Revised Common Lectionary (Semicontinuous)
செமினீத்தால் நரம்புக் கருவிகளை இசைப்போரின் இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்
6 கர்த்தாவே, கோபத்தில் என்னைக் கண்டிக்காதிரும்.
என் மீது கோபமடையாமலும் என்னைத் தண்டியாமலும் இரும்.
2 கர்த்தாவே, என்னிடம் தயவாயிரும். நான் நோயுற்றுத் தளர்ந்தேன்.
என்னைக் குணமாக்கும்!
என் எலும்புகள் நடுங்குகின்றன.
3 என் முழு உடம்பும் நடுங்குகிறது.
கர்த்தாவே, நீர் என்னைக் குணப்படுத்த எவ்வளவு காலம் நீடிக்கும்?
4 கர்த்தாவே, என்னை வலிமையாக்கும்.
நீர் தயவுள்ளவர், என்னைக் காப்பாற்றும்.
5 கல்லறையிலுள்ள மரித்த மனிதர்கள் உம்மை நினையார்கள்.
மரணத்தின் இடத்திலுள்ள ஜனங்கள் உம்மைத் துதிக்கமாட்டார்கள்.
எனவே என்னை நீர் குணமாக்கும்!
6 கர்த்தாவே, இரவு முழுவதும் நான் உம்மிடம் ஜெபம் செய்தேன்.
என் கண்ணீரால் என் படுக்கை நனைந்தது.
என் படுக்கையிலிருந்து கண்ணீர் சிந்துகின்றது.
உம்மை நோக்கி அழுவதால் நான் பெலனற்றுப்போகிறேன்.
7 எனது பகைவர்கள் எனக்குத் துன்பம் பல செய்தனர்.
வருத்தத்தால் என் துயரம் பெருகிற்று.
தொடர்ந்து அழுவதினால் என் கண்கள் சோர்ந்தன.
8 தீயோரே அகன்று போங்கள்!
ஏனெனில் கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்.
9 கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்.
கர்த்தர் என் ஜெபத்தைக் கேட்டு பதில் தந்தார்.
10 எனது எதிரிகள் எல்லோரும் மனமுடைந்து கலங்கினார்கள்.
ஏதோ திடீரென நிகழும், அவர்கள் வெட்கமுற்றுத் திரும்பிச் செல்வார்கள்.
16 “இப்போது என் உயிர் நீங்கும் நிலையில் உள்ளது.
நான் விரைவில் மடிவேன்.
துன்பத்தின் நாட்கள் என்னைப் பற்றிக்கொண்டன.
17 என் எலும்புகள் எல்லாம் இரவில் வலிக்கின்றன.
என்னைக் கடித்துக்குதறும் வேதனை நிற்கவேயில்லை.
18 தேவன் என் மேற்சட்டையின் கழுத்துப் பட்டையைப் பற்றியிழுத்து
என் ஆடைகளை உருவின்றி சிதைத்தார்.
19 தேவன் என்னைச் சேற்றினுள் தள்ளினார்.
நான் அழுக்கைப் போன்றும் சாம்பலைப் போன்றும் ஆனேன்.
20 “தேவனே, உம்மிடம் உதவிக்காக வேண்டுகிறேன், ஆனால் நீர் பதிலளிப்பதில்லை.
நான் எழுந்து நின்று ஜெபம் செய்கிறேன், ஆனால் நீர் என்னிடம் பாராமுகமாயிருக்கிறீர்.
21 தேவனே, நீர் என்னிடம் கொடுமையாக நடந்தீர்.
என்னைத் தாக்குவதற்கு நீர் உமது வல்லமையைப் பயன்படுத்தினீர்.
22 தேவனே, பலத்த காற்று என்னைப் பறக்கடிக்குமாறு செய்தீர்.
புயலில் நீர் என்னை வெளியே வீசினீர்.
23 நீர் என்னை மரணத்திற்கு வழி நடத்துவீர் என அறிவேன்.
ஒவ்வொரு மனிதனும் மடிய (மரிக்க) வேண்டும்.
24 “ஆனால், ஏற்கெனவே அழிந்தவனை
மீண்டும் நிச்சயமாய் ஒருவனும் தாக்கமாட்டான்.
25 தேவனே, தொல்லைகளுள்ள ஜனங்களுக்காக நான் அழுதேன் என்பதை நீர் அறிவீர்.
ஏழைகளுக்காக என் இருதயம் துயருற்றது என்பதை நீர் அறிவீர்.
26 நான் நல்லவற்றை எதிர்பார்த்தபோது, தீயவை நேர்ந்தன.
நான் ஒளியைத் தேடியபோது, இருள் வந்தது.
27 நான் உள்ளே கிழிந்துபோனேன், என் துன்பம் நிற்கவில்லை.
இன்னும் வரப்போகும் துன்பங்கள் மிகுதி.
28 நான் எப்போதும் துக்கமாயிருக்கிறேன், அதனால் நான் எந்த ஆறுதலும் பெறவில்லை.
நான் சபையில் எழுந்து நின்று, உதவிக்காகக் கூக்குரலிட்டேன்.
29 நான் காட்டு நாய்களைப்போலவும்
நெருப்புக் கோழிகளைபோலவும் தனித்தவனானேன்.
30 என் தோல் நெருப்பினால் எரிந்து உரிந்து கழன்றுபோகிறது.
என் உடல் காய்ச்சலால் சுடுகிறது.
31 துக்கமான பாடல்களைப் பாட என் தம்புரு மீட்டப்பட்டுள்ளது.
துக்கமான அழுகையைப் போன்று என் புல்லாங்குழலின் குரல் ஒலிக்கிறது.
46 கலிலேயாவிலுள்ள கானா என்ற ஊருக்கு இயேசு மீண்டும் சென்றார். ஏற்கெனவே அவர் அங்குதான் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியிருந்தார். அரசனின் முக்கியமான அதிகாரி ஒருவன் கப்பர்நகூமில் வசித்து வந்தான். அவனது மகன் நோயுற்றிருந்தான். 47 அந்த மனிதன், இயேசு இப்பொழுது யூதேயா நாட்டிலிருந்து கலிலேயாவுக்கு வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டான். ஆகையால் அவன் கானா ஊருக்குப் போய் இயேசுவைச் சந்தித்தான். கப்பர்நகூமுக்கு வந்து தன் மகனது நோயைக் குணமாக்கும்படி இயேசுவை வேண்டினான். அவனது மகன் ஏற்கெனவே சாகும் நிலையில் இருந்தான். 48 “நீங்கள் அற்புதங்களையும் அதிசயங்களையும் காணாவிட்டால் என்னை நம்பமாட்டீர்கள்” என்று இயேசு சொன்னார்.
49 அந்த அதிகாரியோ, “ஐயா, என் சிறிய மகன் சாவதற்கு முன் என் வீட்டிற்கு வாருங்கள்” என்று அழைத்தான்.
50 அதற்கு இயேசு, “போ, உன் மகன் பிழைப்பான்” என்றார்.
அந்த மனிதன் இயேசு சொன்னதில் நம்பிக்கை வைத்து தன் வீட்டிற்குத் திரும்பினான். 51 வழியில் அவனது வேலைக்காரர்கள் எதிரில் வந்தார்கள். “உங்கள் மகன் குணமாகிவிட்டான்” என்று அவர்கள் சொன்னார்கள்.
52 “என் மகன் எப்போது குணமாகத் தொடங்கினான்?” என்று கேட்டான் அவன். “நேற்று ஒருமணி இருக்கும்போது உங்கள் மகனின் காய்ச்சல் விலகி குணமானது” என்றார்கள் வேலைக்காரர்கள்.
53 இயேசு, “உன் மகன் பிழைப்பான்” என்று சொன்ன நேரமும் ஒரு மணிதான் என்பதை அந்த அதிகாரி உணர்ந்துகொண்டான். ஆகையால் அவனும் அவனது வீட்டில் உள்ள அனைவரும் இயேசுவின்மீது விசுவாசம் வைத்தனர்.
54 யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்த பிறகு, இயேசு செய்த இரண்டாவது அற்புதம் இது.
2008 by World Bible Translation Center