Print Page Options
Previous Prev Day Next DayNext

Book of Common Prayer

Daily Old and New Testament readings based on the Book of Common Prayer.
Duration: 861 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 148-150

148 கர்த்தரைத் துதியுங்கள்!
மேலேயுள்ள தேவ தூதர்களே,
    பரலோகத்திலிருந்து கர்த்தரைத் துதியுங்கள்!
தேவதூதர்கள் எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்!
    அவரது சேனைகள் [a] எல்லோரும் அவரைத் துதியுங்கள்!
சூரியனும் சந்திரனும் கர்த்தரைத் துதியுங்கள்!
    நட்சத்திரங்களும் வானின் விளக்குகளும் அவரைத் துதியுங்கள்!
மிக உயரத்திலுள்ள பரலோகமே கர்த்தரைத் துதியுங்கள்!
    வானின் மேலுள்ள வெள்ளங்களே, அவரைத் துதியுங்கள்!
கர்த்தருடைய நாமத்தைத் துதி.
    ஏனெனில் தேவன் கட்டளையிட்டபோது, நாமெல்லோரும் படைக்கப்பட்டோம்!
இவையனைத்தும் என்றென்றும் தொடருமாறு தேவன் செய்தார்.
    என்றும் முடிவடையாத சட்டங்களை தேவன் உண்டாக்கினார்.
பூமியிலுள்ள அனைத்தும் கர்த்தரைத் துதியுங்கள்!
    சமுத்திரத்தின் பெரிய விலங்குகளே, கர்த்தரைத் துதியுங்கள்!
தேவன் நெருப்பையும் கல்மழையையும் பனியையும்
    புகையையும் எல்லாவிதமான புயற்காற்றையும் உண்டாக்கினார்.
மலைகளையும் குன்றுகளையும் கனிதரும் மரங்களையும்
    கேதுருமரங்களையும் தேவன் உண்டாக்கினார்.
10 எல்லாக் காட்டு மிருகங்களையும் நாட்டு மிருகங்களையும்
    ஊர்வனவற்றையும் பறவைகளையும் தேவன் உண்டாக்கினார்.
11 பூமியின் தேசங்களையும் அரசர்களையும் தேவன் உண்டாக்கினார்.
    தலைவர்களையும் நீதிபதிகளையும் தேவன் உண்டாக்கினார்.
12 இளைஞர்களையும் இளம்பெண்களையும் தேவன் உண்டாக்கினார்.
    முதியோரையும் இளையோரையும் தேவன் உண்டாக்கினார்.
13 கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்!
    அவர் நாமத்தை என்றென்றும்
    மகிமைப்படுத்துங்கள்!
    பரலோகத்திலும், பூமியிலுமுள்ள அனைத்தும் அவரைத் துதிக்கட்டும்!
14 தேவன் அவரது ஜனங்களைப் பலப்படுத்துகிறார்.
    தேவனைப் பின்பற்றுவோரை ஜனங்கள் வாழ்த்துவார்கள்.
    ஜனங்கள் இஸ்ரவேலை வாழ்த்துவார்கள்.
    தேவன் அவர்களுக்காகப் போராடுகிறார்.
    கர்த்தரைத் துதியுங்கள்.

149 கர்த்தரைத் துதியுங்கள்.
கர்த்தர் செய்த புதிய காரியங்களுக்காக ஒரு புதுப்பாடலைப் பாடுங்கள்!
    அவரைப் பின்பற்றுவோர் ஒருமித்துக் கூடும் சபையில் அவரைத் துதித்துப்பாடுங்கள்.
தங்களைப் படைத்தவரோடு இஸ்ரவேல் களிப்படைவார்களாக.
    சீயோனின் ஜனங்கள் அவர்களின் அரசரோடு மகிழ்ந்து களிப்பார்களாக.
தம்புருக்களையும் வீணைகளையும் மீட்டுவதோடு ஆடிப்பாடி
    அந்த ஜனங்கள் தேவனைத் துதிக்கட்டும்.
கர்த்தர் அவரது ஜனங்களோடு மகிழ்ச்சியாயிருக்கிறார்.
    அவரது எளிய ஜனங்களுக்கு தேவன் ஒரு அற்புதமான காரியத்தைச் செய்தார்.
    அவர் அவர்களை மீட்டார்!
தேவனைப் பின்பற்றுவோரே, உங்களது வெற்றியால் மகிழ்ந்து களிப்படையுங்கள்!
    படுக்கைக்குப் போன பின்னரும் மகிழ்ச்சியாயிருங்கள்.

ஜனங்கள் தேவனைத் துதித்துக் குரலெழுப்பட்டும்.
    அவர்களது கைகளில் வாள்களை ஏந்தட்டும்.
அவர்கள் போய் பகைவர்களைத் தண்டிக்கட்டும்.
    அந்த ஜனங்களிடம் சென்று அவர்களைத் தண்டிக்கட்டும்.
தேவனுடைய ஜனங்கள் அந்த அரசர்களுக்கும் அங்குள்ள முக்கியமான
    ஜனங்களுக்கும் விலங்குகளைப் பூட்டுவார்கள்.
தேவன் கட்டளையிட்டபடி தேவனுடைய ஜனங்கள் அவர்களைத் தண்டிப்பார்கள்.
    தேவனைப் பின்பற்றுவோர் எல்லோரும் அவரை மகிமைப்படுத்துவார்கள்.

கர்த்தரைத் துதியுங்கள்!

150 கர்த்தரைத் துதியுங்கள்!
தேவனை அவரது ஆலயத்தில் துதியுங்கள்!
    பரலோகத்தில் அவரது வல்லமையைத் துதியுங்கள்!
அவர் செய்கிற பெரிய காரியங்களுக்காக தேவனைத் துதியுங்கள்!
    அவரது எல்லா மேன்மைகளுக்காகவும் அவரைத் துதியுங்கள்!
எக்காளத் தொனியோடு தேவனைத் துதியுங்கள்!
    வீணைகளோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள்!
தேவனைத் தம்புருக்களோடும் நடனத்தோடும் துதியுங்கள்!
    நரம்புக் கருவிகளோடும் புல்லாங் குழலோடும் அவரைத் துதியுங்கள்!
ஓசையெழுப்பும் தாளங்களோடும் தேவனைத் துதியுங்கள்!
    பேரோசையெழுப்பும் தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்!

எல்லா உயிரினங்களும் கர்த்தரைத் துதிக்கட்டும்!

கர்த்தரைத் துதிப்போம்!

சங்கீதம் 114-115

114 இஸ்ரவேல் எகிப்தை விட்டு நீங்கினான்.
    யாக்கோபு அந்நிய நாட்டை விட்டுச் சென்றான்.
யூதா தேவனுக்கு விஷேசமான ஜனங்களானார்கள்.
    இஸ்ரவேல் அவருடைய இராஜ்யமானது.
செங்கடல் இதைக்கண்டு விலகி ஓடிற்று.
    யோர்தான் நதியோ திரும்பி ஓடிப்போயிற்று.
ஆட்டுக்கடாக்களைப்போல் மலைகள் நடனமாடின.
    ஆட்டுக்குட்டிகளைப் போல் மலைகள் நடனமாடின.
செங்கடலே, நீ ஏன் ஓடிப்போனாய்?
    யோர்தான் நதியே, நீ ஏன் திரும்பி ஓடிப் போனாய்?
மலைகளே, நீங்கள் ஏன் ஆட்டுக் கடாக்களைப்போல் நடனமாடினீர்கள்?
    மலைகளே, நீங்களும் ஏன் ஆட்டுக் குட்டிகளைப்போல் நடனமாடினீர்கள்?
யாக்கோபின் தேவனும் கர்த்தருமாகிய ஆண்டவருக்கு முன்னே
    பூமி நடுங்கி அதிர்ந்தது.
கன்மலையிலிருந்து தண்ணீர் பெருகி ஓடச் செய்தவர் தேவனேயாவார்.
    கெட்டியான பாறையிலிருந்து நீரூற்றின் வெள்ளத்தைப் பாய்ந்தோடச் செய்தவர் தேவனேயாவார்.

115 கர்த்தாவே, நாங்கள் எந்த மகிமையையும் ஏற்றுக்கொள்வதில்லை.
    மகிமை உமக்கே உரியது.
    உமது அன்பினாலும் நாங்கள் உம்மை நம்பக்கூடும் என்பதாலும் மகிமை உமக்கே உரியது.
எங்கள் தேவன் எங்கே என்று
    ஏன் தேசங்கள் ஆச்சரியப்பட வேண்டும்?
தேவன் பரலோகத்தில் இருக்கிறார்.
    அவர் தாம் விரும்புகின்றவற்றையெல்லாம் செய்கிறார்.
அத்தேசங்களின் “தெய்வங்கள்” பொன்னாலும் வெள்ளியாலும் செய்யப்பட்ட சிலைகள் மட்டுமே.
    அவை சில மனிதர்கள் செய்த சிலைகள் மட்டுமே.
அச்சிலைகளுக்கு வாய் உண்டு, ஆனால் பேச இயலாது.
    அவற்றிற்குக் கண்கள் உண்டு, ஆனால் காண இயலாது.
அவற்றிற்குக் காதுகளுண்டு, ஆனால் கேட்க இயலாது.
    அவற்றிற்கு மூக்குகள் உண்டு, ஆனால் முகர இயலாது.
அவற்றிற்குக் கைகள் உண்டு, ஆனால் உணர இயலாது.
    அவற்றிற்குக் கால்கள் உண்டு, ஆனால் நடக்க இயலாது.
    அவற்றின் தொண்டையிலிருந்து எந்தவிதமான சத்தமும் வெளிவருவதில்லை.
அச்சிலைகளைச் செய்து,
    அவற்றில் நம்பிக்கை வைக்கிற ஜனங்களும் அவற்றைப் போலாவார்கள்.
இஸ்ரவேலின் ஜனங்களே, கர்த்தரை நம்புங்கள்!
    கர்த்தர் அவர்களின் பெலனும், கேடகமுமானவர்.
10 ஆரோனின் குடும்பத்தாரே, கர்த்தரை நம்புங்கள்!
    கர்த்தர் அவர்களின் பெலனும் கேடகமுமானவர்.
11 கர்த்தரைப் பின்பற்றுகிறவர்களே, கர்த்தரை நம்புங்கள்!
    கர்த்தர் அவர்களின் பெலனும் கேடகமுமானவர்.

12 கர்த்தர் நம்மை நினைவுக்கூருகிறார்,
    கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்.
கர்த்தர் இஸ்ரவேலை ஆசீர்வதிப்பார்.
    கர்த்தர் ஆரோனின் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்.
13 கர்த்தர் தம்மைப் பின்பற்றும்
    உயர்ந்தோரையும் தாழ்ந்தோரையும் ஆசீர்வதிப்பார்.
14 கர்த்தர் உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும்
    அதிகமதிகமாகக் கொடுப்பார் என்று நான் நம்புகிறேன்.
15 கர்த்தர் பரலோகத்தையும் பூமியையும் உண்டாக்கினார்.
    கர்த்தர் உங்களை வரவேற்கிறார்!
16 பரலோகம் கர்த்தருக்குச் சொந்தமானது.
    ஆனால் பூமியை ஜனங்களுக்குக் கொடுத்தார்.
17 மரித்தவர்களும்,
    கல்லறைக்குச் செல்பவர்களும் கர்த்தரைத் துதிப்பதில்லை.
18 நாம் கர்த்தரை துதிப்போம்.
    இது முதல் என்றென்றைக்கும் நாம் அவரை துதிப்போம்.

அல்லேலூயா! கர்த்தரைத் துதிப்போம்.

உபாகமம் 6:1-9

எப்பொழுதும் தேவனை நேசித்துக் கீழ்ப்படி!

“உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குப் போதிக்கும்படி என்னிடம் கூறியக் கட்டளைகளும், சட்டங்களும், நியாயங்களும் இவைகளே. குடியேறும்படி நீங்கள் போகிற தேசத்திலே இந்த சட்டங்களுக்குக் கீழ்ப்படியுங்கள். நீயும் உன் சந்ததியினரும் நீங்கள் வாழ்கின்ற காலம்வரை உங்கள் தேவனாகிய கர்த்தரை மதிக்க வேண்டும். நான் உங்களுக்குத் தரும் சட்டங்களுக்கும் கற்பனைகளுக்கும் நீங்கள் கீழ்ப்படிய வேண்டும். இவ்வாறு நீங்கள் செய்தால், நீங்கள் நீண்ட ஆயுளைப் பெறுவீர்கள். இஸ்ரவேல் ஜனங்களே, நான் கூறுவதைக் கவனமாகக் கேட்பதுடன் இந்தச் சட்டங்களுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும், அப்போது உங்களுக்கு எல்லாம் நல்லவையாக அமையும், நீங்கள், அநேக குழந்தைகளைப் பெறுவீர்கள். உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு வாக்களித்தபடி பாலும் தேனும் ஓடக்கூடிய வளமான தேசத்தைப் பெறுவீர்கள்.

“இஸ்ரவேல் ஜனங்களே, கவனியுங்கள், நமது தேவனாகிய கர்த்தர் ஒருவரே தேவன்! உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில், நீ முழு இருதயத்துடன், நிறைவான ஆத்மாவுடன், உன் முழு வலிமையுடன் அன்பு செலுத்தவேண்டும். இன்று நான் கூறும் இந்தக் கட்டளைகளை என்றும் உங்கள் மனதில் வைக்கவேண்டும். நீங்கள் இவற்றைக் கட்டாயமாக உங்கள் குழந்தைகளுக்குப் போதிக்க வேண்டும். உங்கள் வீட்டினுள் இருக்கும்போதும் வீதிகளில் நடக்கும்போதும் அவற்றைப் பற்றிப் பேசவேண்டும். நீங்கள் தூங்கச் செல்லும்போதும் உறங்கி எழும்போதும் அவற்றைப் பற்றியே அவர்களிடம் பேச வேண்டும். அவற்றை எழுதிக்கொண்டு அடையாளமாக உங்கள் கைகளில் அணிந்து கொள்ளுங்கள். என் போதனைகளை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளப் பயன்படும்படி எப்போதும் அவைகளை உங்கள் நெற்றியில் அணிந்துகொள்ளுங்கள். அவைகளை உங்கள் வீட்டுக்கதவு நிலைக்கால்களிலும் வாசல்களிலும் எழுதி வையுங்கள்.

எபிரேயர் 12:18-29

18 நீங்கள் புதிய இடத்திற்கு வந்திருக்கிறீர்கள். உங்களால் தொடமுடிகிற இடமில்லை இது. நெருப்பு எரிவதும், அடர்த்தியான மேகங்களாலும் இருட்டாலும், புயலாலும் சூழ்ந்த மலையில்லை இது. 19 எக்காள சத்தத்தைக் கேட்டோ அல்லது கட்டளையிடும் ஒரு குரலைக் கேட்டோ நீங்கள் அந்த இடத்துக்கு வரவில்லை. வார்த்தைகளின் சத்தமும் எழும்பாது. அந்த சத்தத்தைக் கேட்டவர்கள் மீண்டும் தங்களுக்கு வார்த்தை சொல்லப்படாதபடிக்கு வேண்டிக்கொண்டார்கள். 20 ஏனென்றால் “ஒரு மிருகமாகிலும் அம்மலையைத் தொட்டால் கற்களால் அடிபட்டுச் சாக வேண்டியதிருக்கும்” [a]என்ற கட்டளையைக் கேட்க அவர்கள் விரும்பவில்லை. 21 “நான் பயத்தால் நடுங்குகிறேன்” [b]என்று மோசேயும் சொல்லத்தக்கதாக அந்தக் காட்சி அவ்வளவு பயங்கரமாக இருந்தது.

22 ஆனால் நீங்கள் அது போன்ற இடத்துக்கு வரவில்லை. இந்தப் புதிய இடத்தின் பெயர் சீயோன் மலை. தேவன் வசிக்கும் நகரத்திற்கு வந்திருக்கிறீர்கள். இது பரலோகமான எருசலேம். ஆயிரக்கணக்கான தேவதூதர்கள் மகிழ்ச்சியோடு கூடுகிற இடம். 23 இங்கே பரலோகத்தில் பெயரெழுதப்பட்ட முதற் பேறானவர்களின் சர்வ சங்கமாகிய சபை உள்ளது. எல்லோரையும் நியாயம் தீர்க்கிற நீதிபதியாக தேவன் இருக்கிறார். முழுமையாக்கப்பட்ட நீதிமான்களின் ஆவிகள் உள்ளன. 24 இயேசுவிடம் வந்திருக்கிறீர்கள். அவரே தம் மக்களுக்கு தேவனிடமிருந்து புதிய உடன்படிக்கையைக் கொண்டு வந்தவர். ஆபேலின் இரத்தம் பேசியதைவிட நன்மைகளைப் பேசுகிற, தெளிக்கப்பட்ட இயேசுவின் இரத்தமிருக்கும் இடத்துக்கு நீங்கள் வந்து சேர்ந்தீர்கள்.

25 எச்சரிக்கையாய் இருங்கள். தேவன் பேசும்போது கவனிக்கத் தவறாதீர்கள். பூமியில் எச்சரிக்கப்பட்டபோதும் கூட இஸ்ரவேல் மக்கள் இதுபோலத்தான் கவனிக்க மறுத்தார்கள். அதனால் அவர்களால் தப்பிக்க முடியாமல் போய்விட்டது. இப்போது பரலோகத்திலிருந்து தேவன் பேசுகிறார். அதைக் கவனிக்க மறுக்கிறவர்கள் முன்பைவிட மோசமான நிலையை அடைவார்கள். 26 அவருடைய பேச்சு அப்போது பூமியை அசைத்தது. இப்பொழுதோ அவர், “இன்னொருமுறை நான் பூமியை மாத்திரமல்ல, வானத்தையும் அசைப்பேன்” [c]என்று வாக்குறுதி அளித்திருக்கிறார். 27 “இன்னொரு முறை” என்பது என்னால் உருவாக்கப்பட்டவை எல்லாம் அழிக்கப்படும் எனப் பொருள்படும். அவை அசையத்தக்க பொருட்களே. அசைக்கக் கூடாத பொருட்களே என்றும் நிலைத்திருக்கும்.

28 அசைக்கப்பட முடியாத ஓர் இராஜ்யத்தை நாம் பெற்றுக்கொண்டிருப்பதால் நாம் நன்றி சொல்லவேண்டும். மிகவும் அச்சத்தோடும் மரியாதையோடும் கூடிய ஒப்புக்கொள்ளத்தக்க ஒரு வழியில் நாம் தேவனை வழிபடவேண்டும். 29 ஏனென்றால் நமது தேவன் அனைத்தையும் அழிக்கும் நெருப்பைப் போன்றவர்.

யோவான் 12:24-32

24 நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். ஒரு கோதுமை விதை தரையில் விழுந்து (இறக்க) அழிய வேண்டும். பிறகுதான் அது வளர்ந்து ஏராளமாகக் கோதுமையைத் தரும். ஆனால் அது அழியாவிட்டால், அது தனி விதையாகவே இருக்கும். 25 தனக்குச் சொந்தமான வாழ்வை நேசிக்கிறவன் அதனை இழப்பான். இவ்வுலகில் தன் வாழ்வின்மீது வெறுப்புகொண்டவன் என்றென்றைக்கும் அதைக் காத்துக்கொள்வான். அவன் நிரந்தர வாழ்வைப் பெறுவான். 26 எனக்குப் பணிவிடை செய்கிறவன் என்னைப் பின்பற்றவேண்டும். நான் எங்கெங்கே இருக்கிறேனோ அங்கெல்லாம் என் பணியாளனும் இருப்பான். எனக்குப் பணி செய்கிறவர்களை என் பிதாவும் பெருமைப்படுத்துவார்.”

இயேசு தன் மரணத்தைப்பற்றிப் பேசியது

27 “நான் இப்போது கலக்கத்தில் இருக்கிறேன். நான் என்ன சொல்வது? ‘பிதாவே, என்னை இந்தத் துன்ப காலத்தில் இருந்து காப்பாற்றுங்கள்’ என்று சொல்லலாமா? இல்லை, துன்பப்படுவதற்காகவே இத்தருணத்தில் வந்தேன். 28 பிதாவே, உங்கள் பெயருக்கே மகிமையை தேடித்தருக!” என்றார்.

அப்போது வானில் இருந்து ஒரு குரல் வந்து, “நான் என் பெயருக்கு மகிமை கொண்டு வந்திருக்கிறேன். நான் அதை மீண்டும் செய்வேன்” என்றது.

29 அங்கே நின்றிருந்த மக்கள் அக்குரலைக் கேட்டார்கள். அவர்களில் சிலர் அதனை இடி முழக்கம் என்றனர்.

வேறு சிலரோ “ஒரு தேவதூதன் இயேசுவிடம் பேசினான்” என்றனர்.

30 மக்களிடம் இயேசு, “இந்தக் குரல் எனக்காக அல்ல. உங்களுக்காக. 31 உலகம் நியாயம் தீர்க்கப்படுவதற்கான தருணம் இதுதான். இப்பொழுது உலகை ஆண்டுகொண்டிருக்கும் சாத்தான் தூக்கி எறியப்படுவான். 32 நான் பூமியில் இருந்து உயர்த்தப்படுவேன். இது நடைபெறும்போது எல்லா மக்களையும் என்னோடு சேர்த்துக்கொள்வேன்” என்றார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center