Revised Common Lectionary (Semicontinuous)
அலமோத் என்னும் கருவியில் வாசிக்கும்படி கொடுக்கப்பட்ட கோராகின் குடும்பத்தின் இராகத் தலைவனுக்கு, ஒரு பாடல்
46 தேவன் நம் வல்லமையின் ஊற்றாயிருக்கிறார்.
தொல்லைகள் சூழ்கையில் நாம் அவரிடமிருந்து எப்பொழுதும் உதவி பெறலாம்.
2 எனவே பூமி நடுங்கினாலும்,
மலைகள் கடலில் வீழ்ந்தாலும் நாம் அஞ்சோம்.
3 கடல் கொந்தளித்து இருள் சூழ்ந்தாலும்
பர்வ தங்கள் நடுங்கி அதிர்ந்தாலும் நாம் அஞ்சோம்.
4 உன்னத தேவனுடைய பரிசுத்த நகரத்திற்கு,
மகிழ்ச்சி அளிக்கிற ஓடைகளையுடைய நதி ஒன்று இருக்கிறது.
5 அந்நகரம் அழியாதபடி தேவன் அங்கிருக்கிறார்.
சூரிய உதயத்திற்குமுன் தேவன் அதற்கு உதவுவார்.
6 தேசங்கள் பயத்தால் நடுங்கும்.
கர்த்தர் சத்தமிடுகையில் அந்த இராஜ்யங்கள் விழும், பூமி சீர்குலையும்.
7 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் நம்மோடிருக்கிறார்.
யாக்கோபின் தேவன் நமது பாதுகாப்பிடம்.
8 கர்த்தர் செய்யும் வல்லமை மிக்க காரியங்களைப் பாருங்கள்.
அவர் பூமியின்மேல் செய்துள்ள பயத்திற்குரிய காரியங்களைப் பாருங்கள்.
9 பூமியில் எவ்விடத்தில் போர் நிகழ்ந்தாலும் கர்த்தர் அதை நிறுத்த வல்லவர்.
வீரர்களின் வில்லுகளை அவர் முறித்து அவர்கள் ஈட்டிகளைச் சிதறடிக்கிறார்.
இரதங்களை நெருப்பினால் அழிக்க தேவன் வல்லவர்.
10 தேவன், “நீங்கள் சண்டையிடுவதை நிறுத்தி அமைதியாயிருந்து நானே தேவன் என உணருங்கள்!
நான் பூமியில் பெருமையுற்று தேசங்களில் வாழ்த்தப்படுவேன்” என்று கூறினார்.
11 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் நம்மோடிருக்கிறார்.
யாக்கோபின் தேவன் நமது பாதுகாப்பிடம்.
மனித குலத்தின் தொடக்கம்
4 இதுதான் பூமி மற்றும் வானம் தோன்றின வரலாறாகும். இதுதான் தேவனாகிய கர்த்தர் வானத்தையும் பூமியையும் படைக்கும்போது, நடந்தவற்றைப்பற்றிக் கூறும் விபரங்களாகும். 5 பூமியில் எந்தத் தாவரமும் இல்லாமல் இருந்தது. வயலிலும் அதுவரை எதுவும் வளரவில்லை. எந்தப் பகுதியிலும் எந்தச் செடிகொடிகளும் இல்லை. ஏனெனில் தேவனாகிய கர்த்தர் இன்னும் மண்ணில் மழை பெய்யச் செய்யவில்லை. பூமியில் விவசாயம் செய்ய மனுக்குலம் எதுவும் இல்லை.
6 பூமியிலிருந்து தண்ணீர் [a] எழும்பி நிலத்தை நனைத்தது. 7 பிறகு தேவனாகிய கர்த்தர் பூமியிலிருந்து மண்ணை எடுத்து மனிதனை உருவாக்கினார். அவன் மூக்கில் தன் உயிர் மூச்சினை தேவனாகிய கர்த்தர் ஊதினார். அதனால் மனிதன் உயிர் பெற்றான். 8 பிறகு தேவனாகிய கர்த்தர் கிழக்குப் பகுதியில் ஒரு தோட்டத்தை அமைத்து அதற்கு ஏதேன் என்று பெயரிட்டார். தேவனாகிய கர்த்தர் தாம் உருவாக்கிய மனிதனை அத்தோட்டத்தில் வைத்தார். 9 தேவனாகிய கர்த்தர் எல்லாவகையான அழகான மரங்களையும், உணவுக் கேற்ற கனிதரும் மரங்களையும் தோட்டத்தில் வளரும்படிச் செய்தார். அத்தோட்டத்தின் நடுவில் தேவனாகிய கர்த்தர் ஜீவ மரத்தையும், நன்மை மற்றும் தீமை பற்றி அறிவு தருகிற மரத்தையும் வைத்தார்.
10 ஏதேன் தோட்டத்தில் தண்ணீர் பாய ஒரு ஆற்றையும் படைத்தார். அந்த ஆறு நான்கு சிறு ஆறுகளாகவும் பிரிந்தது. 11 அந்த முதல் ஆற்றின் பெயர் பைசோன். அந்த ஆறு ஆவிலா நாடு முழுவதும் ஓடிற்று. 12 அந்த நாட்டில் தங்கம் இருந்தது. அத்தங்கம் நன்றாக இருந்தது. அங்கு வாசனைப் பொருள்களும் கோமேதகக் கல்லும் இருந்தன. 13 இரண்டாவது ஆற்றின் பெயர் கீகோன். அது எத்தியோப்பியா நாடு முழுவதும் ஓடிற்று. 14 மூன்றாவது ஆற்றின் பெயர் இதெக்கேல் அது அசீரியாவுக்கு கிழக்கே பாய்ந்தது. நான்காவது ஆற்றின் பெயர் ஐபிராத்து.
15 தேவனாகிய கர்த்தர் மனிதனை ஏதேன் தோட்டத்தில் வைத்து, அதனைப் பராமரிக்கவும், காக்கவும் செய்தார். 16 தேவனாகிய கர்த்தர் மனிதனிடம், “இந்த தோட்டத்திலுள்ள எந்த மரத்தின் கனியை வேண்டுமானாலும் நீ உண்ணலாம். 17 ஆனால் நன்மை தீமை பற்றிய அறிவைக் கொடுக்கக் கூடிய மரத்தின் கனியைமட்டும் உண்ணக் கூடாது. அதனை உண்டால் நீ மரணமடைவாய்” என்றார்.
முதல் பெண்
18 மேலும் தேவனாகிய கர்த்தர், “ஒரு ஆண் தனியாக இருப்பது நல்லதல்ல, எனவே அவனுக்கு உதவியாக அவனைப்போன்று ஒரு துணையை உருவாக்குவேன்” என்றார்.
19 தேவனாகிய கர்த்தர் பூமியிலிருந்து மண்ணை எடுத்து காட்டிலுள்ள அனைத்து மிருகங்களையும், வானத்திலுள்ள அனைத்து பறவைகளையும் படைத்து அவைகளை மனிதனிடம் கொண்டு வந்தார். அவன் அவை ஒவ்வொன்றுக்கும் பெயர் வைத்தான். 20 மனிதன் வீட்டு மிருகங்களுக்கும், வானில் பறக்கும் பறவைகளுக்கும், காட்டிலுள்ள மிருகங்களுக்கும் பெயர் வைத்தான். மனிதன் எல்லா மிருகங்களையும் பறவைகளையும் கண்டான். எனினும் அவனுக்கு ஏற்ற துணை காணவில்லை. 21 எனவே, தேவனாகிய கர்த்தர் அவனை ஆழ்ந்து தூங்க வைத்தார். அவன் தூங்கும்போது அவர் அவனது சரீரத்திலிருந்து ஒரு விலா எலும்பை எடுத்து, அந்த இடத்தை சதையால் மூடிவிட்டார். 22 தேவனாகிய கர்த்தர் அந்த விலா எலும்பை ஒரு பெண்ணாகப் படைத்து, அந்தப் பெண்ணை மனிதனிடம் அழைத்து வந்தார். 23 அப்பொழுது அவன்,
“இறுதியில் என்னைப்போலவே ஒருத்தி;
அவளது எலும்பு என் எலும்பிலிருந்து உருவானவை.
அவளது உடல் எனது உடலிலிருந்து உருவானது.
அவள் மனிதனிலிருந்து எடுக்கப்பட்டாள்.
அதனால் அவளை மனுஷி என்று அழைப்பேன்” என்றான்.
24 அதனால் தான் மனிதன் தன் தாயையும் தகப்பனையும் விட்டு மனைவியோடு சேர்ந்துகொள்ளுகிறான். இதனால் இருவரும் ஒரே உடலாகிவிடுகின்றனர்.
25 மனிதனும் அவன் மனைவியும் நிர்வாணமாக இருந்தாலும் அவர்கள் வெட்கப்படவில்லை.
6 நான் யூதர்களுக்காக வருத்தப்படுகிறேன். அவர்களிடம் தேவன் தன் வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தவறிவிட்டார் என்று எண்ணுகிறதில்லை. ஆனால் இஸ்ரவேல் மக்களில் ஒரு சிலரே தேவனுடைய உண்மையான மக்களாய் இருக்கிறார்கள். 7 ஆபிரகாமின் சில மரபுவழியினரே ஆபிரகாமின் உண்மையான மக்களாக இருக்கின்றனர். இதையே ஆபிரகாமிடம் தேவன் “ஈசாக்கு உனது சட்டபூர்வமான மகன்” [a] என்று கூறினார். 8 ஆபிரகாமின் அனைத்து சந்ததியினருமே தேவனுடைய பிள்ளைகள் இல்லை என்பது தான் இதன் பொருள். ஆபிரகாமுக்கு அவர் வாக்குறுதி செய்தார். ஆனால் ஆபிரகாமின் உண்மையான பிள்ளைகள் எல்லாம் தேவனுக்கும் உண்மையான பிள்ளைகள் ஆகின்றனர். ஏனென்றால் 9 “சரியான நேரத்தில் நான் திரும்ப வருவேன். சாராள் ஒரு மகனைப் பெற்றெடுப்பாள்” [b] என்பது தான் தேவனுடைய வாக்குறுதி.
10 அது மட்டுமல்ல, ரெபேக்காவும் பிள்ளைகளைப் பெற்றாள். ஒரே தந்தையை இப்பிள்ளைகள் கொண்டிருந்தார்கள். அவரே நமது தந்தையான ஈசாக்கு. 11-12 இரு மகன்களும் பிறப்பதற்கு முன்பே தேவன் ரெபேக்காவிடம், “மூத்த மகன் இளையவனுக்கு சேவை செய்வான்” [c] என்றார். அவர்கள் நல்லதோ தீயதோ எதுவாக இருந்தாலும் செய்வதற்கு முன்னரே தேவன் இவ்வாறு சொன்னார். இத்திட்டம் ஏற்கெனவே தேவனால் உருவாக்கப்பட்டது என்பதுதான் காரணம். தேவன் அவனைத் தேர்ந்தெடுக்க விரும்பினார். அதனால் தேர்ந்தெடுத்தார். அதுதான் காரணமே தவிர பிள்ளைகள் ஏதோ செய்ததற்காக அல்ல. 13 “நான் யாக்கோபை நேசித்தேன். ஏசாவை வெறுத்தேன்” [d] என்று எழுதப்பட்டிருக்கிறது.
2008 by World Bible Translation Center