Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Semicontinuous)

Daily Bible readings that follow the church liturgical year, with sequential stories told across multiple weeks.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 108

தாவீதின் துதிப் பாடல்களுள் ஒன்று.

108 தேவனே, நான் ஆயத்தமாக இருக்கிறேன்.
    எனது இருதயமும் ஆத்துமாவும் துதிப் பாடல்களைப் பாடவும் இசைக்கவும் தயாராக இருக்கிறது.
    சுரமண்டலங்களே, வீணைகளே, நாம் சூரியனை எழச் செய்வோம்.
கர்த்தாவே, நாங்கள் உம்மை எல்லா தேசங்களிலும் துதிப்போம்.
    பிற ஜனங்கள் மத்தியில் நாங்கள் உம்மைத் துதிப்போம்.
கர்த்தாவே, உமது அன்பு வானங்களைக் காட்டிலும் உயர்ந்தது.
    உமது சத்தியம் உயரமான மேகங்களைக் காட்டிலும் உயர்ந்தது.
தேவனே, விண்ணிற்கு மேல் எழும்பும்!
    உலகமெல்லாம் உமது மகிமையைக் காணட்டும்.
தேவனே, உமக்கு வேண்டியவர்களைக் காப்பாற்ற இதைச் செய்யும்.
    எனது ஜெபத்திற்குப் பதில் தாரும், உமது மிகுந்த வல்லமையை மீட்பதற்குப் பயன்படுத்தும்.

தேவன் அவரது ஆலயத்திலிருந்து பேசி,
    “நான் போரில் வென்று அவ்வெற்றியைக் குறித்து மகிழ்ச்சியடைவேன்!
என் ஜனங்களுக்கு இத்தேசத்தைப் பங்கிடுவேன்.
    அவர்களுக்குச் சீகேமைக் கொடுப்பேன்.
    அவர்களுக்குச் சுக்கோத் பள்ளத்தாக்கைக் கொடுப்பேன்
கீலேயாத்தும் மனாசேயும் எனக்குரியனவாகும்.
    எப்பிராயீம் என் தலைக்குப் பெலனான அணியாகும்.
    யூதா என் நியாயம் அறிவிக்கும் கோல்
மோவாப் என் பாதங்களைக் கழுவும் பாத்திரம்.
    ஏதோம் என் மிதியடிகளைச் சுமக்கும் அடிமை.
    நான் பெலிஸ்தியரைத் தோற்கடித்து வெற்றி ஆரவாரம் செய்வேன்.”

10-11 யார் என்னைப் பகைவனின் கோட்டைக்குள் வழி நடத்துவான்?
    யார் என்னை ஏதோமோடு போராட அழைத்துச் செல்வான்?
தேவனே, இக்காரியங்களைச் செய்ய நீரே உதவ முடியும்.
    ஆனால் நீர் எங்களை விட்டுவிலகினீர்.
    நீர் எங்கள் சேனைகளோடு செல்லவில்லை!
12 தேவனே, நாங்கள் பகைவர்களைத் தோற்கடிப்பதற்குத் தயவாய் உதவும்!
    ஜனங்கள் எங்களுக்கு உதவமுடியாது!
13 தேவன் மட்டுமே எங்களை வலிமையுடையவர்களாக்க முடியும்.
    தேவன் எங்கள் பகைவர்களைத் தோற்கடிப்பார்.

1 சாமுவேல் 8

இஸ்ரவேலர் ஒரு ராஜா வேண்டும் என்று கேட்கிறார்கள்

சாமுவேல் முதுமையடைந்ததும், அவன் தன் ஜனங்களை நியாயம் விசாரிக்க ஏற்பாடு செய்தான். அவனது மூத்த குமாரனின் பெயர் யோவேல், இளையவனுக்குப் பெயர் அபியா, அவர்கள் பெயெர்செபாவில் நீதிபதிகளாக இருந்தனர். ஆனால் சாமுவேல் வாழ்ந்த விதத்தில் அவனது குமாரர்கள் வாழவில்லை. அவர்கள் இரகசியமாகப் பணம் பெற்றுக்கொண்டு நீதிமன்றங்களில் தீர்ப்பை மாற்றினார்கள். அவர்கள் ஜனங்களை நீதிமன்றத்திலே ஏமாற்றினார்கள். எனவே இஸ்ரவேலின் மூப்பர்கள் கூடி, ராமாவிலே சாமுவேலை சந்திக்கும்படி சென்றனர். மூப்பர்கள் சாமுவேலிடம், “உங்களுக்கு வயதாகிவிட்டது. உங்கள் குமாரர்கள் சத்தியத்தின் வழியில் வாழவில்லை அவர்கள் உங்களைப் போல் இல்லை. இப்போது, மற்ற நாடுகளைப் போன்று எங்களை ஆள்வதற்கு ஒரு ராஜாவைத் தாருங்கள்” என்று கேட்டனர்.

எனவே மூப்பர்கள் தங்களை வழி நடத்த ஒரு ராஜாவை வேண்டினார்கள். சாமுவேல் இதனை ஒரு கெட்ட திட்டம் என எண்ணினான். எனவே சாமுவேல் கர்த்தரிடம் ஜெபித்தான். கர்த்தர் சாமுவேலிடம், “ஜனங்கள் சொன்னதைப்போல் செய்யவும், அவர்கள் உன்னைத் தள்ளவில்லை. என்னைத் தள்ளியுள்ளார்கள்! என்னை அவர்களுடைய ராஜாவாக ஏற்றுக்கொள்ள விருப்பமில்லை! அவர்கள் எப்போதும் செய்தது போலவே தொடர்ந்து செய்கிறார்கள். நான் எகிப்திலிருந்து அவர்களை வெளியே கொண்டுவந்தேன். ஆனால் என்னை விட்டுவிட்டு மற்ற தெய்வங்களுக்குச் சேவை செய்தனர். அவர்கள் அதையே உனக்கும் செய்வார்கள். எனவே அவர்கள் சொன்னதைக் கவனித்து அவர்கள் சொல்வதுபோல் செய்யவும். ஆனால் அவர்களை எச்சரிக்கவும். ஒரு ராஜா அவர்களுக்கு என்ன செய்வான் என்பதையும் கூறு! ஒரு ராஜா எவ்வாறு ஆள்வான் என்பதையும் கூறு” என்றார்.

10 அவர்கள் சாமுவேலிடம் ஒரு ராஜா வேண்டுமெனக் கேட்டிருந்தனர். எனவே சாமுவேல் கர்த்தர் சொன்னவற்றை அவர்களிடம் சொன்னான். 11 அவன் சொன்னது. “உங்களை ஆள்வதற்கு ஒரு ராஜா வந்தால், அவன் செய்வது இதுதான்: அவன் உங்களின் குமாரர்களை எடுத்துக்கொள்வான். அவர்களைத் தனக்கு சேவை செய்யுமாறு பலவந்தப்படுத்துவான். அவர்களை வீரர்கள் ஆகுமாறு கட்டாயப்படுத்துவான். அவர்கள் அவனது தேரிலிருந்து சண்டையிட வேண்டும். அவனது படையில் குதிரை வீரர்களாக வேண்டும். அவர்கள் காவல்காரர்களாகி ராஜாவின் இரதத்துக்கு முன்னால் செல்லவேண்டும்.

12 “ராஜா உங்கள் பிள்ளைகளை வீரர்களாகுமாறு வற்புறுத்துவான். சிலர் 1,000 பேருக்கான அதிகாரிகளாகவும், இன்னும் சிலர் 50 பேருக்கான அதிகாரிகளாகவும் ஆவார்கள்.

“ராஜா உங்கள் பிள்ளைகளைக் கட்டாயப்படுத்தி தம் வயல்களை உழவும், அறுவடை செய்யவும் ஈடுபடுத்துவான். அவன் உங்கள் பிள்ளைகளைக் கட்டாயப்படுத்தி போருக்கான ஆயுதங்களைச் செய்யச் சொல்வான்! அவர்களது தேருக்கான பொருட்களைச் செய்யுமாறு பலவந்தப்படுத்துவான்!

13 “ராஜா உங்கள் பெண் பிள்ளைகளை எடுத்துக்கொள்வான். தனக்கான வாசனைப் பொருட்களைச் செய்யச் சொல்வான். அவர்களில் சிலரை அவனுக்காக சமைக்கவும், பலகாரம் சுடவும் பலவந்தப்படுத்துவான்.

14 “ராஜா உங்கள் செழிப்பான வயல்களையும், திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவ மரங்களையும் எடுத்துக் கொள்வான். தன் அதிகாரிகளுக்கு அவற்றைக் கொடுப்பான். 15 உங்கள் தானியங்களிலும் திராட்சையிலும் பத்தில் ஒரு பாகத்தை எடுத்துக் கொள்வான். அவற்றைத் தன் அதிகாரிகளுக்குக் கொடுப்பான்.

16 “ராஜா உங்களிலிருந்து வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும், தேர்ந்த வாலிபர்களையும் எடுத்துக் கொள்வான். அவன் உங்கள் கழுதைகளையும் எடுத்து தன் சொந்த உபயோகத்துக்கு வைத்துக்கொள்வான். 17 உங்கள் மந்தையில் பத்தில் ஒரு பாகத்தையும் எடுத்துக்கொள்வான்.

“நீங்களோ ராஜாக்களுக்கு அடிமையாவீர்கள், 18 காலம் வரும்போது நீங்கள் தேர்ந்தெடுத்த ராஜாவால் கதறி அழுவீர்கள். அப்போது கர்த்தர் உங்களுக்குப் பதில் சொல்லமாட்டார்” என்றான்.

19 ஆனால் ஜனங்கள் சாமுவேலுக்கு செவி கொடுக்கவில்லை. அவர்கள், “இல்லை! எங்களை ஆள ஒரு ராஜா வேண்டுமென விரும்புகிறோம். 20 அப்போது நாங்கள் மற்ற நாடுகளைப் போன்று இருப்போம், ராஜா எங்களை வழிநடத்துவான். எங்களோடு வந்து எங்களுக்காகப் போர் செய்வான்” என்றனர்.

21 சாமுவேல் ஜனங்கள் சொன்னதைக் கேட்டு கர்த்தரிடம் அவர்கள் வார்த்தைகளைத் திருப்பிச் சொன்னான். 22 கர்த்தரோ, “அவர்கள் சொல்வதைக் கேள்! ஒரு ராஜாவை ஏற்படுத்து” என்றார்.

பிறகு சாமுவேல் இஸ்ரவேல் ஜனங்களிடம், “நல்லது! நீங்கள் புதிய ராஜாவை அடைவீர்கள். இப்போது, நீங்கள் அனைவரும் வீட்டுக்குத் திரும்பிச் செல்லுங்கள்” என்றான்.

வெளி 20:7-15

சாத்தான் முறியடிக்கப்படுதல்

ஆயிரம் ஆண்டுக் காலம் முடிந்த பிறகு, சிறையிலிருந்து சாத்தான் விடுதலை செய்யப்படுவான். உலகின் அனைத்து பாகங்களிலும் உள்ள தேசங்களில் இருக்கிற கோகையும் மகோகையும் வஞ்சிக்கச் செல்வான். போர் செய்வதற்காக மக்களை ஒன்று திரட்டுவான். ஏராளமான மக்கள் கடற்கரையில் உள்ள மணலைப் போன்று எண்ணிக்கையில் கூடுவர்.

சாத்தானின் படை எங்கும் பரந்தது. பூமியெங்கும் பரந்து தேவனுடைய மக்களுடைய முகாமையும் தேவன் நேசிக்கிற நகரையும் வளைந்துகொண்டது. ஆனால் பரலோகத்தில் இருந்து நெருப்பு கீழே வந்து சாத்தானின் படையை அழித்துவிட்டது. 10 மக்களைத் தந்திரத்தால் ஏமாற்றி வந்த சாத்தான், கந்தகம் எரியும் நெருப்புக் கடலுக்குள் வீசப்பட்டான். அவனோடு, அந்த மிருகமும், போலித் தீர்க்கதரிசியும் வீசப்பட்டனர். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வதைக்கப்படுவார்கள்.

வெள்ளை சிம்மாசனம்

11 பிறகு, ஒரு பெரிய வெள்ளை சிம்மாசனத்தையும் அதன் மேல் வீற்றிருக்கிறவரையும் நான் கண்டேன். அவர் பார்வையிலிருந்து வானமும், பூமியும் விலகி மறைந்தன. 12 மேலும் இறந்துபோன பெரியவர்களும், சிறியவர்களும் சிம்மாசனத்தின் முன்னே நிற்பதைக் கண்டேன். ஜீவப்புத்தகம் திறக்கப்பட்டது. வேறு சில புத்தகங்களும் திறக்கப்பட்டன. இறந்து போனவர்கள் அவர்களது செயல்களால் நியாயம் தீர்க்கப்பட்டனர். இவை எல்லாம் அந்தப் புத்தகங்களில் எழுதப்பட்டிருக்கின்றன.

13 கடல் தன்னுள் இறந்து போனவர்களை ஒப்படைத்தது. மரணமும், பாதாளமும் தங்களிடமிருந்த இறந்தவர்களை ஒப்படைத்தன. ஒவ்வொரு மனிதனும் தான் செய்த நற்செயல்களைப் பொறுத்து நியாயம் தீர்க்கப்பட்டான். 14 அப்போது மரணமும் பாதாளமும் நெருப்புக் கடலில் தள்ளப்பட்டன. இந்த நெருப்புக் கடலே இரண்டாம் மரணமாகும். 15 ஜீவப் புத்தகத்தில் எழுதப்பட்டவனாகக் காணப்படாதவன் எவனோ, அவன் நெருப்புக் கடலிலே தள்ளப்பட்டான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center