Revised Common Lectionary (Semicontinuous)
கிமெல்
17 உமது ஊழியனாகிய என்னிடம் நல்லவராயிரும்.
அதனால் நான் வாழ்ந்து உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய முடியும்.
18 கர்த்தாவே, எனது கண்களைத் திறவும்.
நான் உமது போதனைகளைப் பார்க்கட்டும்,
நீர் செய்த அற்புதமான காரியங்களைப்பற்றிப் படிக்கட்டும்.
19 நான் இத்தேசத்தில் ஒரு அந்நியன்.
கர்த்தாவே, என்னிடமிருந்து உமது போதனைகளை மறைக்காதேயும்.
20 நான் எப்போதும் உமது நியாயங்களைக்
கற்க விரும்புகிறேன்.
21 கர்த்தாவே, நீர் பெருமைக்காரர்களைக் குறை கூறுகிறீர்.
அவர்களுக்குத் தீமைகள் நேரிடும்.
அவர்கள் உமது கற்பனைகளுக்குக் கீழ்ப்படிய மறுக்கிறார்கள்.
22 நான் வெட்கமுற்று அவமானப்படச் செய்யாதேயும்.
நான் உமது உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிகிறேன்.
23 தலைவர்களும்கூட என்னைப்பற்றித் தீயவற்றைக் கூறினார்கள்.
ஆனால் கர்த்தாவே, நான் உமது பணியாள், நான் உமது சட்டங்களைக் கற்றுக்கொள்கிறேன்.
24 உமது உடன்படிக்கை என் நல்ல நண்பனைப் போல உள்ளது.
அது நல்ல அறிவுரையை எனக்குத் தருகிறது.
டாலெத்
25 நான் விரைவில் மரிப்பேன்.
கர்த்தாவே, கட்டளையிடும், என்னை வாழவிடும்.
26 நான் என் வாழ்க்கையைப்பற்றி உமக்குக் கூறினேன்.
நீர் எனக்கு பதிலளித்தீர்.
இப்போது, உமது சட்டங்களை எனக்குக் கற்பியும்.
27 கர்த்தாவே, உமது சட்டங்களை நான் புரிந்துகொள்ள எனக்கு உதவும்.
நீர் செய்த அற்புதமான காரியங்களை நான் படிக்கட்டும்.
28 நான் வருத்தமடைந்து களைத்துப்போனேன்.
நீர் கட்டளையிடும், என்னை மீண்டும் பலப்படுத்தும்.
29 கர்த்தாவே, நான் பொய்யாக வாழாதபடிச் செய்யும்.
உமது போதனைகளால் என்னை வழிநடத்தும்.
30 கர்த்தாவே, நான் உம்மிடம் நேர்மையாயிருப்பதைத் தேர்ந்தெடுத்தேன்.
உமது ஞானமுள்ள முடிவுகளை நான் கவனமாகக் கற்கிறேன்.
31 கர்த்தாவே, நான் உமது உடன்படிக்கையில் உறுதியாயிருக்கிறேன்.
நான் வெட்கமடையவிடாதிரும்.
32 நான் மகிழ்ச்சியோடு உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவேன்.
கர்த்தாவே, உமது கட்டளைகள் என்னை மகிழ்ச்சியாக்கும்.
வெட்டுக்கிளிகளின் தரிசனம்
7 கர்த்தர் என்னிடம் இதனைக் காட்டினார். அரசனின் முதல் அறுவடைக்குப் பின் இரண்டவாது விளைச்சல் தொடங்குகிற காலத்தில் அவர் வெட்டுக்கிளிகளை உருவாக்கினார். 2 வெட்டுக்கிளிகள் நாட்டிலுள்ள புல் அனைத்தையும் தின்றன. அதற்குப் பிறகு நான், “எனது கர்த்தராகிய ஆண்டவரே, உம்மைக் கெஞ்சுகிறேன். எங்களை மன்னியும்! யாக்கோபு உயிர்ப்பிழைக்க முடியாது. அவன் மிகவும் சிறியவன்!” என்று சொன்னேன்.
3 பிறகு கர்த்தர் இதைப்பற்றி அவரது மனதை மாற்றினார். கர்த்தர், “அந்த காரியம் நடைபெறாது” என்றார்.
நெருப்பின் தரிசனம்
4 எனது கர்த்தராகிய ஆண்டவரே, என்னிடம் இவற்றைக் காட்டினார். நான் அக்கினியாலே நியாயத்தீர்ப்புக்காகக் கூப்பிடுகிற தேவனாகிய கர்த்தரை பார்த்தேன். நெருப்பு பெரிய ஆழியை அழித்தது. நெருப்பு நாட்டை அழிக்கத் தொடங்கியது. 5 ஆனால் நான், “தேவனாகிய கர்த்தாவே, நிறுத்தும், நான் உம்மைக் கெஞ்சுகிறேன். யாக்கோபு உயிரோடு வாழ முடியாது. அவன் மிகவும் சிறியவன்!” என்றேன்.
6 பிறகு கர்த்தர் இதைப்பற்றி தம் மனதை மாற்றிக்கொண்டார். தேவனாகிய கர்த்தர், “அந்தக் காரியம் நடைபெறாது” என்றார்.
27 தேவன், தனது மக்கள், இந்தச் செல்வமும், உன்னதமுமிக்க இரகசிய உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார். அந்த உயர்ந்த உண்மை உலகிலுள்ள மக்கள் அனைவருக்கும்Ԕ உரியது. கிறிஸ்துதான் அந்த உண்மை. அவர் உங்களில் இருக்கிறார். அவரே நம் மகிமைக்கான ஒரே நம்பிக்கையாக இருக்கிறார். 28 எனவே நாம் மக்களிடம் தொடர்ந்து கிறிஸ்துவைப் பற்றிப் போதனை செய்கிறோம். நம் முழு அறிவையும் ஒவ்வொருவரையும் பலப்படுத்தவும், ஒவ்வொருவருக்கும் போதிக்கவும் பயன்படுத்துகிறோம். கிறிஸ்துவுக்குள் ஆன்மீக முழுமைபெற்ற மக்களைப் போன்று ஏனைய மக்களையும் நாம் தேவனுக்கு முன்பாகக் கொண்டு வர முயற்சி செய்துகொண்டிருக்கிறோம். 29 கிறிஸ்து எனக்குக் கொடுத்திருக்கிற முழு சக்தியையும் பயன்படுத்தி, இதைச் செய்வதற்காகத்தான் நான் உழைத்து வருகிறேன். அச்சக்தி எனக்குள் வேலை செய்கிறது.
2 உங்களுக்கு உதவ நான் கடுமையான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறேன். லவோதிக்கேயா மக்களுக்கும், என்னை இதுவரை காணாத ஏனைய மக்களுக்கும் நான் உதவி செய்ய முயல்கிறேன். 2 அவர்களை பலப்படுத்தவும், அன்புடன் ஒன்று சேர்த்துக்கொள்ளவும் விரும்புகிறேன். உறுதியான விசுவாசம் என்னும் செல்வத்தை அவர்கள் பெறவேண்டும் என்று விரும்புகிறேன். அந்த விசுவாசம் சரியான அறிவில் இருந்து பிறக்க வேண்டும் என்றும் விரும்புகிறேன். தேவன் வெளிப்படுத்திய இரகசிய உண்மையை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்றும் விரும்புகிறேன். அந்த உண்மை கிறிஸ்து தான். 3 கிறிஸ்துவுக்குள் ஞானத்தின் எல்லாக் கருவூலங்களும், அறிவும் பாதுகாக்கப்பட்டிருக்கிறது.
4 தோற்றத்தில் உண்மை போன்ற பொய்களைச் சொல்லி உங்களை யாரும் முட்டாளாக்கிவிடக் கூடாது என்பதற்காக இவ்வளவையும் உங்களுக்கு எழுதுகிறேன். 5 அங்கே நான் உங்களோடு இல்லை. எனினும் எனது இதயம் உங்களோடு உள்ளது. உங்களது நல்ல வாழ்வைக் காணும்போதும் கிறிஸ்துவுக்குள் உறுதியான விசுவாசத்தைக் காணும்போதும் நான் மகிழ்வடைகிறேன்.
கிறிஸ்துவில் தொடர்ந்து வாழுங்கள்
6 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நீங்கள் அடைந்துள்ளீர்கள். எனவே எதையும் மாற்றிக்கொள்ளாமல் தொடர்ந்து அவரைப் பின்பற்றி வாழுங்கள். 7 கிறிஸ்துவை மட்டும் நீங்கள் சார்ந்திருங்கள். வாழ்க்கையும், பலமும் அவரிடமிருந்து வருகின்றன. உங்களுக்கு அந்த உண்மை கற்பிக்கப்பட்டிருக்கிறது. அந்த உண்மையான போதனையில் நீங்கள் தொடர்ந்து உறுதியாக இருக்க வேண்டும். எப்பொழுதும் நன்றி உள்ளவர்களாய் இருங்கள்.
2008 by World Bible Translation Center