Revised Common Lectionary (Semicontinuous)
நினைவுகூரும் நாளுக்கான தாவீதின் பாடல்.
38 கர்த்தாவே, நீர் கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாதேயும்.
என்னை ஒழுங்குபடுத்துகையில் கோபமடையாதேயும்.
2 கர்த்தாவே, நீர் என்னைத் துன்புறுத்துகிறீர்.
உமது அம்புகள் என்னை ஆழமாகத் தாக்கியுள்ளன.
3 நீர் என்னைத் தண்டித்தீர்.
இப்போது என் உடல் முழுவதும் புண்களாயிருக்கின்றன.
நான் பாவம் செய்ததினால், நீர் என்னைத் தண்டித்தீர்.
என் எலும்புகள் எல்லாம் வலிக்கின்றன.
4 தீய காரியங்களைச் செய்ததினால் நான் குற்ற வாளியானேன்.
என் தோளில் அக்குற்றங்கள் பாரமாக உள்ளன.
5 நான் அறிவில்லாத காரியமொன்றைச் செய்தேன்.
இப்போது ஆறாத காயங்கள் என்னில் உள்ளன.
6 நான் குனிந்து வளைந்தேன்.
நாள் முழுவதும் நான் வருத்தமடைந்திருக்கிறேன்.
7 காய்ச்சலினாலும் வலியினாலும்
என் உடல் முழுவதும் துன்புறுகிறது.
8 நான் பெரிதும் தளர்ந்து போகிறேன்.
வலியினால் முனகவும், அலறவும் செய்கிறேன்.
9 என் ஆண்டவரே, என் அலறலின் சத்தத்தைக் கேட்டீர்.
என் பெருமூச்சு உமக்கு மறைவாயிருக்கவில்லை.
10 என் காய்ச்சலினால் என் பெலன் மறைந்தது.
என் பார்வை பெரிதும் மங்கிப் போயிற்று.
11 என் நோயினிமித்தம் என் நண்பர்களும், அயலகத்தாரும் என்னைச் சந்திப்பதில்லை.
என் குடும்பத்தாரும் என்னை நெருங்குவதில்லை.
12 என் பகைவர்கள் என்னைக் குறித்துத் தீய காரியங்களைச் சொல்கிறார்கள்.
பொய்யையும், வதந்திகளையும் அவர்கள் பரப்புகிறார்கள்.
என்னைக் குறித்து எப்போதும் பேசுகிறார்கள்.
13 நான் கேட்கமுடியாத செவிடனைப் போலானேன்.
நான் பேசமுடியாத ஊமையைப் போலானேன்.
14 நான், ஒருவனைக் குறித்தும் பிறர் கூறுபவற்றைக் கேட்க முடியாத மனிதனைப் போலானேன்.
என் பகைவர்கள் தவறு செய்கிறார்கள் என்பதை நிரூபிக்க என்னால் இயலவில்லை.
15 கர்த்தாவே எனக்கு ஆதரவளியும்.
எனது தேவனாகிய ஆண்டவரே, நீர் எனக்காகப் பேச வேண்டும்.
16 நான் ஏதேனும் பேசினால், என் பகைவர்கள் என்னைப் பார்த்து நகைப்பார்கள்.
நான் நோயுற்றிருப்பதை அவர்கள் காண்பார்கள்.
செய்த தவற்றிற்கு நான் தண்டனை அனுபவிப்பதாக அவர்கள் கூறுவார்கள்.
17 தீயக் காரியங்களைச் செய்த குற்றவாளி நான் என்பதை அறிவேன்.
என் நோவை என்னால் மறக்க இயலாது.
18 கர்த்தாவே, நான் செய்த தீயக் காரியங்களைக் குறித்து உம்மிடம் பேசினேன்.
என் பாவங்களுக்காகக் கவலையடைகிறேன்.
19 என் பகைவர்கள் உயிரோடும் ஆரோக்கியத்தோடும் இருக்கிறார்கள்.
அவர்கள் பல பல பொய்களைக் கூறியுள்ளார்கள்.
20 என் பகைவர்கள் எனக்குத் தீயக் காரியங்களைச் செய்தனர்.
ஆனால் நான் அவர்களுக்கு நல்லவற்றையே செய்தேன்.
நான் நல்லவற்றை மட்டுமே செய்ய முயன்றேன், ஆனால் அந்த ஜனங்கள் எனக்கெதிராகத் திரும்பினார்கள்.
21 கர்த்தாவே, என்னை விட்டு விலகாதேயும்.
என் தேவனே, என் அருகே தங்கியிரும்.
22 விரைந்து வந்து எனக்கு உதவும்!
என் தேவனே, என்னை மீட்டருளும்.
தேவன் அவரது ஜனங்களுக்கு உதவுவார்
18 கர்த்தர் அவரது இரக்கத்தை உங்கள்மீது காட்ட விரும்புகிறார். கர்த்தர் காத்துக்கொண்டிருக்கிறார். கர்த்தர் எழுந்து உங்களுக்கு ஆறுதல் செய்ய விரும்புகிறார். தேவனாகிய கர்த்தர் நீதி செய்கிறார். கர்த்தருடைய உதவிக்காகக் காத்திருக்கிற ஒவ்வொருவரும் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
19 சீயோன் மலையின் மேலுள்ள எருசலேமில் கர்த்தருடைய ஜனங்கள் வாழுவார்கள். நீங்கள் தொடர்ந்து அழுதுகொண்டிருக்கமாட்டீர்கள். கர்த்தர் உங்களுடைய அழுகையைக் கேட்டு ஆறுதல் செய்வார். கர்த்தர் உங்களுக்குச் செவிகொடுப்பார். அவர் உங்களுக்கு உதவுவார்.
20 கடந்த காலத்தில், எனது ஆண்டவர் (தேவன்) உங்களுக்குத் துன்பமும், தொல்லைகளும் கொடுத்தார். அது உங்களுக்கு தினமும் உண்ணும் அப்பம் போன்றும் தண்ணீர் போன்றும் இருந்தது. ஆனால் தேவன் உங்கள் ஆசிரியர். அவர் உன்னிடமிருந்து இனி தொடர்ந்து ஒளிந்துகொள்ளமாட்டார். நீ உனது ஆசிரியரை உனது சொந்தக் கண்ணால் பார்க்கலாம். 21 பிறகு, நீ தவறு செய்தால், தவறான வழியில் போனால் (வாழ்ந்தால்), (இடது பக்கமாகவோ வலது பக்கமாகவோ) நீ உனக்கு பின்னால், “இதுதான் சரியான வழி. இந்த வழியில் நீ போக வேண்டும்” என்ற ஒரு ஓசையைக் கேட்பாய்.
22 உங்களிடம் பொன்னாலும், வெள்ளியாலும் மூடப்பட்ட சிலைகள் உள்ளன. அந்த பொய்த் தெய்வங்கள் உங்களை கறைப்படுத்தியுள்ளது. ஆனால் அந்தப் பொய்த் தெய்வங்களுக்குச் சேவை செய்வதை நிறுத்துவீர்கள். நீ அந்த தெய்வங்களைத் தீட்டுப்பட்ட ஆடைபோல தூர எறிவாய்.
23 அந்தக் காலத்தில், உனக்காக கர்த்தர் மழையை அனுப்புவார். பூமியில் நீ விதைகளை விதைக்கலாம். பூமி உனக்காக உணவை விளைய வைக்கும். நீ ஒரு பெரிய அறுவடையைச் செய்வாய். உங்கள் மிருகங்களுக்கு வயலில் ஏராளமான உணவு இருக்கும். உன் ஆடுகளுக்கு அகலமான மேய்ச்சல் இடம் இருக்கும். 24 உனது எருதுகளுக்கும் கழுதைகளுக்கும் தேவையான உணவு கிடைக்கும். அங்கு ஏராளமான உணவு இருக்கும். உன் மிருகங்கள் உண்பதற்கு முறத்தாலும், தூற்றுக் கூடையாலும் தூற்றப்பட்ட கப்பிகள் உன்னிடம் இருக்கும். 25 ஒவ்வொரு மலையிலும் மேடுகளிலும் தண்ணீர் நிறைந்த ஓடைகள் இருக்கும். இவை ஏராளமான ஜனங்கள் கொல்லப்பட்ட பிறகு, கோபுரங்கள் தரையிலே விழுந்த பிறகு நிகழும்.
26 அந்தக் காலத்திலே, சந்திரனிலிருந்து வருகிற ஒளியானது சூரியனின் ஒளிபோல இருக்கும். சூரியனின் ஒளியானது இப்பொழுது இருப்பதைவிட ஏழு மடங்கு மிகுதியாக இருக்கும். சூரியனிலுள்ள ஒரு நாள் வெளிச்சம் ஒரு வாரம் (ஏழு நாள்) வெளிச்சம்போல் இருக்கும். இவை கர்த்தர் தமது உடைந்துபோன ஜனங்களின் அடிகளினிமித்தம் கட்டுகள் கட்டி அவற்றின் அடிக்காயத்தைக் குணமாக்கும்போது நிகழும்.
லிஸ்திரா, தெர்பை நகர ஊழியம்
8 பாதங்களில் ஊனமுற்ற மனிதன் ஒருவன் லிஸ்தீராவில் இருந்தான். அவன் பிறவியிலேயே ஊனமுற்றவன். 9 அவன் அங்கு உட்கார்ந்துகொண்டு பவுல் பேசுவதைக் கேட்டுக்கொண்டேயிருந்தான். பவுல் அவனைப் பார்த்தான். தேவன் அவனைக் குணப்படுத்த முடியும் என்பதை அம்மனிதன் நம்பியதைப் பவுல் கண்டான். 10 எனவே பவுல் உரக்க, “எழுந்து உன் கால்களால் நில்” என்றான். அம்மனிதன் குதித்தெழுந்து சுற்றிலும் நடக்க ஆரம்பித்தான்.
11 பவுல் செய்ததை மக்கள் கூட்டத்தினர் கண்டபோது, அவர்கள் லிக்கோனிய மொழியில் சத்தமிட்டனர். அவர்கள், “தேவர்கள் மனிதரைப்போன்று மாறியுள்ளனர்! அவர்கள் நம்மிடம் இறங்கி வந்துள்ளனர்!” என்றனர். 12 மக்கள் பர்னபாவை “சீயெஸ்” என அழைக்கத் தொடங்கினர். பவுல் முக்கிய பேச்சாளராக இருந்ததால், அவர்கள் பவுலை “ஹெர்ம்ஸ்” என்றழைத்தனர். 13 சீயஸின் தேவாலயம் நகரத்தினருகில் இருந்தது. தேவாலயத்தின் பூசாரி சில காளைகளையும் மாலைகளையும் நகரக் கதவுகளுக்கருகே கொண்டுவந்தான். பவுலையும் பர்னபாவையும் வழிபடுவதற்கு பூசாரிகளும் மக்களும் பலி செலுத்த விரும்பினர்.
14 அப்போஸ்தலராகிய பர்னபாவும் பவுலும் மக்கள் செய்துகொண்டிருப்பதைப் புரிந்துகொண்டதும் அவர்கள் தங்கள் ஆடைகளைக் கிழித்தனர். [a] பின் அவர்கள் கூட்டத்தினர் மத்தியில் ஓடி, அவர்களிடம் உரத்த குரலில், 15 “மனிதரே ஏன் இவற்றையெல்லாம் செய்கிறீர்கள்? நாங்கள் தேவர்கள் அல்ல. உங்களைப்போன்ற மனிதர்கள்தான். எங்களுக்கும் உணர்வுகள் உங்களைப்போலவே உண்டு. உங்களுக்கு நற்செய்தியைச் சொல்ல நாங்கள் வந்தோம். பயனற்ற இந்தக் காரியங்களை விட்டுவிலகும்படியாக நாங்கள் உங்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். உண்மையான ஜீவனுள்ள தேவனிடத்திற்குத் திரும்புங்கள். அவரே வானம், பூமி, கடல், அவற்றிலுள்ள பொருட்கள் அனைத்தையும் உண்டாக்கியவர்.
16 “முன்பு எல்லா தேசங்களும் அவை விரும்பியவற்றைச் செய்வதற்கு தேவன் அனுமதித்தார். 17 ஆனால் அதே சமயம் தேவன் உண்மையானவர் என்பதை நிறுவும் காரியங்களையே தேவன் செய்தார். அவர் உங்களுக்கு நல்லவற்றையே செய்கிறார். அவர் வானிலிருந்து உங்களுக்கு மழையைத் தருகிறார். அவர் தக்க காலங்களில் உங்களுக்கு நல்ல அறுவடையைக் கொடுக்கிறார். அவர் மிகுதியான உணவை உங்களுக்குத் தருகிறார். அவர் உங்கள் இருதயங்களை மகிழ்ச்சியால் நிரப்புகிறார்” என்றனர்.
18 பவுலும் பர்னபாவும் மக்களுக்கு இவற்றைக் கூறினர். ஆனாலும் அவர்களை வழிபடுவதற்காக அவர்கள் இட்ட பலியை அநேகமாக பவுலும் பர்னபாவும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
2008 by World Bible Translation Center