Revised Common Lectionary (Semicontinuous)
புல்லாங்குழலில் வாசிக்க இசைக்குழுவின் தலைவனிடம் அளிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.
5 கர்த்தாவே, என் வார்த்தைகளைக் கேளும்.
நான் சொல்ல முயற்சிப்பதை புரிந்துகொள்ளும்.
2 எனது தேவனாகிய ராஜாவே,
என் ஜெபத்தைக் கேளும்.
3 கர்த்தாவே, என் அன்பளிப்புகளை காலைதோறும் உமக்கு படைக்கிறேன்.
உம்மை உதவிக்காக நோக்குகிறேன், நீர் என் ஜெபங்களைக் கேளும்.
4 தேவனே, தீய ஜனங்கள் உம்மருகே வருவதை நீர் விரும்புகிறதில்லை.
தீய ஜனங்கள் உம்மை ஆராதிக்க முடியாது.
5 மூடர் உம்மிடம் வர இயலாது,
தீமை செய்யும் ஜனங்களை நீர் வெறுக்கிறீர்.
6 பொய் கூறும் ஜனங்களை நீர் அழிக்கிறீர்.
பிறரைத் தாக்குவதற்காக இரகசியமாகத் திட்டமிடுவோரை கர்த்தர் வெறுக்கிறார்.
7 கர்த்தாவே, உமது மிகுந்த இரக்கத்தினால் நான் உமது ஆலயத்திற்கு வருவேன்.
உமது பரிசுத்த ஆலயத்தை நோக்கித் தலை தாழ்த்தி அச்சத்தோடும், மரியாதையோடும் உம்மை வணங்குவேன்.
8 கர்த்தாவே, சரியான வாழ்க்கை வாழ உமது வழியைக்காட்டும்.
ஜனங்கள் எனது குறைகளைத் தேடுகிறார்கள்.
எனவே நான் எவ்வாறு வாழ நீர் விரும்புகிறீரோ, அவ்வழியை எனக்குக் காட்டும்.
பெனாதாத்தும் ஆகாபும் போரிடல்
20 பெனாதாத் ஆராமின் ராஜா. அவன் தனது படையைத் திரட்டி 32 ராஜாக்களோடும் குதிரைகளோடும் இரதங்களோடும் சமாரியாவைத் தாக்கி முற்றுகையிட்டான். 2 அவன் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபுக்குத் தூதுவர்களை அனுப்பினான். அவனுடைய செய்தி கீழ்க்கண்டவாறு இருந்தது. 3 “உனது வெள்ளியையும் பொன்னையும் எனக்குக் கொடுக்கவேண்டும். உனது தேர்ந்தெடுக்கப்பட்ட மனைவியரையும் குழந்தைகளையும் எனக்குக் கொடுக்கவேண்டும்.”
4 இஸ்ரவேலரின் ராஜாவோ, “என் எஜமானனாகிய ராஜாவே, இப்போது நான் உமக்குரியவன் என்னைச் சார்ந்த அனைத்தும் உமக்கு உரியது ஆகும்” என்றான்.
5 மீண்டும் தூதுவர்கள் ஆகாபிடம் வந்தனர். “நாங்கள் ராஜாவிடம் நீங்கள் சொன்னவற்றைக் கூறினோம். பெனாதாத், ‘ஏற்கெனவே உங்கள் வெள்ளி, பொன், மனைவி ஜனங்கள் எல்லாவற்றையும் கொடுக்கவேண்டும் என்று கூறியிருந்தேன். 6 நாளை என் ஆட்களை அனுப்புவேன். அவர்கள் உங்கள் வீடுகளுக்கும் அதிகாரிகளின் வீடுகளுக்கும் வருவார்கள். உங்களது மதிப்பிற்குரிய பொருட்களைக் கொடுத்துவிட வேண்டும்’ என்றான்” என்றனர்.
7 எனவே ஆகாப் தன் நாட்டிலுள்ள மூப்பர்களை அழைத்து ஒன்று சேர்த்து ஒரு கூட்டம் போட்டான். அவன், “பாருங்கள், பெனாதாத் தொல்லை தர வந்துள்ளான். முதலில் அவன் எனது வெள்ளி, பொன், மனைவி, ஜனங்கள் அனைத்தையும் கேட்டான். நான் அவற்றைக் கொடுக்க ஒப்புக்கொண்டேன். ஆனால் இப்போது அவன் எல்லாவற்றையும் விரும்புகிறான். நாம் என்ன செய்யலாம்” என ஆலோசித்தான்.
8 ஆனால் மூப்பர்களும் மற்றவர்களும், “அவனுக்குக் கீழ்ப்படிந்து அவன் சொன்னபடி செய்ய வேண்டாம்” என்றனர்.
9 எனவே ஆகாப் பெனாதாத்துக்குத் தூதுவனை அனுப்பி, “நான் உனது முதல் கட்டளைக்குக் கீழ்ப்படிகிறேன். ஆனால் இரண்டாவது கட்டளைக்குக் கீழ்ப்படியமாட்டேன்” என்றான்.
பெனாதாத் செய்தியை அறிந்துக்கொண்டான். 10 அவனது ஒரு தூதுவனை அனுப்பி, “நான் சமாரியா முழுவதையும் அழிக்கப்போகிறேன். நகரத்தில் எதுவும் மீதியாகாது. எனது ஆட்கள் எடுத்துக்கொள்ள எதுவும் இருக்காது! இவ்வாறு நான் செய்யாவிட்டால் தேவன் என்னைத் தண்டிக்கட்டும்!” என்றான்.
11 அதற்கு ஆகாப், “பெனாதாத்திடம் சொல். ஆயுதம் அணிந்திருப்பவன் ஆயுதத்தை உரிந்து போடுபவனைப் போன்று பெருமைபடக்கூடாது” என்று சொல்லி அனுப்பினான்.
12 கூடாரத்தில் பெனாதாத் மற்றவர்களோடு குடித்துக்கொண்டிருந்தான். அப்போது தூதுவர்கள் ஆகாபின் செய்தியைச் சொல்ல, சமாரியாவைத் தாக்கும்படி ஆணையிட்டான். படைகளும் நகர்ந்தன.
13 அப்போது, ஆகாபிடம் ஒரு தீர்க்கதரிசி வந்து, “ராஜாவே, அந்த பெரும்படையைப் பார். நானே கர்த்தர், என்று நீ அறியும்படி நான் அப்படையை உன் மூலம் தோற்கடிப்பேன்” என்று கர்த்தர் கூறுகிறார்.
14 அதற்கு ஆகாப், “யார் மூலம்?” என்று கேட்டான்.
அதற்கு அத்தீர்க்கதரிசி, “அரசாங்க அதிகாரிகளின் ‘இளம் உதவியாளர்கள் மூலம்’ என்று கர்த்தர் கூறுகிறார்” என்றான்.
மேலும் ராஜா, “போரை யார் துவக்க வேண்டும்?” என்று கேட்க,
தீர்க்கதரிசி, “நீ தான்” என்று பதில் சொன்னான்.
15 எனவே ஆகாப் அரசாங்க அதிகாரிகளின் இளம் உதவியாளர்களில் 232 பேரைச் சேர்த்தான். இதனோடு இஸ்ரவேல் படையின் எண்ணிக்கை 7,000 ஆயிற்று.
16 நடுமத்தியான வேளையில் ராஜாவாகிய பெனாதாத்தும் அவனது உதவிக்கு வந்த 32 ராஜாக்களும் குடித்துக்கொண்டு தம் கூடாரத்தில் மயங்கிக்கிடந்தார்கள். அப்போது, ஆகாப் அவர்களைத் தாக்கினான். 17 முதலில் இளம் உதவியாளர்கள் தாக்கினர். பெனாதாத்தின் ஆட்கள் ராஜாவிடம் சென்று இவர்கள் சமாரியாவிலிருந்து வந்திருப்பதாகச் சொன்னார்கள். 18 அதற்கு அவன், “அவர்கள் போரிட வந்திருக்கலாம். அல்லது சமாதானத்திற்கு வந்திருக்கலாம் அவர்களை உயிரோடு பிடியுங்கள்” என்றான்.
19 ஆகாபின் இளைஞர்கள் தீவிரமாகத் தாக்கினார்கள். அவர்களைத் தொடர்ந்து இஸ்ரவேலின் படை சென்றது. 20 எதிரே வருபவர்களைக் கொன்றனர். சீரியாவிலிருந்து வந்தவர்கள் ஓட ஆரம்பித்தனர். இஸ்ரவேல் படை அவர்களை விரட்டியது. பெனாதாத் இரதத்தில் ஏறி தப்பித்து ஓடினான். 21 ஆகாப் ராஜா படையோடு போய் சீரியா நாட்டு குதிரைகளையும் இரதங்களையும் கைப்பற்றிக் கொண்டான். சீரியாவின் படையின் மீது ஆகாப் பெருவெற்றியை பெற்றான்.
22 பிறகு தீர்க்கதரிசி, ஆகாபிடம் போய், “சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் மீண்டும், அடுத்த ஆண்டு போரிட வருவான். எனவே உங்கள் படையைப் பலப்படுத்துங்கள். அவனிடமிருந்து உங்களைக் காத்துக்கொள்ள கவனமாக திட்டங்களைச் செய்யுங்கள்” என்றான்.
தேவனுக்கு உங்களையே கொடுங்கள்
4 உங்களுக்குள்ளே சண்டைகளும், வாக்குவாதங்களும் எங்கிருந்து வருகின்றன? உங்கள் சரீர உறுப்புகள் ஒன்றுக்கொன்று தொடர்ந்து சண்டையிட்டுக்கொள்ளக் காரணமாக இருக்கிற உங்கள் உள் ஆசைகளில் இருந்து இவை வரவில்லையா? 2 நீங்கள் சிலவற்றை விரும்புகிறீர்கள். ஆனால் அவை கிடைப்பதில்லை. எனவே கொலைக்காரராகவும் பொறாமை உள்ளவர்களாகவும் மாறுகிறீர்கள். அப்படியும் நீங்கள் விரும்புகிறவற்றை அடைய முடியாமல் போகிறது. நீங்கள் அதனால் சண்டையும் சச்சரவும் செய்கிறீர்கள். நீங்கள் தேவனிடம் கேட்டுக்கொள்ளாததால் எதையும் பெறுவதில்லை. 3 மேலும் தவறான நோக்கங்களோடு நீங்கள் கேட்பதால், நீங்கள் கேட்கிறபோது எதையும் பெறுவதில்லை. சொந்த இன்பத்தில் திளைக்கும் வகையில் நீங்கள் கேட்கிறீர்கள்.
4 தன் கணவனின் நம்பிக்கைக்கு உரியவளாக இல்லாத ஒரு பெண்ணைப்போல நீங்கள் இருக்கிறீர்கள். உலகின் பகுதியாக இருக்க விரும்புதல் என்பது தேவனை வெறுப்பது போல் என்று நீங்கள் அறியமாட்டீர்களா? 5 அல்லது “தேவன் நமக்குள் வசிக்க வைத்த ஆவியானவர் நம்மில் வைராக்கியத்தோடு இருக்கிறார்”[a] என்று வேதவாக்கியத்தில் எழுதப்பட்டிருப்பதைப் பொருளற்றது என நீங்கள் எண்ணுகிறீர்களா? 6 ஆனால் நம்மீதான அவரது கிருபை மிகவும் உயர்ந்தது. வேதவாக்கியத்தில் எழுதப்பட்டிருப்பது போல், “பெருமை பாராட்டுபவர்களுக்கு எதிராக தேவன் இருக்கிறார். ஆனால் அவர் பணிவான மக்களுக்குக் கிருபையை வழங்குகிறார்.”(A)
7 எனவே, உங்களையே தேவனிடம் ஒப்படையுங்கள். சாத்தானை எதிர்த்து நில்லுங்கள். அவன் ஓடிவிடுவான்.
2008 by World Bible Translation Center