தனக்குப் பாக்கிப்பணம் தரவேண்டியவனின் கழுத்தைப் பிடித்து, ‘எனக்குத் தரவேண்டிய பணத்தைக் கொடு’ என்று கேட்டான்.
29 “மற்றவன் அவன் கால்களில் வீழ்ந்து, ‘என்னைப் பொறுத்துக் கொள். உனக்குத் தரவேண்டிய அனைத்தையும் கொடுத்து விடுகிறேன்’ என்று கெஞ்சிக் கேட்டான்.
30 “ஆனால், முதலாமவன் தான் பொறுத்துக்கொள்ள இயலாதென்றான். அவன் நீதிபதியிடம் மற்றவன் தனக்குப் பணம் தர வேண்டும் என்று கூற இரண்டாமவன் சிறையில் அடைக்கப்பட்டான். அவ்வேலைக்காரன் அவன் தரவேண்டிய பணம் முழுவதையும் கொடுக்கும் வரையிலும் சிறையிலிருக்க நீதிபதி பணித்தார். 31 மற்ற வேலைக்காரர்கள் அனைவரும் நடந்ததைக் கண்டு மிகவும் வருந்தினார்கள். எனவே, அவர்கள் தங்கள் எஜமானனாகிய மன்னனிடம் சென்று நடந்தவை அனைத்தையும் கூறினார்கள்.
32 “பின்பு அம்மன்னன் தன் வேலைக்காரனை அழைத்துவரச் செய்து, அவனிடம், ‘பொல்லாத வேலைக்காரனே, எனக்கு நிறையப்பணம் தர வேண்டிய நீ, என்னிடம் மன்னிப்புக் கேட்டுக் கெஞ்சினாய். எனவே, நீ எனக்குப் பணம் ஏதும் தரவேண்டியதில்லை என்று கூறினேன். 33 ஆகவே, நீயும் உன் சக வேலைக்காரனுக்கு அதேபோலக் கருணை காட்டியிருக்க வேண்டும்’ என்று சொன்னான். 34 மிகக் கோபமடைந்த மன்னன், அவ்வேலைக்காரனைச் சிறையிலிட்டான். தரவேண்டிய பணம் அனைத்தையும் திருப்பித் தரும்வரைக்கும் அவன் சிறையிலிருக்க வேண்டியிருந்தது.
35 “என் பரலோகப் பிதா உங்களுக்கு என்ன செய்வாரோ அதையே அம்மன்னனும் செய்தான். நீங்கள் மெய்யாகவே உங்கள் சகோதரனையோ சகோதரியையோ மன்னிக்க வேண்டும். இல்லையெனில் பரலோகப் பிதாவும் உங்களை மன்னிக்கமாட்டார்” என்று இயேசு சொன்னார்.
2008 by World Bible Translation Center