Revised Common Lectionary (Semicontinuous)
பேத்
9 ஒரு இளைஞன் எவ்வாறு பரிசுத்த வாழ்க்கை வாழமுடியும்?
உமது வழிகாட்டுதலின்படி நடப்பதால் மட்டுமே.
10 நான் என் முழு இருதயத்தோடும் தேவனுக்கு சேவைசெய்ய முயல்வேன்.
தேவனே, உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய எனக்கு உதவும்.
11 நான் மிகவும் கவனமாக உமது போதனைகளைக் கற்றுக்கொள்ளுகிறேன்.
ஏனெனில் அப்போது நான் உமக்கெதிராகப் பாவம் செய்யமாட்டேன்.
12 ஆண்டவரே நீர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர்.
உமது சட்டங்களை எனக்குப் போதியும்.
13 உமது ஞானமான முடிவுகளைப்பற்றி நான் பேசுவேன்.
14 வேறெதைக் காட்டிலும் உமது உடன்படிக்கையைக்
கற்பதில் களிப்படைவேன்.
15 நான் உமது சட்ட விதிகளை கலந்து ஆலோசிப்பேன்.
உமது வாழ்க்கை முறைகளைப் பின்பற்றுவேன்.
16 நான் உமது சட்டங்களில் களிப்படைகிறேன்.
உமது வார்த்தைகளை நான் மறக்கமாட்டேன்.
கர்த்தரே ஒரே தேவன்
44 “யாக்கோபே, நீ எனது தாசன், என்னைக் கவனி! இஸ்ரவேலே, நான் உன்னைத் தேர்ந் தெடுக்கிறேன். நான் சொல்வதைக் கேள். 2 நானே கர்த்தர். நான் உன்னைப் படைத்தேன். நீ எப்படி இருக்க வேண்டுமென்று உன்னைப் படைத்தவர் நான் ஒருவரே. நீ உன் தாயின் வயிற்றில் இருக்கும்போதே, நான் உனக்கு உதவியிருக்கிறேன். எனது தாசனாகிய யாக்கோபே, அஞ்சாதே! யெஷூரனே, நான் உன்னைத் தேர்ந்தெடுக்கிறேன்.
3 “தாகமுள்ள ஜனங்களுக்கு நான் தண்ணீர் ஊற்றுவேன். வறண்ட நிலங்களில் நீரூற்றுகளைப் பாயச்செய்வேன். உனது பிள்ளைகள்மீது எனது ஆவியையும் உனது சந்ததியார்மீது எனது ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன். இது உங்கள் குடும்பத்தின்மீது பாய்கிற நீரோடை போன்றிருக்கும். 4 உலகிலுள்ள ஜனங்கள் மத்தியில் அவர்கள் வளருவார்கள். தண்ணீர் கரையில் வளருகின்ற மரங்களைப்போல அவர்கள் வளருவார்கள்.
5 “ஒருவன் சொல்வான், ‘நான் கர்த்தருக்கு உரியவன்’ இன்னொருவன் ‘யாக்கோபின்’ பெயரைப் பயன்படுத்துவான். இன்னொருவன் ‘நான் கர்த்தருடையவன்’ என்று கையெழுத்து இடுவான். இன்னொருவன் ‘இஸ்ரவேல்’” என்ற பெயரைப் பயன்படுத்துவான்.
6 கர்த்தர் இஸ்ரவேலின் அரசர். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இஸ்ரவேலைக் காப்பாற்றுகிறார். கர்த்தர் கூறுகிறார், “நான் ஒருவரே தேவன்! வேறு எந்தத் தெய்வமும் இல்லை. நானே தொடக்கமும் முடிவுமாக இருக்கிறேன்! 7 என்னைப்போன்ற தேவன் வேறு யாருமில்லை. அவ்வாறு இருந்தால், அந்த தெய்வம் இப்போது பேசட்டும். அந்த தெய்வம் வந்து என்னைப்போன்றவன் என்று நிரூபிக்கட்டும். இந்த ஜனங்களை நான் என்றென்றும் நிலைத்திருக்கும்படி செய்தேனே. இதுவரை என்ன நடந்தது என்று அந்த தெய்வம் எனக்குச் சொல்லட்டும். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை அவன் அறிந்திருந்தால் அந்த தெய்வம் எனக்கு அடையாளம் காட்டட்டும். 8 அஞ்சாதே! கவலைப்படாதே! என்ன நடக்கபோகிறது என்பதை ஏற்கெனவே நான் கூறியிருக்கிறேன். நீங்களே எனது சாட்சிகள். வேறு தேவன் இல்லை. நான் ஒருவரே அந்த ஒருவர். வேறு ஒரு கன்மலை இல்லை. நானே அந்த ஒருவர் என்பதை நான் அறிவேன்”.
பேதுரு மக்களிடம் பேசுதல்
14 அப்பொழுது பேதுரு மற்ற அப்போஸ்தலர் பதினொருவரோடும் எழுந்து நின்றான். எல்லா மக்களும் கேட்கும்படியாக உரக்கப் பேசினான். அவன், “எனது யூத சகோதரர்களே, எருசலேமில் வசிக்கும் மக்களே, நான் கூறுவதைக் கவனியுங்கள். நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில கருத்துக்களை உங்களுக்குக் கூறுவேன். கவனமாகக் கேளுங்கள். 15 நீங்கள் நினைக்கிறது போல் இம்மனிதர்கள் மது பருகியிருக்கவில்லை. இப்போது காலை ஒன்பது மணிதான். 16 இங்கு இன்றைக்கு நிகழ்ந்துகொண்டிருப்பதைக் குறித்து யோவேல் என்னும் தீர்க்கதரிசி எழுதியிருக்கிறார். யோவேல் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்:
17 “‘தேவன் கூறுகிறார், கடைசி நாட்களில் நான் எனது ஆவியை எல்லா மக்களுக்கும் அள்ளி வழங்குவேன்.
ஆண் மக்களும், பெண்மக்களும் தீர்க்கதரிசனம் உரைப்பர்.
உங்கள் இளைஞர் தரிசனம் காண்பார்கள்.
உங்கள் முதியோர் விசேஷக் கனவுகள் காண்பர்.
18 அந்நேரத்தில் எனது ஆவியை எனது ஊழியர்களாகிய ஆண்களுக்கும் பெண்களுக்கும் கொடுப்பேன்.
அவர்கள் தீர்க்கதரிசனம் உரைப்பர்.
19 மேலே வானில் வியப்புறும் காட்சிகளைக் காண்பிப்பேன்.
கீழே பூமியிலும் சான்றுகள் தருவேன்.
அங்கு இரத்தம், நெருப்பும், புகை மண்டலமும் இருக்கும்.
20 சூரியன் இருளாக மாறும்.
நிலா இரத்தம் போல் சிவப்பாகும்.
அப்போது கர்த்தருடைய மகத்தான மகிமை மிக்க நாள் வரும்.
21 கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கும் ஒவ்வொரு மனிதனும் இரட்சிக்கப்படுவான்.’ (A)
22 “எனது யூத சகோதரர்களே, இந்த வார்த்தைகளைக் கவனியுங்கள். நாசரேத்தின் இயேசு மிகச் சிறப்பான மனிதர். தேவன் இதைத் தெளிவாக உங்களுக்குக் காட்டினார். இயேசுவின் மூலமாக அவர் செய்த வல்லமை மிக்க வியப்பான காரியங்களால் தேவன் இதை நிரூபித்தார். நீங்கள் எல்லோரும் இந்தக் காரியங்களைப் பார்த்தீர்கள். எனவே இது உண்மையென்பது உங்களுக்குத் தெரியும். 23 இயேசு உங்களுக்குக் கொடுக்கப்பட்டார். நீங்கள் அவரைக் கொன்றீர்கள். தீயவர்களின் உதவியோடு இயேசுவைச் சிலுவையில் அறைந்தீர்கள். ஆனால் இவையெல்லாம் நடக்குமென்பதை தேவன் அறிந்திருந்தார். இது தேவனுடைய திட்டமாக இருந்தது. வெகுகாலத்திற்கு முன்னரே தேவன் இந்தத் திட்டத்தை வகுத்திருந்தார். 24 மரணத்தின் வேதனையை இயேசு அனுபவித்தார். ஆனால் தேவன் அவரை விடுவித்தார். தேவன் இயேசுவை மரணத்திலிருந்து எழுப்பினார். மரணம் இயேசுவைத் தொடர்ந்து தன் பிடிக்குள் வைத்திருக்க முடியவில்லை.
2008 by World Bible Translation Center