Revised Common Lectionary (Semicontinuous)
“அழிக்காதே” என்னும் பாடலின் இசைத்தலைவனுக்கு ஆசாப் அளித்த துதிப்பாடல்களுள் ஒன்று.
75 தேவனே, நாங்கள் உம்மைத் துதிக்கிறோம்.
நாங்கள் உம்மைத் துதிக்கிறோம்.
நீர் அருகாமையில் இருக்க, ஜனங்கள் நீர் செய்யும் அற்புதமான காரியங்களைக் குறித்து கூறுகிறார்கள்.
2 தேவன் கூறுகிறார்:
“நியாயத்தீர்ப்பின் காலத்தை நான் தெரிந்தெடுத்திருக்கிறேன்.
நான் தகுந்தபடி நியாயந்தீர்ப்பேன்.
3 பூமியும் அதிலுள்ள அனைத்தும் நடுங்கி விழும் நிலையில் இருக்கும்.
ஆனால் நான் அதைத் திடமாக இருக்கச் செய்வேன்.”
4-5 “சிலர் அதிகமாக பெருமையுள்ளவர்கள், தாங்கள் வலிமை மிக்கவர்கள் என்றும் முக்கியமானவர்கள் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள்.
ஆனால் நான் அவர்களிடம் ‘வீம்பு பேசாதீர்கள்!’
‘பெருமை பாராட்டாதீர்கள்!’ என்று கூறுவேன்” என்கிறார்.
6 ஒருவனை முக்கியமானவனாக்கும் வல்லமை
எதுவும் இப்பூமியில் இல்லை.
7 தேவனே நீதிபதி, யார் முக்கியமானவர் என்பதை தேவன் முடிவெடுக்கிறார்.
தேவன் ஒருவனை உயர்த்தி அவனை முக்கியமானவனாக்குகிறார்.
தேவன் மற்றொருவனைத் தாழ்த்தி அவனை முக்கியமற்றவனாக்குகிறார்.
8 தேவன் தீயோரைத் தண்டிக்கத் தயாராய் இருக்கிறார்.
கர்த்தர் கையில் ஒரு கோப்பை உள்ளது, அக்கோப்பை விஷம் கலந்த திராட்சைரசத்தால் நிரம்பியுள்ளது.
அவர் அத்திராட்சைரசத்தை (தண்டனையை) ஊற்றுவார்,
கடைசித் துளிமட்டும் கெட்டஜனங்கள் அதனைக் குடிப்பார்கள்.
9 நான் எப்போதும் ஜனங்களுக்கு இவற்றைப்பற்றிக் கூறுவேன்.
இஸ்ரவேலரின் தேவனுக்கு நான் துதிப்பாடுவேன்.
10 கெட்ட ஜனங்களிடமிருந்து நான் வல்லமையை அகற்றிவிடுவேன்.
நான் நல்ல ஜனங்களுக்கு வல்லமையை அளிப்பேன்.
ஒரு தீர்க்கதரிசியின் விதவை எலிசாவிடம் உதவி கேட்டல்
4 தீர்க்கதரிசிகளுள் ஒருவனுக்கு ஒரு மனைவி இருந்தாள். அந்த தீர்க்கதரிசி மரித்துப்போயிருந்தான். அவள் எலிசாவிடம் வந்து, “என் கணவன் உங்கள் ஊழியனாக இருந்தார். இப்போது மரித்துப்போனார். அவர் கர்த்தரை மதித்ததை நீங்கள் அறிவீர்கள். அவர் ஒருவனிடம் பணம் வாங்கியிருந்தார். அதற்காக இப்போது அந்த ஆள் என் இரண்டு பிள்ளைகளை அடிமையாக்கிக்கொள்ள வந்திருக்கிறான்!” என்று அழுதாள்.
2 அதற்கு எலிசா, “நான் எவ்வாறு உதவமுடியும்? உன் வீட்டில் என்ன இருக்கிறது என்று சொல்” என்று கேட்டான்.
அப்பெண்ணும், “என் வீட்டில் எதுவுமில்லை. ஒரு ஜாடி (ஒலிவ) எண்ணெய் மட்டும் உள்ளது” என்றாள்.
3 உடனே எலிசா அவளிடம், “நீ போய் உனது பக்கத்து வீட்டுக்காரர் அனைவர்களிடமும் கிண்ணங்களைக் கடனாக வாங்கி வா. அவை காலியாக இருக்கட்டும். நிறைய கிண்ணங்களை கடன் வாங்கு. 4 உன் வீட்டிற்குள் போய் கதவுகளை மூடிக்கொள். வீட்டிற்குள் நீயும் உன் பிள்ளைகளும் மட்டும் தான் இருக்கவேண்டும். ஒலிவ எண்ணெயை எல்லாக் கிண்ணங்களிலும் ஊற்றி நிரப்ப அது நிறைந்ததும் ஒவ்வொரு பாத்திரத்தையும் அப்புறம் வை” என்றான்.
5 எனவே அந்தப் பெண் எலிசாவிடமிருந்து கிளம்பிப்போய் வீட்டுக்கதவுகளை அடைத்துக்கொண்டாள். அவளும் அவள் பிள்ளைகள் மட்டுமே வீட்டில் இருந்தனர். அவளது குமாரர்கள் அவளிடம் கிண்ணங்களைக் கொண்டுவந்தனர். அவற்றில் அவள் எண்ணெயை ஊற்றினாள். 6 அனைத்து கிண்ணங்களும் நிரம்பியபோது அவள் தன் மகனிடம், “இன்னொரு கிண்ணம் கொண்டு வா” என்றாள்.
ஆனால் அவன் அவளிடம், “கிண்ணங்கள் வேறு எதுவுமில்லை” என்றான். அப்போது ஜாடியில் இருந்த எண்ணெயும் பெருகுவது நின்று போயிற்று.
7 பின் அவள் வந்து தேவனுடைய மனுஷனுக்கு (எலிசா) அதைச் சொன்னாள். அவரோ, “நீ போய் அந்த எண்ணெயை விற்று உன் கடனை அடைத்துவிடு, மீதியுள்ள பணத்தில் நீயும் உன் பிள்ளைகளும் வாழுங்கள்” என்றான்.
பிரச்சனைகளைப் பற்றிய எச்சரிக்கை
(மாற்கு 13:9-13; லூக்கா 21:12-17)
16 “கவனியுங்கள்! நான் உங்களை அனுப்புகிறேன். நீங்கள் ஓநாய்களுக்கிடையில் அகப்பட்ட வெள்ளாட்டினைப் போல இருப்பீர்கள். எனவே, பாம்புகளைப்போல சாதுரியமாய் இருங்கள். ஆனால் புறாவைப்போல கபடற்றவர்களாயிருங்கள். 17 மக்களிடம் எச்சரிக்கையாயிருங்கள். அவர்கள் உங்களைக் கைது செய்து கொண்டு போய் நீதிமன்றத்தில் ஒப்படைத்து விடுவார்கள். உங்களை (அவர்களது) ஜெப ஆலயங்களில் வைத்து சாட்டையால் அடிப்பார்கள். 18 ஆளுநர்களுக்கும் மன்னர்களுக்கும் யூதர் அல்லாதவர்களுக்கும் முன்னால் நிறுத்தப்படுவீர்கள். என்னிமித்தம் உங்களுக்கு மக்கள் இதைச் செய்வார்கள். அப்போது நீங்கள் என்னைப் பற்றி அம்மன்னர்களுக்கும் ஆளுநர்களுக்கும் யூதரல்லாத மக்களுக்கும் எடுத்துச் சொல்வீர்கள். 19 நீங்கள் கைது செய்யப்படும்பொழுது, எதைச் சொல்வது எப்படிச் சொல்வது என்று கவலைகொள்ளாதீர்கள். அந்தச் சமயத்தில் நீங்கள் பேச வேண்டியவை அருளப்படும். 20 அப்பொழுது உண்மையில் பேசுவது நீங்களாயிருக்கமாட்டீர்கள். உங்கள் பிதாவின் ஆவியானவர் உங்கள் மூலமாகப் பேசுவார்.
21 “சகோதரர்களே தமது சகோதரர்களுக்கு எதிராகத் திரும்பி அவர்களை மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள். தந்தையரே தம் பிள்ளைகளுக்கு எதிராகத் திரும்பி அவர்களை மரணத்துக்கு ஒப்புக் கொடுப்பார்கள். பிள்ளைகளே தமது பெற்றோர்களுக்கு எதிராகச் சண்டையிட்டு அவர்களை மரணத்திற்கு ஒப்புக்கொடுப்பார்கள். 22 நீங்கள் என்னைப் பின்பற்றுவதனிமித்தம் எல்லா மக்களும் உங்களை வெறுப்பார்கள். ஆனால், இறுதிவரை உறுதியாயிருக்கிறவன் இரட்சிக்கப்படுவான். 23 ஒரு நகரத்தில் நீங்கள் மோசமான முறையில் நடத்தப்பட்டால், வேறொரு நகரத்திற்குச் சென்றுவிடுங்கள். உங்களுக்கு நான் உண்மையைச் சொல்லுகிறேன், மனிதகுமாரன் வருகிறவரைக்கும், நீங்கள் எல்லா யூதர்களின் நகரங்களுக்கும் செல்ல முடியாது.
24 “ஒரு மாணவன் ஆசிரியரைக் காட்டிலும் சிறப்பானவனல்ல. ஒரு வேலைக்காரன் தன் முதலாளியைக் காட்டிலும் சிறப்பானவனல்ல. 25 ஒரு மாணவன் தன் ஆசிரியரின் அளவிற்கு முன்னேறுவதில் திருப்தியடைய வேண்டும். ஒரு வேலைக்காரன் தன் எஜமானைப்போல முன்னேற்றமடைவதில் திருப்தியடைய வேண்டும். ஒரு வீட்டின் தலைவனே ‘பெயல்செபூல்’ என்றழைக்கப்பட்டால், அக்குடும்பத்திலுள்ள மற்றவர்கள் அதனிலும் மோசமான பெயரால் அழைக்கப்படுவார்கள்.
2008 by World Bible Translation Center