Revised Common Lectionary (Semicontinuous)
33 நல்லோரே, கர்த்தருக்குள் களிப்படையுங்கள்!
நல்ல நேர்மையான ஜனங்களே, அவரைத் துதியுங்கள்!
2 சுரமண்டலத்தை இசைத்து கர்த்தரைத் துதியுங்கள்!
பத்து நரம்பு வீணையை இசைத்து கர்த்தரைப் பாடுங்கள்.
3 புதுப்பாட்டை அவருக்குப் பாடுங்கள்!
மகிழ்ச்சியான இராகத்தை இனிமையாய் மீட்டுங்கள்.
4 தேவனுடைய வாக்கு உண்மையானது!
அவர் செய்பவற்றை உறுதியாக நம்புங்கள்!
5 நன்மையையும் நேர்மையையும் தேவன் நேசிக்கிறார்.
கர்த்தர் பூமியை அவரது அன்பினால் நிரப்பியுள்ளார்.
6 கர்த்தர் கட்டளையிட, உலகம் உருவாயிற்று.
தேவனுடைய வாயின் மூச்சு பூமியிலுள்ள அனைத்தையும் உருவாக்கிற்று.
7 கடலின் தண்ணீரை ஒரே இடத்தில் தேவன் ஒன்று திரட்டினார்.
அவர் சமுத்திரத்தை அதற்குரிய இடத்தில் வைக்கிறார்.
8 பூமியிலுள்ளோர் யாவரும் கர்த்தருக்குப் பயந்து அவரை மதிக்கவேண்டும்.
உலகில் வாழும் ஜனங்கள் எல்லோரும் அவருக்கு அஞ்ச வேண்டும்.
9 ஏனெனில் தேவன் கட்டளையிட, அக்காரியம் நிறைவேறுகிறது.
அவர் “நில்!” எனக்கூற அக்காரியம் நின்றுவிடும்.
10 எல்லோருடைய அறிவுரையையும் பயனற்றுப்போகச் செய்ய கர்த்தராலாகும்.
அவர்கள் திட்டங்களை கர்த்தர் அழிக்கக் கூடும்.
11 கர்த்தருடைய அறிவுரை என்றென்றும் நல்லது.
தலைமுறை தலைமுறைக்கும் அவர் திட்டங்கள் நன்மை தரும்.
12 கர்த்தரை தேவனாக ஏற்றுக்கொண்ட ஜனங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
தேவன் தனது சொந்த ஜனங்களாக அவர்களைத் தேர்ந்தெடுத்தார்.
ஆபிராம் கானானுக்குத் திரும்புதல்
13 ஆபிராம் எகிப்தை விட்டு வெளியேறி, தன் மனைவியோடும் தனக்குரிய பொருட்களோடும் பாலைவனத்தின் வழியாகப் பயணம் செய்தான். லோத்துவும் அவனோடு சென்றான். 2 ஆபிராம் மிகவும் செல்வந்தனாக இருந்தான். அவனிடம் ஏராளமான மிருகங்களும் தங்கமும் வெள்ளியும் இருந்தன.
3 ஆபிராம் தொடர்ந்து பயணம் செய்து பாலைவனத்தை விட்டு பெத்தேலுக்குச் சென்று, பெத்தேல் நகரத்திற்கும் ஆயி நகரத்திற்கும் இடையில் உள்ள பகுதியில் தங்கினான். அது ஏற்கெனவே அவனும் அவன் குடும்பத்தாரும் தங்கிய இடமாகும். 4 இங்கு தான் ஆபிராம் பலிபீடம் அமைத்திருந்தான். எனவே, ஆபிராம் கர்த்தரை அந்த இடத்தில் தொழுதுகொண்டான்.
ஆபிராமும் லோத்தும் பிரிகிறார்கள்
5 இந்த நேரத்தில் லோத்தும் ஆபிராமோடு பயணம் செய்துகொண்டிருந்தான். லோத்துக்கும் நிறைய மிருகங்களும் கூடாரங்களும் இருந்தன. 6 ஆபிராமிடமும் லோத்திடமும் இருந்த மிருகங்கள் வாழ்கிற அளவிற்கு அந்த நிலம் அவ்வளவு போதுமானதாக இல்லை. 7 அதோடு கானானியர்களும் பெரிசியரும் அவர்களுடன் அங்கு வாழ்ந்து வந்தனர். ஆபிராமின் மேய்ப்பர்களும் லோத்தின் மேய்ப்பர்களும் தங்களுக்குள் சண்டையிட்டனர்.
8 எனவே, ஆபிராம் லோத்திடம், “நம்மிருவருக்கும் இடையில் எவ்வித வாக்குவாதமும் வேண்டாம். உனது ஆட்களுக்கும் எனது ஆட்களுக்கும் இனி மேல் எந்த விரோதமும் வேண்டாம். நாம் சகோதரர்கள். 9 நாம் பிரிந்து விடுவோம். உனக்கு விருப்பமான எந்த இடத்தையும் நீ தேர்ந்தெடுத்துக்கொள். நீ இடது பக்கமாகப் போனால் நான் வலது பக்கமாகப் போகிறேன். நீ வலது பக்கமாகப் போனால் நான் இடது பக்கமாகப் போகிறேன்” என்றான்.
10 லோத்து யோர்தான் நதிக்கு அருகான சமவெளியைப் பார்வையிட்டான். அங்கு நீர் வளம் இருப்பதைக் கண்டான். (கர்த்தர் சோதோமையும் கொமோராவையும் அழிப்பதற்கு முன்பு சோவாருக்குப்போகும் வழிவரை அது கர்த்தரின் தோட்டம் போலவும் எகிப்து தேசத்தைப்போலவும் இருந்தது.) 11 எனவே லோத்து யோர்தான் சமவெளியைத் தேர்ந்தெடுத்தான். இருவரும் பிரிந்தனர். லோத்து கிழக்கு நோக்கிப் பயணம் செய்தான். 12 ஆபிராம் கானான் தேசத்தில் தங்கினான். லோத்து சமவெளிப்பகுதியின் நகரங்களில் தங்கினான். லோத்து மேலும் தெற்கு நோக்கி நகர்ந்து சோதோமில் கூடாரம் அடித்தான். 13 சோதோம் ஜனங்கள் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்துகொண்டிருந்தனர் என்பதை அறிந்திருந்தார்.
14 லோத்து விலகிப்போனதும் கர்த்தர் ஆபிராமிடம், “உன்னைச் சுற்றிலும் வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் பார். 15 இந்தப் பூமியை நான் உனக்கும் உன் சந்ததியினருக்கும் கொடுக்கிறேன். இது என்றென்றும் உங்களுக்குரியதாக இருக்கும். 16 உன் ஜனங்களை உலகத்தில் உள்ள புழுதியின் அளவுக்குப் பெருகச் செய்வேன். எவராவது புழுதியை எண்ண முடியுமானால் அதுவே உங்கள் தொகையாக இருக்கும். 17 எனவே நாட்டின் நீளமும் அகலமும் எவ்வளவோ அவ்வளவு தூரம் நட. நான் அவற்றை உனக்குத் தருவேன்” என்றார்.
18 எனவே, ஆபிராம் தனது கூடாரத்தை எடுத்துக்கொண்டு பெரிய மரங்களிருக்கும் எபிரோனிலிலுள்ள மம்ரேயின் சமபூமிக்குச் சென்றான். இங்கு ஆபிராம் கர்த்தரைத் தொழுதுகொள்ள ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.
17 அந்தப் போலிப் போதகர்களோ நீரில்லாத ஊற்றுக்களைப் போன்றவர்கள். அவர்கள் புயலினால் அடித்துச் செல்லப்படுகின்ற மேகங்களைப் போன்றவர்கள். அவர்களுக்காகக் காரிருள் நிரம்பிய இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 18 அவர்களின் பேச்சு கவர்ச்சிகரமாக இருக்கும். ஆனால் உண்மையில் அது தகுதியற்றது. அவர்கள் மக்களைப் பாவ வலைக்குள் செலுத்துகிறார்கள். பாவங்களின் செல்வாக்கில் இருந்து தப்பிக்க ஆரம்பித்திருக்கிறவர்களை அவர்கள் தவறான பாதையில் வழி நடத்துகிறார்கள். தங்கள் பாவ சரீரங்களில் மக்கள் செய்ய விரும்பும் பொல்லாப்புகளைப் பயன்படுத்தி அப்போலிப் போதகர்கள் இதனைச் செய்கிறார்கள். 19 போலிப் போதகர்கள் அம்மக்களுக்கு விடுதலையைப் பற்றி வாக்குறுதி அளிக்கிறார்கள். ஆனால் போலிப் போதகர்களே இன்னும் விடுதலை அடையவில்லை. மிகவும் மோசமான பழக்கங்களுக்கு அவர்கள் அடிமைகளாக இருக்கிறார்கள். ஒருவனை ஆக்கிரமிக்கும் பொருளுக்கு அவன் அடிமையாகிறான்.
20 உலகத்தின் தீமைகளிலிருந்து அம்மக்கள் தப்பித்து விட்டார்கள். நமது கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவை அறிந்ததால் அவர்கள் தப்பித்தார்கள். மீண்டும் அத்தீமைகளிடையே அவர்கள் அகப்பட்டு பலியானால், அவர்களது இறுதி நிலமை, அவர்களுடைய முந்தைய நிலமையைக் காட்டிலும் மிக மோசமாக இருக்கும். 21 ஆம், தமக்குக் கொடுக்கப்பட்ட பரிசுத்த கட்டளையைப்பற்றி அறிந்து, அதன் பிறகு அதிலிருந்து பிறழ்வதைக் காட்டிலும் இத்தகைய மக்கள் சரியான வழியைப்பற்றித் தெரிந்துகொள்ளாமலேயே இருப்பது நல்லதாகும். 22 “நாயானது வாந்தியெடுத்தபின், அந்த வாந்தியையே உண்ண வரும்” மற்றும், “ஒரு பன்றியைக் கழுவிய பின்னரும், அப்பன்றி சேற்றிற்குச் சென்று புரளும்” ஆகிய பழமொழிகளைப் போன்றவை அம்மக்களின் செயல் ஆகும்.
2008 by World Bible Translation Center