Revised Common Lectionary (Semicontinuous)
நினைவுகூரும் நாளுக்கான தாவீதின் பாடல்.
38 கர்த்தாவே, நீர் கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாதேயும்.
என்னை ஒழுங்குபடுத்துகையில் கோபமடையாதேயும்.
2 கர்த்தாவே, நீர் என்னைத் துன்புறுத்துகிறீர்.
உமது அம்புகள் என்னை ஆழமாகத் தாக்கியுள்ளன.
3 நீர் என்னைத் தண்டித்தீர்.
இப்போது என் உடல் முழுவதும் புண்களாயிருக்கின்றன.
நான் பாவம் செய்ததினால், நீர் என்னைத் தண்டித்தீர்.
என் எலும்புகள் எல்லாம் வலிக்கின்றன.
4 தீய காரியங்களைச் செய்ததினால் நான் குற்ற வாளியானேன்.
என் தோளில் அக்குற்றங்கள் பாரமாக உள்ளன.
5 நான் அறிவில்லாத காரியமொன்றைச் செய்தேன்.
இப்போது ஆறாத காயங்கள் என்னில் உள்ளன.
6 நான் குனிந்து வளைந்தேன்.
நாள் முழுவதும் நான் வருத்தமடைந்திருக்கிறேன்.
7 காய்ச்சலினாலும் வலியினாலும்
என் உடல் முழுவதும் துன்புறுகிறது.
8 நான் பெரிதும் தளர்ந்து போகிறேன்.
வலியினால் முனகவும், அலறவும் செய்கிறேன்.
9 என் ஆண்டவரே, என் அலறலின் சத்தத்தைக் கேட்டீர்.
என் பெருமூச்சு உமக்கு மறைவாயிருக்கவில்லை.
10 என் காய்ச்சலினால் என் பெலன் மறைந்தது.
என் பார்வை பெரிதும் மங்கிப் போயிற்று.
11 என் நோயினிமித்தம் என் நண்பர்களும், அயலகத்தாரும் என்னைச் சந்திப்பதில்லை.
என் குடும்பத்தாரும் என்னை நெருங்குவதில்லை.
12 என் பகைவர்கள் என்னைக் குறித்துத் தீய காரியங்களைச் சொல்கிறார்கள்.
பொய்யையும், வதந்திகளையும் அவர்கள் பரப்புகிறார்கள்.
என்னைக் குறித்து எப்போதும் பேசுகிறார்கள்.
13 நான் கேட்கமுடியாத செவிடனைப் போலானேன்.
நான் பேசமுடியாத ஊமையைப் போலானேன்.
14 நான், ஒருவனைக் குறித்தும் பிறர் கூறுபவற்றைக் கேட்க முடியாத மனிதனைப் போலானேன்.
என் பகைவர்கள் தவறு செய்கிறார்கள் என்பதை நிரூபிக்க என்னால் இயலவில்லை.
15 கர்த்தாவே எனக்கு ஆதரவளியும்.
எனது தேவனாகிய ஆண்டவரே, நீர் எனக்காகப் பேச வேண்டும்.
16 நான் ஏதேனும் பேசினால், என் பகைவர்கள் என்னைப் பார்த்து நகைப்பார்கள்.
நான் நோயுற்றிருப்பதை அவர்கள் காண்பார்கள்.
செய்த தவற்றிற்கு நான் தண்டனை அனுபவிப்பதாக அவர்கள் கூறுவார்கள்.
17 தீயக் காரியங்களைச் செய்த குற்றவாளி நான் என்பதை அறிவேன்.
என் நோவை என்னால் மறக்க இயலாது.
18 கர்த்தாவே, நான் செய்த தீயக் காரியங்களைக் குறித்து உம்மிடம் பேசினேன்.
என் பாவங்களுக்காகக் கவலையடைகிறேன்.
19 என் பகைவர்கள் உயிரோடும் ஆரோக்கியத்தோடும் இருக்கிறார்கள்.
அவர்கள் பல, பல பொய்களைக் கூறியுள்ளார்கள்.
20 என் பகைவர்கள் எனக்குத் தீயக் காரியங்களைச் செய்தனர்.
ஆனால் நான் அவர்களுக்கு நல்லவற்றையே செய்தேன்.
நான் நல்லவற்றை மட்டுமே செய்ய முயன்றேன், ஆனால் அந்த ஜனங்கள் எனக்கெதிராகத் திரும்பினார்கள்.
21 கர்த்தாவே, என்னை விட்டு விலகாதேயும்.
என் தேவனே, என் அருகே தங்கியிரும்.
22 விரைந்து வந்து எனக்கு உதவும்!
என் தேவனே, என்னை மீட்டருளும்.
அசம்பாவிதமான பல்வேறு பாவங்கள்
5 “ஒருவன் ஒரு எச்சரிக்கையைக் கேட்டாலோ அல்லது பிறரை எச்சரிக்க வேண்டியவைகளைப் பார்த்தாலோ கேட்டாலோ அதை மற்றவர்களுக்குச் சொல்லவேண்டும். தான் கண்டதையும் கேட்டதையும் மற்றவர்களுக்குச் சொல்லாவிட்டால், பிறகு அவன் தவறு செய்வதற்கான குற்ற உணர்வைப் பெறுவான்.
2 “ஒருவன் தூய்மையற்ற ஒன்றைத் தொட்டிருக்கலாம். அது காட்டுமிருகத்தின் இறந்து போன உடலாகக் கூட இருக்கலாம். அல்லது அது தரையில் ஊர்ந்து போகும் அசுத்தமான நாட்டு மிருகத்தின் உடலாக இருக்கலாம். அவற்றைத் தொட்டதற்கான உணர்வு அவனிடம் இல்லாமல் இருக்கலாம். எனினும் அதனால் அவன் தீட்டுக்குரியவனாய் இருக்கிறான்.
3 “ஒருவன் பல காரணங்களால் அசுத்தமானவற்றைத் தொட்டதற்கான தீட்டைப் பெற்றிருக்கலாம். ஒரு மனிதன் மனிதத் தீட்டுக்களில் ஏதாகிலும் ஒன்றை அவனை அறியாமல் மற்ற மனிதனிடமிருந்து தொட்டிருக்கலாம். அவன் அதனை அறிய வரும்போது, அவன் குற்றமுடையவனாகிறான்.
4 “ஒருவன் அவசரமாக ஏதோ ஒரு காரணத்திற்காக வாக்குறுதி கொடுக்கிறான். அது நன்மைக்குரியதாகவோ தீமைக்குரியதாகவோ இருக்கலாம். ஜனங்கள் பலவிதமான அவசர வாக்குறுதிகள் வழங்குகின்றனர். ஒருவன் இவ்வாறு செய்து மறந்தும் போகலாம், அதைக் காப்பாற்றாமலும் போகலாம். பிற்காலத்தில் தான் கொடுத்த வாக்குறுதிகளை நினைத்துப்பார்க்கும்போது குற்றவாளியாகிறான். ஏனெனில் அவ்வாக்குறுதிகளின்படி அவன் செய்யவில்லை. 5 ஒருவன் இப்படிப்பட்ட ஏதாவது ஒன்றில் குற்றம் உள்ளவனாகும்போது அவன் தான் செய்தது பாவம் என்று ஒத்துக்கொள்ள வேண்டும். 6 அவன் தான் செய்த பாவத்துக்குக் குற்ற நிவாரண பலியிடவேண்டும். அதற்காக அவன் பெண் ஆட்டினை அல்லது பெண் வெள்ளாட்டுக் குட்டியை கர்த்தருக்காகப் பாவநிவாரண பலியாகக் கொண்டு வரவேண்டும். பிறகு ஆசாரியன் அவனை பரிசுத்தமாக்குவதற்கான சடங்குகளைச் செய்து அவனது பாவத்தைப் போக்கி சுத்தமாக்குவான்.
7 “ஒருவேளை அவனால் ஆட்டுக் குட்டியைக் கொண்டுவர வசதியில்லாமல் போனால், அவன் கர்த்தருக்கு இரண்டு காட்டுப் புறாக்களையாவது அல்லது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது கொண்டுவரவேண்டும். இவை அவன் பாவத்திற்கான குற்றநிவாரண பலியாகும். அவற்றில் ஒன்றை பாவப்பரிகார பலியாகவும் மற்றொன்றை தகன பலியாகவும் படைக்க வேண்டும். 8 அவன் அவற்றை ஆசாரியனிடம் கொண்டு வரவேண்டும். ஆசாரியன் பாவப்பரிகார பலிக்கானதை முதலில் செலுத்துவான். அதன் தலையைக் கழுத்திலிருந்து கிள்ளுவான். அவன் அப்புறாவை இரண்டு துண்டாக்கக் கூடாது. 9 பாவப் பரிகாரப் பலியின் இரத்தத்தில் ஆசாரியன் கொஞ்சம் எடுத்து பலிபீடத்தின் பக்கத்திலே தெளித்து, மீதி இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிடுவான். இதுவே பாவப்பரிகார பலி ஆகும். 10 பின்பு இரண்டாவது புறாவை தகன பலிக்குரிய விதிகளின்படி காணிக்கையாகச் செலுத்த வேண்டும். இதன் மூலம் ஆசாரியன் அந்த மனிதன் செய்த பாவத்திலிருந்து அவனை விடுவித்து சுத்தப்படுத்துகிறான். தேவனும் அவனை மன்னித்துவிடுவார்.
11 “இரண்டு காட்டுப் புறாக்களையோ, இரண்டு புறாக்குஞ்சுகளையோ அவனால் கொண்டுவர வசதியில்லாமல் போனால் அவன் 8 கிண்ணங்கள் அளவு மிருதுவான மாவை எடுத்து வரவேண்டும். இதுவே பாவப்பரிகாரப் பலியாக இருப்பதால் அந்த மாவின் மேல் எண்ணெய் எதையும் ஊற்றவோ, அதன்மேல் எவ்விதமான சாம்பிராணியையும் போடவோ கூடாது. 12 அவன் அந்த மாவை ஆசாரியனிடத்தில் கொண்டு வரவேண்டும். அதில் ஆசாரியன் ஒரு கைப் பிடியளவு எடுக்கவேண்டும். அது ஞாபகப் பலியாக இருக்கும். மாவை ஆசாரியன் பலிபீடத்தின் மேல் எரித்துவிடுவான். இது நெருப்பினால் கர்த்தருக்கென்று கொடுக்கும் காணிக்கையாகும். இது பாவப்பரிகாரப் பலியாகும். 13 இவ்வாறு ஆசாரியன் அம்மனிதனை சுத்தபடுத்துவான். அப்போது தேவன் அவனுக்கு மன்னிப்பார். மீதி மாவானது தானியக் காணிக்கையைப் போல ஆசாரியனுக்குச் சேரும்” என்றார்.
பாவமும் மன்னிப்பும்
(மத்தேயு 18:6-7,21-22; மாற்கு 9:42)
17 இயேசு தன் சீஷர்களை நோக்கி, “மக்கள் பாவம் செய்யும்படியான காரியங்கள் நிச்சயமாக நடக்கும். ஆனால் இது நடக்கும்படியாகச் செய்கிறவனுக்குத் தீமை விளையும் 2 பலவீனமான மனிதர்கள் பாவம் செய்யும்படியாகச் செய்கிற ஒருவனுக்குத் தீமை விளையும். அவன் கழுத்தில் அரைக்கிற கல்லைக் கட்டி அவனைக் கடலில் அமிழ்த்துவது அவனுக்கு நல்லதாக இருக்கும். 3 எனவே எச்சரிக்கையாக இருங்கள்!”
“உங்கள் சகோதரன் பாவம் செய்தால் அவனைக் கண்டியுங்கள். ஆனால் அவன் வருந்திப் பாவம் செய்வதை விட்டுவிட்டால், அவனை மன்னியுங்கள். 4 ஒரே நாளில் உங்கள் சகோதரன் ஏழுமுறை உங்களிடம் தவறு செய்தும் ஒவ்வொரு முறையும் உங்களிடம் மன்னிப்பு வேண்டினான் என்றால், நீங்கள் அவனை மன்னிக்க வேண்டும்” என்றார்.
2008 by World Bible Translation Center