Revised Common Lectionary (Semicontinuous)
கோராகின் புத்திரருக்கு அளிக்கப்பட்ட ஒரு துதியின் பாடல்.
48 கர்த்தர் மேன்மையானவர்.
தேவன் தமது பரிசுத்த நகரில் துதிக்குரியவர்.
2 தேவனுடைய பரிசுத்த நகரம் அழகானது.
அது உலகை சுற்றியுள்ள அனைத்து ஜனங்களையும் மகிழ்ச்சியடைச் செய்யும்.
சீயோன் மலை உயர்ந்த, பரிசுத்த மலை.
அதுவே பேரரசரின் நகரமாகும்.
3 அந்நகரத்து அரண்மனைகளில்
தேவனே கோட்டை என்று எண்ணப்படுவார்.
4 ஒருமுறை, சில ராஜாக்கள் சந்தித்து,
இந்நகரைத் தாக்கத் திட்டமிட்டார்கள்.
அவர்கள் ஒருமித்து நகரை நோக்கி அணிவகுத்தார்கள்.
5 அவ்வரசர்கள் அந்நகரைக் கண்டதும், ஆச்சரியமடைந்து, பயந்து, திரும்பி ஓடினார்கள்.
6 அச்சம் அவர்களை ஆட்கொண்டது.
அவர்கள் பயத்தால் நடுங்கினார்கள்.
7 தேவனே, நீர் வலிய கிழக்குக் காற்றால்
பெருங்கப்பல்களை உடைத்தீர்.
8 ஆம், உமது வல்லமையான காரியங்களை நாங்கள் கேள்விப்பட்டோம்.
ஆனால், சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய நகரில், எங்கள் தேவனுடைய நகரில் அது நிகழக்கண்டோம்.
தேவன் அந்நகரை என்றும் வலிமையுள்ள நகராக்கினார்.
9 தேவனே, உமது ஆலயத்தில் உமது அன்பான தயவைக் கவனமாக நினைத்துப் பார்த்தோம்.
10 தேவனே, நீர் புகழ் வாய்ந்தவர்,
பூமியெங்கும் ஜனங்கள் உம்மைத் துதிக்கின்றனர்.
நீர் மிக நல்லவர் என்பதை அனைவரும் அறிவோம்.
11 தேவனே, உமது நல்ல முடிவுகளால் சீயோன் மலை மகிழ்கிறது.
யூதாவின் ஊர்கள் களிகூருகின்றன.
12 சீயோனைச் சுற்றி நட.
நகரைப் பார். கோபுரங்களை எண்ணிப்பார்.
13 அந்த உயர்ந்த சுவர்களைப் பார்.
சீயோனின் அரண்மனைகளை வியப்புடன் பார்.
வரும் தலைமுறைக்கு அதைப்பற்றி நீ கூறலாம்.
14 இந்த தேவன் என்றென்றும் உண்மையாகவே நமது தேவன்.
அவர் என்றென்றும் நம்மை வழி நடத்துவார்.
தாவீது தனது ஆட்களுடன் எப்ரோனுக்குச் செல்வது
2 பின்பு தாவீது கர்த்தருடைய அறிவுரையைக் கேட்டான். தாவீது, “நான் யூதாவின் நகரங்களுள் ஏதேனும் ஒரு நகரத்திற்குப் போகலாமா?” என்று கேட்டான்.
கர்த்தர் தாவீதிடம், “போகலாம்” என்றார். தாவீது, “எங்கு நான் போகட்டும்?” என்று கேட்டான். கர்த்தர், “எப்ரோனுக்கு” என்று பதிலளித்தார்.
2 எனவே, தாவீதும் அவனது இரண்டு மனைவியரும் எப்ரோனுக்குச் சென்றனர். (யெஸ்ரயேல் ஊராளான அகினோவாள் ஒரு மனைவி, மற்றொருத்தி கர்மேல் நாபாலின் விதவையாகிய அபிகாயில்) 3 தாவீது தம் ஆட்களையும் அவர்களின் குடும்பத்தாரையும் தம்மோடு அழைத்துச் சென்றான். அவர்கள் எல்லோரும் எப்ரோனிலும் அருகிலுள்ள ஊர்களிலும் குடியேறினார்கள்.
4 யூதாவின் மனிதர்கள் எப்ரோனுக்கு வந்து தாவீதை யூதாவின் ராஜாவாக அபிஷேகம் செய்தார்கள். அவர்கள் தாவீதிடம், “கீலேயாத்திலுள்ள யாபேசின் மனிதர்கள் சவுலைப் புதைத்தார்கள்” என்றனர்.
5 கீலேயாத்திலுள்ள யாபேசின் மனிதர்களிடம் தாவீது தூதுவர்களை அனுப்பினான். அந்த ஆட்கள் யாபேசின் மனிதர்களை நோக்கி, “சவுலின் சாம்பலைப்[a] புதைத்து உங்கள் ஆண்டவனாகிய சவுலுக்கு இரக்கம் காட்டியதால் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 6 கர்த்தர் உங்களிடம் இரக்கமாகவும் உண்மையாகவும் இருப்பாராக, நானும் உங்களுக்கு இரக்கம் காட்டுவேன். 7 இப்போது பலமும் தைரியமும் உடையவர்களாய் இருங்கள். உங்கள் ஆண்டவனாகிய சவுல் மரித்துவிட்டார். ஆனால் யூதா கோத்திரத்தினர் அவர்களுடைய ராஜாவாக என்னை அபிஷேகம் செய்திருக்கிறார்கள்” என்று தாவீது செய்தியைக் கூறியனுப்பினான்.
இஸ்போசேத் ராஜாவாவது
8 சவுலின் படைக்கு நேர் என்பவனின் குமாரனாகிய அப்னேர் தளபதியாக இருந்தான். சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தை அப்னேர் மகனாயீமுக்கு அழைத்துச்சென்று அவனை, 9 கீலேயாத், அஷூரியர், யெஸ்ரயேல், எப்பிராயீம், பென்யமீன், இஸ்ரவேல் எல்லாவற்றிற்கும் ராஜாவாக்கினான்.
10 இஸ்போசேத் சவுலின் குமாரன். அவன் இஸ்ரவேலை ஆளத் தொடங்கியபோது அவனுக்கு நாற்பது வயது, அவன் இரண்டு ஆண்டுகள் அரசாண்டான். ஆனால் யூதா கோத்திரத்தார் தாவீதைப் பின் பற்றினர். 11 தாவீதும் எப்ரோனில் ராஜாவாக இருந்தான். தாவீது 7 ஆண்டுகள் 6 மாதங்கள் யூதா கோத்திரத்தை அரசாண்டான்.
8 உங்களுக்கு வேண்டிய அனைத்தையும் நீங்கள் பெற்றிருப்பதாக நினைக்கிறீர்கள். நீங்கள் செல்வந்தர்களென எண்ணுகிறீர்கள். எங்கள் உதவியின்றி நீங்கள் ஆளுபவர்களாக விளங்குவதாகக் கருதுகிறீர்கள். நீங்கள் உண்மையிலேயே மன்னர்களாக விளங்க வேண்டுமென நான் விரும்புகிறேன். அப்போது, நாங்களும் உங்களோடுகூட ஆளுபவர்களாக இருந்திருப்போம். 9 ஆனால் தேவன் எனக்கும் பிற அப்போஸ்தலர்களுக்கும் கடைசியான இடத்தையே கொடுத்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. எல்லோரும் பார்த்திருக்க மரண தண்டனை அளிக்கப்பட்ட மனிதர்களைப் போன்றவர்கள் நாங்கள். தேவ தூதர்களும் மனிதர்களும் முழு உலகமும் பார்த்திருக்கும் ஒரு காட்சியைப் போன்றவர்கள் நாங்கள். 10 கிறிஸ்துவுக்கு நாங்கள் மூடர்கள். ஆனால் கிறிஸ்துவுக்குள் ஞானிகளாக நீங்கள் உங்களைக் கருதுகிறீர்கள். நாங்கள் பலவீனர்கள். ஆனால் நீங்கள் பலசாலிகளாக நினைக்கிறீர்கள். மக்கள் உங்களை கௌரவிக்கின்றனர். ஆனால் அவர்கள் எங்களை கௌரவப்படுத்துவதில்லை. 11 இப்போதும் குடிப்பதற்கும், உண்பதற்கும் தேவையான பொருள்கள் எங்களுக்குக் கிடைப்பதில்லை. எங்களுக்கு வேண்டிய ஆடைகள் இருப்பதில்லை. அவ்வப்போது பிறரால் அடிக்கப்படுகிறோம். எங்களுக்கு வீடுகள் இல்லை. 12 எங்களுக்குத் தேவையான உணவின்பொருட்டு எங்கள் கைகளால் கடினமாக உழைக்கிறோம். மக்கள் எங்களை சபிக்கிறார்கள். ஆனால் நாங்கள் அவர்களை ஆசீர்வதிக்கிறோம். நாங்கள் மோசமான முறையில் நடத்தப்படுகிறபோது பொறுமையுடன் சகித்துக்கொள்கிறோம். மக்கள் குறை கூறுகையில் பொறுத்துக்கொள்கிறோம். 13 மக்கள் எங்களைக் குறித்துத் தீமைகளைப் பேசினாலும், நாங்கள் அவர்களைக் குறித்து நல்லவற்றையே பேசுகிறோம். பூமியின் கழிவுப் பொருள்களாகவும், அழுக்காகவுமே மக்கள் எங்களை இதுவரைக்கும் நடத்தி வந்துள்ளனர்.
2008 by World Bible Translation Center