Revised Common Lectionary (Semicontinuous)
மேம்
97 கர்த்தாவே, நான் உமது போதனைகளை நேசிக்கிறேன்.
எல்லா வேளைகளிலும் நான் அவற்றைக் குறித்துப் பேசுகிறேன்.
98 கர்த்தாவே, உமது கட்டளைகள் என்னை என் பகைவரைக் காட்டிலும் ஞானமுள்ளவனாக்கும்.
உமது சட்டம் எப்போதும் என்னோடிருக்கும்.
99 உமது உடன்படிக்கையை நான் கற்பதால் என்
ஆசிரியர்களைக காட்டிலும் நான் ஞானமுள்ளவன்.
100 நான் உமது கட்டளைகளின்படி நடப்பதால்,
முதியத்தலைவர்களைக் காட்டிலும் அதிகமாகப் புரிந்துக்கொள்கிறேன்.
101 வழியில் ஒவ்வொரு அடியிலும் நான் தவறான பாதையில் செல்லாதபடி காக்கிறீர்.
எனவே, கர்த்தாவே, நீர் கூறுகின்றவற்றை நான் செய்ய முடிகிறது.
102 கர்த்தாவே, நீரே என் ஆசிரியர்.
ஆகையால் உமது சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதை நிறுத்தமாட்டேன்.
103 என் வாயிலுள்ள தேனைக்காட்டிலும் உமது வார்த்தைகள் சுவையானவை.
104 உமது போதனைகள் என்னை ஞானமுள்ளவனாக மாற்றின.
எனவே நான் தவறான போதனைகளை வெறுக்கிறேன்.
15 கர்த்தர் கூறுகிறார்,
“ராமாவில் ஒரு சத்தம் கேட்கும்.
இது மிகவும் துக்கக் கதறலாய் மிகுந்த சோகத்துடன் இருக்கும்.
ராகேல் தனது பிள்ளைகளுக்காக அழுதுக்கொண்டிருப்பாள்.
ராகேல் ஆறுதல் பெற மறுப்பாள்.
ஏனென்றால், அவளது பிள்ளைகள் மரித்துவிட்டனர்.”
16 ஆனால் கர்த்தர் கூறுகிறார், “அழுகையை நிறுத்துங்கள்!
உங்கள் கண்களை கண்ணீரால் நிறைக்காதீர்கள்!
உங்கள் வேலைக்காக நீங்கள் பரிசளிக்கப்படுவீர்கள்!”
“இஸ்ரவேல் ஜனங்கள் தம் பகைவரது நாடுகளிலிருந்து திரும்ப வருவார்கள்.
17 இஸ்ரவேலே, உனக்கு நம்பிக்கை இருக்கிறது”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
“உன் பிள்ளைகள் அவர்களது சொந்த நாட்டிற்கு வருவார்கள்.
18 எப்பிராயீமின் அழுகையை நான் கேட்டிருக்கிறேன். எப்பிராயீம் இவற்றைச் சொல்கிறதை நான் கேட்டேன்.
‘கர்த்தாவே! உண்மையில் நீர் என்னைத் தண்டித்துவிட்டீர்.
நான் எனது பாடத்தைக் கற்றுக்கொண்டேன்.
நான் என்றென்றும் பயிற்சி பெறாத கன்றுக்குட்டியைப் போன்று இருந்தேன்.
தயவுசெய்து என்னைத் தண்டிப்பதை நிறுத்தும்.
நான் திரும்ப உம்மிடம் வருவேன்.
நீர் உண்மையில் எனது தேவனாகிய கர்த்தர்தான்.
19 கர்த்தாவே, நான் உம்மை விட்டு அலைந்து திரிந்தேன்.
ஆனால் நான் செய்த தீயவற்றைப்பற்றி கற்றுக்கொண்டேன்.
எனவே நான் எனது வாழ்வையும் மனதையும் மாற்றிக்கொண்டேன்.
நான் இளமையாக இருந்தபோது செய்த முட்டாள்தனமான செயல்களை எண்ணி நான் அவமானமும் நிந்தையும் அடைகிறேன்’” என்றான்.
20 தேவன், “எப்பிராயீம் எனது அன்பான குமாரன் என்பதை நீ அறிகிறாய்.
நான் அந்தப் பிள்ளையை நேசிக்கிறேன்.
ஆம். நான் அவ்வப்போது எப்பிராயீமை குறை கண்டுப்பிடித்தேன்.
ஆனால், அவனை இன்னமும் நினைத்துக்கொண்டிருக்கிறேன்.
நான் அவனை மிகவும் நேசிக்கிறேன்.
நான் உண்மையில் அவனுக்கு ஆறுதல் அளிக்க விரும்புகிறேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
21 “இஸ்ரவேல் ஜனங்களே சாலை அடையாளங்களை வையுங்கள்.
வீட்டிற்கான வழியைக் காட்டும் அடையாளங்களை வையுங்கள்.
சாலையை கவனியுங்கள்.
நீங்கள் நடந்த வழியை நினைவுக்கொள்ளுங்கள்.
இஸ்ரவேலே, எனது மணமகளே, வீட்டிற்கு வா.
உனது பட்டணங்களுக்குத் திரும்பி வா.
22 உன்மையில்லாத மகளே, இன்னும் எவ்வளவு காலம் நீ சுற்றித் திரிவாய்?
நீ எப்பொழுது வீட்டிற்குத் திரும்ப வருவாய்?”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
“கர்த்தர் இந்நாட்டில் ஏதாவது புதியதைச் செய்யும்போது,
பெண் ஆணைச் சூழ்ந்துக்கொள்வது போன்றது.”
23 சர்வ வல்லமையுள்ள இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கூறுகிறதாவது: “நான் மீண்டும் யூதா ஜனங்களுக்கு நன்மை செய்வேன். சிறைக் கைதிகளாக எடுக்கப்பட்ட ஜனங்களை நான் திரும்பக் கொண்டு வருவேன். அந்த நேரத்தில், யூதா நாட்டிலும் நகரங்களிலுமுள்ள ஜனங்கள் மீண்டும் இவ்வார்த்தைகளைப் பயன்படுத்துவார்கள். ‘கர்த்தர் உன்னையும் வீட்டையும் பரிசுத்தமான மலையையும் ஆசீர்வதிக்கட்டும்.’”
24 “யூதாவின் அனைத்து நகரங்களிலும் வாழ்கின்ற ஜனங்கள் ஒன்று சேர்ந்து சமாதானத்தோடு வாழ்வார்கள். விவசாயிகளும் தங்கள் மந்தைகளோடு சுற்றி அலைகிற மேய்ப்பர்களும் ஒன்று சேர்ந்து யூதாவில் சமாதானமாக வாழ்வார்கள். 25 நான் பலவீனமும் சோர்வும் அடைந்த ஜனங்களுக்கு வலிமையையும் ஓய்வையும் கொடுப்பேன்.”
26 இதனைக் கேட்டப் பிறகு, நான் (எரேமியா) எழுந்து சுற்றிலும் பார்த்தேன். அது ஒரு மிக இனிய உறக்கமாக இருந்தது.
குருடன் குணமாக்கப்படுதல்
(மத்தேயு 20:29-34; லூக்கா 18:35-43)
46 பிறகு அவர்கள் எரிகோ நகரத்துக்கு வந்தனர். இயேசு அந்த நகரத்தையும் விட்டுத் தன் சீஷர்களோடும், மற்ற சில மக்களோடும் வெளியேறினார். பர்திமேயு எனப்படும் (திமேயுவின் குமாரன்) ஒரு குருடன் சாலையோரத்தில் அமர்ந்திருந்தான். அவன் பிச்சைக் கேட்டுக்கொண்டிருந்தான். 47 நாசரேத் ஊரைச் சேர்ந்த இயேசு வந்துகொண்டிருப்பதை அறிந்து சத்தமிட ஆரம்பித்தான். அவன், “தாவீதின் குமாரனாகிய இயேசுவே! எனக்கு உதவி செய்யும்” என்றான்.
48 பல மக்கள் அவனைப் பேசாமலிருக்கும்படி அதட்டினார்கள். ஆனால் அந்தக் குருடன் இன்னும் சத்தமாக, “தாவீதின் குமாரனே, எனக்கு உதவி செய்யும்” என்றான்.
49 அவ்விடத்தில் இயேசு, “அந்த மனிதனை இங்கே வரச் சொல்லுங்கள்” என்றார்.
எனவே அவர்கள் அக்குருடனை அழைத்தனர். அவர்கள், “மகிழ்ச்சியாய் இரு, எழுந்து வா, இயேசு உன்னை அழைக்கிறார்” என்றனர். 50 அக்குருடன் விரைவாக எழுந்தான். அவன் தன் மேலாடையை அவ்விடத்தில் எறிந்துவிட்டு இயேசுவினருகில் சென்றான்.
51 இயேசு அவனிடம், “நான் உனக்காக என்ன செய்ய வேண்டும் என்று நீ விரும்புகிறாய்?” எனக் கேட்டார்.
அதற்கு அக்குருடன், “போதகரே! நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்” என்றான்.
52 “போ! நீ குணமானாய், ஏனெனில் நீ விசுவாசத்தோடு இருந்தாய்” என்று இயேசு சொன்னார். அதனால் அவன் பார்வை பெற்றான். அவன் இயேசுவைப் பின்தொடர்ந்து போனான்.
2008 by World Bible Translation Center