Add parallel Print Page Options

அசுத்த ஆவி துரத்தப்படுதல்

(மத்தேயு 8:28-34; லூக்கா 8:26-39)

இயேசுவும் அவரது சீஷர்களும் அக்கடலைக் கடந்து அக்கரைக்குச் சென்றார்கள். அங்கு கதரேனர் என்ற மக்கள் வாழ்ந்து வந்தனர். படகிலிருந்து இயேசு இறங்கியதும் இறந்த மக்கள் அடக்கம் செய்யப்பட்டிருந்த குகைகளிலிருந்து ஒரு மனிதன் வெளியே வந்தான். அந்த மனிதனை அசுத்த ஆவிகள் பிடித்திருந்தன. அவன் எப்போதும் கல்லறையிலேயே குடியிருந்தான். அவனை எவராலும் கட்டிப்போட முடியவில்லை. பலமுறை மக்கள் அவனது கைகளையும் கால்களையும் விலங்குகளாலும், சங்கிலிகளாலும் கட்டிப்போட்டிருந்தனர். ஆனால் அந்த மனிதன் அச்சங்கிலிகளையும் விலங்குகளையும் அறுத்து எறிந்துவிடுவான். அவனைக் கட்டுப்படுத்தும் பலமுள்ள மனிதன் எவனும் அங்கில்லை. இரவும், பகலும் அவன் கல்லறைக் குகைகளைச் சுற்றியும் மலைப் பகுதிகளிலும் திரிந்துகொண்டிருந்தான். அவன் கூக்குரலிட்டுக்கொண்டும், கற்களால் தன்னைக் காயப்படுத்திக்கொண்டும் இருந்தான்.

தொலைவில் இயேசு வந்துகொண்டிருக்கும்போதே அவரைப் பார்த்துவிட்டான் அவன். ஓடி வந்து அவர் முன்னால் பணிந்து நின்றான். 7-8 இயேசு அவனிடம், “அசுத்த ஆவியே, இந்த மனிதனை விட்டு வெளியே போ” என்று சொன்னார். உடனே அவன் உரத்த குரலில் “இயேசுவே! மகா உன்னத தேவ குமாரனே! என்னிடம் என்ன விரும்புகிறீர்? என்னைத் துன்புறுத்த வேண்டாம் என்று தேவனிடம் ஆணையாய் உம்மைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்” என்றான்

பிறகு இயேசு அவனிடம், “உன் பெயர் என்ன?” என்று கேட்டார். “என் பெயர் லேகியோன்,[a] ஏனென்றால் எனக்குள்ளே பல ஆவிகள் உள்ளன” என்று அவன் சொன்னான். 10 அத்தோடு அவனுக்குள்ளே இருந்த ஆவிகள் தங்களை அந்தப் பகுதியைவிட்டுத் துரத்தக் கூடாது என்று மீண்டும், மீண்டும் கெஞ்சிக் கேட்டன.

11 அப்பொழுது அந்த மலையருகே பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தன. 12 அசுத்த ஆவிகள் இயேசுவிடம், “எங்களை அந்தப் பன்றிகளுக்குள்ளே அனுப்பிவிடுங்கள்” எனக் கேட்டுக்கொண்டன. 13 அவ்வாறே போகும்படி இயேசு அனுமதி அளித்தார். அசுத்த ஆவிகள் அந்த மனிதனை விட்டு, விட்டு பன்றிகளுக்குள் புகுந்து கொண்டன. அப்பன்றிக் கூட்டம் மேட்டிலிருந்து ஓடி கடலுக்குள் பாய்ந்து கடலில் மூழ்கி இறந்தன. அவை ஏறக்குறைய 2,000 எண்ணிக்கை உடையதாக இருக்கும்.

14 பன்றிகளை மேய்த்துக்கொண்டிருந்தவர்கள் அவ்விடத்தை விட்டு ஓடிவிட்டார்கள். அவர்கள் பட்டணத்துக்கும், வயல்வெளிக்கும் சென்றார்கள். அங்கு சந்தித்த மக்களிடமெல்லாம் இதனைச் சொன்னார்கள். மக்களும் என்ன நடந்தது என்பதை அறிய வந்தனர். 15 அவர்கள் இயேசுவிடம், வந்தார்கள். பல அசுத்த ஆவிகளால் பிடிக்கப்பட்டிருந்தவனையும், அவர்கள் பார்த்தார்கள். அவன் ஆடைகள் அணிந்து அமைதியாய் இயேசுவின் காலடியில் உட்கார்ந்துகொண்டிருந்தான். அவனது மனநிலை சரியாக இருந்தது. மக்கள் இவற்றைக் கண்டு அச்சப்பட்டனர். 16 இயேசு செய்தவற்றைப் பார்த்திருந்த சிலரும் அங்கே இருந்தனர். இவர்கள் மற்றவர்களிடம் அசுத்த ஆவிகளால் பிடிக்கப்பட்டவனின் செயல்களையும் இயேசு அவனைக் குணப்படுத்தியதையும் கூறினர். அவர்கள் பன்றிகளுக்கு ஏற்பட்டதையும் சொன்னார்கள். 17 பிறகு அந்த மக்கள், இயேசுவிடம் அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டுச் செல்லும்படி வேண்டினர்.

18 படகின் மூலம் அவ்விடத்தை விட்டுச் செல்ல இயேசு தயாரானார். பிசாசுகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட அந்த மனிதன் தன்னையும் இயேசுவோடு வர அனுமதிக்கும்படி வேண்டிக்கொண்டான். 19 ஆனால் இயேசு அவனுக்கு அனுமதி கொடுக்கவில்லை. அவனிடம் இயேசு, “நீ வீட்டுக்குப் போ. உன் குடும்பத்தாரையும், நண்பர்களையும் சென்று பார்த்து உனக்காகக் கர்த்தர் செய்தவற்றை எல்லாம் அவர்களிடம் கூறு. அவர் உனக்குக் கருணை செய்தார் என்றும் கூறு” என்றார்.

20 எனவே அவன் அவ்விடத்தை விட்டுப் போய் தெக்கப்போலி பகுதி மக்களிடம் தனக்கு இயேசு செய்ததைக் கூற ஆரம்பித்தான். மக்கள் அவற்றைக் கேட்டு வியப்பு அடைந்தனர்.

Read full chapter

Footnotes

  1. மாற்கு 5:9 லேகியோன் இதற்கு ஏராளம் என்று பொருள். இதற்கு 5,000 ஆட்கள் கொண்ட ரோமானிய படை எனப் பொருள்.

பிசாசு பிடித்த மனிதன்

(மத்தேயு 8:28-34; மாற்கு 5:1-20)

26 இயேசுவும், அவரைப் பின்பற்றியவர்களும் கலிலேயாவில் இருந்து ஓர் ஏரியைக் கடந்து சென்றனர். கதரேனர் மக்கள் வாழ்கின்ற பகுதியை வந்தடைந்தனர். 27 இயேசு படகில் இருந்து இறங்கிய போது, அந்த நகரத்தைச் சேர்ந்த ஒரு மனிதன் இயேசுவிடம் வந்தான். அம்மனிதன் பிசாசுகள் பிடித்தவனாக இருந்தான். பல காலமாக அவன் ஆடைகள் எதுவும் அணியவில்லை. வீட்டில் வசிக்காமல் இறந்தவர்களைப் புதைத்த குகைகளில் வசித்தான்.

28-29 பிசாசு அவனை அடிக்கடி ஆக்கிரமித்தது. அம்மனிதனைச் சிறையில் அடைந்தனர். அவனது கைகளும், கால்களும் சங்கிலிகளால் கட்டப்பட்டன. ஆனால் அம்மனிதன் சங்கிலிகளை அறுத்து விலக்கிவிடுவான். மக்களே இல்லாத இடங்களுக்கு அம்மனிதனை அவனுக்குள் இருந்த பிசாசு இழுத்துச் சென்றது. இயேசு அந்த அசுத்த ஆவிக்கு அம்மனிதனை விட்டு வெளியே வருமாறு கட்டளையிட்டார். அம்மனிதன் இயேசுவுக்கு முன்பாக விழுந்து வணங்கி, உரத்த குரலில், “இயேசுவே, உன்னத தேவனின் குமாரனே! நீர் என்னிடம் எதிர்ப்பார்ப்பதென்ன? தயவுசெய்து என்னைக் கொடுமைப்படுத்தாதிரும்” என்றான்.

30 இயேசு அவனை நோக்கி, “உன் பெயர் என்ன?” என்று கேட்டார். அம்மனிதன், “லேகியோன்” என்று பதிலளித்தான். (அவன் பல பிசாசுகள் தன்னைப் பிடித்திருந்தமையால் தனது பெயர் “லேகியோன்” என்று குறிப்பிட்டான்) 31 நித்தியமான இருளுக்குத் தங்களை அனுப்பாதவாறு பிசாசுகள் இயேசுவை வேண்டிக்கொண்டன. 32 அம்மலையின் மீது ஒரு கூட்டமான பன்றிகள் மேய்ந்துகொண்டிருந்தன. பிசாசுகள் அப்பன்றிக் கூட்டத்தில் செல்வதற்குத் தங்களை அனுமதிக்குமாறு இயேசுவை வேண்டின. இயேசு அவ்வாறே செய்ய அனுமதித்தார். 33 பிசாசுகள் அம்மனிதனைவிட்டு வெளியேறி பன்றிகளின் உள்ளே புகுந்தன. பன்றிகள் பாறைகளில் உருண்டு ஏரிக்குள் விழுந்தன. எல்லாப் பன்றிகளும் மூழ்கி மடிந்தன.

34 பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்த மனிதர்கள் நடந்ததைப் பார்த்து அங்கிருந்து ஓடிப்போனார்கள். அவர்கள் நடந்ததை வயற்புறங்களுக்கும், நகரங்களுக்கும் சென்று மக்களுக்குக் கூறினர். 35 நடந்ததைக் காண விரும்பிய மக்கள் இயேசுவிடம் சென்றனர். அவர்கள் இயேசுவை நெருங்கியபோது இயேசுவின் பாதத்தருகே அம்மனிதன் உட்கார்ந்து இருக்கக் கண்டனர். அம்மனிதன் ஆடைகள் அணிந்தவனாக, மனநலம் பெற்றவனாகக் காணப்பட்டான். பிசாசுகள் அவனைவிட்டு நீங்கி இருந்தன. அதைக் கண்டு அச்சம் கொண்டனர் மக்கள்.

36 நடந்தவற்றைக் கண்ட மக்கள் பிறரிடம் இயேசு அந்த மனிதனைக் குணமாக்கிய வகையைக் கூறினர். 37 இயேசுவை அங்கிருந்து போய்விடுமாறு கெதரேன பகுதி மக்கள் அனைவரும் கூறினர். அவர்கள் மிகவும் பயந்தவர்களாகக் காணப்பட்டனர். எனவே இயேசு படகில் ஏறி, கலிலேயாவுக்குத் திரும்பிச் சென்றார். 38 இயேசுவால் குணம் பெற்ற மனிதன் தானும் கூடவே வர விரும்புவதாக அவரை வேண்டினான்.

ஆனால் இயேசு அந்த மனிதனிடம், 39 “வீட்டுக்குப்போய் தேவன் உனக்குச் செய்ததைப் பிறருக்குக் கூறு” என்று சொல்லி அவனை அனுப்பிவிட்டார்.

ஆகவே அவன் இயேசு தனக்குச் செய்ததை நகரமெங்கும் சென்று மக்களுக்குக் கூறினான்.

Read full chapter