Revised Common Lectionary (Semicontinuous)
93 கர்த்தர் அரசர்.
அவர் மகத்துவத்தையும் வல்லமையையும் ஆடையைப்போல் அணிந்திருக்கிறார்.
அவர் ஆயத்தமாயிருப்பதால் உலகம் பாதுகாப்பாய் உள்ளது,
அது அசைக்கப்படுவதில்லை.
2 தேவனே, உமது அரசு என்றென்றும் தொடருகிறது.
தேவனே, நீர் என்றென்றைக்கும் வாழ்கிறீர்!
3 கர்த்தாவே, ஆறுகளின் ஒலி மிகுந்த இரைச்சலுடையது.
மோதும் அலைகள் இரைச்சலெழுப்புகின்றன.
4 கடலின் மோதும் அலைகள் ஒலிமிகுந்து வல்லமை மிகுந்தவையாக உள்ளன.
ஆனால் மேலேயுள்ள கர்த்தர் இன்னும் மிகுந்த வல்லமையுள்ளவர்.
5 கர்த்தாவே, உமது சட்டங்கள் என்றென்றும் தொடரும்.
உமது பரிசுத்த ஆலயம் வெகு காலம் நிலைநிற்கும்.
கர்த்தரை நினை
11 “உங்கள் தேவனாகிய கர்த்தர் மீது
நீங்கள் அன்பு கொள்ளவேண்டும். நீங்கள் பின்பற்றுவதற்காக தேவன் உங்களுக்குக் கூறியவற்றையெல்லாம் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். எப்போதும் நீங்கள் அவரது சட்டங்களுக்கும், நியாயங்களுக்கும், கட்டளைகளுக்கும் கீழ்ப்படிய வேண்டும். 2 உங்களுக்குப் போதிக்கும்படி உங்கள் தேவனாகிய கர்த்தர் செய்த பெருஞ் செயல்களை நினைத்துப் பாருங்கள். அந்த மகா காரியங்களைக் கண்டு, அவற்றைக் கடந்து வந்தவர்கள் நீங்களே, உங்கள் குழந்தைகளல்ல. உங்களுக்குத்தான் தெரியும், கர்த்தருடைய மகத்துவத்தைப் பார்த்தவர்கள் நீங்கள், கர்த்தருடைய வலிமையைக் கண்ணாரப் பார்த்துள்ளீர்கள். கர்த்தருடைய ஆற்றல் நிறைந்த செயல்களைப் பார்த்தவர்கள் நீங்கள். 3 கர்த்தருடைய அற்புதங்களைப் பார்த்தவர்கள் நீங்கள் தான், உங்கள் பிள்ளைகள் அல்ல. எகிப்தின் இராஜாவாகிய பார்வோனுக்கும் அவனது நாடு முழுவதிற்கும் கர்த்தர் செய்த அடையாளங்களையும், செயல்களையும் நீங்கள் பார்த்துள்ளீர்கள். 4 எகிப்தின் படையும், அவர்களது குதிரைகளும், இரதங்களும் போரில் உங்களைத் தொடர்ந்து வரும்போது, கர்த்தர் அவர்களைச் செங்கடலின் தண்ணீரில் மூடியதை உங்கள் பிள்ளைகள் அல்ல, நீங்கள்தான் பார்த்தீர்கள். அவர்களை முழுவதுமாக அழித்ததை நீங்கள் பார்த்தீர்கள். 5 உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் இன்று இவ்விடத்திற்கு வரும் வரைக்கும், அன்றும் பாலைவனத்தில் உங்களுக்காகச் செய்த எல்லாவற்றையும் பார்த்தவர்கள் நீங்கள்தான். உங்கள் பிள்ளைகள் அல்ல. 6 ரூபன் குடும்பத்தைச் சார்ந்த எலியாப் என்பவனின் மகன்களான தாத்தான், அபிராம் இருவருக்கும் கர்த்தர் என்ன செய்தார் என்பது உங்களுக்குத் தெரியும். பூமி தன் வாயைத் திறந்து அவர்களை விழுங்கியதை இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் பார்த்தார்கள், அவ்விருவரின் குடும்பங்களையும், கூடாரங்களையும் அவர்களது விலங்குகள், வேலையாட்கள் எல்லாவற்றையும் பூமி விழுங்கியது. 7 கர்த்தர் செய்த இந்தப் பெரிய செயல்களை எல்லாம் உங்களுடைய பிள்ளைகளல்ல, நீங்களே கண்டீர்கள்.
8 “ஆகவே நான் இன்று உங்களுக்குச் சொல்லும் ஒவ்வொரு கட்டளைக்கும் நீங்கள் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும். பின் நீங்கள் பலம் வாய்ந்தவர்களாக ஆவீர்கள். அதனால், யோர்தான் ஆற்றினைக் கடந்து, நீங்கள் நுழையத் தயாராகவுள்ள இந்த தேசத்தை சொந்தமாக்கிக்கொள்வீர்கள். 9 பின் நீங்கள் அந்தத் தேசத்தில் நீண்ட வாழ்க்கை வாழலாம். இந்த தேசத்தை உங்கள் முற்பிதாக்களுக்கும் அவர்களது சந்ததியினருக்கும் கொடுப்பதாக கர்த்தர் வாக்களித்துள்ளார். இந்த தேசம் பாலும் தேனும் ஓடக் கூடிய செழிப்பும், எல்லா வளங்களும் நிறைந்த நாடாகவும் இருக்கும். 10 நீங்கள் சுதந்திரமாக வசிக்கப்போகும் இந்த தேசம் நீங்கள் விட்டு வந்த எகிப்து நாட்டைப் போல் இருக்காது. எகிப்தில் நீங்கள் விதை விதைத்தீர்கள். தண்ணீர்ப் பாய்ச்சும்படி உங்கள் கால்களால் மிதித்து, வாய்க்காலில் இருந்து உங்கள் தோட்டங்களுக்கு நீங்கள் தண்ணீர்ப் பாய்ச்சினதுபோல உங்கள் வயல்களுக்கும் தண்ணீர் இறைத்து வந்தீர்கள். 11 ஆனால், இப்போது வசிக்கப்போகின்ற இந்த நிலம் அப்படிப்பட்டது அல்ல. இஸ்ரவேலில் மலைகளும், பள்ளத்தாக்குகளும் உள்ளன. அந்த நிலம் வானத்தின் மழைத் தண்ணீரைக் குடிக்கும் தேசம். 12 உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் வசிக்கப்போகும் நிலத்தைக் காத்து வருகிறார். வருடத்தின் துவக்கம் முதல் முடிவு வரை ஆண்டு முழுவதும் உங்கள் தேவனாகிய கர்த்தர் கவனித்து வருகிறார்.
13 “கர்த்தர், ‘நான் இன்று உங்களுக்குத் தரும் கட்டளைகளைக் கவனமாகக் கேளுங்கள். நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தர் மீது அன்பு செலுத்தி, அவருக்கு அடி பணிந்து, முழு மனதோடு ஆத்ம திருப்தியுடன் சேவை செய்யவேண்டும். நீங்கள் அப்படிச் செய்தீர்களென்றால், 14 உங்கள் நிலத்திற்குத் தேவையான மழையை ஏற்ற பருவத்தில் பெய்யச் செய்வேன். நீங்கள் உங்கள் தானியங்களைச் சேர்க்கவும், எண்ணெய் வித்துக்களைப் பெருக்கவும், புதிய திராட்சைரசத்தைப் பெறவும், அதற்கான காலத்தில் உங்கள் தேசத்தில் இலையுதிர் காலத்தில் முன்மாரியையும் வசந்த காலத்தில் பின்மாரியையும் நான் அனுப்புவேன். 15 உங்கள் கால் நடைகளுக்குத் தேவையான புல்வெளிகளை செழிப்படையச் செய்வேன். உங்களுக்கு உண்ணும்படி எராளமான ஆகாரம் இருக்கும்’ என்று கூறுகிறார்.
16 “ஆனால் நீங்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்! உங்கள் இருதயம் சந்தேகப்பட்டு விலகாதபடி இருங்கள். உங்களின் வழியிலிருந்து விலகி அந்நிய தெய்வங்களைத் தொழுதுகொண்டு சேவை செய்யாதீர்கள். 17 அப்படிச் செய்தீர்களானால், பின் கர்த்தர் உங்கள் மீது கடுங்கோபம் கொள்வார். மழை பெய்யாது, உங்கள் நிலம் எவ்வித விளைச்சலையும் தராதபடி வானத்தை அடைத்துவிடுவார். அதனால் கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கின்ற இந்த நல்ல தேசத்திலேயே நீங்கள் விரைவில் மரித்து போவீர்கள்.
13 தேவனுக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் முன்பாக நான் ஒரு ஆணையை இடுகிறேன். பொந்தியு பிலாத்துவின் முன்னால் நிற்கும்போது அவர் பேருண்மைக்கு சாட்சியம் வழங்கினவர். கிறிஸ்து இயேசு ஒருவரே எல்லாவற்றிற்கும் வாழ்வளிக்கிறார். 14 அதனால் இப்பொழுது உனக்குக் கூறுகிறேன், உனக்கு ஆணையிட்டுள்ளபடி செய். நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து திரும்பி வரும்வரை குற்றம் இல்லாமலும் பிழை இல்லாமலும் சரியாகச் செய். 15 தேவன் அதனைச் சரியான நேரத்தில் நிகழும்படி செய்வார். தேவன் ஆசீர்வதிக்கப்பட்டவராகவும், ஏக சக்கரவர்த்தியாகவும் இருக்கிறார். அவரே அரசர்களுக்கெல்லாம் அரசராகவும், கர்த்தர்களுக்கெல்லாம் கர்த்தராகவும் விளங்குகிறார். 16 அவர் ஒருவரே என்றும் மரிப்பதில்லை. அவர் யாராலும் அருகில் நெருங்கி வரமுடியாத ஒளியில் வாழ்கிறார். எந்த மனிதனும் அவரை ஒரு போதும் பார்த்ததில்லை. யாராலும் அவரைப் பார்க்கமுடியாது. என்றென்றைக்கும் அவருக்குக் கனமும் வல்லமையும் உண்டாகுவதாக ஆமென்.
2008 by World Bible Translation Center