Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Semicontinuous)

Daily Bible readings that follow the church liturgical year, with sequential stories told across multiple weeks.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 45:10-17

10 மகளே, கேள்,
    கவனமாகக் கேள், நீ புரிந்துகொள்வாய்.
உன் ஜனங்களையும், உன் தந்தையின் குடும்பத்தையும் மறந்துவிடு.
11     ராஜா உன் அழகை விரும்புகிறார்.
அவர் உன் புது மணமகன்.
    நீ அவரைப் பெருமைப்படுத்துவாய்.
12 தீருவின் செல்வந்தர்கள் ஜனங்கள் உனக்குப் பரிசுகள் தருவார்கள்.
    அவர்கள் உன்னைக் காண விரும்புவார்கள்.

13 அரச குமாரத்தி
    பொன்னில் பதிக்கப் பெற்ற விலையுயர்ந்த அழகிய மணியைப் போன்றவள்.
14 மணமகள் அழகிய ஆடையணிந்து ராஜாவிடம் அழைத்துவரப்பட்டாள்.
    மணத் தோழியர் அவளைத் தொடர்ந்தனர்.
15 அவர்கள் மகிழ்ச்சி பொங்க வந்தனர்.
    மனமகிழ்வோடு அரண்மனைக்குள் நுழைந்தனர்.

16 ராஜாவே, உம் குமாரர்கள் உமக்குப் பின் ஆட்சி செய்வார்கள்.
    தேசம் முழுவதும் அவர்களை ஆளச் செய்வீர்.
17 உமது நாமத்தை என்றென்றும் புகழ் பெறச் செய்வேன்.
    என்றென்றும் ஜனங்கள் உம்மைத் துதிப்பார்கள்.

ஆதியாகமம் 27:18-29

18 யாக்கோபு தன் தந்தையிடம் போய், “அப்பா” என்று அழைத்தான்.

அவன் தந்தையோ, “மகனே, நீ யார்?” என்று கேட்டான்.

19 யாக்கோபு தன் தந்தையிடம், “நான் ஏசா, உங்கள் மூத்த குமாரன். நீங்கள் சொன்னபடி செய்துள்ளேன். இப்போது உட்கார்ந்து நான் வேட்டையாடிக் கொண்டு வந்த இறைச்சியை உண்ணுங்கள். பிறகு என்னை ஆசீர்வாதம் செய்யுங்கள்” என்றான்.

20 ஆனால் ஈசாக்கு தன் மகனிடம், “இவ்வளவு வேகமாக நீ எவ்வாறு வேட்டையாடி மிருகத்தைக் கொன்றாய்?” என்று கேட்டான்.

இதற்கு யாக்கோபு, “உங்கள் தேவனாகிய கர்த்தர் விரைவாக வேட்டையாடி மிருகத்தைக் கொல்ல எனக்கு உதவினார்” என்று சொன்னான்.

21 பிறகு ஈசாக்கு யாக்கோபிடம், “என் அருகிலே வா. உன்னைத் தொட்டுப் பார்க்க வேண்டும். அப்போதுதான் நீ என் குமாரன் ஏசாவா இல்லையா என்று தெரிந்துகொள்ள முடியும்” என்றான்.

22 யாக்கோபு அவனது அருகிலே போனான். ஈசாக்கு அவனைத் தொட்டுப் பார்த்துவிட்டு, “உனது சத்தம் யாக்கோபினுடையதுபோல் உள்ளது. ஆனால் உனது கைகள் ஏசாவின் கைகள் போல் முடி நிறைந்ததாய் இருக்கிறது” என்றான். 23 ஈசாக்கினால் அவனை யாக்கோபு என்று கண்டுகொள்ள முடியவில்லை. எனவே, அவனை ஆசீர்வதித்தான்.

24 எனினும் ஈசாக்கு, “உண்மையில் நீ என்னுடைய குமாரன் ஏசாதானா?” என்று கேட்டான்.

யாக்கோபு, “ஆமாம்” என்று பதில் சொன்னான்.

யாக்கோபிற்கு ஆசீர்வாதம்

25 பிறகு ஈசாக்கு, “அந்த உணவைக் கொண்டு வா. அதனை உண்டு விட்டு உன்னை ஆசீர்வதிக்கிறேன்” என்றான். எனவே யாக்கோபு உணவைக் கொடுத்தான். அவனும் அதை உண்டான். பின் யாக்கோபு கொஞ்சம் திராட்சை ரசத்தைக் கொடுத்தான். அதையும் அவன் குடித்தான்.

26 பிறகு ஈசாக்கு அவனிடம், “மகனே அருகில் வந்து என்னை முத்தமிடு” என்றான். 27 எனவே யாக்கோபு அருகிலே போய் தந்தையை முத்தமிட்டான். ஈசாக்கு அவனது ஆடையை நுகர்ந்து பார்த்து அவனை ஏசா என்றே நம்பி ஆசீர்வதித்தான்.

“என் குமாரன் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்ட வயலைப் போன்று மணக்கிறான்.
28 கர்த்தர் உனக்கு மிகுதியாக மழையைத் தரட்டும். அதனால் நீ பூமியின் செல்வத்தைப் பெறுவாய்.
29 எல்லா ஜனங்களும் உனக்குச் சேவை செய்யட்டும்.
    நாடுகள் உனக்கு அடிபணியட்டும்.
உன் சகோதரர்களையும் நீ ஆள்வாய்.
உன் தாயின் குமாரர்கள் உனக்கு அடிபணிந்து கீழ்ப்படிவார்கள்.

“உன்னைச் சபிக்கிறவர்கள் சபிக்கப்படுவார்கள்.
உன்னை ஆசீர்வதிப்பவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்” என்று கூறினான்.

லூக்கா 10:21-24

இயேசுவின் பிரார்த்தனை

(மத்தேயு 11:25-27; 13:16-17)

21 அப்போது பரிசுத்த ஆவியானவர் இயேசுவை மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாக்கினார். இயேசு: “பிதாவே, வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! உங்களுக்கு நன்றி. ஞானிகளிடமிருந்தும், அறிவுமிக்கவர்களிடமிருந்தும் இக்காரியங்களை நீங்கள் மறைத்ததால் உங்களை வாழ்த்துகிறேன். ஆனால் சிறு குழந்தைகளைப்போன்ற மக்களுக்கு இச்செயல்களை நீர் காட்டியுள்ளீர். ஆம், பிதாவே, நீர் உண்மையாகவே இதைச் செய்ய விரும்பியதால் இதனைச் செய்துள்ளீர்கள்.

22 “எனக்கு எல்லாவற்றையும் என் பிதா தந்துள்ளார். குமாரன் யார் என்பது பிதாவைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. பிதா யார் என்பதை குமாரன் மட்டுமே அறிவார். குமாரன் அதனைத் தெரிவிக்கும்பொருட்டு தேர்ந்தெடுக்கும் மக்கள் மட்டுமே தந்தையைப்பற்றி அறிந்துகொள்வார்கள்” என்றார்.

23 பின் இயேசு சீஷர்களை நோக்கித் திரும்பினார். அவர்கள் அவரோடு தனித்திருந்தார்கள். இயேசு, “நீங்கள் இப்போது பார்க்கிற செயல்களைக் காணும்படியாக ஆசீர்வதிக்கப்பட்டுள்ளீர்கள். 24 நீங்கள் இப்போது பார்க்கிற காரியங்களைக் காணவேண்டுமென்று பல தீர்க்கதரிசிகளும், மன்னர்களும் விரும்பினார்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆனால் அவர்கள் இக்காரியங்களைப் பார்க்கவில்லை. நீங்கள் இப்போது கேட்கிற செய்திகளைக் கேட்க வேண்டுமென்று பல தீர்க்கதரிசிகளும், ராஜாக்களும் விரும்பினார்கள். ஆனால் அவர்கள் இச்செய்திகளைக் கேட்கவில்லை” என்றார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center