Book of Common Prayer
“அழிக்காதே” என்னும் பாடலின் இசைத்தலைவனுக்கு ஆசாப் அளித்த துதிப்பாடல்களுள் ஒன்று.
75 தேவனே, நாங்கள் உம்மைத் துதிக்கிறோம்.
நாங்கள் உம்மைத் துதிக்கிறோம்.
நீர் அருகாமையில் இருக்க, ஜனங்கள் நீர் செய்யும் அற்புதமான காரியங்களைக் குறித்து கூறுகிறார்கள்.
2 தேவன் கூறுகிறார்:
“நியாயத்தீர்ப்பின் காலத்தை நான் தெரிந்தெடுத்திருக்கிறேன்.
நான் தகுந்தபடி நியாயந்தீர்ப்பேன்.
3 பூமியும் அதிலுள்ள அனைத்தும் நடுங்கி விழும் நிலையில் இருக்கும்.
ஆனால் நான் அதைத் திடமாக இருக்கச் செய்வேன்.”
4-5 “சிலர் அதிகமாக பெருமையுள்ளவர்கள், தாங்கள் வலிமை மிக்கவர்கள் என்றும் முக்கியமானவர்கள் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள்.
ஆனால் நான் அவர்களிடம் ‘வீம்பு பேசாதீர்கள்!’
‘பெருமை பாராட்டாதீர்கள்!’ என்று கூறுவேன்” என்கிறார்.
6 ஒருவனை முக்கியமானவனாக்கும் வல்லமை
எதுவும் இப்பூமியில் இல்லை.
7 தேவனே நீதிபதி, யார் முக்கியமானவர் என்பதை தேவன் முடிவெடுக்கிறார்.
தேவன் ஒருவனை உயர்த்தி அவனை முக்கியமானவனாக்குகிறார்.
தேவன் மற்றொருவனைத் தாழ்த்தி அவனை முக்கியமற்றவனாக்குகிறார்.
8 தேவன் தீயோரைத் தண்டிக்கத் தயாராய் இருக்கிறார்.
கர்த்தர் கையில் ஒரு கோப்பை உள்ளது, அக்கோப்பை விஷம் கலந்த திராட்சைரசத்தால் நிரம்பியுள்ளது.
அவர் அத்திராட்சைரசத்தை (தண்டனையை) ஊற்றுவார்,
கடைசித் துளிமட்டும் கெட்டஜனங்கள் அதனைக் குடிப்பார்கள்.
9 நான் எப்போதும் ஜனங்களுக்கு இவற்றைப்பற்றிக் கூறுவேன்.
இஸ்ரவேலரின் தேவனுக்கு நான் துதிப்பாடுவேன்.
10 கெட்ட ஜனங்களிடமிருந்து நான் வல்லமையை அகற்றிவிடுவேன்.
நான் நல்ல ஜனங்களுக்கு வல்லமையை அளிப்பேன்.
இசைக் கருவிகளை இசைக்கும் இசைத் தலைவனுக்கு ஆசாப் அளித்த துதிப்பாடல்.
76 யூதாவின் ஜனங்கள் தேவனை அறிவார்கள்.
இஸ்ரவேலின் ஜனங்கள் தேவனுடைய நாமத்தை மதிக்கிறார்கள்.
2 தேவனுடைய ஆலயம் சாலேமில்[a] இருக்கிறது.
தேவனுடைய வீடு சீயோன் மலையில் இருக்கிறது.
3 அவ்விடத்தில் தேவன் வில்கள், அம்புகள், கேடயங்கள், வாள்கள்,
மற்றும் போர்க்கருவிகளையெல்லாம் உடைத்தெறிந்தார்.
4 தேவனே, நீர் உமது பகைவர்களை முறியடித்த போது
மலைகளிலிருந்து மகிமை பொருந்தியவராய் வெளிப்பட்டீர்.
5 அவர்கள் வலிமையுள்ளவர்கள் என அந்த வீரர்கள் நம்பினார்கள்.
ஆனால் இப்போது அவர்கள் களங்களில் (வயல்களில்) மரித்துக்கிடக்கிறார்கள்.
அவர்கள் அணிந்திருந்தவையெல்லாம் அவர்கள் உடம்பிலிருந்து அகற்றப்பட்டன.
அவ்வலிய வீரர்களில் எவரும் தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை.
6 யாக்கோபின் தேவன் அவ்வீரர்களிடம் குரல் உயர்த்திக் கண்டித்தார்.
இரதங்களோடும் குதிரைகளோடும் கூடிய அப்படையினர் மரித்து வீழ்ந்தனர்.
7 தேவனே, நீர் பயங்கரமானவர்!
நீர் சினமடையும்போது ஒருவனும் உமக்கெதிராக நிற்க முடிவதில்லை.
8-9 கர்த்தர் நீதிபதியாக இருந்து, அவரது முடிவை அறிவிக்கிறார்.
தேசத்தின் எளிய ஜனங்களை தேவன் மீட்டார்.
பரலோகத்திலிருந்து அவர் இம்முடிவைத் தந்தார்.
பூமி முழுவதும் அமைதியாகப் பயத்தோடு காணப்பட்டது.
10 தேவனே, நீர் தீயோரைத் தண்டிக்கும்போது ஜனங்கள் உம்மை மதிக்கிறார்கள்.
நீர் உமது கோபத்தை வெளிப்படுத்தும்.
தப்பித்து வாழ்பவர்கள் வலிமையுள்ளோராவர்கள்.
11 ஜனங்களே, உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு வாக்குறுதிப் பண்ணினீர்கள்.
இப்போது, வாக்குறுதிப் பண்ணினவற்றை நீங்கள் அவருக்குக் கொடுங்கள்.
எல்லா இடங்களிலும் ஜனங்கள் தேவனுக்குப் பயந்து அவரை மதிக்கிறார்கள்.
அவர்கள் அவருக்குப் பரிசுகளைக் கொண்டு வருகிறார்கள்.
12 தேவன் பெருந்தலைவர்களைத் தோற்கடிக்கிறார்.
பூமியின் எல்லா ராஜாக்களும் அவருக்குப் பயப்படுகிறார்கள்.
தாவீதின் பாடல்.
23 கர்த்தர் என் மேய்ப்பர்.
எனக்குத் தேவையானவை எப்போதும் என்னிடமிருக்கும்.
2 அவர் பசுமையான புல்வெளிகளில் என்னை இளைப்பாறச் செய்கிறார்.
குளிர்ந்த நீரோடைகளருகே அவர் என்னை வழிநடத்துகிறார்.
3 அவர் நாமத்தின் நன்மைக்கேற்ப, என் ஆத்துமாவிற்குப் புது வலிமையைத் தருகிறார்.
அவர் நல்லவரெனக் காட்டும்படி, நன்மையின் பாதைகளில் என்னை நடத்துகிறார்.
4 மரணத்தின் இருண்ட பள்ளத்தாக்குகளில் நான் நடந்தாலும் எந்தத் தீமைக்கும் பயப்படமாட்டேன்.
ஏனெனில் கர்த்தாவே, நீர் என்னோடிருக்கிறீர்.
உமது கோலும் தடியும் எனக்கு ஆறுதல் நல்கும்.
5 கர்த்தாவே, என் பகைவர்களின் முன்னிலையில் என் பந்தியை ஆயத்தமாக்கினீர்.
என் தலையில் எண்ணெயை ஊற்றினீர். என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.
6 என் ஆயுள் முழுவதும் உமது நன்மையும் இரக்கமும் என்னோடிருக்கும்.
நித்திய காலமாக நான் கர்த்தருடைய ஆலயத்தில் அமர்ந்திருப்பேன்.
தாவீதின் பாடல்.
27 கர்த்தாவே, நீரே என் ஒளியும் இரட்சகருமானவர்.
யாருக்கும் நான் பயப்படமாட்டேன்!
கர்த்தர் என் வாழ்க்கையின் பாதுகாப்பானவர்.
எந்த மனிதனுக்கும் நான் அஞ்சேன்.
2 தீய ஜனங்கள் என்னைத் தாக்கக்கூடும்.
என்னைத் தாக்கி என் சரீரத்தை அழிக்க என் பகைவர்கள் முயலக்கூடும்.
3 ஒரு படையே என்னைச் சூழ்ந்தாலும் நான் அஞ்சமாட்டேன்.
போரில் ஜனங்கள் என்னைத் தாக்கினாலும் நான் பயப்படேன்.
ஏனெனில் நான் கர்த்தரை நம்புகிறேன்.
4 எனக்குத் தருமாறு ஒன்றையே நான் கர்த்தரிடம் கேட்பேன்.
இதுவே என் கோரிக்கை:
“என் வாழ்க்கை முழுவதும் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கி
கர்த்தருடைய அழகைக்கண்டு அவர் அரண்மனையை தரிசிக்க அனுமதியும்.”
5 ஆபத்தில் நான் இருக்கையில் கர்த்தர் என்னைக் காப்பார்.
அவரது கூடாரத்தில் என்னை ஒளித்து வைப்பார்.
அவரது பாதுகாப்பிடம் வரைக்கும் என்னை அழைத்துச் செல்வார்.
6 என் பகைவர்கள் என்னைச் சூழ்ந்துள்ளனர்.
அவர்களைத் தோற்கடிக்க கர்த்தர் எனக்கு உதவுவார்.
அப்போது அவரது கூடாரத்தில் பலிகளைச் செலுத்துவேன்.
மகிழ்ச்சி ஆரவாரத்தோடு என் பலிகளை அளிப்பேன்.
கர்த்தரை, மகிமைப்படுத்தும் பாடல்களை இசைத்துப் பாடுவேன்.
7 கர்த்தாவே, என் குரலைக் கேட்டு எனக்குப் பதில் தாரும், என்னிடம் தயவாயிரும்.
8 கர்த்தாவே, உம்மோடு பேசவிரும்புகிறேன்.
என் இருதயத்திலிருந்து உம்மிடம் பேசவாஞ்சிக்கிறேன்.
கர்த்தாவே, உம்மிடம் பேசுவதற்காக உமக்கு முன்பாக வருகிறேன்.
9 கர்த்தாவே, என்னிடமிருந்து விலகாதேயும்!
உமது ஊழியனாகிய என்னிடம் கோபங்கொண்டு, என்னைவிட்டு விலகாதேயும்!
எனக்கு உதவும்! என்னைத் தூரத்தள்ளாதிரும்.
என்னை விட்டு விடாதிரும்!
என் தேவனே, நீரே என் இரட்சகர்!
10 என் தந்தையும் தாயும் என்னை கைவிட்டனர்.
ஆனால் கர்த்தர் என்னை எடுத்து தமக்குரியவன் ஆக்கினார்.
11 கர்த்தாவே, எனக்குப் பகைவருண்டு.
எனவே உமது வழிகளை எனக்குப் போதியும்.
சரியான காரியங்களைச் செய்வதற்கு எனக்குப் போதியும்.
12 எனது சத்தருக்கள் என்னைத் தாக்கினார்கள்.
என்னைப்பற்றி பொய்யுரைத்தனர்.
என்னைத் துன்புறுத்த பொய் கூறினர்.
13 நான் மரிக்கும் முன்னர்
கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என நான் உண்மையாகவே நம்புகிறேன்.
14 கர்த்தருடைய உதவிக்குக் காத்திரு.
பெலத்தோடும் தைரியத்தோடும் இருந்து, கர்த்தருக்குக் காத்திரு.
யூதரல்லாதவர்களுடன் செய்த திருமணங்கள்
9 இவை அனைத்தையும் செய்து முடிந்த பிறகு, இஸ்ரவேல் ஜனங்களின் தலைவர்கள் என்னிடம் வந்தனர். அவர்கள், “எஸ்றா, இஸ்ரவேல் ஜனங்கள் தம்மைச் சுற்றியுள்ள ஜனங்களிடமிருந்து தங்களைத் தனியே பிரித்து வைத்திருக்கவில்லை. ஆசாரியர்களும் லேவியர்களும் தங்களைத் தனியே பிரித்து வைத்திருக்கவில்லை. இவர்கள், கானானியர், ஏத்தியர், பெர்சியர், எபூசியர், அம்மோனியர், மோவாபியர், எகிப்தியர், எம்மோரியர் ஆகிய ஜனங்களால் பாதிப்புக்குள்ளாகி, அவர்களின் தீயச் செயல்களுக்கும் ஆளானார்கள். 2 இஸ்ரவேல் ஜனங்கள் எங்களைச் சுற்றியுள்ளவர்களை மணந்துக்கொண்டனர். இஸ்ரவேல் ஜனங்கள் சிறப்புக்குரியவர்களாகக் கருதப்படத்தக்கவர்கள். ஆனால் அவர்கள் இப்போது தம்மோடு வாழும் மற்றவர்களோடு கலந்துவிட்டனர். இந்த வகையில் இஸ்ரவேல் ஜனங்களின் தலைவர்களும் முக்கிய அதிகாரிகளும் ஒரு மோசமான உதாரணமாக இருந்தனர்” என்றனர். 3 நான் இதைப்பற்றி கேள்விப்பட்டதும், நான் கலக்கமடைந்ததைக் காட்ட எனது ஆடைகளையும் சால்வைகளையும் கிழித்துக்கொண்டேன். என் தலையிலும் தாடியிலும் உள்ள முடியைப் பிடுங்கிக்கொண்டேன். அதிர்ச்சியடைந்தும் கலக்கமடைந்தும் நான் உட்கார்ந்துவிட்டேன். 4 பிறகு, தேவனுடைய சட்டங்கள் மீது மரியாதைக் கொண்ட ஒவ்வொருவரும் அஞ்சினார்கள். அவர்கள், அடிமைத்தனத்திலிருந்து மீண்ட இஸ்ரவேலர்கள் தேவனுக்கு உண்மையுள்ளவர்கள் அல்ல என்பதை அறிந்ததால் பயந்தார்கள். நான் அதிர்ச்சியும் கலக்கமும் அடைந்தேன். பலிக்கான மாலை நேரம்வரை நான் உட்கார்ந்திருந்தேன். அந்த ஜனங்கள் என்னைச் சுற்றிக் கூடினார்கள்.
5 பிறகு பலிக்குரிய மாலை நேரம் வந்ததும் நான் எழுந்தேன். அங்கே அமர்ந்திருந்தபொழுது, பார்ப்பதற்கு வெட்கப்படும்படியாக என்னை நானே ஆக்கிக் கொண்டேன். எனது ஆடையும் சால்வையும் கிழிந்திருந்தன. நான் முழங்காலிட்டு, என் தேவனாகிய கர்த்தருக்கு நேராக கைகளை விரித்திருந்தேன். 6 பிறகு நான் இந்த ஜெபத்தைச் செய்தேன்.
“எனது தேவனே, உம்மைப் பார்ப்பதற்கு நான் மிகவும் வெட்கமும் குழப்பமும் அடைகிறேன். எங்கள் தலைகளைவிட எங்கள் பாவங்கள் உயரமாகிவிட்டதை அறிந்து வெட்கப்படுகிறேன். எங்கள் குற்றங்கள் பரலோகம்வரை எட்டியது. 7 எங்கள் முற்பிதாக்களின் காலமுதல் இன்றுவரை நாங்கள் பலவகையான பாவங்களைச் செய்து வருகிறோம். நாங்கள் பாவம் செய்ததினால் எங்களுடைய ராஜாக்களும் ஆசாரியர்களும் தண்டிக்கப்பட்டனர். வெளிநாட்டு ராஜாக்கள் எங்களைத் தாக்கி, எங்கள் ஜனங்களை இழுத்துச் சென்றனர். எங்களுக்குரிய செல்வங்களையும் எடுத்துக்கொண்டு எங்களை அவமானத்திற்குள்ளாக்கிவிட்டார்கள். இன்றும் கூட அதே நிலைதான் உள்ளது.
8 “ஆனால் இப்போது, முடிவாக நீர் எங்கள் மீது இரக்கத்துடன் இருக்கிறீர். அடிமைத்தனத்திலிருந்த எங்களில் சிலரை விடுதலை செய்து, இந்தப் பரிசுத்தமான இடத்திற்கு அழைத்து வந்தீர், கர்த்தாவே எங்களுக்குப் புதிய வாழ்வும், அடிமைத்தனத்திலிருந்து விடுதலையும் தந்தீர். 9 ஆமாம், நாங்கள் அடிமைகளாய் இருந்தோம். ஆனால் நீர் எங்களை எப்போதும் அடிமைகளாய் இருக்கவிடவில்லை. எங்களோடு நீர் இரக்கமாய் இருக்கிறீர். பெர்சியா ராஜாக்களையும் எங்கள் மீது கருணை காட்டுமாறு செய்தீர். உமது ஆலயம் அழிக்கப்பட்டது. ஆனால் நீர் எங்களுக்குப் புதிய வாழ்க்கையைக் கொடுத்தீர். எனவே, நாங்கள் உமது ஆலயத்தை மீண்டும் புதிதாகக் கட்ட முடிந்தது. தேவனே, யூதாவையும் எருசலேமையும் காப்பாற்ற ஒரு சுவர் கட்ட நீர் உதவிச்செய்தீர்.
10 “இப்போது, தேவனே உமக்கு நாங்கள் என்ன சொல்ல முடியும்? மீண்டும் நாங்கள் உம்முடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதை நிறுத்திக் கொண்டோம். 11 தேவனே, நீர் உம்முடைய ஊழியக்காரர்களையும், தீர்க்கதரிசிகளையும் பயன்படுத்தி உமது கட்டளைகளைக் கொடுத்தீர். நீர், ‘நீங்கள் வாழப் போகிற நாடு அழிந்துபோன நாடு. அது, அங்குள்ள ஜனங்களின் தீயச் செயல்களால் அழிந்து போனது. இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு இடத்திலும் அங்குள்ள ஜனங்கள் பாவம் செய்தனர். அவர்கள் இந்தத் தேசத்தைத் தங்கள் பாவங்களால் அசிங்கப்படுத்திவிட்டனர். 12 எனவே, இஸ்ரவேல் ஜனங்களே, அவர்களது பிள்ளைகளை உங்கள் பிள்ளைகள் மணந்துக்கொள்ள அனுமதிக்கவேண்டாம்! அவர்களோடு சேராதீர்கள். அவர்களது பொருட்களை விரும்பாதீர்கள்! எனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுங்கள். எனவே நீங்கள் பலமுள்ளவர்களாகவும், இந்த நாட்டிலுள்ள நல்லவற்றை அனுபவிப்பவர்களாகவும் இருப்பீர்கள். பிறகு இந்த நிலத்தை உமது பிள்ளைகளுக்குக் கொடுக்கலாம்’ என்று சொன்னீர்.
13 “எங்களுடைய சொந்தத் தவறுகளால்தான் எங்களுக்கு தீமைகள் ஏற்பட்டன. நாங்கள் கெட்டவற்றைச் செய்திருக்கிறோம், எங்களிடம் நிறைய குற்றங்கள் உள்ளன. ஆனால், எங்கள் தேவனாகிய நீர் எங்களுக்குரிய தண்டனைகளைவிடக் குறைவாகவே தண்டித்தீர். நாங்கள் பயங்கரமான பாவங்களைச் செய்திருக்கிறோம். நாங்கள் மிக மோசமாகத் தண்டிக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் நீர் எங்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டிருக்கின்றீர். 14 எனவே, நாங்கள் உம்முடைய கட்டளைகளை மீறக்கூடாது என்று தெரிந்துக்கொண்டோம். அவர்களை நாங்கள் மணந்துக்கொள்ளக்கூடாது. அவர்கள் தீய பாவங்களை செய்தனர். தேவனே, நாங்கள் அவர்களைத் தொடர்ந்து மணந்துக்கொண்டிருந்தால், எங்களை நீர் முழுவதும் அழித்துவிடுவீர் என்பதை அறிவோம்! பிறகு, இஸ்ரவேலர் எவரும் உயிரோடு இருக்கமாட்டார்கள்.
15 “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, நீர் நல்லவர்! நீர் இன்னும் எங்களில் சிலரை வாழ விட்டிருக்கிறீர். ஆமாம், நாங்கள் குற்றவாளிகளே! எங்கள் குற்றமனப்பான்மையால் எங்களில் ஒருவரும் உமது முன்னிலையில் நிற்க அனுமதிக்கப்படக்கூடாது.”
மிருகத்தின்மேல் பெண்மணி
17 ஏழு தூதர்களில் ஒரு தூதன் வந்து என்னிடம் பேசினான். ஏழு கிண்ணம் வைத்திருந்த ஏழு தூதர்களில் இத்தூதனும் ஒருவன். அவன், “வா. ஒரு பிரசித்தி பெற்ற வேசிக்கு வரப்போகும் தண்டனையை உனக்குக் காட்டுவேன். அவள் திரளான தண்ணீர்களின்மேல் உட்கார்ந்திருக்கிறவள். 2 பூமியில் உள்ள ராஜாக்கள் அந்த வேசியோடு பாவம் செய்தார்கள். அவளது வேசித்தனமாகிய மதுவால் உலகில் உள்ள மக்கள் நிலைதடுமாறியவர்கள் ஆனார்கள்” என்றான்.
3 ஆவியானவரால் என்னைப் பாலைவனத்துக்கு அத்தூதன் கொண்டுபோனான். அங்கே ஒரு பெண் ஒரு சிவப்பு நிறமுள்ள மிருகத்தின் மேல் உட்கார்ந்துகொண்டிருப்பதைப் பார்த்தேன். அந்த மிருகத்தின்மேல் தீய பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. அதற்கு ஏழு தலைகளும் பத்து கொம்புகளும் இருந்தன. 4 இரத்த வண்ணத்தில் சிவப்பும் இரத்தாம்பரமுமான ஆடை அந்தப் பெண்ணுக்கு அணிவிக்கப்பட்டது. அவள் பொன்னாலும் நகைகளாலும், முத்துக்களாலும் தன்னை அலங்கரித்திருந்தாள். அவள் கையில் ஒரு பொன் கோப்பையை வைத்திருந்தாள். இக்கோப்பை அருவருப்பாலும், வேசித்தனமாகிய அசிங்கத்தாலும் நிறைந்திருந்தது. 5 அவளது நெற்றியில் அவளுக்குரிய பட்டப்பெயர் எழுதப்பட்டிருந்தது. அப்பட்டப் பெயருக்கு ஒரு மறைபொருளும் உண்டு. எழுதப்பட்டிருந்த வாசகம் இதுதான்:
மகா பாபிலோன் வேசிகளுக்கும்
பூமியில் உள்ள
அருவருப்புகளுக்கும் தாய்!
6 அப்பெண் குடித்திருந்ததை நான் பார்த்தேன். அவள் தேவனின் பரிசுத்தமான மக்களின் இரத்தத்தாலும், இயேசுவின் சாட்சிகளின் இரத்தத்தாலும் நிலைதடுமாறி இருந்தாள்.
அவளைப் பார்த்தபோது எனக்கு மிகவும் அதிசயமாக இருந்தது. 7 அப்போது தூதன் என்னைப் பார்த்து, “ஏன் அதிசயப்படுகிறாய்? நான் இவளுடைய இரகசியத்தையும், இவளைச் சுமக்கிற ஏழு தலைகளையும், பத்துக் கொம்புகளையும் கொண்ட அம்மிருகத்தின் இரகசியத்தையும் உனக்குக் கூறுகிறேன். 8 நீ கண்ட மிருகம் முன்பொரு காலத்தில் உயிருடன் இருந்தது. ஆனால் இப்போது அது உயிருடன் இல்லை. அது உயிரடைந்து அடித்தளமற்ற பாதாளத்தில் இருந்து ஏறி வந்து அழிவை நோக்கிப் போகிறது. இந்த உலகத்தில் வாழும் மக்கள் இம்மிருகத்தைக் காணும்போது ஆச்சரியப்படுவார்கள். காரணம் இது ஒரு காலத்தில் உயிரோடு இருந்தது பின் இராமல் போனது. ஆனால், மீண்டும் வரப்போகிறது. இம்மக்களின் பெயர்கள் ஜீவ புத்தகத்தில் உலகம் தொடங்கின நாள் முதல் எழுதப்படாமல் இருக்கிறது.
9 “இதைப் புரிந்துகொள்ள உனக்கு ஞானமுள்ள மனம் வேண்டும். அந்த ஏழு தலைகளும் அந்தப் பெண் உட்கார்ந்துகொண்டிருக்கிற ஏழு மலைகள் ஆகும். அவை ஏழு ராஜாக்களுமாகும். 10 இவர்களில் ஐந்து பேர் விழுந்தார்கள். ஒருவன் இருக்கிறான். இன்னொருவன் இன்னும் வரவில்லை. அவன் வந்த பிறகு கொஞ்ச காலம் தான் உயிரோடு இருப்பான். 11 இருந்ததும் இராததுமாகிய மிருகமே எட்டாம் ராஜாவாவான். அவன் அந்த ஏழில் ஒருவனாக இருந்து அழிவை நோக்கிச் செல்வான்.
12 “நீ பார்த்த பத்துக் கொம்புகளும் பத்து ராஜாக்களாகும். இந்தப் பத்து பேரும் இன்னும் தம் இராஜ்யங்களைப் பெற்றுக்கொள்ளவில்லை. எனினும் இந்த மிருகத்துடன் சேர்ந்து ஒரு மணி நேரம் ஆள்வதற்கு உரிய அதிகாரத்தைப் பெற்றுள்ளார்கள். 13 இவர்கள் ஒரே நோக்கம் உடையவர்கள். அவர்கள் தம் சக்தியையும் அதிகாரத்தையும் அந்த மிருகத்துக்குக் கொடுப்பார்கள். 14 இவர்கள் ஆட்டுக்குட்டியானவருடன் போர் செய்வார்கள். ஆனால் இவர்களை ஆட்டுக்குட்டியானவர் தோற்கடிப்பார். ஏனென்றால் அவர் கர்த்தர்களின் கர்த்தர், ராஜாக்களின் ராஜா. அவர் தாம் அழைத்தவர்களாகிய தம்முடைய தேர்ந்தெடுத்தவர்களோடும், நம்பிக்கைக்குரியவர்களோடும் கூட அவர்களைத் தோற்கடிப்பார்” என்று சொன்னான்.
இயேசு தண்ணீரின் மேல் நடத்தல்
(மாற்கு 6:45-52; லூக்கா 6:16-21)
22 பிறகு இயேசு தமது சீஷர்களைப் படகில் ஏறச் சொன்னார். இயேசு அவர்களை ஏரியின் மறுகரைக்குப் போகச் சொன்னார். தாம் பின்னர் வருவதாக அவர்களிடம் கூறினார். 23 மக்களிடம் விடை பெற்றுக்கொண்ட இயேசு குன்றின்மீது ஏறினார். தனியே பிரார்த்தனை செய்வதற்காக இயேசு அங்கு சென்றார். 24 அந்தச் சமயம், படகு ஏற்கெனவே வெகு தொலைவு சென்றிருந்தது. படகு அலைகளினால் தொல்லைகளுக்கு உள்ளானது. படகு சென்ற திசைக்கு எதிராகக் காற்று வீசியது.
25 அதிகாலை, மூன்று மணியிலிருந்து ஆறு மணிவரை இயேசுவின் சீஷர்கள் படகிலேயே இருந்தனர். இயேசு தண்ணீரின் மேல் நடந்து அவர்களிடம் வந்தார். 26 இயேசு தண்ணீரின் மேல் நடப்பதைக் கண்ட சீஷர்கள் பயந்து போனார்கள், “அது ஒரு ஆவிதான்” என்று அவர்கள் பயத்தில் அலறினார்கள்.
27 உடனே இயேசு அவர்களிடம், “கவலை கொள்ளாதீர்கள். நான்தான்! பயப்படாதீர்கள்” என்று கூறினார்.
28 அதற்குப் பேதுரு, “ஆண்டவரே, மெய்யாகவே இது நீர்தானென்றால், என்னை உம்மிடம் தண்ணீரின் மேல் நடந்துவரக் கட்டளையிடும்” என்று சொன்னான்.
29 இயேசு அவனிடம், “வா, பேதுரு” என்று கூறினார்.
பின்னர், பேதுரு படகிலிருந்து இறங்கி, தண்ணீரின் மேல் இயேசுவை நோக்கி நடந்தான். 30 ஆனால், தண்ணீரின் மேல் நடந்து சென்றபொழுது பேதுரு காற்றடிப்பதையும் அலைகள் வீசுவதையும் கண்டான். பயந்து போன பேதுரு, நீரில் மூழ்க ஆரம்பித்தான். உடனே பேதுரு, “ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்” என்று அலறினான்.
31 உடனே இயேசு தமது கையால் பேதுருவைப் பற்றிக்கொண்டார். இயேசு அவனிடம், “உன் விசுவாசம் சிறியது. நீ ஏன் சந்தேகம் கொண்டாய்?” என்று சொன்னார்.
32 பேதுருவும் இயேசுவும் படகில் ஏறியதும் காற்று அமைதியடைந்தது. 33 அதன் பிறகு படகிலிருந்த சீஷர்கள் இயேசுவை வணங்கி, “உண்மையிலேயே நீர் தேவகுமாரன்தான்” என்று சொன்னார்கள்.
அநேக நோயாளிகளை இயேசு குணமாக்குதல்
(மாற்கு 6:53-56)
34 அவர்கள் ஏரியைக் கடந்து, கெனசெரேத்து என்ற இடத்தை அடைந்தார்கள். 35 அங்கிருந்த மக்கள் இயேசுவைக் கண்டனர். அவர்கள் அவர் யார் என்பதை அறிந்திருந்தனர். எனவே, அவர்கள் அப்பிரதேசத்தைச் சுற்றியிருந்த மற்றவர்களிடம் இயேசு வந்திருப்பதைக் கூறினார்கள். நோயாளிகள் அனைவரையும் இயேசுவிடம் அழைத்து வந்தனர். 36 அவரது மேலாடையைத் தொடுவதற்கு மட்டுமாவது அனுமதித்து குணம் பெறத் தங்களை அனுமதிக்குமாறு இயேசுவிடம் மக்கள் கெஞ்சிக் கேட்டனர். இயேசுவின் மேலாடையைத் தொட்ட நோயாளிகள் அனைவரும் குணமடைந்தனர்.
2008 by World Bible Translation Center