Revised Common Lectionary (Semicontinuous)
தாவீது பாடிய பாடல்களுள் ஒன்று. ஆலயத்தின் அர்ப்பணிப்புக்காகப் பாடிய பாடல்.
30 கர்த்தாவே, என் தொல்லைகளினின்று என்னை விடுவித்தீர்.
எனது பகைவர்கள் என்னைத் தோற்கடித்து என்னை நோக்கி நகைக்காமல் இருக்கச் செய்தீர்.
எனவே நான் உம்மை கனப்படுத்துவேன்.
2 என் தேவனாகிய கர்த்தாவே, நான் உம்மிடம் ஜெபித்தேன்.
நீர் என்னைக் குணமாக்கினீர்.
3 கல்லறையினின்று என்னை விடுவித்தீர்.
என்னை வாழவிட்டீர்.
குழிகளில் இருக்கும் பிணங்களோடு நான் தங்கியிருக்க நேரவில்லை.
4 தேவனைப் பின்பற்றுவோர் கர்த்தருக்குத் துதிகளைப் பாடுவார்கள்!
அவரது பரிசுத்த நாமத்தைத் துதியுங்கள்!
5 தேவன் கோபங்கொண்டார். அதன் முடிவு “மரணமே”.
ஆனால் அவர் அன்பை வெளிப்படுத்தினார், எனக்கு “உயிரைக்” கொடுத்தார்.
இரவில் அழுதபடி படுத்திருந்தேன்.
மறுநாள் காலையில் மகிழ்ச்சியோடு பாடிக்கொண்டிருந்தேன்!
6 இப்போது இவ்வாறு நான் கூறமுடியும்.
அது உண்மையென நிச்சயமாய் நான் அறிவேன்.
“நான் ஒருபோதும் தோற்கடிக்கப்படமாட்டேன்!”
7 கர்த்தாவே, என்னிடம் தயவாயிருந்தீர்.
எதுவும் என்னை வெல்ல முடியாது என உணர்ந்தேன்.
சிலகாலம், நீர் என்னை விட்டு விலகினீர்,
நான் மிகவும் பயந்தேன்.
8 தேவனே, நான் உம்மிடம் திரும்பி ஜெபித்தேன்.
எனக்கு இரக்கம் காட்டுமாறு வேண்டினேன்.
9 நான், “தேவனே, நான் மரித்துக் கல்லறைக்குள் அடக்கம் பண்ணப்பட்டால் என்ன பயன்?
மரித்தோர் புழுதியில் கிடப்பார்கள்.
அவர்கள் உம்மைத் துதிப்பதில்லை!
என்றென்றும் தொடரும் உம் நன்மையை அவர்கள் பேசார்கள்” என்றேன்.
10 கர்த்தாவே என் ஜெபத்தைக் கேளும்.
என்னிடம் தயவாயிரும்!
கர்த்தாவே, எனக்கு உதவும்.
11 நான் ஜெபித்தேன், நீர் எனக்கு உதவினீர்!
என் அழுகையை நடனக்களிப்பாய் மாற்றினீர்.
அழுகையின் ஆடைகளை நீர் அகற்றிப்போட்டீர்.
மகிழ்ச்சியால் என்னைப் பொதிந்து வைத்தீர்.
12 எனது தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றும் நான் துதிப்பேன்.
ஒருபோதும் அமைதியாயிராமல் நான் இதைச் செய்வேன்.
எப்போதும் யாராவது ஒருவர் உம்மை கனப்படுத்திக் கொண்டிருப்பார்கள்.
தொழுநோயாளியைச் சுத்தப்படுத்துவதற்கான விதிகள்
14 மேலும் கர்த்தர் மோசேயிடம், 2 “இவை தொழுநோயாளிகள் குணமாவதற்கும், அவர்களைச் சுத்தப்படுத்துவதற்குமுரிய விதி முறைகளாகும்.
“தொழுநோயுள்ள ஒருவனை ஆசாரியன் சோதித்துப் பார்க்க வேண்டும். 3 ஆசாரியன் கூடாரத்திற்கு வெளியே போய் அவன் நோய் குணமாகிவிட்டதா என்று பார்க்க வேண்டும். 4 அவனது நோய் குணமாகியிருந்தால் அவனிடம் கீழ்க்கண்டவற்றை செய்யும்படி கூறவேண்டும். முதலில் சுத்தமான இரண்டு குருவிகளையும், கேதுருக் கட்டைகளையும், சிவப்பு நூலையும், ஈசோப்பையும் வாங்கி வரவேண்டும். 5 பின்னர், ஆசாரியன் அதில் ஒரு குருவியை மண்பாண்டத்தில் உள்ள ஊற்று தண்ணீரில் கொல்ல வேண்டும். 6 அடுத்து ஆசாரியன், உயிருள்ள குருவியையும் அதோடு கேதுரு கட்டையையும் சிவப்பு நூலையும் ஈசோப்பையும் எடுத்து அதில் கொல்லப்பட்டக் குருவியின் இரத்தத்தைத் தோய்க்க வேண்டும். 7 பின் ஆசாரியன் நோய் நீங்கப்பட்டவனின் மேல் ஏழுதரம் தெளித்து அவனைச் சுத்தப்படுத்த வேண்டும். பிறகு ஆசாரியன் அவனைத் தீட்டில்லாதவன் என அறிவிக்க வேண்டும். பின் ஆசாரியன் திறந்த நிலப்பரப்பிற்கு சென்று உயிருள்ள குருவியை விட்டுவிட வேண்டும்.
8 “பிறகு அவன் தன் ஆடைகளை துவைத்து, தன் முடியை மழித்துக்கொண்டு, தண்ணீரில் குளிக்க வேண்டும். பின்னரே அவன் சுத்தமாவான். அதன் பின் அவன் கூடாரத்திற்குள் செல்லலாம். ஆனால் அவன் ஏழு நாட்கள் கூடாரத்திற்கு வெளியிலேயே தங்கவேண்டும். 9 ஏழாவது நாள் அவன் தன் தலை முடி, தாடி, புருவம் என அனைத்து முடியையும் மழித்துவிட வேண்டும். பின் தன் ஆடைகளைத் துவைத்துக் குளிக்க வேண்டும். இதன்பின் அவன் சுத்தமாவான்.
10 “எட்டாவது நாள், எவ்விதமான குறையுமற்ற இரண்டு ஆட்டுக் குட்டிகளையும், ஒரு வயதான எக்குறையுமில்லாத பெண் ஆட்டுக்குட்டியையும் தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவன் தானியக் காணிக்கைக்காக கொண்டு வரவேண்டும். இருபத்து நான்கு கிண்ணங்கள் எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவையும், ஆழாக்கு ஒலிவ எண்ணெயையும் கொண்டு வரவேண்டும். 11 அவனை தீட்டில்லாதவன் என்று அறிவித்த அதே ஆசாரியன் நோயுற்றவனையும் அவனது பலிப் பொருட்களையும் கர்த்தருக்கு முன்னால் ஆசரிப்புக் கூடாரத்திற்கு கொண்டு வர வேண்டும். 12 ஆசாரியன் ஒரு ஆண் ஆட்டுக்குட்டியை குற்ற பரிகார பலியாக செலுத்த வேண்டும். அவன் அதனையும் சிறிது எண்ணெயையும் அசைவாட்டும் பலியாகப் பயன்படுத்த வேண்டும். 13 பிறகு ஒரு ஆண் ஆட்டுக்குட்டியை பாவப் பரிகார பலியையும் தகனபலியையும் கொல்லுகிற பரிசுத்த இடத்தில் கொல்ல வேண்டும். குற்ற நிவாரண பலியானது பாவப்பரிகார பலி போன்றதாகும். அது ஆசாரியனுக்குரியது. அது மிகவும் பரிசுத்தமானது.
14 “ஆசாரியன் குற்ற பரிகார பலியின் இரத்தத்தில் சிறிதளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதனைச் சுத்திகரிக்கப்பட வேண்டியவனின் வலது காது நுனியில் தடவ வேண்டும். அது அவனைச் சுத்தமாக்கும். பிறகு கொஞ்சம் இரத்தத்தை அவனது வலது கையின் பெருவிரலிலும், வலதுகால் பெரு விரலிலும் தடவ வேண்டும். 15 மேலும் ஆசாரியன் எண்ணெயை எடுத்து தனது இடது உள்ளங்கையில் ஊற்றி 16 வலது கை விரலில் தொட்டு ஏழுமுறை கர்த்தரின் சந்நிதியில் தெளிக்க வேண்டும். 17 பிறகு ஆசாரியன் தன் உள்ளங்கையில் உள்ள மீதி எண்ணெயை எடுத்து சுத்திகரிக்கப்படவேண்டியவனின் வலது காது நுனியிலும், வலது கை பெருவிரலிலும், வலது கால் பெருவிரலிலும் தடவ வேண்டும். 18 மேலும் மீதியுள்ள எண்ணெயை அவனது தலையிலே தடவ வேண்டும். இவ்வாறு, ஆசாரியன் கர்த்தருக்கு முன்பாக அவனைச் சுத்தப்படுத்தி விடுகிறான்.
19 “பின் ஆசாரியன் பாவப்பரிகார பலியைச் செலுத்தி சுத்திகரிக்கப்படவேண்டியவனின் தீட்டு நீங்க அவனுக்குப் பாவப்பரிகாரம் செய்துவிட வேண்டும். 20 பின்பு தகன பலிக்குரிய மிருகத்தைக் கொன்று அதனோடு தானியக் காணிக்கையையும் பலிபீடத்தின்மேல் வைத்து அவனுக்காகப் பாவப்பரிகாரம் செய்ய வேண்டும். அப்போது அவன் சுத்தமாவான்.
ஸ்கேவாவின் பிள்ளைகள்
11 சில அசாதாரணமான அற்புதங்களைச் செய்வதற்கு தேவன் பவுலைப் பயன்படுத்தினார். 12 பவுல் பயன்படுத்திய துணிகளையும் கைக்குட்டைகளையும் சிலர் எடுத்துச் சென்றனர். இவற்றை மக்கள் நோயாளிகள் மீது வைத்தனர். அவர்கள் இதைச் செய்தபோது, நோயாளிகள் குணமடைந்தார்கள். அசுத்த ஆவிகள் அவர்களைவிட்டு நீங்கிச் சென்றன.
13-14 சில யூதர்களும் சுற்றுப் பிரயாணம் செய்து மக்களை விட்டு அசுத்த ஆவிகள் நீங்கும்படியாகச் செய்தனர். ஸ்கேவாவின் ஏழு மகன்களும் இதைச் செய்தனர். (ஸ்கேவா ஒரு தலைமை ஆசாரியன்) கர்த்தர் இயேசுவின் பெயரைப் பயன்படுத்தி, மக்களிடமிருந்து அசுத்த ஆவிகளை வெளியேற்ற இந்த யூதர்கள் முயன்றனர். அவர்கள் எல்லோரும், “பவுல் பேசுகின்ற அதே இயேசுவினால், வெளியேறுமாறு நான் கட்டளையிடுகிறேன்!” என்று கூறினர்.
15 ஆனால் ஒருமுறை ஓர் அசுத்த ஆவி இந்த யூதர்களை நோக்கி, “எனக்கு இயேசுவைத் தெரியும், எனக்குப் பவுலைப் பற்றியும் தெரியும், ஆனால் நீங்கள் யார்?” என்று கேட்டது.
16 மேலும் அசுத்த ஆவி பிடித்த மனிதன், இந்த யூதர்கள் மீது தாவினான். அவர்கள் எல்லோரைக் காட்டிலும் அவன் மிகுந்த பலம் பொருந்தியவனாக இருந்தான். அவன் அவர்களை அடித்து, அவர்களின் ஆடைகளைக் கிழித்துப்போட்டான். அந்த வீட்டிலிருந்து இந்த யூதர்கள் நிர்வாணமாக ஓடிப் போனார்கள்.
17 எபேசுவின் எல்லா ஜனங்களும், யூதரும் கிரேக்கரும் இதனை அறிந்தனர். தேவனிடம் மிகுந்த மரியாதை கொள்ளத் துவங்கினர். கர்த்தராகிய இயேசுவின் பெயரை மக்கள் அதிகமாக மகிமைப்படுத்த ஆரம்பித்தனர்.
18 விசுவாசிகளில் பலர் தாங்கள் செய்த பாவச் செயல்களை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத் துவங்கினார்கள். 19 சில விசுவாசிகள் மந்திரத்தைப் பயன்படுத்தினவர்களாயிருந்தனர். அவர்கள் தங்கள் மந்திர நூல்களைக் கொண்டு வந்து, அவற்றை எல்லோருக்கும் முன்பாக எரித்தனர். அப்புத்தகங்கள் சுமார் ஐம்பதாயிரம் வெள்ளிக் காசுகள் மதிப்புடையனவாக இருந்தன. 20 இவ்வாறே கர்த்தரின் வார்த்தை மிக்க வல்லமை வாய்ந்த வகையில் அதிகமான மக்களைப் பாதிக்க ஆரம்பித்தது. மிக அதிக எண்ணிக்கையில் மக்கள் விசுவாசம் வைத்தனர்.
2008 by World Bible Translation Center