Revised Common Lectionary (Semicontinuous)
தாவீதின் ஒரு பாடல்.
138 தேவனே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிக்கிறேன்.
எல்லா தெய்வங்களின் முன்பாகவும் நான் உமது பாடல்களைப் பாடுவேன்.
2 தேவனே, உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் குனிந்து வணங்குவேன்.
நான் உமது நாமத்தையும், உண்மை அன்பையும் நேர்மையையும் துதிப்பேன்.
உமது வார்த்தையின் வல்லமையால் நீர் புகழ்பெற்றவர். இப்போது நீர் அதை இன்னமும் மேன்மையாகச் செய்தீர்.
3 தேவனே, உதவிக்காக நான் உம்மைக் கூப்பிட்டேன்.
நீர் எனக்குப் பதில் தந்தீர்! நீர் எனக்குப் பெலன் அளித்தீர்.
4 கர்த்தாவே, நீர் சொல்கின்றவற்றைக் கேட்கும்போது
பூமியின் எல்லா ராஜாக்களும் உம்மைத் துதிப்பார்கள்.
5 அவர்கள் கர்த்தருடைய வழியைக் குறித்துப் பாடுவார்கள்.
ஏனெனில் கர்த்தருடைய மகிமை மிக மேன்மையானது.
6 தேவன் மிக முக்கியமானவர்.
ஆனால் அவர் தாழ்மையான ஜனங்களுக்காக கவலைப்படுகிறார்.
பெருமைக்காரர்கள் செய்வதை தேவன் அறிகிறார். ஆனால் அவர் அவர்களிடமிருந்து வெகுதூரம் விலகியிருக்கிறார்.
7 தேவனே, நான் தொல்லையில் சிக்குண்டால், என்னை உயிரோடு வாழவிடும்.
என் பகைவர்கள் என்னிடம் கோபமாயிருந்தால், அவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
8 கர்த்தாவே, நீர் வாக்களித்தவற்றை எனக்குத் தாரும்.
கர்த்தாவே, உமது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
கர்த்தாவே, நீர் எங்களை உண்டாக்கினீர், எனவே எங்களை விட்டுவிடாதேயும்!
முதல் நியாயாதிபதியாகிய ஒத்னியேல்
7 இஸ்ரவேலர் தீயக்காரியங்களில் ஈடுபடுவதை கர்த்தர் கண்டார். இஸ்ரவேலர் தமது தேவனாகிய கர்த்தரை மறந்து பொய்த் தெய்வங்களாகிய பாகாலையும், அசேராவையும் தொழத்தொடங்கினர். 8 இஸ்ரவேலர்கள் மீது கர்த்தர் கோபங்கொண்டார். மெசொ பொத்தாமியாவின் ராஜாவாகிய கூசான்ரிஷதாயீம் என்பவன் இஸ்ரவேலரைத் தோற்கடித்து அவர்களை ஆள்வதற்கு கர்த்தர் அனுமதித்தார். அம்மன்னனின் ஆட்சியின் கீழ் இஸ்ரவேலர் எட்டு ஆண்டுகள் வாழ்ந்தனர். 9 ஆனால் இஸ்ரவேலர் கர்த்தரிடம் உதவிக்காக அழுது வேண்டினார்கள். அவர்களை மீட்பதற்காக கர்த்தர் ஒரு மனிதனை அனுப்பினார். அம்மனிதனின் பெயர் ஒத்னியேல். அவன் கேனாஸ் என்னும் மனிதனின் குமாரன். கேனாஸ் காலேபின் இளைய சகோதரன். ஒத்னியேல் இஸ்ரவேலரைக் காப்பாற்றினான். 10 கர்த்தருடைய ஆவி ஒத்னியேல் மீது வந்தது. அவன் இஸ்ரவேலருக்கு நியாயாதிபதி ஆனான். ஒத்னியேல் இஸ்ரவேலரைப் போருக்கு வழிநடத்தினான். மெசொப்பொத்தாமியாவின், ராஜாவாகிய கூஷான்ரிஷதாயீமை வெல்வதற்கு கர்த்தர் ஒத்னியேலுக்கு உதவினார். 11 எனவே கேனாசின் குமாரனாகிய ஒத்னியேல் மரிக்கும்வரைக்கும் 40 ஆண்டுகள் தேசம் அமைதியாக இருந்தது.
பிற நகரங்களுக்கு இயேசு செல்லுதல்
(மாற்கு 1:35-39)
42 தான் தனித்திருக்கும் பொருட்டு மறு நாள் இயேசு ஓர் இடத்திற்குச் சென்றார். மக்கள் இயேசுவின் வருகைக்காகப் பார்த்திருந்தார்கள். கடைசியில் அவர் இருந்த இடத்தைக் கண்டார்கள். மக்கள் இயேசுவைக் கண்டபோது அவர் போகாமல் இருக்கும்படியாகத் தடுக்க முற்பட்டனர். 43 ஆனால் இயேசு அவர்களை நோக்கி, “தேவனுடைய இராஜ்யத்தைப்பற்றிய நற்செய்தியை நான் வேறு நகரங்களிலும் சொல்ல வேண்டும். அதற்காகவே நான் அனுப்பப்பட்டுள்ளேன்” என்றார்.
44 பின்னர் யூதேயாவில் உள்ள ஜெப ஆலயங்களில் இயேசு போதித்தார்.
2008 by World Bible Translation Center