Print Page Options
Previous Prev Day Next DayNext

Book of Common Prayer

Daily Old and New Testament readings based on the Book of Common Prayer.
Duration: 861 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 83

ஆசாபின் துதிப் பாடல்களுள் ஒன்று.

83 தேவனே, அமைதியாய் இராதேயும்!
    உமது செவிகளை மூடிக்கொள்ளாதேயும்!
    தேவனே தயவாய் எதையாவது பேசும்.
தேவனே, உமது பகைவர்கள் உமக்கெதிராகத் திட்டங்கள் வகுக்கிறார்கள்.
    உமது பகைவர்கள் உடனே தாக்குதல் ஆரம்பிக்கக்கூடும்.
உமது ஜனங்களுக்கு எதிராக அவர்கள் இரகசிய திட்டஙகளை வகுக்கிறார்கள்.
    நீர் நேசிக்கும் ஜனங்களுக்கு எதிராக உமது பகைவர்கள் திட்டங்களை கலந்து ஆலோசிக்கிறார்கள்.
பகைவர்கள் இவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்: “வாருங்கள், நாம் பகைவர்களை முற்றிலும் அழிப்போம்.
    பின்பு ஒருநாளும் ஒருவனும் ‘இஸ்ரவேல்’ என்னும் பெயரை நினைவு கூரமாட்டான்.”
தேவனே, அந்த ஜனங்கள் எல்லோரும் உமக்கும்
    நீர் எங்களோடு செய்த உமது உடன்படிக்கைக்கும் எதிராகப் போராட ஒருமித்துக் கூடினார்கள்.
6-7 அப்பகைவர்கள் எங்களை எதிர்க்க ஒருமித்துச் சேர்ந்தார்கள்.
    இஸ்மவேலராகிய ஏதோமியரும், மோவாபியரும், ஆகாரின் சந்ததியினரும், கேபாலரும், அம்மோனியரும், அமலேக்கியரும், பெலிஸ்தரும், தீருவில் வசிக்கும் ஜனங்களும், ஆகிய எல்லோரும் எங்களை எதிர்க்க ஒருமித்துக் கூடினார்கள்.
அசீரியரும்கூட அந்த ஜனங்களோடு சேர்ந்தார்கள்.
    லோத்தின் சந்ததியினர் மிகுந்த வல்லமை பெறும்படிச் செய்தார்கள்.

தேவனே, மீதியானியரைத் தோற்கடித்ததைப் போலவும்
    கீசோன் நதியருகே சிசெரா மற்றும் யாபீன் ஜனங்களைத் தோற்கடித்ததைப்போலவும் பகைவனைத் தோற்கடியும்.
10 நீர் அவர்களை எந்தோரில் தோற்கடித்தீர்.
    அவர்கள் சரீரங்கள் நிலத்தில் விழுந்து அழிந்தன.
11 தேவனே, பகைவனின் தலைவர்களைத் தோற்கடியும்.
    ஓரேபுக்கும் சேபுக்கும் செய்தபடியே செய்யும்.
    சேபாவுக்கும் சல்முனாவுக்கும் செய்தபடியே செய்யும்.
12 தேவனே, அந்த ஜனங்கள்
    உமது தேசத்தை விட்டுப் போகும்படியாக எங்களை வற்புறுத்த விரும்பினார்கள்!
13 தேவனே, அந்த ஜனங்களைக் காற்றில் பறக்கும் பதராகப் பண்ணும்.
    காற்றுப் பறக்கடிக்கும் புல்லைப்போல் அந்த ஜனங்களைச் சிதறடியும்.
14 நெருப்பு காட்டை அழிப்பதைப்போலவும்
    பெருநெருப்பு மலைகளைச் சுடுவது போலவும் பகைவனை அழித்துப்போடும்.
15 தேவனே, புயலில் அலைக்கழிக்கப்படும் துகளைப்போல அந்த ஜனங்களை துரத்திவிடும்.
    அவர்களை அசையும், அவர்களைப் பெருங்காற்றைப்போல நின்று பறக்கடியும்.
16 தேவனே அவர்கள் உண்மையிலேயே சோர்வுடையவர்கள் என்பதை அந்த ஜனங்கள் அறியும்படி அவர்களுக்குப் போதியும்.
    அப்போது அவர்கள் உமது நாமத்தை தொழுதுகொள்ள விரும்புவார்கள்!
17 தேவனே, அந்த ஜனங்களை அச்சுறுத்தி, அவர்கள் என்றென்றும் வெட்கமடையச் செய்யும்.
    அவர்களை இழிவுப்படுத்தி, அழித்துப்போடும்.
18 அப்போது நீரே தேவனென்று அவர்கள் அறிவார்கள்.
    உமது நாமம் யேகோவா என்பதையும் அவர்கள் அறிவார்கள்.
மிக உன்னதமான தேனாகிய நீர்
    உலகம் முழுவதற்கும் தேவன் என்பதையும் அவர்கள் அறிவார்கள்.

சங்கீதம் 34

[a] தாவீதின் வேஷத்தைக் கண்டு அபிமெலேக்கு அவனைத் துரத்தியபோது தாவீது பாடியது. இவ்வாறு தாவீது அவனை விட்டுப் பிரிந்தான்.

34 நான் எந்த காலத்திலும் கர்த்தரை ஸ்தோத்தரிப்பேன்.
    என் உதடுகள் எப்போதும் அவரைத் துதிக்கும்.
தாழ்மையான ஜனங்களே, செவிக்கொடுத்து மகிழுங்கள்.
    என் ஆத்துமா கர்த்தரைக் குறித்துப் பெருமைகொள்ளும்.
தேவனுடைய மேன்மையை எனக்குக் கூறுங்கள்.
    அவரது நாமத்தை என்னோடு சேர்ந்து துதியுங்கள்.

உதவிவேண்டி தேவனிடம் போனேன்.
    அவர் கேட்டார், நான் அஞ்சிய எல்லாக் காரியங்களிலிருந்தும் அவர் என்னை மீட்டார்.
உதவிக்காக தேவனை நாடுங்கள்.
    அவர் உங்களை ஏற்றுக்கொள்ளுவார். வெட்க மடையாதீர்கள்.
இந்த ஏழை உதவிக்காக கர்த்தரைக் கூப்பிட்டான்.
    கர்த்தர் எனக்குச் செவிகொடுத்தார்.
    என் தொல்லைகளிலிருந்து என்னை மீட்டார்.
கர்த்தரை நம்புவோரைச் சுற்றிலும் கர்த்தருடைய தூதன் ஒரு பாளையமிடுகிறான்.
    கர்த்தருடைய தூதன் அவர்களைக் காத்து அவர்களுடைய துன்பங்களிலிருந்து விடுதலை அளிக்கிறான்.

கர்த்தரை நல்லவர் என்று ருசித்து அறியுங்கள்.
    கர்த்தரைச் சார்ந்து வாழும் மனிதன் உண்மையாகவே சந்தோஷமடைவான்.
கர்த்தருடைய பரிசுத்த ஜனங்கள் அவரைத் தொழுதுகொள்ளட்டும்.
    கர்த்தரைப் பின்பற்றுவோருக்கு வேறெந்த அடைக்கலமும் தேவையில்லை.
10 வல்லமையுள்ள ஜனங்கள் சோர்ந்து பசியடைவார்கள்.
    ஆனால் தேவனிடம் உதவி வேண்டிச் செல்வோர் நல்லவற்றையெல்லாம் அடைவார்கள்.
11 பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்.
    கர்த்தரை எப்படி மதிக்கவேண்டுமென்று உங்களுக்குப் போதிப்பேன்.
12 தன் வாழ்க்கையை நேசித்து, நீண்ட ஆயுளை விரும்பும்,
13 மனிதன் தீயவற்றைப் பேசக்கூடாது.
    அம்மனிதன் பொய் பேசக்கூடாது.
14 தீமை செய்வதை அவன் விட்டுவிட வேண்டும்.
    நல்லவற்றைச் செய். சமாதானத்திற்காகப் பாடுபடு.
    அதை அடையும்வரை அதற்கென முயற்சி செய்.

15 நல்லோரை கர்த்தர் பாதுகாக்கிறார்.
    அவர்கள் ஜெபங்களை அவர் கேட்கிறார்.
16 கர்த்தர் தீயோருக்கு எதிரானவராயிருந்து
    அவர்களை முற்றிலும் அழிக்கிறார்.
17 கர்த்தரிடம் ஜெபியுங்கள்.
    அவர் உங்கள் விண்ணப்பங்களைக் கேட்பார்.
    உங்கள் எல்லாத் தொல்லைகளிலிருந்தும் உங்களைக் காப்பார்.
18 சிலருக்குத் தொல்லைகள் மிகுதியாகும்பொழுது அவர்கள் பெருமையை விட்டொழிப்பர்.
    கர்த்தர் அவர்களருகே இருந்து தாழ்மையான அந்த ஜனங்களைக் காக்கிறார்.

19 நல்லோருக்குத் தொல்லைகள் பல நேரிட்டாலும்
    அவர்கள் தொல்லைகளிலிருந்து கர்த்தர் அவர்களை மீட்பார்.
20 அவர்கள் எலும்புகளில் ஒன்றும் முறிந்து போகாதபடி
    கர்த்தர் அவற்றைப் பாதுகாப்பார்.
21 தீயோரைத் தொல்லைகள் கொல்லும்.
    நல்லோரின் பகைவர்கள் அழிக்கப்படுவார்கள்.
22 தமது ஊழியர்களின் ஆத்துமாக்களை கர்த்தர் மீட்கிறார்.
    அவரைச் சார்ந்திருக்கும் ஜனங்களை அழியவிடமாட்டார்.

சங்கீதம் 85-86

கோராகின் குடும்பம் இராகத் தலைவனுக்கு அளித்த ஒரு துதிப் பாடல்.

85 கர்த்தாவே, உமது தேசத்தின்மேல் தயவாயிரும்.
யாக்கோபின் ஜனங்கள் ஒரு அந்நிய தேசத்தில் அடிமைகளாக இருக்கிறார்கள்.
    அடிமைப்பட்டவர்களை மீண்டும் அவர்கள் தேசத்திற்கு அழைத்து வாரும்.
கர்த்தாவே, உமது ஜனங்களை மன்னியும்!
    அவர்கள் பாவங்களை போக்கிவிடும்!

கர்த்தாவே, சினமாயிருப்பதை நீர் நிறுத்தும்.
    கடுங்கோபமாக இராதேயும்.

எங்கள் தேவனும் இரட்சகருமானவரே,
    எங்களிடம் கோபமாயிருப்பதை விட்டு, விட்டு எங்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளும்.
நீர் என்றென்றும் கோபங்கொள்வீரோ?
தயவுகூரும், எங்களை மீண்டும் வாழச் செய்யும்.
    உமது ஜனங்களை சந்தோஷப்படுத்தும்.
கர்த்தாவே, எங்களைக் காப்பாற்றும்.
    நீர் எங்களை நேசிப்பதை எங்களுக்குக் காட்டும்.

தேவனாகிய கர்த்தர் கூறியதை நான் கேட்டேன்.
    அவரது ஜனங்களுக்கும், உண்மையான சீடர்களுக்கும் சமாதானம் உண்டாகுமென்று கர்த்தர் கூறினார்.
    எனவே மூடத்தனமான வாழ்க்கை முறைக்கு அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்லக் கூடாது.
தேவன் தம்மைப் பின்பற்றுவோரை விரைவில் மீட்பார்.
    நமது தேசத்தில் நாம் பெருமையோடு விரைவில் வாழுவோம்.
10 தேவனுடைய உண்மையான அன்பு அவரை பின்பற்றுவோரை வந்தைடையும்.
    நன்மையும் சமாதானமும் முத்தமிட்டு அவர்களை வாழ்த்தும்.
11 பூமியின் ஜனங்கள் தேவனிடம் நேர்மையானவர்களாயிருப்பார்கள்.
    பரலோகத்தின் தேவனும் அவர்களுக்கு நல்லவராக இருப்பார்.
12 கர்த்தர் நமக்குப் பல நல்ல பொருள்களைத் தருவார்.
    நிலம் பல நல்ல பயிர்களை விளைவிக்கும்.
13 நன்மை தேவனுக்கு முன்பாகச் செல்லும்.
    அது அவருக்கு வழியை ஆயத்தப்படுத்தும்.

தாவீதின் விண்ணப்பம்.

86 நான் ஒரு ஏழை, உதவியற்ற மனிதன்.
    கர்த்தாவே, தயவாய் எனக்குச் செவிகொடுத்து என் ஜெபத்திற்குப் பதில் தாரும்.
கர்த்தாவே, நான் உம்மைப் பின்பற்றுபவன்.
    தயவாய் என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்! நான் உமது பணியாள்.
நீரே என் தேவன். நான் உம்மை நம்புகிறேன்.
    எனவே என்னைக் காப்பாற்றும்.
என் ஆண்டவரே, என்னிடம் தயவாயிரும்.
    நாள் முழுவதும் நான் உம்மிடம் ஜெபித்துக்கொண்டிருக்கிறேன்.
ஆண்டவரே, உமது கைகளில் என் ஜீவனை வைக்கிறேன்.
    என்னை மகிழ்ச்சியாக்கும். நான் உமது பணியாள்.
ஆண்டவரே, நீர் நல்லவர், கிருபையுள்ளவர்.
    உமது ஜனங்கள் உதவிக்காக உம்மைக் கூப்பிடுவார்கள்.
    நீர் உண்மையாகவே அந்த ஜனங்களை நேசிக்கிறீர்.
கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேளும்.
    இரக்கத்திற்கான ஜெபத்திற்குச் செவிகொடும்.
கர்த்தாவே, தொல்லைமிக்க காலத்தில் நான் உம்மிடம் ஜெபித்துக்கொண்டிருக்கிறேன்.
    நீர் பதிலளிப்பீர் என்பதை நான் அறிவேன்.

தேவனே, உம்மைப் போன்றோர் வேறெவருமில்லை.
    நீர் செய்தவற்றை வேறெவரும் செய்ய முடியாது.
ஆண்டவரே, நீர் ஒவ்வொருவரையும் உண்டாக்கினீர்.
    அவர்கள் எல்லோரும் வந்து உம்மை தொழுதுகொள்வார்கள் என்றும், அவர்கள் எல்லோரும் உமது நாமத்தை பெருமைப்படுத்துவார்கள் என்றும் நான் நம்புகிறேன்.
10 தேவனே, நீர் மேன்மையானவர்!
    நீர் அற்புதமான காரியங்களைச் செய்கிறீர்.
    நீரே, நீர் மட்டுமே தேவன்!

11 கர்த்தாவே, உமது வழிகளை எனக்குப் போதியும்.
    நான் வாழ்ந்து உமது சத்தியங்களுக்குக் கீழ்ப்படிவேன்.
உமது நாமத்தைத் தொழுது கொள்வதையே
    என் வாழ்க்கையின் மிக முக்கியமான காரியமாகக்கொள்ள எனக்கு உதவும்.
12 என் ஆண்டவராகிய தேவனே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிக்கிறேன்.
    உமது நாமத்தை என்றென்றும் துதிப்பேன்.
13 தேவனே, என்னிடம் மிகுந்த அன்பு காட்டுகிறீர்.
    கீழே மரணத்தின் இடத்திலிருந்து என்னைக் காப்பாற்றும்.

14 தேவனே, பெருமைமிக்க மனிதர்கள் என்னைத் தாக்குகிறார்கள்.
    கொடிய மனிதர்களின் கூட்டம் என்னைக் கொல்லமுயல்கிறது.
    அம்மனிதர்கள் உம்மை மதிப்பதில்லை.
15 ஆண்டவரே, நீர் தயவும் இரக்கமும் உள்ள தேவன்.
    நீர் பொறுமையுடையவர், உண்மையும் அன்பும் நிறைந்தவர்.
16 தேவனே, நீர் எனக்குச் செவிகொடுப்பதை எனக்குக் காண்பித்து, என்மீது தயவாயிரும்.
    நான் உமது பணியாள்.
எனக்குப் பெலனைத் தாரும்.
    நான் உமது பணியாள்.
என்னைக் காப்பாற்றும்.
17 தேவனே, நீர் எனக்கு உதவுவீர் என்பதற்கு ஒரு அடையாளத்தைத் தாரும்.
    என் பகைவர்கள் அந்த அடையாளத்தைக் கண்டு, ஏமாற்றம்கொள்வார்கள்.
    நீர் என் ஜெபத்தைக் கேட்டு எனக்கு உதவுவீர் என்பதை அது காட்டும்.

1 சாமுவேல் 2:27-36

ஏலியின் குடும்பத்தைப் பற்றிய பயங்கரமான தீர்க்கதரிசனம்

27 தேவனுடைய மனிதன் ஒருவன் ஏலியிடம் வந்தான். அவன், “கர்த்தர் இவற்றைச் சொன்னார், ‘உன் முற்பிதாக்கள் எகிப்தில் பார்வோனின் அடிமைகளாய் இருந்தார்கள். அந்த காலத்தில் நான் உன் முற்பிதாக்களுக்குத் தோன்றினேன். 28 நான் உன் கோத்திரத்தை மற்ற எல்லா இஸ்ரவேல் கோத்திரங்களிலிருந்தும் தேர்ந்தெடுத்தேன். உனது சந்ததியை எனது ஆசாரியர்களாகத் தேர்ந்தெடுத்தேன். அவர்களை என் பலிபீடத்திற்குப் பலி செலுத்துகிறவர்களாகத் தேர்ந்தெடுத்தேன். அவர்களை நான் ஏபோத் அணியவும் நறுமணப் பொருட்களை எரிக்கவும் தேர்ந்தெடுத்தேன். இஸ்ரவேலர், எனக்குத் தரும் பலிகளிலிருந்து இறைச்சியை உங்கள் கோத்திரம் உண்ணும்படியும் செய்தேன். 29 இவ்வாறு இருக்க நீங்கள் ஏன் எனது அன்பளிப்புகளையும் பலி பொருட்களையும் மதிப்பதில்லை? நீ என்னைவிட உன் குமாரர்களையே அதிகம் உயர்த்துகிறாய். இஸ்ரவேலர், இறைச்சியை எனக்காக கொண்டு வரும்போது, அதன் நல்ல பாகங்களையெல்லாம் தின்று நீங்கள் கொழுத்துப்போய் இருக்கிறீர்கள்.’

30 “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர், உங்கள் தந்தையின் குடும்பமே, எல்லா காலத்திலும் சேவை செய்யும் என்று வாக்குறுதி கொடுத்திருந்தார். ஆனால் இப்போது கர்த்தர் சொல்கிறார், ‘அது அவ்வாறு நடக்காது! என்னை கனம்பண்ணுகிறவர்களை நானும் கனம்பண்ணுவேன். என்னை அசட்டை செய்பவர்களுக்கு தீமை ஏற்படும். 31 உனது சந்ததிகளையெல்லாம் அழிக்கின்ற காலம் வந்துவிட்டது. உன் குடும்பத்தில் உள்ள யாரும் முதிய வயதுவரை வாழமாட்டார்கள். 32 இஸ்ரவேல் ஜனங்களுக்கு நன்மைகள் ஏற்படும், ஆனால் உன் வீட்டில் மட்டும் தீமை ஏற்படுவதைக் காண்பாய். உன் குடும்பத்தில் யாரும் முதுமைவரை வாழமாட்டார்கள். 33 நான் ஒருவனை மாத்திரம் ஆசாரியனாக என் பலிபீடத்தில் சேவை செய்யப் பாதுகாப்பேன். அவன் முதுமைவரை வாழ்வான். அவன் கண்பார்வை போகு மட்டும், சக்தியெல்லாம் ஓயுமட்டும் வாழ்வான். உன் சந்ததிகள் எல்லோரும் வாளால் மரித்துப் போவார்கள். 34 இவைகள் உண்மையில் நிறைவேறும் என்பதற்கும் ஒரு அடையாளம் காட்டுவேன். உனது குமாரர்களான ஓப்னியும் பினெகாசம் ஒரே நாளில் மரித்து போவார்கள். 35 நான் எனக்காக ஒரு உண்மையுள்ள ஆசாரியனைத் தேர்ந்தெடுத்துக்கொள்வேன். அவன் எனக்குச் செவிகொடுத்து நான் சொல்லுகிறபடி செய்வான். நான் அந்த ஆசாரியனின் குடும்பத்தைப் பலமுள்ளதாகச் செய்வேன். அவன் அபிஷேகம் செய்யப்பட்ட எனது ராஜாவின் முன்னிலையில் எப்போதும் சேவை செய்வான். 36 பிறகு உன் குடும்பத்தில் மீதியான எல்லோரும் வந்து அந்த ஆசாரியன் முன்பு பணிந்து, வணங்கி நிற்பார்கள். அவர்கள் ஒரு துண்டு ரொட்டிக்காகவும், சில்லறை காசுகளுக்காகவும் பிச்சை எடுப்பார்கள். அப்போது அவர்கள், “தயவு செய்து எனக்கு ஆசாரியன் வேலை தாரும். அதனால் நான் உண்ண உணவை பெறுவேன் என்று வேண்டுவார்கள்”’” என்று கூறினான்.

அப்போஸ்தலர் 2:22-36

22 “எனது யூத சகோதரர்களே, இந்த வார்த்தைகளைக் கவனியுங்கள். நாசரேத்தின் இயேசு மிகச் சிறப்பான மனிதர். தேவன் இதைத் தெளிவாக உங்களுக்குக் காட்டினார். இயேசுவின் மூலமாக அவர் செய்த வல்லமை மிக்க வியப்பான காரியங்களால் தேவன் இதை நிரூபித்தார். நீங்கள் எல்லோரும் இந்தக் காரியங்களைப் பார்த்தீர்கள். எனவே இது உண்மையென்பது உங்களுக்குத் தெரியும். 23 இயேசு உங்களுக்குக் கொடுக்கப்பட்டார். நீங்கள் அவரைக் கொன்றீர்கள். தீயவர்களின் உதவியோடு இயேசுவைச் சிலுவையில் அறைந்தீர்கள். ஆனால் இவையெல்லாம் நடக்குமென்பதை தேவன் அறிந்திருந்தார். இது தேவனுடைய திட்டமாக இருந்தது. வெகுகாலத்திற்கு முன்னரே தேவன் இந்தத் திட்டத்தை வகுத்திருந்தார். 24 மரணத்தின் வேதனையை இயேசு அனுபவித்தார். ஆனால் தேவன் அவரை விடுவித்தார். தேவன் இயேசுவை மரணத்திலிருந்து எழுப்பினார். மரணம் இயேசுவைத் தொடர்ந்து தன் பிடிக்குள் வைத்திருக்க முடியவில்லை. 25 தாவீது இயேசுவைக் குறித்து இவ்வாறு கூறினான்:

“‘நான் ஆண்டவரை எப்போதும் என்முன் காண்கிறேன்.
    என்னைப் பாதுகாப்பதற்கு எனது வலப்புறத்தே உள்ளார்.
26 எனவே என் உள்ளம் மகிழுகிறது,
    என் வாய் களிப்போடு பேசுகிறது.
ஆம், எனது சரீரமும் கூட நம்பிக்கையால் வாழும்.
27     ஏனெனில் மரணத்தின் இடத்தில்[a] எனது ஆத்துமாவை நீர் விட்டு விடுவதில்லை.
    உமது பரிசுத்தமானவரின் சரீரத்தைக் கல்லறைக்குள் அழுகிவிட நீர் அனுமதிப்பதில்லை.
28 வாழும் வகையை எனக்குப் போதித்தீர்.
    என்னருகே நீர் வந்து அளவற்ற ஆனந்தம் தருவீர்.’(A)

29 “எனது சகோதரர்களே, நமது முன்னோராகிய தாவீதைக் குறித்து உண்மையாகவே உங்களுக்கு என்னால் சொல்லமுடியும். அவன் இறந்து புதைக்கப்பட்டான். அவன் புதைக்கப்பட்ட இடம் இங்கேயே நம்மிடையே இன்றும் உள்ளது. 30 தாவீது ஒரு தீர்க்கதரிசி. தேவன் கூறிய சில செய்திகளை அவன் அறிந்திருந்தான். தாவீதின் குடும்பத்திலுள்ள ஒருவரை தாவீதைப்போன்று மன்னனாக்குவேன் என்று தேவன் தாவீதுக்கு வாக்குறுதி அளித்திருந்தார். 31 அது நடக்கும் முன்பே தாவீது அதனை அறிந்திருந்தான். எனவேதான் அவரைக் குறித்து தாவீது இவ்வாறு கூறினான்.

“‘அவர் மரணத்தின் இடத்தில் விடப்படவில்லை.
அவர் சரீரம் கல்லறையில் அழுகவில்லை.’

தாவீது மரணத்தின்று எழும்பும் கிறிஸ்துவைக் குறித்துப் பேசினான். 32 எனவே தாவீதை அல்ல, இயேசுவையே தேவன் மரணத்தினின்று எழுப்பினார். நாங்கள் எல்லோரும் இதற்கு சாட்சிகள். நாங்கள் அவரைக் கண்டோம். 33 இயேசு பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். இப்போது இயேசு தேவனோடு, தேவனுடைய வலது பக்கத்தில் இருக்கிறார். பிதா பரிசுத்தாவியை இயேசுவுக்குக் கொடுத்துள்ளார். பிதா கொடுப்பதாக வாக்குறுதி அளித்தது பரிசுத்த ஆவியேயாகும். எனவே இயேசு அந்த ஆவியை இப்பொழுதுகொடுத்துக்கொண்டிருக்கிறார். இதையே நீங்கள் பார்க்கவும், கேட்கவும் செய்கிறீர்கள். 34-35 தாவீது பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டவரல்ல. பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டவர் இயேசுவே. தாவீது கூறினான்,

“‘தேவன் என் கர்த்தரிடம் சொன்னார்,
உம் எதிரிகள் அனைவரையும் உம்
    அதிகாரத்தின் கீழ் கொண்டு வரும்வரை என் வலதுபுறத்தில் உட்கார்ந்துகொள்ளும்.’(B)

36 “எனவே எல்லா யூத மனிதர்களும் இதை உண்மையாகத் தெரிந்திருக்க வேண்டும். ஆண்டவராகவும் கிறிஸ்துவாகவும் இருக்கும்படியாக இயேசுவை தேவன் உண்டாக்கினார். அவரே நீங்கள் சிலுவையில் அறைந்த மனிதர்” என்றான்.

லூக்கா 20:41-21:4

கிறிஸ்து தாவீதின் குமாரனா?

(மத்தேயு 22:41-46; மாற்கு 12:35-37)

41 பின்பு இயேசு, “தாவீதின் குமாரன் என்று கிறிஸ்துவை மக்கள் எதற்காகச் சொல்கிறார்கள்? 42 சங்கீதம் என்னும் புத்தகத்தில் தாவீதே சொல்கிறார்.

“‘கர்த்தர் (தேவன்) என் ஆண்டவரிடம் (கிறிஸ்து) சொன்னார்,
43     உங்கள் பகைவர்கள் உங்கள் ஆற்றலுக்கு அடங்கும்வரை என் வலப்பக்கத்தில் அமருங்கள்’(A)

44 தாவீது கிறிஸ்துவை ‘ஆண்டவர்’ என்கிறான். ஆனால் கிறிஸ்து தாவீதின் குமாரனுமாவார். எப்படி இவை இரண்டும் உண்மையாகும்?” என்றார்.

வேதபாரகருக்கு எச்சரிக்கை

(மத்தேயு 23:1-36; மாற்கு 12:38-40; லூக்கா 11:37-54)

45 தம்மைப் பின்பற்றுபவர்களிடம் இயேசு பேசினார். எல்லா மக்களும் இயேசு கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். 46 “வேதபாரகரைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். தங்களை முக்கியமானவர்களாகக் காட்டுகிற அவர்கள் அங்கிகளை அணிந்துகொண்டு அவர்கள் அங்குமிங்கும் அலைகிறார்கள். மக்கள் அவர்களைச் சந்தையிடங்களில் மதிப்பதையும் விரும்புகிறார்கள். ஜெப ஆலயங்களில் முக்கியமான இருக்கையில் அமர ஆசைப்படுகிறார்கள். 47 ஆனால் விதவைகள் தம் வீட்டில் வைத்திருக்கிற பொருட்களையெல்லாம் கொள்ளையிடுகிறவர்கள் அவர்களே ஆவார்கள். நீண்ட பிரார்த்தனைகளைச் சொல்லித் தங்களை நல்லவர்களாகக் காட்டிக்கொள்ள முயல்கிறார்கள். தேவன் இவர்களை மிகுதியாகத் தண்டிப்பார்” என்றார்.

உண்மையான ஈகை

(மாற்கு 12:41-44)

21 தேவாலயத்தில் காணிக்கைப் பெட்டியில் சில செல்வந்தர்கள் தேவனுக்காகத் தங்கள் காணிக்கைகளைப் போடுவதை இயேசு கண்டார். அப்போது இயேசு ஓர் ஏழை விதவையைக் கண்டார். பெட்டியினுள் அவள் இரண்டு சிறிய செம்பு நாணயங்களை இட்டாள். இயேசு, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். இந்த ஏழை விதவை இரண்டு சிறிய நாணயங்களையே கொடுத்தாள். ஆனால், அச்செல்வந்தர்கள் கொடுத்தவற்றைக் காட்டிலும் அவள் உண்மையில் அதிகமாகக் கொடுத்தாள். செல்வந்தர்களிடம் மிகுதியான செல்வம் இருக்கிறது. அவர்களுக்குத் தேவையற்ற செல்வத்தையே அவர்கள் கொடுத்தார்கள். இந்தப் பெண்ணோ மிகவும் ஏழை. ஆனால் அவளுக்கிருந்த எல்லாவற்றையும் அவள் கொடுத்தாள். அவள் வாழ்க்கைக்கு அந்தப் பணம் தேவையாக இருந்தது” என்றார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center