Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Semicontinuous)

Daily Bible readings that follow the church liturgical year, with sequential stories told across multiple weeks.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
யோபு 14:1-14

14 யோபு, “நாமெல்லோரும் மனித ஜீவிகளே.
    நம் வாழ்க்கை குறுகியதும் தொல்லைகள் நிரம்பியதுமாகும்.
மனிதனின் வாழ்க்கை ஒரு மலரைப் போன்றது.
    அவன் விரைவாக வளருகிறான், பின்பு மடிந்துப் போகிறான்.
மனிதனின் வாழ்க்கை ஒரு நிழலைப் போன்றது.
    அது குறுகிய காலம் இருந்து, பின்பு மறைந்துப்போகும்.
அது உண்மையே, ஆனால் ஒரு மனிதனாகிய என்னை தேவன் நோக்கிப்பார்ப்பாரா?
    நீர் என்னோடு நியாய சபைக்கு வருவீரா?
அங்கு நாம் இருவரும் நம் விவாதங்களை முன் வைப்போம்.

“ஆனால் அழுக்குப்படிந்த ஒரு பொருளுக்கும்
    தூய்மையான ஒரு பொருளுக்குமிடையே இருக்கும் ஒற்றுமை என்ன? ஒன்றுமில்லை!
மனிதனின் வாழ்க்கை ஒரு எல்லை உடையது.
    தேவனே, ஒரு மனிதன் எத்தனைக் காலம் வாழ்கிறான் என்பதை நீர் முடிவு செய்கிறீர்.
    ஒரு மனிதனுக்கு அந்த எல்லைகளை நீர் முடிவெடுக்கிறீர், எதுவும் அதை மாற்றமுடியாது.
எனவே, தேவனே எங்களைக் கவனிப்பதை நிறுத்தும்.
    எங்களைத் தனித்துவிடும்.
    எங்கள் காலம் முடியும் வரைக்கும் எங்கள் கடின வாழ்க்கையை நாங்கள் வாழவிடும்.

“ஒரு மரத்திற்கும் நம்பிக்கை உண்டு.
    அது வெட்டப்பட்டால், மீண்டும் வளரக்கூடும்.
    அது புது கிளைகளைப் பரப்பியபடி நிற்கும்.
அதன் வேர்கள் பலகாலம் மண்ணிற்குள் வளரும்,
    அதன் அடிப்பகுதி புழுதியில் மடியும்.
ஆனால் தண்ணீரினால் அது மீண்டும் வளரும்.
    புதுச்செடியைப்போன்று அதில் கிளைகள் தோன்றும்.
10 ஆனால் மனிதன் மரிக்கும்போது, அவன் அழிந்து போகிறான்.
    மனிதன் மரிக்கும்போது, அவன் காணமற்போகிறான்.
11 நதிகள் வற்றிப்போகும்படியாகவும் கடல் தண்ணீர் முழுவதும் வற்றிப்போகும்படியாக தண்ணீர் இறைத்தாலும்
    மனிதன் மரித்தவனாகவேகிடப்பான்.
12 ஒருவன் மரிக்கும்போது அவன் படுத்திருக்கிறான், மீண்டும் எழுகிறதில்லை.
    அவர்கள் எழும்முன்னே வானங்கள் எல்லாம் மறைந்துபோகும்.
    ஜனங்கள் அந்த உறக்கத்திலிருந்து எழுவதேயில்லை.

13 “நீர் என் கல்லறையில் என்னை ஒளித்து வைப்பீரென விரும்புகிறேன்.
    நீர் உமது கோபம் ஆறும்வரை என்னை அங்கு ஒளித்து வைப்பீரென விரும்புகிறேன்.
    பின்பு என்னை நினைவுகூரும் காலத்தை நீர் தேர்ந்தெடுக்கலாம்.
14 ஒருவன் இறந்தால், அவன் மீண்டும் வாழ்வானா?
    நான் விடுதலையாகும்வரை எத்தனை காலமாயினும் காத்திருந்தேயாக வேண்டும்!

புலம்பல் 3:1-9

துன்பங்களின் அர்த்தம்

நான் அதிகமான துன்பங்களைப் பார்த்திருக்கிற மனிதன்.
கர்த்தர் கம்பால் எங்களை அடித்தார்.
    நான் இது நிகழ்ந்ததைப் பார்த்தேன்!
கர்த்தர் என்னை வெளிச்சத்தில் அல்ல
    இருட்டில் வழிநடத்தி கொண்டுவந்தார்.
கர்த்தர் தனது கையை எனக்கு எதிராகத் திருப்பினார்.
    அவர் நாள்முழுதும் இதனை மீண்டும் மீண்டும் செய்தார்.
அவர் எனது சதையையும் தோலையும் முற்றலாக்கினார்.
    அவர் எனது எலும்புகளை உடைத்தார்.
கர்த்தர் எனக்கு எதிராகக் கசப்பையும் வருத்தத்தையும் ஏற்படுத்தினார்.
    அவர் கசப்பையும் வருத்தத்தையும் என்னைச் சுற்றிலும் வரும்படி செய்தார்.
அவர் என்னை இருட்டில் இருக்கும்படிச் செய்தார்.
    நீண்ட காலமாகச் செத்துக் கிடக்கிற சிலரைப் போல என்னை அவர் செய்தார்.
கர்த்தர் என்னை உள்ளே வைத்து பூட்டினார்.
என்னால் வெளியே வரமுடியவில்லை.
    அவர் என்மீது கனமான சங்கிலிகளைப் போட்டார்.
நான் கதறினாலும் உதவி கேட்டாலும்
    கர்த்தர் எனது ஜெபத்தைக் கேட்பதில்லை.
அவர் எனது பாதையைக் கற்களால் அடைத்துவிட்டார்.
    அவர் எனது பாதையைக் கோணலாக்கினார்.

புலம்பல் 3:19-24

19 கர்த்தாவே, நான் மிகவும் வருத்தமாய் இருக்கிறேன் என்னை நினைத்தருளும்.
    எனக்கு வீடு இல்லை.
    நீர் எனக்குக் கொடுத்த கசப்பான விஷத்தை (தண்டனையை) நினைத்துப்பாரும்.
20 நான் எனது எல்லாத் துன்பங்களையும் நினைத்துப் பார்க்கிறேன்.
    நான் மிகவும் துக்கமாய் இருக்கிறேன்.
21 ஆனால் பிறகு, ஏதோ சிலதைப் பற்றி நினைக்கிறேன்.
    பின்னர் நான் நம்பிக்கை பெறுகிறேன்.
    நான் என்ன நினைக்கிறேன் என்பது இதுதான்:
22 கர்த்தருடைய அன்பு மற்றும் கருணைக்கு முடிவில்லை.
    கர்த்தருடைய இரக்கம் எப்பொழுதும் முடிவதில்லை.
23 ஒவ்வொரு காலையிலும் அவர் அதை புதிய வழிகளில் காண்பிக்கிறார்!
    கர்த்தாவே, உமது உண்மையும், பற்றுதலும் மிகப் பெரியது!
24 நான் எனக்குள், “கர்த்தரே எனது தேவனாயிருக்கிறார்,
    ஆகவே நான் அவரை நம்புவேன்” என்கிறேன்.

சங்கீதம் 31:1-4

இசைத்தலைவனுக்காக தாவீது பாடிய பாடல்

31 கர்த்தாவே, நான் உம்மை நம்பியிருக்கிறேன்.
    என்னை ஏமாற்றாதேயும். என்னிடம் தயவாயிருந்து என்னைக் காப்பாற்றும்.
தேவனே, எனக்குச் செவிகொடும்.
    விரைந்து வந்து என்னைக் காப்பாற்றும்.
எனது பாறையாய் இரும். எனக்குப் பாதுகாப்பான இடமாயிரும்.
    எனக்குக் கோட்டையாயிரும். என்னைப் பாதுகாத்தருளும்.
தேவனே, நீரே என் பாறை.
    எனவே, உமது நாமத்தின் நன்மையால் என்னை நடத்தி, வழி காட்டும்.
என் பகைவர்கள் எனக்கு முன்னே கண்ணியை வைத்தார்கள்.
    அவர்கள் கண்ணிக்கு என்னைக் காப்பாற்றும். நீரே என் பாதுகாப்பிடம் ஆவீர்.

சங்கீதம் 31:15-16

15 என் உயிர் உமது கைகளில் உள்ளது.
    என் பகைவரிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
சில ஜனங்கள் என்னைத் துரத்துகிறார்கள்.
    அவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
16 உமது வேலையாளை வரவேற்று ஏற்றுக்கொள்ளும்.
    என்னிடம் தயவாயிருந்து என்னைக் காப்பாற்றும்!

1 பேதுரு 4:1-8

மாற்றப்பட்ட வாழ்க்கை

கிறிஸ்து தம் சரீரத்தில் இருக்கும்போது துன்புற்றார். கிறிஸ்துவையொத்த சிந்தனையை மேற்கொண்டு நீங்கள் உங்களை பலப்படுத்திக்கொள்ள வேண்டும். சரீரத்தில் மரணமுறுகிற மனிதனோ பாவத்தினின்று நீங்குகிறான். தேவன் விரும்புகிறவற்றைச் செய்யும் மனிதர்கள் செய்ய விரும்புகிறவற்றை இனிமேலும் செய்யாமல் இருக்கவும் உங்கள் உலக வாழ்வின் மீதியான காலத்தை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள். பாலுறவுப் பாவங்களில் ஈடுபடுதல், தீயவிருப்பங்கள், குடிப்பழக்கம், மது அருந்தும் விருந்துகள், தடைசெய்யப்பட்ட உருவ வழிபாடு ஆகிய நம்பிக்கை அற்றோர் செய்ய விரும்புகிற காரியங்களைச் செய்வதில் ஏற்கெனவே உங்களின் பெரும்பாலான நேரத்தைச் செலவழித்துவிட்டீர்கள்.

இந்தக் குரூரமும் பாவமும் நிறைந்த வாழ்க்கை முறையில் நீங்கள் ஈடுபடாததை அந்த நம்பிக்கையற்றோர் விநோதமாகக் கருதுகிறார்கள். உங்களைக் குறித்து மோசமான முறையில் பேசுகிறார்கள். வாழ்கிறவர்களையும் இறந்துபோனவர்களையும் நியாயம் தீர்க்கத் தயாராய் இருக்கிற ஒருவருக்கு செய்த காரியங்களுக்கு அவர்கள் விளக்கமளிக்கவேண்டும். இக்காரணங்களுக்காக இப்போது இறந்துவிட்ட விசுவாசிகளுக்கும் நற்செய்தியானது போதிக்கப்பட்டது. இதன் மூலம் அவர்களின் உலக வாழ்க்கையின்போது மோசமான வகையில் மனிதர்களால் நியாயம் தீர்க்கப்பட்டாலும், ஆவியால் தேவன் முன்னிலையில் அவர்கள் வாழ்ந்தார்கள்.

தேவனுடைய வரங்கள்

எல்லாம் முடிகிற காலம் நெருங்குகிறது. எனவே உங்கள் மனங்களைத் தெளிவுடையதாக வைத்திருங்கள். நீங்கள் பிரார்த்தனை செய்ய அது உதவும். அன்பு எத்தனையோ பாவங்களை மூடி விடுவதால் ஒருவரையொருவர் ஆழமாக நேசியுங்கள். எல்லாவற்றிலும் மிக முக்கியமானது இதுவே ஆகும்.

மத்தேயு 27:57-66

இயேசு அடக்கம் செய்யப்படுதல்(A)

57 அன்று மாலை அரிமத்தியாவிலிருந்து இயேசுவின் சீஷனும், செல்வந்தனும், அரிமத்தியா ஊரானுமாகிய யோசேப்பு எருசலேமுக்கு வந்தான் 58 யோசேப்பு பிலாத்துவிடம் சென்று இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். பிலாத்து இயேசுவின் சரீரத்தை யோசேப்பிடம் கொடுக்குமாறு வீரர்களுக்குக் கட்டளையிட்டான். 59 பின்பு யோசேப்பு இயேசுவின் சரீரத்தைப் பெற்றுக்கொண்டு அதைப் புதிய மென்மையான துணியில் சுற்றினான். 60 இயேசுவின் சரீரத்தை ஒரு பாறையில் தோண்டிய புதிய கல்லறையில் யோசேப்பு அடக்கம் செய்தான். ஒரு பெரிய பாறாங்கல்லைக் கொண்டு கல்லறை வாயிலை மூடினான்.

இவற்றைச் செய்தபின் யோசேப்பு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான். 61 மகதலேனா மரியாளும், மரியாள் என்னும் பெயர் கொண்ட மற்றொரு பெண்ணும் கல்லறைக்கு அருகில் அமர்ந்திருந்தனர்.

இயேசுவின் கல்லறைக்கு காவல்

62 ஆயத்தநாளுக்கு [a] மறுநாள், தலைமை ஆசாரியர்களும் பரிசேயர்களும் பிலாத்துவிடம் சென்று, 63 ,“ஐயா, தான் உயிருடன் இருந்தபொழுது அப்பொய்யன், ‘நான் மூன்று நாட்களுக்குப் பின் மரணத்திலிருந்து உயிர்த்தெழுவேன்’ என்று கூறினான். 64 ஆகவே மூன்று நாட்களாகிறவரையிலும் கல்லறையை நன்கு காவல் காக்க உத்தரவிடுங்கள். அவனது சீஷர்கள் வந்து சரீரத்தை திருட முயற்சிக்கலாம். பின், மக்களிடம் சென்று அவன் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்துவிட்டதாகக் கூறக்கூடும். அவனைப் பற்றி அவர்கள் முன்னர் கூறிய பொய்களைக் காட்டிலும் இது அதிக மோசமானதாக இருக்கும்” என்றார்கள்.

65 அதற்கு பிலாத்து,, “சில போர் வீரர்களை அழைத்துச் சென்று உங்களால் முடிந்த அளவு கல்லறையைக் காவல் செய்யுங்கள்” என்று கூறினான். 66 ஆகவே அவர்கள் அனைவரும் சென்று சரீரத்தை யாரும் திருடாதவாறு பாதுகாத்தார்கள். கல்லறையை மூடிய கல்லுக்கு முத்திரை வைத்தும், போர் வீரர்களைக் காவலுக்கு வைத்தும் இதைச் செய்தார்கள்.

யோவான் 19:38-42

இயேசுவின் அடக்கம்(A)

38 பிறகு அரிமத்தியா ஊரானான யோசேப்பு எனப்படும் மனிதன் பிலாத்துவிடம் வந்து இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். (இவன் இயேசுவைப் பின்பற்றினவர்களில் ஒருவன். ஆனால் அவன் யூதர்களுக்குப் பயந்து இதைப்பற்றி இதுவரை மக்களிடம் சொல்லவில்லை). யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எடுத்துச்செல்ல, பிலாத்து அனுமதி தந்தான். ஆகையால் யோசேப்பு வந்து இயேசுவின் சரீரத்தை எடுத்துப் போனான்.

39 நிக்கோதேமு யோசேப்போடு சென்றான். இவன் ஏற்கெனவே ஒரு நாள் இரவு இயேசுவிடம் வந்து அவரோடு பேசியிருக்கிறான். அவன் 100 இராத்தல் [a] வாசனைமிக்க கரியபோளமும் வெள்ளைப் போளமும் கலந்து கொண்டுவந்தான். 40 அவர்கள் இருவரும் இயேசுவின் சரீரத்தை எடுத்துப்போனார்கள். அவர்கள் அந்த சரீரத்தை வாசனைத் திரவியங்களோடு கூட துணிகளினால் சுற்றினார்கள். (இதுதான் யூதர்கள் இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறை.) 41 இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டம் இருந்தது. அங்கு ஒரு கல்லறை இருந்தது. அதில் இதுவரை எந்த சரீரமும் வைக்கப்படவில்லை. 42 அந்தக் கல்லறையில் இயேசுவை வைத்தார்கள். அன்று யூதருடைய ஆயத்த நாளாக இருந்தது. அத்துடன் அந்த இடம் நகரத்தின் அருகில் இருந்தது.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center