Revised Common Lectionary (Semicontinuous)
10 பின்னர் தாவீது மரித்தான். அவன் தாவீது நகரத்திலேயே அடக்கம் செய்யப்பட்டான். 11 இஸ்ரவேலை 40 ஆண்டு தாவீது அரசாண்டான். அதாவது 7 ஆண்டுகள் எப்ரோனிலும் 33 ஆண்டுகள் எருசலேமிலும் ஆண்டான்.
சாலொமோன் தன் இராஜ்யத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருதல்
12 இப்போது சாலொமோன் ராஜா தனது தந்தையின் சிங்காசனத்தில் அமர்ந்தான். அவன் ராஜ்யபாரம் முழுவதையும் தன் ஆளுகையின்கீழ் கொண்டு வந்தான்.
3 சாலொமோன் கர்த்தரை நேசிப்பதாகக் காட்டிக்கொண்டான். அவனது தந்தையான தாவீது சொன்னதற்கெல்லாம் கீழ்ப்படியும்பொருட்டு அவன் இவ்வாறு செய்து வந்தான். அதனால் அதோடு தாவீது சொல்லாத சிலவற்றையும் அவன் செய்துவந்தான். அவன் மேடைகளுக்குப் பலி கொடுப்பதையும் நறுமணப்பொருட்களை எரிப்பதையும் இன்னும் கடைப்பிடித்தான்.
4 ராஜாவாகிய சாலொமோன் கிபியோனுக்குச் சென்று பலிகொடுத்தான். அது மிகவும் முக்கியமான தெய்வீகஇடம் என்பதால் அவன் அங்கே சென்றான். அவன் பலிபீடத்தில் 1,000 பலிகளைச் செய்தான். 5 சாலொமோன் கிபியோனில் இருந்தபோது. அன்று இரவு கனவில் கர்த்தர் வந்தார். தேவன், “உனக்கு என்ன வேண்டுமோ கேள் அதனை நான் உனக்கு தருவேன்” என்றார்.
6 சாலொமோனும், “உங்கள் ஊழியனான என் தந்தை தாவீதிடம் நீர் மிகுந்த கருணையுடன் இருந்தீர். அவரும் உம்மை பின்பற்றினார். அவர் நல்லவராகவும் சரியானவராகவும் வாழ்ந்தார். அவரது குமாரனை அவருக்குப் பின் சிங்காசனத்தில் அமர வைத்ததன் மூலம் கருணையைக் காட்டிவிட்டீர். 7 என் தேவனாகிய கர்த்தாவே, என் தந்தையின் இடத்தில் என்னை ராஜாவாக்கினீர். ஆனால் நான் ஒரு குழந்தையைப்போன்று இருக்கிறேன். நான் செய்யவேண்டியதைச் செய்வதற்குரிய ஞானம் இல்லாமல் இருக்கிறேன். 8 உங்கள் ஊழியனான நான் உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுள் ஒருவனாக இருக்கிறேன். அங்கே ஏராளமான ஜனங்கள் இருக்கின்றனர். அவர்கள் கணக்கிட மிகுதியாக இருந்தனர். ஒரு ராஜா அவர்கள் மத்தியில் பல முடிவுகளை எடுக்க வேண்டியவனாக இருக்கிறான். 9 எனவே எனக்கு ஞானத்தைத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன். அதனால் நான் ஜனங்களைச் சிறப்பாக ஆளவும் சரியான வழியில் நியாயந்தீர்க்கவும் இயலும். இது நான் நல்லதுக்கும் தீமைக்குமான வேறுபாட்டை அறிந்துக்கொள்ளச் செய்யும். மிகப் பெரிய இந்த ஞானம் இல்லாமல் அதிக எண்ணிக்கையில் உள்ள மனிதர்களை ஆள்வது முடியாத செயல்” என்று வேண்டினான்.
10 இவ்வாறு சாலொமோன் வேண்டியதைக் கேட்டு கர்த்தர் மிகவும் மகிழ்ந்தார். 11 தேவன் அவனிடம், “நீ உனக்காக நீண்ட ஆயுளைக் கேட்டுக் கொள்ளவில்லை. நீ உனக்காக பெரிய செல்வத்தையும் கேட்டுக் கொள்ளவில்லை. நீ உன் எதிரிகளின் மரணத்தையும் கேட்டுக்கொள்ளவில்லை. நீயோ வழக்குகளைக் கவனிக்கவும் சரியான முடிவை எடுக்கவும் ஞானத்தைக் கேட்கிறாய். 12 எனவே நீ கேட்டதை நான் உனக்குத் தருவேன். ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தருவேன். இதற்கு முன் இதுபோல யாரும் இருந்ததில்லை என்று சொல்லும்படி உனது ஞானத்தை மகத்தான தாக்குவேன். அதோடு எதிர்காலத்திலும் உன்னைப் போல் யாரும் இருக்கமாட்டார்கள். 13 அதோடு, நீ கேட்காத சிலவற்றையும் உனக்குப் பரிசுகளாகத் தருவேன். உனது வாழ்க்கை முழுவதும் நீ செல்வமும் சிறப்பும் பெற்று விளங்குவாய். இந்த உலகில் உன்னைப்போல் எந்த அரசரும் இல்லை என்று செய்வேன். 14 என்னைப் பின்பற்றுமாறும் எனது சட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் கீழ்ப்படியுமாறும் கேட்டுக்கொள்கிறேன். உன் தந்தை தாவீது செய்ததுபோல் செய். அவ்வாறு செய்தால், உனக்கு நீண்ட ஆயுளையும் தருவேன்” என்றார்.
[a]111 கர்த்தரைத் துதியங்கள்!
நல்லோர் கூடிச் சந்திக்கும் கூட்டங்களில்
நான் கர்த்தருக்கு முழு இருதயத்தோடும் நன்றி செலுத்துவேன்.
2 கர்த்தர் அற்புதமான காரியங்களைச் செய்கிறார்.
தேவனிடமிருந்து வரும் நல்ல காரியங்களை ஜனங்கள் விரும்புகிறார்கள்.
3 உண்மையிலேயே மகிமையும் அற்புதமுமான காரியங்களை தேவன் செய்கிறார்.
அவரது நன்மை என்றென்றைக்கும் தொடருகிறது.
4 கர்த்தர் தயவும் இரக்கமுமுள்ளவர் என்பதை நாம் நினைவுக்கூரும்படி
தேவன் வியக்கத்தக்க காரியங்களைச் செய்கிறார்.
5 தேவன் அவரைப் பின்பற்றுவோருக்கு உணவளிக்கிறார்.
அவரது உடன்படிக்கையை தேவன் என்றென்றும் நினைவுகூருகிறார்.
6 அவர் தமது தேசத்தைத் தமது ஜனங்களுக்குக் கொடுக்கப்போகிறார் என்பதை
தேவன் செய்த வல்லமையான காரியங்கள் காட்டும்.
7 தேவன் செய்பவை ஒவ்வொன்றும் நல்லவையும் நியாயமுள்ளவையும் ஆகும்.
அவரது கட்டளைகள் நம்பத்தக்கவை.
8 தேவனுடைய கட்டளைகள் என்றென்றும் தொடரும்.
அக்கட்டளைகளை தேவன் கொடுப்பதற்கான காரணங்கள் நேர்மையும் தூய்மையானவையுமாகும்.
9 தேவன் தம் ஜனங்களைக் காப்பாற்ற ஒருவரை அனுப்புகிறார்.
தேவன் அவர்களுடன் உடன்படிக்கை என்றென்றும் தொடருமாறு செய்தார். தேவனுடைய நாமம் அஞ்சத்தக்கதும் பரிசுத்தமானதுமாகும்.
10 தேவனுக்குப் பயப்படுவதும் அவரை மதிப்பதுமே ஞானத்தின் தொடக்கமாயிருக்கிறது.
தேவனுக்குக் கீழ்ப்படிகிற ஜனங்கள் மிகுந்த ஞானமுள்ளவர்கள்.
என்றென்றும் தேவனுக்குத் துதிகள் பாடப்படும்.
15 எனவே எப்படி வாழ்வது என்பதில் எச்சரிக்கையாய் இருங்கள். ஞானம் இல்லாதவர்கள் வாழ்வது போன்று வாழாதீர்கள். ஞானத்தோடு வாழுங்கள். 16 நீங்கள் உங்களுக்குக் கிடைத்துள்ள ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி நற்செயல்களைச் செய்யுங்கள். ஏனென்றால் நாம் கெட்ட காலங்களில் வாழ்கிறோம். 17 ஆகையால் முட்டாள்தனமாக உங்கள் வாழ்க்கையை வீணாக்கிவிடாதீர்கள். பிதா உங்களிடம் என்ன விரும்புகிறார் என்பதை அறிந்துகொள்ளுங்கள். 18 மதுபான வெறிகொள்ளாதீர்கள். உங்கள் ஆன்மீக வாழ்வை அது அழித்துவிடும். ஆவியால் நிரப்பப்பட்டவர்களாக இருங்கள். 19 சங்கீதங்களினாலும், கீர்த்தனைகளினாலும், பக்திப் பாடல்களினாலும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளுங்கள். உங்கள் இதயத்தில் கர்த்தருக்காக இசையுடன் பாடுங்கள். 20 பிதாவாகிய தேவனுக்கு எப்போதும் எல்லாவற்றிற்காகவும் நன்றி செலுத்துங்கள். அதனைக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரில் செலுத்துங்கள்.
51 என்னுடைய சரீரம் தான் அந்த அப்பம். நான் என் சரீரத்தைத் தருவேன். உலகில் உள்ளவர்கள் வாழ்வைப் பெறுவார்கள்” என்று இயேசு கூறினார்.
52 பிறகு யூதர்கள் தங்களுக்குள் விவாதம் செய்துகொண்டனர். “எவ்வாறு இந்த மனிதன் தனது சரீரத்தை நாம் உண்ணும்படி தருவான்?” என்றனர் அவர்கள்.
53 “நான் உண்மையைக் கூறுகிறேன். நீங்கள் மனித குமாரனின் சரீரத்தை உண்ணவேண்டும். அவரது இரத்தத்தை அருந்த வேண்டும். இதனை நீங்கள் செய்யாவிட்டால், உங்களுக்கு உண்மையான வாழ்க்கை கிடைக்காது. 54 எனது சரீரத்தைப் புசித்து, இரத்தத்தை அருந்துகிற எவனும் நித்திய ஜீவனைப் பெறுவான். நான் அவனை இறுதி நாளில் எழுப்புவேன். 55 எனது சரீரமே உண்மையான உணவு. எனது இரத்தமே உண்மையான பானம். 56 ஒருவன் எனது சரீரத்தைப் புசித்து என் இரத்தத்தை அருந்துவானேயானால் அவன் என்னிலும் நான் அவனிலும் வாழ்வதாகும்.
57 “பிதா என்னை அனுப்பினார். பிதா வாழ்கிறார். அவரால் நானும் வாழ்கிறேன். ஆகையால் என்னை உண்ணுகிறவன் என்னால் உயிர் வாழ்கிறான். 58 நமது மூதாதையர்கள் வனாந்தரத்தில் புசித்த அப்பத்தைப்போல் அல்ல நான். அவர்கள் அந்த அப்பத்தை உண்டார்கள். ஆனால், மற்றவர்களைப்போன்று அவர்கள் இறந்துபோயினர். நானோ பரலோகத்திலிருந்து இறங்கி வந்த அப்பம். இதனை உண்ணுகிற எவனும் நித்திய ஜீவனைப் பெறுவான்” என்றார் இயேசு.
2008 by World Bible Translation Center