Revised Common Lectionary (Semicontinuous)
கோராகின் குடும்பத்தைச் சேர்ந்த இராகத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட ‘மஸ்கீல்’ என்னும் பாடல்
44 தேவனே, நாங்கள் உம்மைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறோம்.
எங்கள் முற்பிதாக்கள் அவர்களுடைய வாழ்நாளில் நீர் செய்தவற்றை எங்களுக்குக் கூறியிருக்கிறார்கள்.
கடந்தகாலத்தில் நீர் செய்தவற்றை அவர்கள் எங்களுக்குக் கூறியிருக்கிறார்கள்.
2 தேவனே, உமது மிகுந்த வல்லமையினால்
பிறரிடமிருந்து இந்த தேசத்தை எடுத்து எங்களுக்கு நீர் கொடுத்தீர்.
அந்நியர்களை அழித்தீர்.
இத்தேசத்தினின்று அவர்களைத் துரத்தி விலக்கினீர்.
3 எங்கள் முற்பிதாக்களின் வாள்கள் தேசத்தைக் கைப்பற்றவில்லை.
அவர்களின் பலமான கரங்கள் அவர்களை வெற்றி வீரர்களாக்கவில்லை.
நீர் எங்கள் முன்னோரோடிருந்ததால் அவ்வாறு நிகழ்ந்தது.
தேவனே, உமது பெரிய வல்லமை எங்கள் முற்பிதாக்களைக் காத்தது. ஏனெனில் நீர் அவர்களை நேசித்தீர்.
4 என் தேவனே, நீர் என் அரசர்.
நீர் கட்டளையிடும், யாக்கோபின் ஜனங்களை வெற்றிக்கு நேராக வழிநடத்தும்.
5 என் தேவனே, உமது உதவியால் பகைவர்களைத் துரத்துவோம்.
உமது பெயரின் உதவியோடு பகைவர்கள்மீது நடப்போம்.
6 நான் என் வில்லுகளையும், அம்புகளையும் நம்பமாட்டேன்.
என் வாள் என்னைக் காப்பாற்றாது.
7 தேவனே, நீர் எங்களை எகிப்திலிருந்து மீட்டீர்.
எங்கள் பகைவர்களை வெட்கமடையச் செய்தீர்.
8 தேவனை நாங்கள் எப்பொழுதும் துதிப்போம்.
உமது நாமத்தை எந்நாளும் துதிப்போம்!
9 ஆனால், தேவனே, நீர் எங்களை விட்டு விலகினீர்.
நீர் எங்களை வெட்கமடையச் செய்கிறீர்.
யுத்தத்திற்கு நீர் எங்களோடு வரவில்லை.
10 எங்கள் பகைவர்கள் எங்களைத் துரத்தச் செய்தீர்.
எங்கள் பகைவர்கள் எங்கள் செல்வத்தை எடுத்துக்கொண்டனர்.
11 உணவாகும் ஆடுகளைப்போல் எங்களைக் கொடுத்துவிட்டீர்.
தேசங்களில் எல்லாம் எங்களைச் சிதறடித்தீர்.
12 தேவனே, உமது ஜனங்களை எந்தப் பயனுமின்றி விற்றுப்போட்டீர்.
நீர் எங்களை விலை பேசவுமில்லை.
13 எங்கள் அயலாரிடம் எங்களை நிந்தையாக்கினீர்.
அயலார்கள் எங்களைப் பார்த்து நகைத்து எங்களைக் கேலி செய்கிறார்கள்.
14 ஜனங்கள் கூறும் வேடிக்கைக் கதைகளில் ஒன்றானோம்.
தங்களுக்கென நாடற்ற ஜனங்கள் கூட எங்களைப் பார்த்து நகைத்துத் தலையைக் குலுக்குகிறார்கள்.
15 நான் நாணத்தால் மூடப்பட்டேன்.
நான் முழுவதும் வெட்கத்தால் நாணுகிறேன்.
16 என் பகைவர்கள் என்னை அவமானப்படச் செய்தனர்.
என் பகைவர்கள் என்னைக் கேலி செய்வதின் மூலம் பழிவாங்க முயற்சி செய்கிறார்கள்.
17 தேவனே, நாங்கள் உம்மை மறக்கவில்லை.
ஆயினும் நீர் இவற்றையெல்லாம் எங்களுக்குச் செய்கிறீர்.
உம்மோடு உடன்படிக்கை செய்து கொண்டபோது நாங்கள் பொய்யுரைக்கவில்லை.
18 தேவனே, நாங்கள் உம்மை விட்டு விலகிச் செல்லவில்லை.
உம்மைப் பின்பற்றுவதை நிறுத்தவில்லை.
19 ஆனால் தேவனே, ஓநாய்கள் வாழும் இடத்தில் எங்களைத் தள்ளினீர்.
மரண இருளைப் போன்ற இடத்தில் எங்களை வைத்தீர்.
20 தேவனுடைய நாமத்தை நாங்கள் மறந்தோமா?
பிற தெய்வங்களிடம் ஜெபித்தோமா? இல்லை!
21 உண்மையாகவே, தேவன் இவற்றை அறிகிறார்.
எங்கள் ஆழ்ந்த இரகசியங்களையும் அவர் அறிந்திருக்கிறார்.
22 தேவனே, உமக்காக ஒவ்வொரு நாளும் நாங்கள் கொல்லப்படுகிறோம்.
கொல்லப்படுவதற்கு அழைத்துச்செல்லப்படும் ஆடுகளைப் போலானோம்.
23 என் ஆண்டவரே, எழுந்திரும்!
ஏன் நித்திரை செய்கிறீர்? எழுந்திரும்!
எப்பொழுதும் எங்களைக் கைவிட்டு விடாதேயும்.
24 தேவனே, எங்களிடமிருந்து ஏன் ஒளிந்து கொண்டிருக்கிறீர்?
எங்கள் வேதனைகளையும், தொல்லைகளையும் நீர் மறந்து விட்டீரா?
25 நாங்கள் புழுதியில் தள்ளப்பட்டோம்,
தரையின்மேல் தலைகுப்புறப் படுத்துக்கொண்டிருக்கிறோம்.
26 தேவனே, எழுந்திருந்து எங்களுக்கு உதவும்.
உமது உண்மையான அன்பினால் எங்களைப் பாதுகாத்தருளும்.
14 “எனவே, நான் (கர்த்தர்) அவளிடத்தில் இனிமையான வார்த்தைகளால் பேசுவேன். நான் அவளை வனாந்தரத்திற்கு அழைத்துப் போவேன். நான் அவளிடம் நயமாகப் பேசுவேன். 15 அங்கே நான் அவளுக்குத் திராட்சைத் தோட்டங்களைக் கொடுப்பேன். நான் அவளுக்கு நம்பிக்கையின் வாசலைப் போன்ற ஆகோர் பள்ளத்தாக்கைக் கொடுப்பேன். பிறகு அவள் எகிப்து தேசத்திலிருந்து வந்த சமயத்திலும் தன் வாலிப நாட்களிலும் என்னோடு பேசினதுபோல் பதிலைத் தருவாள்.” 16 கர்த்தர் இதனைச் சொல்கிறார்.
“அந்த நேரத்தில் நீங்கள் என்னை, ‘என் கணவனே’ என்று அழைப்பீர்கள். நீங்கள் என்னை ‘என் பாகாலே’ என்று அழைக்கமாட்டீர்கள். 17 நான் அவளது வாயிலிருந்து பாகால்களின் பெயர்களை எடுத்துவிடுவேன். பிறகு ஜனங்கள் மீண்டும் பாகால்களின் பெயர்களை பயன்படுத்தமாட்டார்கள்.
18 “அப்போது நான் இஸ்ரவேலர்களுக்காகக் காட்டுமிருகங்களோடும் வானத்துப் பறவைகளோடும், தரையில் ஊரும் உயிர்களோடும், ஒரு உடன்படிக்கைச் செய்துகொள்வேன். நான் போருக்குரியவில், வாள், ஆயுதம் போன்றவற்றை உடைப்பேன். தேசத்தில் எந்த ஆயுதமும் இல்லாதபடிச் செய்வேன். நான் தேசத்தைப் பாதுகாப்பாக இருக்கும்படிச் செய்வேன். எனவே இஸ்ரவேல் ஜனங்களை சமாதானமாகப் படுக்கச் செய்வேன். 19 நான் (கர்த்தர்) உன்னை என்றைக்குமான எனது மணப் பெண்ணாக்குவேன். நான் உன்னை நன்மை, நீதி, அன்பு, இரக்கம், ஆகிய குணங்கள் உள்ள என்னுடைய மணமகளாக்குவேன். 20 நான் உன்னை எனது உண்மைக்குரிய மனமகளாக்குவேன். பிறகு நீ கர்த்தரை உண்மையாகவே அறிந்துகொள்வாய். 21 அப்போது நான் மறுமொழி தருவேன்.” கர்த்தர் இதனைச் சொல்கிறார்.
“நான் வானங்களோடு பேசுவேன்
அவை பூமிக்கு மழையைக் கொடுக்கும்.
22 பூமி தானியம், திராட்சைரசம், எண்ணெய் ஆகியவற்றை உற்பத்தி செய்யும்.
அவை யெஸ்ரயேலின் தேவைகளைப் பூர்த்திச்செய்யும்.
23 நான் அவளது தேசத்தில் பல விதைகளை நடுவேன்.
நான் லோருகாமாவுக்கு இரக்கம் காட்டுவேன்,
நான் லோகம்மியிடம், ‘நீங்கள் எனது ஜனங்கள்’ என்பேன்.
அவர்கள் என்னிடம், ‘நீர் எங்களது தேவன்’ என்று சொல்வார்கள்.”
ஓசியா கோமேரை அடிமைத்தனத்திலிருந்து திரும்ப வாங்குகிறான்
3 பிறகு கர்த்தர் மீண்டும் என்னிடம், “கோமேருக்குப் பல நேசர்கள் இருக்கின்றார்கள். ஆனால் நீ தொடர்ந்து அவளை நேசி. ஏனென்றால் அதுவே கர்த்தருடைய அன்புக்கு ஒப்பானது. கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்கள் மீது தொடர்ந்து அன்பு செலுத்தி வருகின்றார். ஆனால் அவர்கள் தொடர்ந்து அந்நியத் தெய்வங்களை தொழுகின்றனர். அவர்கள் (உலர்ந்த) திராட்சை அப்பத்தை உண்ண விரும்புகின்றனர்” என்றார்.
2 எனவே நான் கோமேரைப் பதினைந்து வெள்ளிக்காசுகளுக்கும், ஒன்றைரைக் கலம் வாற்கேதுமைக்கும் வாங்கினேன், 3 பிறகு நான் அவளிடம், “நீ என்னுடன் பல நாட்கள் வீட்டில் தங்கவேண்டும். நீ ஒரு வேசியைப்போன்று இருக்கக்கூடாது. நீ இன்னொருவனோடு இருக்கக்கூடாது. நான் உனது கணவனாக இருப்பேன்” என்று சொன்னேன்.
4 இவ்வாறே, இஸ்ரவேல் ஜனங்கள் வேறு அரசனோ தலைவரோ இல்லாமல் இருப்பார்கள். அவர்கள் பலி இல்லாமலும், நினைவுக் கற்கள் இல்லாமலும் இருப்பார்கள். அவர்கள் ஏபோத் ஆடை இல்லாமலும் வீட்டுத் தெய்வங்கள் இல்லாமலும் இருப்பார்கள். 5 இதற்குப் பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் திரும்பி வருவார்கள். பிறகு அவர்கள் தம் தேவனாகிய கர்த்தரையும் அரசனாகிய தாவீதையும்காண வருவார்கள். இறுதி நாட்களில் அவர்கள் கர்த்தரையும் அவரது நன்மைகளையும் பெருமைப்படுத்த வருவார்கள்.
மனிதனின் சட்டத்தைப் பின்பற்றாதீர்கள்
16 ஆகையால், உண்பதைப் பற்றியும், குடிப்பதைப் பற்றியும், பண்டிகைகள், பௌர்ணமிகள், ஓய்வு நாட்கள் ஆகிய யூதர்களின் பழக்க வழக்கங்களைக் குறித்தும் எவரும் சட்டங்கள் உருவாக்க நீங்கள் அனுமதிக்காதீர்கள். மனித விதிமுறைகளைப் பின்பற்றாதீர்கள் 17 கடந்த காலத்தில், இவை நிழலாக இருந்து எதிர்காலத்தில் வருவதைச் சுட்டிக் காட்டியது. ஆனால் புதிதாக வந்தவை கிறிஸ்துவில் காணப்படுகின்றன. 18 சிலர் தாழ்மையுள்ளவர்கள் போல் நடிப்பதில் மகிழ்ச்சியடைகிறார்கள். அவர்கள் தேவ தூதர்களை வழிபட விரும்புவர். அவர்கள் எப்பொழுதும் தாங்கள் கண்ட தரிசனங்களையும், கனவுகளையும் பற்றியே பேசிக்கொண்டிருப்பர். அவர்கள் “நீங்கள் தவறானவர்கள், உங்களால் எதுவும் செய்ய முடியாது” என்று கூறுவர். எனவே அவர்களை எதுவும் சொல்ல அனுமதிக்காதீர்கள். அவர்களுக்கு எப்பொழுதும் முட்டாள்தனமான பெருமிதமே இருக்கிறது. ஏனென்றால் அவர்கள் மனிதர்களின் எண்ணங்களைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கிறார்களே ஒழிய தேவனுடைய எண்ணங்களைப் பற்றி சிந்திப்பதில்லை. 19 அவர்கள், தலையாகிய கிறிஸ்துவின் அதிகாரத்துக்குள் தம்மைக் கட்டுப்படுத்திக்கொள்வதில்லை. முழு சரீரமும் கிறிஸ்துவைச் சார்ந்துள்ளது. அவரால் நம் சரீரத்தின் எல்லா உறுப்புகளும் ஒன்றுக்கொன்று அக்கறை கொள்கிறது. மேலும் அவை ஒன்றுக்கொன்று உதவியும் செய்கிறது. இது சரீரத்தை வலிமைப்படுத்தி ஒன்றாய்ச் சேர்க்கிறது. தேவன் விரும்புகிற விதத்திலேயே சரீரம் வளருகின்றது.
20 நீங்கள் கிறிஸ்துவோடு இறந்தீர்கள். உலகத்தின் பயனற்ற சட்டதிட்டங்களில் இருந்தும் விடுதலை பெற்றீர்கள். எனினும் நீங்கள் இந்த உலகத்தைச் சார்ந்தவர்களைப் போன்று நடித்து வருகிறீர்கள். 21 “இதனை உண்ணக்கூடாது.” “அதனைச் சுவைபார்க்கக்கூடாது” “அதனைத் தொடக்கூடாது” என்கிறீர்கள். 22 ஏன் இன்னும் இது போன்ற சட்ட திட்டங்களைப் பின்பற்றுகிறீர்கள்? இவை பயன்படுத்தப்பட்டவுடன் போய்விடும். இச்சட்டதிட்டங்கள் பூலோகத்தைப் பற்றியவை. இவை மனிதர்களின் கட்டளைகளும், போதனைகளுமேயாகும். தேவனுடையவை அல்ல. 23 இவை புத்திசாலித்தனமாய்த் தோன்றலாம். ஆனால் இச்சட்டங்கள் போலிப் பணிவும் சரீரத்தைத் தண்டிக்கக் கூடியதுமான மனிதரால் உருவாக்கப்பட்ட மதத்தின் சட்டங்கள் மட்டுமே ஆகும். ஆனால் இவை மக்கள் பாவத்தில் இருந்து விடுபட உதவாது.
கிறிஸ்துவில் புதிய வாழ்க்கை
3 கிறிஸ்துவோடு நீங்கள் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்து விட்டீர்கள். எனவே, பரலோகத்தில் உள்ளவற்றைப் பெற முயற்சி செய்யுங்கள். அங்கே தேவனுடைய வலது பக்கத்தில் கிறிஸ்து வீற்றிருக்கிறார்.
2008 by World Bible Translation Center