Revised Common Lectionary (Semicontinuous)
நோவாவும் பெருவெள்ளமும்
9 இது நோவாவின் குடும்பத்தைப்பற்றிக் கூறுகின்ற பகுதி. நோவா நேர்மையான மனிதனாக இருந்தான். அவன் தன்னைச் சுற்றியுள்ள ஜனங்களில் குற்றமற்றவனாக இருந்தான். அவன் எப்பொழுதும் தேவனைப் பின்பற்றி வாழ்ந்தான். 10 அவனுக்கு சேம், காம், யாப்பேத் எனும் மூன்று மகன்கள் இருந்தனர்.
11-12 தேவன் பூமியைப் பார்த்தார். அது மனிதர்களால் கெடுக்கப்பட்டிருப்பதை அறிந்தார். எங்கும் வன்முறை பரவியிருந்தது. ஜனங்கள் பாவிகளாகவும், கொடூரமானவர்களாகவும் மாறியிருந்தனர். அவர்கள் பூமியில் தம் வாழ்க்கையையும் கெடுத்திருந்தனர்.
13 எனவே, தேவன் நோவாவிடம், “எல்லோரும் பூமியில் பாவத்தையும் வன்முறையையும் பரவ வைத்துள்ளனர். எனவே நான் எல்லா உயிர்களையும் அழித்து, அவற்றை பூமியிலிருந்து விலக்குவேன். 14 கொப்பேர் மரத்தைப் பயன்படுத்தி நீயே ஒரு பெரிய கப்பலைச் செய். அதில் பல அறைகளை ஏற்படுத்து. உள்ளும் புறம்புமாகத் தார் பூசி விடு.
15 “கப்பல் 450 அடி நீளமும், 75 அடி அகலமும், 45 அடி உயரமும் இருக்கட்டும். 16 இதில் 18 அங்குலம் கூரையை விட்டு கீழே ஒரு ஜன்னல் இருக்கட்டும். கப்பலின் பக்கவாட்டில் ஒரு கதவு இருக்கட்டும். அதில் மேல்தளம், நடுத்தளம், கீழ்த்தளம் என்று மூன்று தளங்கள் இருக்கட்டும்.
17 “நான் உனக்குச் சொல்வதைக் கவனமாகக் கேள். நான் பூமியில் ஒரு பெரிய வெள்ளப் பெருக்கை ஏற்படுத்துவேன். வானத்துக்குக் கீழேயுள்ள அனைத்து உயிர்களையும் அழிப்பேன். மண்ணிலுள்ள அனைத்தும் மரணமடையும். 18 ஆனால் நான் உன்னோடு ஒரு சிறப்பான உடன்படிக்கையைச் செய்கிறேன். நீயும் உன் மனைவியும் உன் மகன்களும், மகன்களின் மனைவிமார்களும் கப்பலுக்குள் போய்விடுங்கள். 19 பூமியிலுள்ள அனைத்து உயிர்களிலும் ஆண், பெண் என இணையாகத் தேர்ந்தெடுத்துக்கொள். கப்பலில் அவைகள் உயிரோடு இருக்கட்டும். 20 ஒவ்வொரு பறவை இனங்களிலும் ஒவ்வொரு ஜோடியும், ஒவ்வொரு மிருக இனங்களிலும் ஒவ்வொரு ஜோடியும், எல்லா ஊர்வனவற்றிலும் ஒவ்வொரு ஜோடியும் கண்டு பிடித்து, அவற்றையும் உனது கப்பலில் உயிரோடு வைத்துக்கொள். 21 எல்லாவகை உணவுப் பொருட்களையும் கப்பலில் சேமித்து வை. அவ்வுணவு உங்களுக்கும் மற்ற மிருகங்களுக்கும் உதவியாக இருக்கட்டும்” என்றார்.
22 நோவா தேவன் சொன்னபடி எல்லாவற்றையும் சரியாகச் செய்து முடித்தான்.
24 வெள்ளமானது தொடர்ந்து 150 நாட்கள் பூமியில் பரவியிருந்தது.
14 இரண்டாவது மாதத்தின் 27வது நாளில் தரை முழுவதும் நன்றாகக் காய்ந்துவிட்டது.
15 பிறகு தேவன் நோவாவிடம், 16 “நீயும் உன் மனைவியும் உன் மகன்களும் அவர்களின் மனைவியரும் இப்போது கப்பலை விட்டு வெளியே வாருங்கள். 17 உங்களோடுள்ள அனைத்தையும் வெளியே கொண்டு வாருங்கள். பறவைகள், விலங்குகள், ஊர்வன அனைத்தும் மீண்டும் குட்டிகளும் குஞ்சுகளும் இட்டு பூமியை நிரப்பட்டும்” என்றார்.
18 எனவே நோவா தன் மனைவி, மகன்கள், மருமகள்கள் ஆகியோரோடு வெளியே வந்தான். 19 கப்பலிலுள்ள அனைத்து மிருகங்களும் பறவைகளும் ஊர்வனவும் எல்லா விலங்கினங்களும் கப்பலை விட்டு ஜோடிகளாக வெளியே வந்தன.
அலமோத் என்னும் கருவியில் வாசிக்கும்படி கொடுக்கப்பட்ட கோராகின் குடும்பத்தின் இராகத் தலைவனுக்கு, ஒரு பாடல்
46 தேவன் நம் வல்லமையின் ஊற்றாயிருக்கிறார்.
தொல்லைகள் சூழ்கையில் நாம் அவரிடமிருந்து எப்பொழுதும் உதவி பெறலாம்.
2 எனவே பூமி நடுங்கினாலும்,
மலைகள் கடலில் வீழ்ந்தாலும் நாம் அஞ்சோம்.
3 கடல் கொந்தளித்து இருள் சூழ்ந்தாலும்
பர்வ தங்கள் நடுங்கி அதிர்ந்தாலும் நாம் அஞ்சோம்.
4 உன்னத தேவனுடைய பரிசுத்த நகரத்திற்கு,
மகிழ்ச்சி அளிக்கிற ஓடைகளையுடைய நதி ஒன்று இருக்கிறது.
5 அந்நகரம் அழியாதபடி தேவன் அங்கிருக்கிறார்.
சூரிய உதயத்திற்குமுன் தேவன் அதற்கு உதவுவார்.
6 தேசங்கள் பயத்தால் நடுங்கும்.
கர்த்தர் சத்தமிடுகையில் அந்த இராஜ்யங்கள் விழும், பூமி சீர்குலையும்.
7 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் நம்மோடிருக்கிறார்.
யாக்கோபின் தேவன் நமது பாதுகாப்பிடம்.
8 கர்த்தர் செய்யும் வல்லமை மிக்க காரியங்களைப் பாருங்கள்.
அவர் பூமியின்மேல் செய்துள்ள பயத்திற்குரிய காரியங்களைப் பாருங்கள்.
9 பூமியில் எவ்விடத்தில் போர் நிகழ்ந்தாலும் கர்த்தர் அதை நிறுத்த வல்லவர்.
வீரர்களின் வில்லுகளை அவர் முறித்து அவர்கள் ஈட்டிகளைச் சிதறடிக்கிறார்.
இரதங்களை நெருப்பினால் அழிக்க தேவன் வல்லவர்.
10 தேவன், “நீங்கள் சண்டையிடுவதை நிறுத்தி அமைதியாயிருந்து நானே தேவன் என உணருங்கள்!
நான் பூமியில் பெருமையுற்று தேசங்களில் வாழ்த்தப்படுவேன்” என்று கூறினார்.
11 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் நம்மோடிருக்கிறார்.
யாக்கோபின் தேவன் நமது பாதுகாப்பிடம்.
16 நான் நற்செய்தியைப் பற்றி பெருமிதம் கொள்கிறேன். விசுவாசமுள்ள அனைவரையும் இரட்சிக்கவும், முதலில் யூதர்களையும் பின்னர் யூதர் அல்லாதவர்களையும் இரட்சிக்கவும் தேவன் பயன்படுத்திய வல்லமை இந்த நற்செய்தியே ஆகும். 17 தேவன் எவ்வாறு நீதிமான்களை உருவாக்குகிறார் என்று நற்செய்தி காட்டுகிறது. மக்களை நீதிமான்களாக தேவன் உருவாக்கும் வழிமுறையானது விசுவாசத்திலேயே தொடங்கி முடிகிறது. எழுதியிருக்கிறபடி “தேவன் மேலுள்ள விசுவாசத்தால் நீதிமான் என்றென்றும் வாழ்ந்திருப்பான்.” [a]
22 இயேசு கிறிஸ்துவின் மேல் வைத்த விசுவாசத்தின் மூலம் தேவன் மக்களை சரியான வழிப்படுத்துகிறார். கிறிஸ்துவில் விசுவாசம் வைத்திருக்கும் எல்லாருக்கும் தேவன் இதைச் செய்தார். எந்த வேறுபாடும் இல்லை. 23 மக்களனைவரும் பாவம் செய்து தேவனுடைய மகிமையைப் பெறத் தகுதியில்லாதவராகிவிட்டனர். 24 இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவில் உள்ள இரட்சிப்பைக் கொண்டு நீதிமான்களாக்கப்படுவார்கள். 25 விசுவாசத்தின் மூலம் பாவிகள் மன்னிக்கப்பட தேவன் இயேசுவை ஒரு வழியாக வகுத்தார். இயேசுவின் இரத்தத்தால் தேவன் இதைச் செய்தார். எது சரியானதோ, நியாயமானதோ அதையே தேவன் செய்வார் என்பதை இது காட்டும். கடந்த காலத்தில் தேவன் மிகப் பொறுமையாக இருந்தார். மக்களின் பாவங்களுக்காக அவர்களைத் தண்டிக்காமல் விட்டார். 26 இவ்வாறு தேவன் சரியான வழியில் நியாயம்தீர்ப்பார் என்பதை இன்று இயேசு கிறிஸ்துவின் மூலம் வெளிக் காட்டியுள்ளார். அதே நேரத்தில் இயேசுவில் விசுவாசம் உள்ள எவரையும் தேவன் நீதிமான்களாக்குகிறார்.
27 எனவே நம்மை நாமே மேன்மை பாராட்டிக்கொள்ள ஏதேனும் காரணம் உள்ளதாக இல்லை. எதற்காக இல்லை? சட்ட வழிகளின்படி வாழ்வதால் அல்ல, விசுவாசத்தால் மட்டுமே. நாம் பெருமை பாராட்டுவதை நிறுத்த வேண்டும். எதற்காக? 28 ஏனென்றால் ஒருவன் சட்டவழிகளின்படி வாழ்வதால் நீதிமானாக முடியாது; இயேசுவை விசுவாசிப்பதன் மூலமே நீதிமானாக முடியும். இதுவே நமது நம்பிக்கை.
29 தேவன் என்பவர் யூதர்களுக்கு மட்டும் உரியவர் அல்லர். அவர் யூதர் அல்லாதவர்களுக்கும் உரியவரே. 30 ஒரே ஒரு தேவனே உள்ளார். அவரே யூதர்களையும் அவர்கள் விசுவாசத்தின் மூலம் நீதிமான்களாக்குகிறார். அவ்வாறே யூதரல்லாதவர்களையும் ஆக்குகிறார். 31 விசுவாசத்தின் வழியைப் பின்பற்றுவதன் மூலம் சட்ட விதிகளை அழித்துவிடுகிறோமா? இல்லை. இவ்வாறு நாம் உண்மையாகச் சட்டத்தைக் கைக்கொள்கிறோம்.
21 ,“என்னைத் தம் கர்த்தர் என்று கூறும் எல்லோரும் பரலோகத்திற்குள் நுழைய முடியாது. பரலோகத்தில் உள்ள என் பிதா விரும்பும் செயல்களைச் செய்கிறவர்கள் மட்டுமே பரலோக இராஜ்யத்தில் நுழைய முடியும். 22 இறுதி நாளன்று பலர் என்னிடம் ‘நீரே எங்கள் கர்த்தர். உம்மைப் போற்றினோம். அசுத்த ஆவிகளை உம் பெயரால் விரட்டினோம். அற்புதங்கள் பல செய்தோம்’ என்று கூறுவார்கள். 23 அவர்களிடம் நான் ‘என்னை விட்டு விலகுங்கள். தவறு செய்தவர்கள் நீங்கள். உங்களை எனக்குத் தெரியாது’ என்று வெளிப்படையாகவே சொல்வேன்.
இரண்டுவித மனிதர்கள்(A)
24 ,“என் போதனைகளைக் கேட்டு அதன்படி நடக்கிற எவனும் புத்தியுள்ளவன் ஆவான். புத்தியுள்ள மனிதன் தன் வீட்டைப் பாறையின் மேல் கட்டினான். 25 கனமழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்தது. காற்று வீசி வீட்டைத் தாக்கியது. பாறையின் மேல் கட்டப்பட்டதால் அந்த வீடு இடிந்து விழவில்லை.
26 ,“என் போதனைகளைக் கேட்டுவிட்டு அதன்படி நடக்காதவர்கள் புத்தியற்ற மனிதனைப் போன்றவர்கள். புத்தியற்ற மனிதன் மணல் மீது தன் வீட்டைக் கட்டினான். 27 கனமழை பெய்தது. வெள்ளம் பெருக்கெடுத்தது. காற்றுவீசி வீட்டைத்தாக்கியது. பலத்த ஓசையுடன் வீடு இடிந்து விழுந்தது.”
28 இயேசு இவற்றைக் கூறி முடித்தபொழுது, மக்கள் அவரது போதனைகளைக் குறித்து வியப்படைந்தனர். 29 வேதபாரகராகிய நியாயப்பிரமாண ஆசிரியர்களைப் போலல்லாது, இயேசு அதிகாரம்மிக்கவராகப் போதனை செய்தார்.
2008 by World Bible Translation Center