Revised Common Lectionary (Semicontinuous)
தாவீதின் பாடல்களில் ஒன்று. அவன் குகையிலிருந்தபோது செய்த ஜெபம்.
142 நான் கர்த்தரை உதவிக்காகக் கூப்பிடுவேன்.
நான் கர்த்தரிடம் ஜெபம் செய்வேன்.
2 நான் கர்த்தரிடம் என் சிக்கல்களைச் சொல்வேன்.
நான் கர்த்தரிடம் என் தொல்லைகளைச் சொல்வேன்.
3 என் பகைவர்கள் எனக்குக் கண்ணி வைத்திருக்கிறார்கள்.
நான் எல்லாவற்றையும் விட்டுவிடத் தயாராயிருக்கிறேன்.
ஆனால் கர்த்தர் எனக்கு நடக்கின்றவற்றை அறிந்திருக்கிறார்.
4 நான் சுற்றிலும் பார்த்தேன், என் நண்பர்களைக் காணவில்லை.
எனக்கு ஓடிச் செல்ல இடமில்லை. என்னைக் காப்பாற்ற முயல்பவர் எவருமில்லை.
5 எனவே நான் கர்த்தரிடம் உதவிக்காக அழுதேன்.
கர்த்தாவே, நீரே என் பாதுகாப்பிடம்.
கர்த்தாவே, என்னைத் தொடர்ந்து வாழவிட உம்மால் ஆகும்.
6 கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும். நீர் எனக்கு மிகுதியாகத் தேவைப்படுகிறீர்.
என்னைத் துரத்தி வருகிற ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
அவர்கள் என்னைக் காட்டிலும் மிகுந்த பலவான்கள்.
7 இந்தக் கண்ணியிலிருந்து தப்பிச்செல்ல எனக்கு உதவும்.
அப்போது நான் உமது நாமத்தைத் துதிப்பேன்.
நீர் என்னைக் கவனித்து வந்ததால் நல்லோர் என்னோடு சேர்ந்து கொண்டாடுவார்கள்.
கர்த்தருக்குள் எப்பொழுதும் மகிழ்ச்சியாயிருங்கள்
17 அத்திமரங்களில் அத்திப்பழங்கள் வளராமலிருக்கலாம்.
திராட்சைக்கொடிகளில் திராட்சைப் பழங்கள் வளராமலிருக்கலாம்.
ஒலிவ மரங்களில் ஒலிவ பழங்கள் வளராமலிருக்கலாம்,
வயல்களில் தானியம் விளையாமலிருக்கலாம்,
கிடையில் ஆட்டு மந்தைகள் இல்லாமல் இருக்கலாம்,
தொழுவத்தில் மாடுகள் இல்லாமல் இருக்கலாம்.
18 ஆனால், கர்த்தருக்குள் நான் இன்னும் மகிழ்ச்சியோடு இருப்பேன்.
எனது இரட்சகரான தேவனில் நான் மகிழ்வேன்.
19 எனக்கு அதிகாரியான என் கர்த்தர் எனக்குப் பலத்தை கொடுக்கிறார்.
அவர் என்னை மானைப்போன்று ஓட உதவுகிறார்.
அவர் என்னைக் குன்றுகளில் பாதுகாப்பாக வழிநடத்துகிறார்.
இது இசையமைப்பாளருக்கு எனது நரம்பு வாத்தியங்களில் வாசிக்க வேண்டியது.
இருப்பதைப் பயன்படுத்துங்கள்
(மத்தேயு 25:14-30)
11 எருசலேமை நெருங்கி இயேசு பயணம் செய்துகொண்டிருந்தார். தேவனின் இராஜ்யம் சீக்கிரம் வருமென்று சில மக்கள் எண்ணினார்கள். 12 மக்களின் எண்ணத்தை இயேசு அறிந்தார். எனவே அவர்களுக்குப் பின்வரும் உவமையைச் சொன்னார்: “ஒரு உயர்ந்த கௌரவம்மிக்க மனிதன், மன்னனாக நியமனம் பெறும்படியாகத் தூர தேசப் பயணத்திற்காக ஆயத்தங்கள் செய்துகொண்டிருந்தான். பின்னர் திரும்பி வந்து அவனது மக்களை அரசாள வேண்டுமென்று அவன் திட்டமிட்டான். 13 எனவே அவன் தனது வேலைக்காரர்களில் பத்து பேரை அழைத்தான். அவன் ஒவ்வொரு வேலைக்காரனுக்கும் ஒரு பை நிறைய பணத்தைக் கொடுத்தான். ‘இந்தப் பணத்தைக்கொண்டு நான் வரும் வரைக்கும் வியாபாரம் செய்யுங்கள்’ என்றான். 14 அந்த இராஜ்யத்தின் மக்கள் அம்மனிதனை வெறுத்தார்கள். எனவே அம்மக்கள் அவன் போகும் தேசத்துக்கெல்லாம் அவனைப் பின் தொடர்ந்து செல்லுமாறு ஒரு கூட்டத்தினரை அனுப்பினர். மற்ற தேசத்துக்கு அக்கூட்டத்தினர் சென்று ‘இந்த மனிதன் எங்களுக்கு ராஜா ஆவதை நாங்கள் விரும்பவில்லை’ என்றார்கள்.
15 “ஆனால் அம்மனிதன் ராஜாவானான். அவன் தன் நாட்டுக்குத் திரும்பிய பின்பு, ‘நான் பணம் கொடுத்துள்ள அந்த வேலைக்காரரை அழையுங்கள். அதைக்கொண்டு அவர்கள் இன்னும் அதிகமாக எவ்வளவு பணம் சம்பாதித்திருக்கிறார்கள் என்று அறிய நான் விரும்புகிறேன்’ என்றான். 16 முதல் வேலைக்காரன் வந்து, ‘ஐயா, நீங்கள் கொடுத்த ஒரு பை பணத்தைக் கொண்டு நான் பத்து பை நிரம்பும் அளவுக்குப் பணம் சம்பாதித்திருக்கிறேன்’ என்றான். 17 ராஜா அந்த வேலைக்காரனை நோக்கி, ‘நல்லது, நீ ஒரு நல்ல வேலைக்காரன். சிறிய காரியங்களில் உன்னை நம்பக் கூடும் என்று காண்கிறேன். ஆகவே இப்போது எனது பட்டணங்களில் பத்து பட்டணங்களை ஆளும்படியாக உன்னை நியமிப்பேன்’ என்றான்.
18 “இரண்டாவது வேலைக்காரன் வந்து, ‘ஐயா, நீங்கள் கொடுத்த ஒரு பை பணத்தைக் கொண்டு நான் ஐந்து பைகள் சம்பாதித்திருக்கிறேன்’ என்றான். 19 மன்னன் வேலைக்காரனை நோக்கி, ‘நீ ஐந்து பட்டணங்கள் மேல் ஆட்சி செய்யலாம்’ என்றான்.
20 “பின்பு மூன்றாவது வேலைக்காரன் வந்தான் அந்த வேலைக்காரன் ராஜாவை நோக்கி, ‘ஐயா, இதோ உங்களுடைய பணப் பை இருக்கிறது. நான் அதை ஒரு துணியில் பொதிந்து மறைத்து வைத்தேன். 21 உங்கள் வலிமையைக் கண்டு நான் பயந்து போய் இருந்தேன். நீங்கள் கடினமான மனிதர் என்பதை அறிவேன். உங்களால் சம்பாதிக்கப்படாத பணத்தைக் கூட நீங்கள் எடுத்துக்கொள்கிறீர்கள். உங்களால் பயிரிடப்படாத தானியத்தைக் கூட நீங்களே சேர்த்துக் கொள்கிறீர்கள்’ என்றான்.
22 “ராஜா அந்த வேலைக்காரனை நோக்கி, ‘தீய வேலைக்காரனே, உனது சொந்த வார்த்தையாலேயே உன்னை நிராகரிப்பேன். நான் ஒரு கடினமான மனிதன் என்றாய். நான் சம்பாதிக்காத பணத்தை எடுத்துக்கொள்பவன் என்றும், நான் பயிரிடாத தானியத்தைச் சேர்த்துக்கொள்பவன் என்றும் கூறினாய். 23 அது உண்மையென்றால் நீ என் பணத்தை வங்கியில் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அப்போது நான் திரும்பி வந்தபோது என் பணத்துக்கு வட்டியாவது கிடைத்திருக்கும்’ என்றான். 24 பின் அங்கு நின்றுகொண்டிருந்த மனிதரை நோக்கி, ‘அந்த வேலைக்காரனிடமிருந்து பையை எடுத்து பத்து பைகள் நிரம்ப பணம் சம்பாதித்தவனுக்குக் கொடுங்கள்’ என்றான்.
25 “அந்த மனிதர்கள் ராஜாவிடம், ‘ஐயா, அந்த வேலைக்காரனிடம் ஏற்கெனவே பத்துப் பைகள் பணம் இருக்கின்றனவே,’ என்றார்கள்.
26 “ராஜா, ‘தன்னிடம் இருப்பவற்றைப் பயன்படுத்துகிறவனுக்கு இன்னும் அதிகமாகக் கிடைக்கும். தன்னிடம் இருப்பவற்றைப் பயன்படுத்தாத மனிதனிடம் இருப்பவையும் எடுத்துக்கொள்ளப்படும். 27 இப்போது எனது பகைவர்கள் எங்கே? தமக்கு ராஜாவாக நான் ஆவதை விரும்பாத மக்கள் எங்கே? என் பகைவர்களை அழைத்து வந்து அவர்களைக் கொல்லுங்கள். அவர்கள் மடிவதை நான் பார்ப்பேன்’ என்றான்.”
2008 by World Bible Translation Center