Revised Common Lectionary (Semicontinuous)
தாவீதின் ஒரு பாடல்.
28 கர்த்தாவே, நீர் என் பாறை.
உதவிக்காக உம்மை அழைத்துக்கொண்டிருக்கிறேன்.
என் ஜெபங்களுக்கு உமது காதுகளை மூடிக்கொள்ளாதிரும்.
உதவி கேட்கும் என் கூக்குரலுக்கு நீர் பதிலளிக்காதிருந்தால் கல்லறைக்குச் சென்ற பிணத்தைக் காட்டிலும் நான் மேலானவனில்லை என எண்ணுவேன்.
2 கர்த்தாவே, என் கரங்களை உயர்த்தி, உமது மகா பரிசுத்த இடத்திற்கு நேராக ஜெபம் செய்வேன்.
உம்மை நோக்கி நான் கூப்பிடும்போது செவிகொடும். எனக்கு இரக்கம் காட்டும்.
3 கர்த்தாவே, தீமை செய்யும் தீயோரைப் போல என்னை எண்ணாதேயும்.
“ஷாலோம்” என்று அவர்கள் தங்கள் அயலாரை வாழ்த்துவார்கள்.
ஆனால் அவர்களைக் குறித்துத் தீயவற்றைத் தங்கள் இருதயங்களில் எண்ணுகிறார்கள்.
4 கர்த்தாவே, அவர்கள் பிறருக்குத் தீய காரியங்களைச் செய்வார்கள்.
எனவே அவர்களுக்குத் தீங்கு வரச்செய்யும்.
அவர்களுக்குத் தக்க தண்டனையை நீர் கொடுத்தருளும்.
5 கர்த்தர் செய்யும் நல்லவற்றைத் தீயோர் புரிந்துகொள்வதில்லை.
தேவன் செய்யும் நல்ல காரியங்களை அவர்கள் பார்ப்பதில்லை.
அவர்கள் அதைப் புரிந்துகொள்வதில்லை.
அவர்கள் அழிக்க மட்டுமே முயல்வார்கள்.
6 கர்த்தரைத் துதிப்பேன்,
இரக்கம் காட்டுமாறு கேட்ட என் ஜெபத்தை அவர் கேட்டார்.
7 கர்த்தரே என் பெலன், அவரே என் கேடகம்.
அவரை நம்பினேன்.
அவர் எனக்கு உதவினார்.
நான் மிகவும் மகிழ்கிறேன்!
அவரைத் துதித்துப் பாடல்களைப் பாடுவேன்.
8 கர்த்தர் தாம் தேர்ந்தெடுத்தவனைக் காக்கிறார்.
கர்த்தர் அவனை மீட்கிறார். கர்த்தரே அவன் பெலன்.
9 தேவனே, உம் ஜனங்களை மீட்டருளும்.
உமது ஜனங்களை ஆசீர்வதியும்!
அவர்களை வழி நடத்தி என்றென்றும் கனப்படுத்தும்!
29 இச்சமயத்தில் ரூபன் அவர்களோடு இல்லை. அவனுக்கு அவர்கள் யோசேப்பை விற்றுவிட்டார்கள் என்பது தெரியாது. அவன் கிணற்றைப் பார்த்தபோது அவன் இல்லாததை அறிந்து வருத்தப்பட்டு தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டான். 30 ரூபன் தன் சகோதரர்களிடம் போய், “அந்த இளைஞன் கிணற்றில் இல்லையே, நான் என்ன செய்வது?” என்று கேட்டான். 31 அச்சகோதரர்கள் ஒரு ஆட்டைக் கொன்று அதன் இரத்தத்தை யோசேப்பின் அங்கியில் தோய்த்தனர். 32 பிறகு அதைக் கொண்டுபோய் தந்தையிடம் காட்டி, “இந்த அங்கியைக் கண்டெடுத்தோம். இது யோசேப்பினுடையதா?” என்று கேட்டனர்.
33 தந்தை அந்த அங்கியைப் பார்த்துவிட்டு அது யோசேப்பினுடையது என்று அறிந்துகொண்டான். “ஆமாம் இது அவனுடையதுதான். ஒருவேளை ஏதாவது காட்டு மிருகம் அவனைக் கொன்றிருக்கும். என் குமாரன் யோசேப்பு காட்டு மிருகத்தால் உண்ணப்பட்டான்” என்று கூறினான். 34 அவனுக்கு வருத்தம் அதிகமாகித் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டான். பிறகு அவன் தன் சோகத்தை சாக்கினாலான ஆடையை அணிந்து வெளிப்படுத்தினான். அவன் தொடர்ந்து நீண்ட நாள் குமாரனைப் பற்றிய துக்கத்தில் இருந்தான். 35 யாக்கோபின் பிற குமாரர்களும், குமாரத்திகளும் அவனுக்கு ஆறுதல் கூற முயன்றார்கள். ஆனால் அவன் ஆறுதல் அடையவில்லை. “நான் மரிக்கும்வரை என் மகனுக்காக வருத்தப்படுவேன்” என்று கூறினான்.
36 மீதியானிய வியாபாரிகள் எகிப்தில் யோசேப்பை விற்றுவிட்டார்கள். பார்வோனின் பிரதானியும் தலையாரிகளுக்குத் தலைவனுமான போத்திப்பாருக்கு அவனை விற்றார்கள்.
4 தேவ தூதர்கள் பாவம் செய்தபோது, தேவன் அவர்களைத் தண்டனையின்றி விடுதலைபெற அனுமதிக்கவில்லை. தேவன் அவர்களை நியாயந்தீர்க்கிற நாள்வரைக்கும் அடைந்திருக்கும் பொருட்டு நரகத்தின் இருட்டு மூலைகளில் எறிந்தார்.
5 ஆதிகாலத்தில் வாழ்ந்த தீய மக்களையும் தேவன் தண்டித்தார். தேவனுக்கு எதிரான மக்கள் நிறைந்த உலகின் மேல் தேவன் வெள்ளம் பெருகியோடச் செய்தார். ஆனால் நோவாவையும், நோவாவோடு வேறு ஏழு பேரையும் தேவன் காப்பாற்றினார். சரியான வழியில் வாழ்வதுபற்றி மக்களுக்குப் போதித்த மனிதன் நோவா ஆவான்.
6 சோதோம், கொமோரா என்னும் தீய நகரங்களையும் தேவன் தண்டித்தார். சாம்பலைத் தவிர வேறெதுவும் இல்லாத வகையில் தேவன் அந்த நகரங்களை நெருப்பால் முற்றிலும் அழித்தார். தேவனுக்கு எதிரான மக்களுக்கு நடக்கவிருப்பதைத் தெரிவிக்கும் எடுத்துக்காட்டாக தேவன் அந்நகரங்களுக்குச் செய்தார். 7 ஆனால் தேவன் அந்நகரங்களினின்று லோத்துவைக் காப்பாற்றினார். லோத்து மிக நல்ல மனிதன். எந்தச் சட்டமுமற்ற மனிதர்களின் அநீதியான நடத்தையால் அவன் தொந்தரவுக்கு உள்ளாகி இருந்தான். 8 (லோத்து நல்ல மனிதன். ஆனால் நாள் தோறும் அவன் அத்தீய மனிதரோடு, வாழ்ந்து வந்தான். அவன் பார்த்ததும் கேட்டதுமாகிய தீய காரியங்களினால் லோத்தின் நல்ல மனம் வேதனையடைந்திருந்தது)
9 ஆம், தேவன் இந்தக் காரியங்கள் எல்லாவற்றையும் செய்தார். ஆகவே தமக்கு சேவை செய்கிற மக்களை எப்படி இரட்சிப்பது என கர்த்தர் அறிவார். மேலும் நியாயம்தீர்க்கிற நாள்வரை தீயவர்களைத் தண்டிப்பது எப்படி என்றும் அறிவார். 10 குறிப்பாக பாவங்களால் நிறைந்து ஊழல்கள் மலிந்த வழியைப் பின்பற்றுகிறவர்களுக்கும் கர்த்தரின் அதிகாரத்தை மீறுகிறவர்களுக்கும் இத்தண்டனை கிடைக்கும்.
போலிப்போதகர்கள் அவர்கள் விரும்பும் அனைத்தையும் செய்வார்கள். மட்டுமன்றி, தங்களைக் குறித்து அவர்கள் பெருமை பாராட்டிக்கொள்வார்கள். மகிமை மிக்க தேவதூதர்களைக் குறித்துத் தீயவற்றைப் பேசுவதற்கும் அவர்கள் அஞ்சமாட்டார்கள்.
2008 by World Bible Translation Center