லூக்கா 14:15-24
Tamil Bible: Easy-to-Read Version
பெரிய விருந்தின் உவமை
(மத்தேயு 22:1-10)
15 இயேசுவுடன் மேசையருகே உட்கார்ந்திருந்த ஒரு மனிதன் இவற்றைக் கேட்டான். அவன் இயேசுவிடம், “தேவனின் இராஜ்யத்தில் உணவை அருந்தும் மக்கள் மிகுந்த சந்தோஷமாக இருப்பார்கள்” என்றான்.
16 இயேசு அவனை நோக்கி, “ஒரு மனிதன் ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்தான். பலரையும் அவ்விருந்துக்கு அழைத்தான். 17 சாப்பிடும் வேளை நெருங்கியதும் அவன் வேலைக்காரனை விருந்தினர்களிடம் அனுப்பி, ‘வாருங்கள்! உணவு தயாராக இருக்கிறது’ என்று சொல்லுமாறு அனுப்பினான். 18 ஆனால் அந்த விருந்தினர்கள் எல்லாம் தம்மால் வர இயலாது எனச் சொல்லி அனுப்பினார்கள். ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு சாக்குப்போக்கு கூறினார்கள். முதலாமவன், ‘நான் ஒரு வயலை வாங்கியுள்ளேன். அதைப் பார்க்கப் போகவேண்டும். தயவுசெய்து மன்னிக்கவும்’ என்றான். 19 இன்னொருவன், ‘ஐந்து ஜோடி ஏர்மாடுகள் வாங்கி இருக்கிறேன். அவைகளை சோதித்துபார்க்கப் போகவேண்டும். தயவுசெய்து மன்னித்துகொள்’ என்றான். 20 மூன்றாமவன், ‘எனக்கு இப்பொழுதுதான் திருமணமாயிற்று. நான் வர முடியாது’ என்றான்.
21 “எனவே வேலைக்காரன் திரும்பி வந்தான். நடந்தவற்றை எஜமானருக்குக் கூறினான். எஜமானர் சினந்து, தன் வேலைக்காரனிடம், ‘விரைந்து செல். தெருக்களிலும், ஊரின் ஒதுக்குப் புறங்களிலும் இருக்கிற ஏழைகளையும், அங்கவீனர்களையும், குருடரையும், முடவர்களையும் அழைத்து வா’ என்றான்.
22 “பின்னர் வேலைக்காரன் அவனிடம் வந்து, ‘எஜமானரே, நீங்கள் கூறியபடியே நான் செய்தேன். ஆனால் இன்னும் அதிக மக்களுக்கு இடமிருக்கிறது’ என்றான். 23 எஜமானன் வேலைக்காரனை நோக்கி, ‘பெரும் பாதைகள் அருகேயும் கிராமப்புறத்திற்கும் செல். அங்குள்ள மக்களை வருமாறு சொல். எனது வீடு முழுவதும் ஆட்களால் நிரம்பி இருக்க வேண்டும்’ என்று வற்புறுத்தினான். 24 மேலும் ‘நான் முதலில் அழைத்தவர்களில் ஒருவர் கூட என்னோடு விருந்துண்ணப் போவதில்லை’ என்றான்” எனக் கூறினார்.
Read full chapter2008 by Bible League International