Revised Common Lectionary (Semicontinuous)
2 யூதரல்லாத மனிதர்கள் ஏன் இவ்வளவு கோபமாயிருக்கிறார்கள்?
ஏன் அந்தத் தேசங்கள் மதியீனமான திட்டங்களை வகுக்கின்றன?
2 அவர்களுடைய ராஜாக்களும், தலைவர்களும் கர்த்தரையும்,
கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜாவையும் எதிர்க்க ஒன்றுகூடினார்கள்.
3 அந்நாடுகளின் தலைவர்கள், “நாம் தேவனையும், அவர் தேர்ந்தெடுத்த ராஜாவையும் எதிர்த்துக் கலகம் செய்வோம்.
அவரிடமிருந்து நம்மை விடுவித்துக்கொள்வோம்!” என்றார்கள்.
4 ஆனால் என் ஆண்டவர் பரலோகத்தின் ராஜா,
அவர் அந்த ஜனங்களைப் பார்த்து நகைக்கிறார்.
5-6 தேவன் கோபமடைந்து அந்த ஜனங்களை நோக்கி,
“நான் இம்மனிதனை ராஜாவாகத் தேர்ந்தெடுத்தேன்!
அவன் சீயோன் மலையில் அரசாளுவான்.
சீயோன் என்னுடைய பரிசுத்த மலை” என்கிறார்.
அது மற்ற தலைவர்களை பயமுறுத்தும்.
7 இப்போது கர்த்தருடைய உடன்படிக்கையை உனக்குக் கூறுவேன்.
கர்த்தர் என்னிடம், “இன்று நான் உனக்குத் தந்தையானேன்!
நீ எனக்கு குமாரன்.
8 நீ என்னைக் கேட்டால், நான் உனக்குத் தேசங்களையெல்லாம் கொடுப்பேன்.
பூமியின் ஜனங்களெல்லாம் உன்னுடையவர்களாவார்கள்!
9 இரும்புத் தடியால் மண்குடத்தை உடைப்பதைப்போல
நீ அத்தேசங்களை அழிக்கமுடியும்” என்றார்.
10 எனவே ராஜாக்களே, ஞானமுள்ளவர்களாய் இருங்கள்.
அரசாளுபவர்களே, இப்பாடத்தை கற்றுக்கொள்ளுங்கள்.
11 மிகுந்த அச்சத்தோடு கர்த்தருக்குக் கீழ்ப்படியுங்கள்.
12 தேவனுடைய குமாரனுக்கு நீங்கள் உண்மையானவர்கள் என்பதைக் காட்டுங்கள், நீங்கள் இவ்வாறு செய்யாவிட்டால் ஆண்டவர் உங்களை அழிக்க தன் கோபத்தைக் காட்டத் தயாராக இருக்கிறார்.
கர்த்தரை நம்பும் ஜனங்கள் சந்தோஷமாயிருப்பார்கள்.
ஆனால் மற்ற ஜனங்கள் கவனமாக இருக்கவேண்டும்.
கர்த்தர் தமது கோபத்தை வெளிப்படுத்தத் தயாராக இருக்கிறார்.
உடைந்த ஜாடி
19 கர்த்தர் என்னிடம், “எரேமியா போய் ஒரு குயவனிடமிருந்து மண்ஜாடியை வாங்கிவா. 2 உடைந்த பானைத் துண்டுகளை எரியும் வாசலுக்கு முன்னாலுள்ள பென் இன்னோமுடைய பள்ளத்தாக்குக்குப் போ. உன்னோடு ஜனங்களில் சில மூப்பர்களையும், சில ஆசாரியர்களையும் அழைத்துப் போ என்று சொன்னார். நான் சொல்கிறவற்றை 3 உன்னோடு இருக்கிற அந்த ஜனங்களிடம் சொல், ‘யூதாவின் ராஜாவே, எருசலேமின் ஜனங்களே, கர்த்தரிடமிருந்து வருகிற இந்த வார்த்தையைக் கேளுங்கள்! இதுதான் சர்வவல்லமையுள்ள கர்த்தரும் இஸ்ரவேல் ஜனங்களின் தேவனுமானவர் கூறுவது: நான் இந்த இடத்தில் விரைவில் ஒரு பயங்கரத்தை நிகழச்செய்வேன். இதைப்பற்றி கேள்விப்படுகிற ஒவ்வொருவனும் அதிர்ச்சியும் அச்சமும் அடைவான். 4 நான் இவற்றைச் செய்வேன். ஏனென்றால் யூதாவின் ஜனங்கள் என்னைப் பின்பற்றுவதை விட்டுவிட்டனர். அவர்கள் இந்த இடத்தை அயல்நாட்டுத் தெய்வங்களுக்கு உரியதாகச் செய்துவிட்டனர். அவர்கள் இந்த இடத்தில் வேறு தெய்வங்களுக்குத் தகனபலிகளை அளித்தனர். நீண்ட காலத்திற்கு முன்பு அந்தத் தெய்வங்களைத் தொழுதுகொள்ளவில்லை. அவர்களின் முற்பிதாக்களும் அத்தெய்வங்களைத் தொழுதுகொள்ளவில்லை. இவை அந்நிய நாடுகளிலிருந்து வந்தப் புதிய தெய்வங்கள். யூதாவின் ராஜாக்கள் ஒன்றுமறியாத குழந்தைகளின் இரத்தத்தால் இந்த இடத்தை நிரப்புகிறார்கள். 5 யூதாவின் ராஜாக்கள் பாகால் தேவனுக்காக மேடையைக் கட்டினார்கள். அவர்கள் அந்த இடங்களைத் தங்கள் குமாரர்களை எரிக்கப் பயன்படுத்தினார்கள். பாகால் தெய்வத்திற்குத் தங்கள் குமாரர்களைத் தகனபலியாகக் கொடுத்தனர். நான் அவ்வாறு செய்யும்படி சொல்லவில்லை. உங்கள் குமாரர்களைப் பலியாகக் கொடுக்கும்படி நான் கேட்கவில்லை. நான் அதைப்பற்றி நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. 6 இப்பொழுது, ஜனங்கள் இந்த இடத்தை இன்னோமின் பள்ளத்தாக்கு என்றும் “தோப்பேத்” என்றும் அழைக்கின்றனர். ஆனால், நான் இந்த எச்சரிக்கையைக் கொடுக்கிறேன். நாட்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது: ஜனங்கள் இந்த இடத்தை “கொலையின் பள்ளத்தாக்கு” என்று அழைக்கும் நாள் வருகிறது. 7 இந்த இடத்தில், யூதா மற்றும் எருசலேம் ஜனங்களின் திட்டங்களை நாசமாக்குவேன். பகைவர்கள் இந்த ஜனங்களைத் துரத்துவார்கள். இந்த இடத்தில் யூதாவின் ஜனங்கள் வாளால் கொல்லப்படுமாறு விடுவேன். அவர்களது மரித்த உடல்களைப் பறவைகளுக்கும் காட்டு மிருகங்களுக்கும் உணவாக்குவேன். 8 இந்நகரத்தை நான் முழுமையாக அழிப்பேன். ஜனங்கள் எருசலேமைக் கடந்துப்போகும்போது பிரமித்து, தலையை அசைப்பார்கள். இந்நகரம் எவ்வாறு அழிக்கப்பட்டது என்பதை அறியும்போது, அவர்கள் அதிர்ச்சி அடைவார்கள். 9 பகைவர்கள் நகரத்தைச்சுற்றி தம் படைகளை அழைத்து வருவார்கள். அப்படை ஜனங்கள் வெளியே சென்று உணவு பெறுவதை அனுமதிக்காது. எனவே, நகரத்தில் உள்ள ஜனங்கள் பட்டினியாக இருப்பார்கள். அவர்கள் தம் சொந்த குமாரர்கள் மற்றும் குமாரத்திகளின் உடலை உண்ணும் அளவிற்குப் பசியை அடைவார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் உண்ணத் தொடங்குவார்கள்.’
10 “எரேமியா, நீ இவற்றையெல்லாம் ஜனங்களுக்குச் சொல். அவர்கள் கவனித்துக் கொண்டிருக்கும்போது ஜாடியை உடைத்துவிடு. 11 அப்போது இவற்றைச் சொல்: ‘சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார், நான் யூதா நாட்டையும் எருசலேமையும், ஒருவன் மண்ஜாடியை உடைப்பதுப்போன்று உடைப்பேன். இந்த ஜாடியை மீண்டும் பழையபடி ஆக்கமுடியாது. யூதா நாட்டுக்கும் இதுபோல் ஆகும். வேறு இடமில்லை என்று சொல்லுகிற வரையில் தோப்பேத்தில் மரித்த ஜனங்கள் புதைக்கப்படுவார்கள்.’ இந்த வார்த்தை கர்த்தரிடம் உள்ளது. 12 ‘இவைகளை நான் இந்த ஜனங்களுக்கும் இந்த இடத்துக்கும் செய்வேன். இந்த நகரத்தை தோப்பேத்தைப் போலச் செய்வேன்’ இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. 13 ‘எருசலேமில் உள்ள வீடுகள் தோப்பேத்தைப்போன்று “அசுத்தமாகும்” ராஜாக்களின் அரண்மனைகள் தோப்பேத்தைப்போன்று அழிக்கப்படும். ஏனென்றால், அவ்வீடுகளின் கூரையில் பொய்த் தெய்வங்களை வைத்துத் தொழுதுகொள்கிறார்கள். அவர்கள் நட்சத்திரங்களைத் தொழுதுகொள்கின்றனர். அவர்களை மகிமைப்படுத்தத் தகன பலிகளைக் கொடுக்கின்றனர். அவர்கள் பொய்த் தெய்வங்களுக்குப் பானங்களின் காணிக்கை கொடுத்தனர்.’”
14 பிறகு, எரேமியா தோப்பேத்தை விட்டு கர்த்தர் பிரசங்கம் பண்ணுமாறு சொன்ன இடத்துக்குச் சென்றான். எரேமியா கர்த்தருடைய ஆலயத்திற்குச் சென்று, ஆலயத்தின் பிரகாரத்தில் நின்றான். எரேமியா அனைத்து ஜனங்களிடமும் சொன்னான். 15 “இதுதான் சர்வ வல்லமையுள்ள இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் சொல்கிறது: ‘நான் எருசலேம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கும் பேரழிவைக் கொண்டுவருவேன் என்று சொன்னேன். நான் விரைவில் அவை நிகழுமாறு செய்வேன். ஏனென்றால், ஜனங்கள் மிகவும் பிடிவாதமானவர்கள், அவர்கள் என்னை கவனிக்கவும், எனக்குக் கீழ்ப்படியவும் மறுத்துவிட்டனர்.’”
கிறிஸ்துவின் நல்ல வேலையாளாக இரு
6 அங்குள்ள சகோதர சகோதரிகளிடமும் இவற்றைக் கூறு. இவை நீ இயேசு கிறிஸ்துவின் நல்ல வேலையாள் என்பதைக் காட்டும். விசுவாசமான வார்த்தைகளாலும், பின்பற்றப்படுகிற நல்ல போதனையாலும் நீ பலப்படுத்தப்படுகிறாய் என்றும் காட்டுவாய். 7 மக்கள் சொல்கிற அர்த்தமற்ற கதைகள் தேவனுடைய உண்மையோடு சற்றும் பொருந்தாதவை. அவற்றின் கூற்றுக்களைப் பின்பற்றாதே. தேவனுக்கு உண்மையான சேவையைச் செய்ய கற்றுக்கொள். 8 உடற்பயிற்சியானது சில வழிகளில் உதவிகரமானது. ஆனால் தேவபக்தியானது எல்லா வழிகளிலும் உதவுவதாகும். அது இவ்வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல் இனிவரும் வாழ்வுக்கும் ஆசீர்வாதம் தரும். 9 நான் சொல்வதெல்லாம் உண்மை, அவற்றை முழுமையாக நீ ஏற்றுக்கொள்ளவேண்டும். 10 இதற்காகத் தான் நாம் உழைக்கிறோம். போராடுகிறோம்; தேவனில் விசுவாசம் கொள்கிறோம்; அவரே அனைத்து மக்களின் மீட்பராக இருக்கிறார். அதோடு விசுவாசிகளுக்குச் சிறப்பான முறையில் மீட்பராக இருக்கிறார்.
11 கட்டளையிட்டு இவ்விஷயங்களைப் போதனை செய். 12 நீ இளமையாக இருக்கிறாய். ஆனால் உன்னை முக்கியம் அற்றவனாக நடத்த யாரையும் அனுமதிக்காதே. விசுவாசம் உடையவர்கள் எப்படி வாழவேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக இரு. வார்த்தையிலும், வாழும் வகையிலும், அன்பிலும், விசுவாசத்திலும், தூய நடத்தையிலும் விசுவாசிகளுக்கு முன் மாதிரியாக இரு.
13 மக்களுக்குத் தொடர்ந்து வேதவாக்கியங்களை வாசித்துக்காட்டு. அவர்களை பலப்படுத்து, அவர்களுக்குப் போதனைசெய். நான் வரும்வரை இவற்றைச் செய். 14 உனக்குக் கிடைத்துள்ள வரத்தைப் பயன்படுத்த நினைவுகொள். மூப்பராகிய சபையோர் உன் மேல் கைகளை வைத்தபோது தீர்க்கதரிசனத்தின் மூலம் இந்த வரத்தைப் பெற்றாய். 15 இவற்றைத் தொடர்ந்து செய். இவற்றுக்காக உன் வாழ்வைக் கொடு. பிறகு, உன் பணியின் வளர்ச்சியை அனைவரும் கண்டுகொள்வர். 16 உன் வாழ்விலும் போதனையைக் குறித்து எச்சரிக்கையாக இரு. சரியாய் வாழ்ந்து இவற்றைப் போதனை செய். அதனால் உன் வாழ்வையும், உன் போதனையைக் கேட்பவர்களின் வாழ்வையும் நீ காப்பாற்றிக்கொள்ள முடியும்.
2008 by World Bible Translation Center