Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Semicontinuous)

Daily Bible readings that follow the church liturgical year, with sequential stories told across multiple weeks.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
யாத்திராகமம் 12:1-4

பஸ்கா பண்டிகை

12 மோசேயும் ஆரோனும் இன்னும் எகிப்தில் இருக்கையில் கர்த்தர் அவர்களிடம் பேசினார்: “இம்மாதம் உங்கள் ஆண்டின் முதல் மாதமாக இருக்கும். இஸ்ரவேலின் எல்லா கோத்திரத்திற்கும் இந்தக் கட்டளை உரியது: இம்மாதத்தின் பத்தாவது நாள் ஒவ்வொரு மனிதனும் அவனது வீட்டினருக்காக ஒரு ஆட்டுக்குட்டியைக் கொண்டு வர வேண்டும். ஒரு ஆட்டுக்குட்டியை உண்பதற்கு வேண்டிய ஆட்கள் அவனது வீட்டில் இல்லாதிருந்தால், அவன் அக்கம் பக்கத்தாரில் சிலரை உணவைப் பகிர்ந்துகொள்வதற்கு அழைக்க வேண்டும். ஆட்டுக் குட்டி ஒவ்வொருவரும் உண்ணப் போதுமானதாக இருக்கவேண்டும்.

யாத்திராகமம் 12:5-10

அந்த ஆட்டுக் குட்டி ஒரு வயது நிரம்பிய கடாவாகவும், நோயற்றதாகவும் இருக்க வேண்டும். அது ஒரு செம்மறி ஆடு அல்லது வெள்ளாட்டின் குட்டியாக இருக்கலாம். மாதத்தின் பதினான்காவது நாள்வரை அம்மிருகத்தைக் கவனித்துக்கொள்ளவேண்டும். அந்நாளில், இஸ்ரவேல் கோத்திரத்தின் எல்லா ஜனங்களும் மாலைப்பொழுதில் அவற்றைக் கொல்ல வேண்டும். நீங்கள் அதன் இரத்தத்தைச் சேகரிக்க வேண்டும். இந்த இரத்தத்தை, அதன் இறைச்சியை உண்ணுகிறவர்கள் தங்கள் வீட்டு வாசலின் மேற்பகுதியிலும், பக்கவாட்டிலும் நிலைக்கால்களில் பூசவேண்டும்.

“இந்த இரவில், ஆட்டுக்குட்டியை நெருப்பில் வாட்டியெடுத்து மாமிசம் எல்லாவற்றையும் உண்ண வேண்டும். நீங்கள் கசப்பான கீரை வகைகளையும், புளிக்காத ரொட்டியையும் கூட சாப்பிட வேண்டும். ஆட்டுக்குட்டியை நீங்கள் தண்ணீரில் வேக வைக்கக்கூடாது. அந்த ஆட்டுக்குட்டி முழுவதையும் நெருப்பினால் சுடவேண்டும். அதன் தலை, கால்கள் மற்றும் உள் உறுப்புக்கள் எல்லாம் இருக்க வேண்டும். 10 அந்த இரவுக்குள் நீங்கள் மாமிசம் முழுவதையும் சாப்பிட்டு முடிக்கவேண்டும். காலையில் மாமிசம் மீதியாயிருந்தால் நெருப்பில் அந்த மாமிசத்தை சுட்டு எரிக்கவேண்டும்.

யாத்திராகமம் 12:11-14

11 “நீங்கள் உணவைச் சாப்பிடும்போது பயணத்திற்குத் தயாரான உடை அணிந்தவர்களாய் இருக்க வேண்டும். உங்கள் மிதியடிகளை அணிந்து, கைத்தடிகளை ஏந்தியவர்களாய் இருக்க வேண்டும். நீங்கள் அதை அவசரமாகச் சாப்பிட வேண்டும். ஏனென்றால், இது கர்த்தருடைய பஸ்கா பண்டிகை. கர்த்தர் தமது ஜனங்களைப் பாதுகாத்து, எகிப்திலிருந்து விரைவாக வெளியில் கொண்டுவரும் நேரம்.

12 “இன்றிரவில் நான் எகிப்தின் வழியாகச் சென்று ஒவ்வொரு முதற்பேறான மனிதனையும், மிருகத்தையும் கொன்றுபோடுவேன். இவ்வாறாக, எகிப்தின் தேவர்கள் அனைத்தின் மேலும் தீர்ப்பு கொண்டு வருவேன். நானே கர்த்தர் என்பதைக் காட்டுவேன். 13 ஆனால் உங்கள் வீடுகளில் பூசப்பட்ட இரத்தம் ஒரு விசேஷ அடையாளமாக இருக்கும். நான் இரத்தத்தைப் பார்த்ததும் உங்கள் வீட்டைக் கடந்து போவேன். எகிப்தின் ஜனங்களுக்குத் தீமையான காரியங்கள் ஏற்படுமாறு செய்வேன். அத்தீய நோய்கள் ஒன்றும் உங்களைப் பாதிக்காது.

14 “இந்த இரவை நீங்கள் எப்போதும் நினைவு கூருவீர்கள். இது உங்களுக்கு ஒரு விசேஷ விடுமுறை நாளாக இருக்கும். எப்போதும் இந்த விடுமுறை நாளில் உங்கள் சந்ததியார் கர்த்தரை மகிமைப்படுத்துவார்கள்.

சங்கீதம் 116:1-2

116 கர்த்தர் எனது ஜெபங்களைக் கேட்பதை
    நான் நேசிக்கிறேன்.
நான் உதவிக்காகக் கூப்பிடும்போது அவர் எனக்குச் செவிகொடுப்பதை
    நான் நேசிக்கிறேன்.

சங்கீதம் 116:12-19

12 நான் கர்த்தருக்கு எதைக் கொடுக்க முடியும்?
    என்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் கர்த்தரே கொடுத்தார்.
13 அவர் என்னைக் காப்பாற்றினார்.
    எனவே நான் அவருக்கு ஒரு பானங்களின் காணிக்கையை அளிப்பேன்.
    நான் கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிடுவேன்.
14 நான் வாக்குறுதி அளித்தவற்றை கர்த்தருக்குக் கொடுப்பேன்.
    இப்போது அவரது ஜனங்கள் எல்லோருக்கும் முன்பாக நான் போவேன்.
15 கர்த்தரைப் பின்பற்றுபவர்களில் ஒருவனின் மரணம் கர்த்தருக்கு மிக முக்கியமானது!
    கர்த்தாவே, நான் உமது ஊழியர்களில் ஒருவன்!
16 நான் உமது பணியாள்.
    உமது பணிப் பெண் ஒருத்தியின் பிள்ளைகளுள் ஒருவன் நான்.
    கர்த்தாவே, நீரே என்னுடைய முதல் போதகர்.
17 நான் உமக்கு ஒரு நன்றியறிதலின் காணிக்கையைக் கொடுப்பேன்.
    நான் கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிடுவேன்.
18 நான் வாக்குறுதி அளித்தவற்றை கர்த்தருக்குக் கொடுப்பேன்.
    நான் இப்போது அவரது எல்லா ஜனங்களுக்கும் முன்பாகப் போவேன்.
19 நான் எருசலேமின் ஆலயத்திற்குப் போவேன்.

கர்த்தரைத் துதிப்போம்!

1 கொரி 11:23-26

23 நான் உங்களுக்குச் சொன்ன போதனை உண்மையில் கர்த்தரால் எனக்குக் கொடுக்கப்பட்டது ஆகும். இயேசு கொலை செய்யப்படுவதற்காக ஒப்புவிக்கப்பட்ட இரவில் அவர் அப்பத்தை எடுத்து நன்றி கூறினார். 24 அந்த அப்பத்தைப் பகிர்ந்து அவர் “இதை புசியுங்கள். இது எனது சரீரமாகும். இது உங்களுக்குரியது. என்னை நினைவுகூருவதற்காக இதைச் செய்யுங்கள்” என்றார். 25 அவர்கள் அதைச் சாப்பிட்டபின், இயேசு திராட்சை இரசக் கோப்பையை எடுத்து பகிர்ந்தளித்தார். “தேவனிடமிருந்து அவரது மக்களுக்கு அளிக்கப்பட்ட புது உடன்படிக்கையை இந்த இரசக் கோப்பை காட்டுகிறது! எனது இரத்தத்தில் இந்த உடன்படிக்கை ஆரம்பமாகிறது. நீங்கள் இதைப் பருகும்போது, என்னை நினைப்பதற்காக அவ்வாறு செய்யுங்கள்” என்றார். 26 ஒவ்வொரு முறையும் அப்பத்தைச் சாப்பிடும்போதும் இந்த பானத்தைப் பருகும்போதும், கர்த்தர் வரும்வரையில் கர்த்தருடைய மரணத்தைப் பிறருக்கு அறிவிக்கிறீர்கள்.

யோவான் 13:1-17

சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்

13 இது ஏறக்குறைய பஸ்கா பண்டிகைக்கான நேரம். இதுதான் இந்த உலகத்தை விட்டுச் செல்வதற்கான நேரம் என்பதை இயேசு அறிந்திருந்தார். இயேசு, தன் பிதாவிடம் திரும்பிப் போவதற்கான காலம் இது. இயேசு அவருடைய மக்களின் மீது பெரிதான அன்பை எப்போதும் வைத்திருந்தார். இப்பொழுது, அவருக்கு அவர்களிடம் கொண்ட அன்பை வெளிப்படுத்தும் நேரமாயிற்று.

இயேசுவும் அவர் சீஷர்களும் மாலை உணவுக்காக அமர்ந்தனர். ஏற்கெனவே சாத்தான் யூதாஸ்காரியோத்தின் மனதில் புகுந்து அவனை இயேசுவுக்கு எதிராக ஆக்கியிருந்தான். (யூதாஸ் சீமோனின் மகன்) இயேசுவுக்கு அவரது பிதா எல்லாவிதமான அதிகாரத்தையும் கொடுத்திருந்தார். இயேசு இதனை அறிந்திருந்தார். தேவனிடமிருந்து தான் வந்ததாக இயேசு தெரிந்துவைத்திருந்தார். அதோடு அவர் தன் பிதாவிடமே திரும்பிப் போகவேண்டும் என்பதனை அறிந்திருந்தார். அவர்கள் உணவு உண்டுகொண்டிருக்கும்போது, இயேசு எழுந்து ஆடைகளைக் கழற்றி வைத்தார். ஒரு துண்டை எடுத்துத் தன் இடுப்பில் கட்டிக் கொண்டார். பிறகு இயேசு ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றினார். அவர் தம் சீஷர்களின் கால்களைக் கழுவிச் சுத்தப்படுத்த ஆரம்பித்தார். பின் தன் இடுப்புத் துண்டால் அவர்கள் கால்களைத் துடைத்தார்.

இயேசு, சீமோன் பேதுருவிடம் வந்தார். ஆனால் பேதுருவோ இயேசுவிடம், “ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவக்கூடாது” என்றான்.

அதற்கு இயேசு அவனிடம், “நான் என்ன செய்கிறேன் என்று இப்போது உனக்குத் தெரியாது. ஆனால் பிறகு நீ புரிந்துகொள்வாய்” என்றார்.

பேதுருவோ, “இல்லை நீர் என் கால்களைக் கழுவவேகூடாது” என்றான்.

இயேசுவோ, “நான் உன் கால்களைக் கழுவாவிட்டால், நீ என்னோடு பங்குள்ளவனாக இருக்க முடியாது” என்றார்.

உடனே பேதுரு, “ஆண்டவரே, அப்படியானால் என் கால்களோடு, என் கைகளையும் தலையையும்கூடக் கழுவுங்கள்” என்றான்.

10 “ஒரு மனிதன் குளித்தபிறகு அவனது சரீரம் எல்லாம் சுத்தமாகிவிடுகிறது. அதன் பிறகு அவன் கால்களை மட்டும் கழுவினால் போதும். நீங்கள் சுத்தமாக இருக்கிறீர்கள். ஆனால் அனைவரும் அல்ல” என்றார் இயேசு. 11 யார் தனக்கு எதிராக மாறியுள்ளவன் என்று இயேசுவுக்குத் தெரியும். அதனால்தான் இயேசு “நீங்கள் அனைவரும் சுத்தமாக இல்லை” என்று கூறினார்.

12 இயேசு அவர்களின் கால்களைச் சுத்தப்படுத்தி முடித்தார். பிறகு அவர் தன் ஆடைகளை அணிந்துகொண்டு சாப்பாடு மேசைக்குத் திரும்பினார். இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்குக்காகச் செய்தவற்றை நீங்கள் புரிந்துகொண்டீர்களா? 13 நீங்கள் என்னை ‘ஆண்டவரே’ என்று அழைக்கிறீர்கள், இதுதான் சரியானது, ஏனென்றால் உண்மையில் நான் ஆண்டவராகவே இருக்கிறேன். 14 நான் உங்கள் போதகராகவும் ஆண்டவராகவும் இருக்கிறேன். ஆனால் நான் ஒரு வேலைக்காரனைப்போன்று உங்கள் கால்களைக் கழுவினேன். ஆகையால் நீங்கள் ஒருவருக்கொருவர் உங்கள் கால்களைக் கழுவிக்கொள்ளுங்கள். 15 இதை நான் ஒரு முன்மாதிரியாகவே செய்தேன். நான் உங்களுக்குச் செய்ததுபோலவே நீங்களும் ஒருவருக்கொருவர் செய்துகொள்ளுங்கள். 16 நான் உங்களுக்கு உண்மையாகவே கூறுகிறேன். ஒரு வேலைக்காரன் தன் எஜமானனைவிடப் பெரியவன் அல்ல. ஒருவன் என்னதான் பெரிய காரியங்களைச் செய்தாலும் அனுப்பப்பட்டவன் அனுப்பியவரைவிட பெரியவனல்ல. 17 நீங்கள் இவற்றை அறிந்துகொண்டால், அவற்றைச் செய்யும்போது மகிழ்ச்சியடைவீர்கள்.

யோவான் 13:31-35

தம் மரணத்தைப்பற்றி முன்னறிவிப்பு

31 யூதாஸ் போனபிறகு இயேசு, “இப்பொழுது மனித குமாரன் தன் மகிமையை அடைகிறார். தேவன் தன் குமாரன் மூலமாக மகிமையைப் பெறுகிறார். 32 அவர் மூலம் தேவன் மகிமையை அடைந்தால், பிறகு தேவன் தன் மகனுக்கு அவர் மூலமாகவே மகிமை அளிப்பார். தேவன் விரைவில் அவருக்கு மகிமை தருவார்.

33 “எனது பிள்ளைகளே, நான் இன்னும் கொஞ்சக் காலம் மட்டும்தான் உங்களோடு இருப்பேன். என்னை நீங்கள் தேடுவீர்கள். நான் யூதர்களுக்கு சொன்னவற்றையே இப்பொழுது உங்களுக்கும் சொல்கிறேன். நான் போகிற இடத்துக்கு நீங்கள் வரமுடியாது.

34 “நான் உங்களுக்கு ஒரு புதிய கட்டளையைத் தருகிறேன். நீங்கள் ஒருவரை ஒருவர் நேசியுங்கள். நான் உங்களை நேசித்ததுபோன்று நீங்களும் ஒருவரை ஒருவர் நேசியுங்கள். 35 நீங்கள் ஒருவரை ஒருவர் நேசித்தால் அனைத்து மக்களும் உங்களை என் சீஷர்களென அறிந்துகொள்வர்” என்றார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center