Revised Common Lectionary (Semicontinuous)
8 கர்த்தர் எலியாவிடம், 9 “சீதோனில் உள்ள சாறிபாத்துக்குப் போ. அங்கே இரு. கணவனை இழந்த ஒருத்தி அங்கே இருக்கிறாள். அவள் உனக்கு உணவு தருமாறு நான் கட்டளையிட்டிருக்கிறேன்” என்றார்.
10 எலியா சாறிபாத்துக்குப் போனான். நகர வாயிலுக்குள் நுழையும்போதே ஒரு பெண்ணைப் பார்த்தான். அவள் கணவன் மரித்துப்போயிருந்தான். அவள் விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள். எலியா அவளிடம், “நான் குடிக்க ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரமாட்டாயா?” என்ற கேட்டான். 11 அவள் தண்ணீர் கொண்டுவர போனபோது, அவன், “தயவு செய்து அப்பமும் கொண்டு வா” என்றான்.
12 அவளோ, “நான் தேவனாகிய கர்த்தர் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். என்னிடம் அப்பம் இல்லை. ஜாடியில் கொஞ்சம் மாவும், கலயத்தில் கொஞ்சம் எண்ணெயும் உள்ளது. நான் விறகு பொறுக்க வந்துள்ளேன். இதனால் எங்கள் கடைசி உணவை சமைத்து உண்டுவிட்டு பிறகு பசியால் நானும் என் குமாரனும் மரிக்கவேண்டும்” என்றாள்.
13 எலியா அந்தப் பெண்ணிடம், “கவலைப்படாதே, வீட்டிற்குப்போய் நான் சொன்னது போல சமையல் செய். உன்னிடம் உள்ள மாவால் ஒரு சிறு அப்பத்தைச் செய், அதனை எனக்குக் கொண்டு வா. பிறகு உங்களுக்கானதைச் செய்யலாம், 14 இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர், ‘அந்த ஜாடியில் உள்ள மாவு காலியாகாது, கலயத்திலும் எண்ணெய் குறையாது என்று கூறியுள்ளார். இது கர்த்தர் மழையைக் கொண்டு வரும்வரை நிகழும்’ என்கிறார்” என்றான்.
15 எனவே அந்தப் பெண் வீட்டிற்குத் திரும்பிச் சென்று எலியா சொன்னது போல் செய்தாள். எலியாவிற்கும் அந்தப் பெண்ணிற்கும் அவள் குமாரனுக்கும் பல நாட்களுக்குப் போதுமான உணவு இருந்தது. 16 அவளது ஜாடியும் பானையும் காலியாகாமல் இருந்தன. கர்த்தர் சொன்னபடியே எல்லாம் நடந்தது. கர்த்தர் எலியாவின் மூலம் பேசினார்.
17 கொஞ்ச நாள் ஆனதும் அப்பெண்ணின் குமாரன் அதிகமாக நோய்வாய்ப்பட்டான். இறுதியில் சுவாசிப்பதை நிறுத்தினான். 18 அப்பெண் எலியாவிடம், “நீர் ஒரு தீர்க்கதரிசி. எனக்கு உதவுவீரா. நீங்கள் இங்கு ஏன் வந்தீர்கள்? உங்களுக்கும் எனக்கும் என்ன தொடர்பு? என் பாவங்களை நினைவூட்டவும் என் குமாரனைக் கொல்லுவதற்குமா வந்தீர்கள்?” என்று கேட்டாள்.
19 எலியா அவளிடம், “உன் குமாரனை என்னிடம் கொடு” என்றான். பின் அவனைத் தூக்கிக்கொண்டு மேல் மாடிக்குப் படிவழியே ஏறிப்போனான். தனது அறையிலுள்ள படுக்கையில் அவனைக் கிடத்தினான். 20 பிறகு எலியா, “எனது தேவனாகிய கர்த்தாவே, இந்த விதவை எனக்குத் தங்க இடம் தந்தாள். அவளுக்கு இத்தீமையைச் செய்யலாமா? குமாரன் மரிக்க காரணம் ஆகலாமா?” 21 பின் அவன் மீது மூன்று முறை குப்புற விழுந்து, “எனது தேவனாகிய கர்த்தாவே! இவனை மீண்டும் பிழைக்கச் செய்வீராக!” என்றான்.
22 எலியாவின் வேண்டுதலுக்குக் கர்த்தர் பதிலளித்தார். அப்பையன் மீண்டும் உயிர் பிழைத்தான்! 23 எலியா அவனைத் தூக்கிக்கொண்டு கீழே வந்தான். அவன் அந்தப் பெண்ணிடம், “இதோ பார் உன் குமாரன் உயிரோடு இருக்கிறான்!” என்று கூறினான்.
24 அந்தப் பெண், “நீங்கள் உண்மையில் தேவனுடைய மனிதர் என்று நான் இப்போது அறிகிறேன். கர்த்தர் உங்கள் மூலமாக உண்மையில் பேசுகிறார்” என்றாள்.
146 கர்த்தரை துதி!
என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி!
2 என் வாழ்க்கை முழுவதும் நான் கர்த்தரைத் துதிப்பேன்.
என் வாழ்க்கை முழுவதும் நான் அவருக்குத் துதிகளைப் பாடுவேன்.
3 உதவிக்காக உங்கள் தலைவர்களை சார்ந்திராதீர்கள்.
ஜனங்களை நம்பாதீர்கள். ஏனெனில் ஜனங்கள் உங்களைக் காப்பாற்றமுடியாது.
4 ஜனங்கள் மரித்தபின் புதைக்கப்படுவார்கள்.
அப்போது உதவி செய்வதற்கான அவர்கள் திட்டங்கள் எல்லாம் மறைந்துபோகும்.
5 ஆனால் தேவனிடம் உதவி வேண்டுகிற ஜனங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
அந்த ஜனங்கள் அவர்களின் தேவனாகிய கர்த்தரை சார்ந்திருக்கிறார்கள்.
6 கர்த்தர் பரலோகத்தையும், பூமியையும் உண்டாக்கினார்.
கர்த்தர் கடலையும் அதிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினார்.
கர்த்தர் அவற்றை என்றென்றும் பாதுகாப்பார்.
7 ஒடுக்கப்பட்ட ஜனங்களுக்கு ஆண்டவர் நீதி வழங்குகிறார்.
தேவன் ஏழைகளுக்கு உணவளிக்கிறார்.
சிறைகளில் பூட்டி வைக்கப்பட்ட ஜனங்களை கர்த்தர் விடுவிக்கிறார்.
8 குருடர் மீண்டும் காண்பதற்கு கர்த்தர் உதவுகிறார்.
தொல்லையில் சிக்குண்ட ஜனங்களுக்கு கர்த்தர் உதவுகிறார்.
கர்த்தர் நல்லோரை நேசிக்கிறார்.
9 நம் நாட்டிலுள்ள அந்நியர்களை கர்த்தர் காப்பாற்றுகிறார்.
விதவைகளையும் அநாதைகளையும் கர்த்தர் கவனித்துக் காக்கிறார்.
ஆனால் கர்த்தர் தீயோரை அழிக்கிறார்.
10 கர்த்தர் என்றென்றும் அரசாளுவார்!
சீயோனே, உன் தேவன் என்றென்றும் எப்போதும் அரசாளுவார்!
கர்த்தரைத் துதியுங்கள்!
பவுலின் அதிகாரம் தேவனிடமிருந்து வந்தது
11 சகோதரர்களே, என்னால் பிரசங்கிக்கப்பட்ட நற்செய்தியானது மனிதர்களால் உருவாக்கப்பட்டதல்ல. இதனை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 12 நான் இந்த நற்செய்தியை மனிதர்களிடம் இருந்து பெறவில்லை. எந்த மனிதனும் நற்செய்தியை எனக்குக் கற்பிக்கவில்லை. இயேசு கிறிஸ்து இதனை எனக்குக் கொடுத்தார். மக்களிடம் நான் சொல்ல வேண்டும் என்பதற்காகவே அவர் எனக்கு வெளிப்படுத்தினார்.
13 நீங்கள் எனது கடந்த கால வாழ்வைப் பற்றி அறிந்திருக்கிறீர்கள். நான் யூதர்களின் மதத்தில் இருந்தேன். தேவனுடைய சபையை நான் மிகவும் துன்புறுத்தினேன். அதனை அழித்துவிட முயன்றேன். 14 நான் யூதர்களின் மதத்தில் தலைவனாக இருந்தேன். என் வயதுள்ள மற்ற யூதர்களைவிட நான் அதிகச் செயல்கள் செய்தேன். மற்றவர்களைவிட நான் பழைய மரபு விதிகளைக் கடுமையாகக் கடைப்பிடிக்க முயன்றேன். அவ்விதிகள் நமது முன்னோர்களிடமிருந்து நாம் பெற்றவை ஆகும்.
15 ஆனால் நான் பிறப்பதற்கு முன்னரே தேவன் எனக்காக வேறு ஒரு தனித் திட்டம் வைத்திருந்தார். அதனால் அவர் கிருபையாக என்னை அழைத்தார். அவரிடம் எனக்காக வேறு திட்டங்கள் இருந்தன. 16 நான் யூதர் அல்லாதவர்களிடம் போய் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியைப் போதிக்க வேண்டும் என்று தேவன் விரும்பினார். எனவே அவர் தமது குமாரனை எனக்கு வெளிப்படுத்தினார். தேவன் என்னை அழைத்த போது, வேறு எந்த மனிதரிடமிருந்தும் நான் ஆலோசனையோ, அறிவுரையோ கேட்கவில்லை. 17 எருசலேமில் உள்ள அப்போஸ்தலர்களையும் நான் போய்ப் பார்க்கவில்லை. அவர்கள் எல்லாம் எனக்கு முன்னரே அப்போஸ்தலர்களாய் இருக்கிறவர்கள். ஆனால் நான் யாருக்காகவும் காத்திருக்காமல் அரேபியாவுக்குப் போனேன். பிறகு அங்கிருந்து தமஸ்கு என்ற நகருக்குத் திரும்பிவந்தேன்.
18 மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, நான் எருசலேமுக்குப் போனேன். நான் பேதுருவைச்[a] சந்திக்க விரும்பினேன். அவரோடு பதினைந்து நாட்கள் நான் தங்கி இருந்தேன். 19 வேறு எந்த அப்போஸ்தலர்களையும் அங்கு நான் சந்திக்கவில்லை. இயேசுவின் சகோதரனான யாக்கோபை மட்டும் சந்தித்தேன். 20 நான் எழுதுபவை எல்லாம் பொய் அல்ல என்று தேவனுக்குத் தெரியும். 21 பிறகு சீரியா, சிலிசியா போன்ற பகுதிகளுக்கு நான் சென்றேன்.
22 யூதேயாவில் இருக்கிற சபைகளில் உள்ளவர்கள் என்னை இதற்கு முன்னால் பார்த்ததில்லை. 23 அவர்கள் என்னைப்பற்றி சிலவற்றைக் கேள்விப்பட்டிருந்தார்கள். அதாவது, “முன்பு நம்மைத் துன்பப்படுத்தியவனே தான் அழிக்க நினைத்த விசுவாசத்தைக் குறித்து இப்பொழுது பிரசங்கம் செய்கிறான்.” 24 எனவே விசுவாசிகள் என்னைக் குறித்து தேவனைப் புகழ்ந்தனர்.
மரித்தவன் எழுப்பப்படுதல்
11 மறுநாள் இயேசு நாயீன் என்னும் நகரத்திற்குச் சென்றார். இயேசுவின் சீஷர்களும், மிகப் பெரிய கூட்டமான மக்கள் பலரும் அவரோடு பிராயாணம் செய்தனர். 12 நகர வாசலை இயேசு நெருங்கியபோது ஒரு மரண ஊர்வலத்தைக் கண்டார். விதவையான ஒரு தாய் தனது ஒரே குமாரனை இழந்திருந்தாள். அவனது உடலைச் சுமந்து சென்றபோது தாயுடன் அந்நகர மக்கள் பலரும் கூட இருந்தனர். 13 கர்த்தர் (இயேசு) அவளைப் பார்த்தபோது, அவளுக்காக மனதுருகினார். இயேசு அவளிடம் சென்று, “அழாதே” என்றார். 14 பாடையின் அருகே வந்து இயேசு அதைத் தொட்டார். அந்தப் பாடையைச் சுமந்து வந்த மனிதர்கள் நின்றனர். இயேசு இறந்த மனிதனை நோக்கி, “இளைஞனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்கிறேன்” என்றார். 15 இறந்துபோன குமாரன் எழுந்து உட்கார்ந்து பேச ஆரம்பித்தான். அவனை அவன் தாயிடம், இயேசு ஒப்படைத்தார்.
16 எல்லா மக்களும் ஆச்சரியமுற்றனர். அவர்கள், “ஒரு மகா தீர்க்கதரிசி நம்மிடையே வந்துள்ளார்” என்றனர். மேலும் அவர்கள், “தேவன் தம் மக்களைக் கவனித்துக்கொள்கிறார்” என்றார்கள்.
17 இயேசுவைப் பற்றிய இச்செய்தி யூதேயா முழுவதும் அதைச் சூழ்ந்த எல்லா இடங்களிலும் பரவிற்று.
2008 by World Bible Translation Center