மத்தேயு 14:1-12
Tamil Bible: Easy-to-Read Version
ஏரோது இயேசுவைப்பற்றி அறிதல்
(மாற்கு 6:14-29; லூக்கா 9:7-9)
14 அப்போது கலிலேயாவின் மன்னனாயிருந்த ஏரோது இயேசுவைப்பற்றி மக்கள் பேசியவைகளைக் கேள்வியுற்றான். 2 எனவே, ஏரோது தன் வேலைக்காரர்களிடம், “இந்த மனிதனே உண்மையில் யோவான் ஸ்நானகன். மரணத்திலிருந்து அவன் மீண்டும் எழுந்திருந்திருக்க வேண்டும். அதனால் தான் அவனால் இத்தகைய அற்புதங்களைச் செய்ய முடிகிறது” என்று கூறினான்.
யோவான் ஸ்நானகனின் மரணம்
3 இதற்கு முன்னர், ஏரோது யோவானைக் கைது செய்திருந்தான். ஏரோது யோவானைச் சங்கிலியால் கட்டி சிறையிலிட்டிருந்தான். ஏரோதியாளின் நிமித்தம் யோவானை ஏரோது கைது செய்திருந்தான். ஏரோதுவின் சகோதரன் பிலிப்புவின் மனைவி ஏரோதியாள். 4 “நீ ஏரோதியாளை உன்னோடு வைத்திருப்பது சரியல்ல” என்று யோவான் ஏரோதுவிடம் கூறியதால் யோவானை ஏரோது கைது செய்தான். 5 யோவான் தீர்க்கதரிசியென மக்கள் நம்பியிருந்தார்கள். எனவே, யோவானைக் கொல்ல விரும்பிய ஏரோது பயந்தான்.
6 ஏரோதின் பிறந்த நாளன்று, ஏரோதியாளின் குமாரத்தி ஏரோதுவையும் அவன் நண்பர்களையும் மகிழ்விக்க நடனமாடினாள். அவள் நடனத்தால் ஏரோது மிக மகிழ்ந்தான். 7 எனவே, அவள் எதை விரும்பினாலும் தருவதாக வாக்களித்தான். 8 தன் குமாரத்தி எதைக் கேட்கவேண்டும் என்பதை ஏரோதியாள் முன்னமே அறிவுறுத்தியிருந்தாள். ஆகவே, அவள் ஏரோதுவிடம், “எனக்கு யோவான்ஸ்நானகனின் தலையை ஒரு தட்டில் வைத்துத் தாருங்கள்” என்று கூறினாள்.
9 இதனால் மன்னன் ஏரோது மிகுந்த துக்கம் கொண்டான். ஆனால் தன் குமாரத்தி எதை விரும்பினாலும் தருவதாக வாக்களித்திருந்தான். ஏரோதுவுடன் உணவருந்திக்கொண்டிருந்தவர்கள் அவன் வாக்குறுதியைக் கேட்டிருந்தார்கள். எனவே, அவள் விரும்பியதை நிறைவேற்ற ஏரோது கட்டளையிட்டான். 10 சிறையிலிருந்த யோவானின் தலையை வெட்டுவதற்கு அவன் ஆட்களை அனுப்பினான். 11 அவர்கள் யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்துக் கொண்டு வந்து அதை அவளிடம் கொடுத்தனர். பின்னர், அப்பெண் அத்தலையைத் தன் தாய் ஏரோதியாளிடம் எடுத்துச் சென்றாள். 12 யோவானின் சீஷர்கள் அவனது உடலைப் பெற்று அடக்கம் செய்தனர். பின், அவர்கள் இயேசுவிடம் சென்று நடந்ததைக் கூறினார்கள்.
Read full chapter2008 by Bible League International