Revised Common Lectionary (Semicontinuous)
ஆசாபின் துதிப் பாடல்களுள் ஒன்று.
83 தேவனே, அமைதியாய் இராதேயும்!
உமது செவிகளை மூடிக்கொள்ளாதேயும்!
தேவனே தயவாய் எதையாவது பேசும்.
2 தேவனே, உமது பகைவர்கள் உமக்கெதிராகத் திட்டங்கள் வகுக்கிறார்கள்.
உமது பகைவர்கள் உடனே தாக்குதல் ஆரம்பிக்கக்கூடும்.
3 உமது ஜனங்களுக்கு எதிராக அவர்கள் இரகசிய திட்டஙகளை வகுக்கிறார்கள்.
நீர் நேசிக்கும் ஜனங்களுக்கு எதிராக உமது பகைவர்கள் திட்டங்களை கலந்து ஆலோசிக்கிறார்கள்.
4 பகைவர்கள் இவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்: “வாருங்கள், நாம் பகைவர்களை முற்றிலும் அழிப்போம்.
பின்பு ஒருநாளும் ஒருவனும் ‘இஸ்ரவேல்’ என்னும் பெயரை நினைவு கூரமாட்டான்.”
9 தேவனே, மீதியானியரைத் தோற்கடித்ததைப் போலவும்
கீசோன் நதியருகே சிசெரா மற்றும் யாபீன் ஜனங்களைத் தோற்கடித்ததைப்போலவும் பகைவனைத் தோற்கடியும்.
10 நீர் அவர்களை எந்தோரில் தோற்கடித்தீர்.
அவர்கள் சரீரங்கள் நிலத்தில் விழுந்து அழிந்தன.
17 தேவனே, அந்த ஜனங்களை அச்சுறுத்தி, அவர்கள் என்றென்றும் வெட்கமடையச் செய்யும்.
அவர்களை இழிவுப்படுத்தி, அழித்துப்போடும்.
18 அப்போது நீரே தேவனென்று அவர்கள் அறிவார்கள்.
உமது நாமம் யேகோவா என்பதையும் அவர்கள் அறிவார்கள்.
மிக உன்னதமான தேனாகிய நீர்
உலகம் முழுவதற்கும் தேவன் என்பதையும் அவர்கள் அறிவார்கள்.
ஆமான் தூக்கிலிடப்படுகிறான்
7 எனவே ராஜாவும், ஆமானும் இராணி எஸ்தரோடு விருந்து உண்ணச் சென்றனர். 2 பிறகு இரண்டாம் நாள் விருந்தில் அவர்கள் திராட்சைரசம் குடிக்கும்போது, ராஜா மீண்டும் இராணியிடம் கேள்வி கேட்டான். அவன், “எஸ்தர் இராணியே, நீ என்னிடம் என்ன கேட்க விரும்புகிறாய்? எதை வேண்டுமானாலும் கேள். அது உனக்குக் கொடுக்கப்படும். உன்னுடைய விருப்பம் என்ன? எனது நாட்டில் பாதி வேண்டுமானாலும் நான் உனக்குக் கொடுப்பேன்” என்றான்.
3 பிறகு, எஸ்தர் இராணி, “ராஜாவே, நீர் என்னை விரும்பினால், இது உமக்கு விருப்பமானால் என்னை வாழவிடுங்கள். எனது ஜனங்களையும் வாழவிடுங்கள் என்று கேட்கிறேன். அதுதான் உம்மிடம் வேண்டுகிறேன். 4 ஏனென்றால், நானும் எனது ஜனங்களும் அழியவும், கொல்லப்படவும் விற்கப்பட்டோம். அடிமைகளாக விற்கப்பட்டால் கூட நான் மௌனமாக இருப்பேன். ஏனென்றால் அது ராஜாவைத் துன்புறத்துகிற ஒரு பிரச்சினையாக இருக்கமுடியாது” என்றாள்.
5 பிறகு ராஜா அகாஸ்வேரு எஸ்தர் இராணியிடம், “இதனை உனக்குச் செய்தவன் யார்? உனது ஜனங்களுக்கு இத்தகைய கொடுமையைச் செய்ய துணிந்த மனிதன் எங்கே இருக்கிறான்?” என்று கேட்டான்.
6 எஸ்தர், “எங்களுக்கு எதிரானவன் எங்கள் பகைவன் இந்த கெட்ட ஆமான்தான்” என்றாள்.
பிறகு, ராஜா மற்றும் இராணி முன்னால் ஆமான் திகில் அடைந்தான். 7 ராஜா மிகவும் கோபம் அடைந்தான். அவன் எழுந்து திராட்சைரசம் விருந்தைவிட்டு, தோட்டத்திற்குள் சென்றான். ஆனால் ஆமான் உள்ளே இருந்து எஸ்தர் இராணியிடம் தன் உயிரைக் காப்பாற்றுமாறு கெஞ்சினான். அவன் தன் உயிருக்காக மன்றாடினான். ஏனென்றால், அவனைக் கொல்லுமாறு ஏற்கெனவே ராஜா முடிவுச் செய்துவிட்டதை அவன் அறிந்தான். 8 ராஜா தோட்டத்திலிருந்து திரும்பி விருந்து அறைக்குள்ளே நுழையும்போது, இராணி எஸ்தர் உட்கார்ந்திருக்கிற மெத்தையில் ஆமான் விழுந்து கிடந்தான். ராஜா மிகவும் கோபமான குரலில், “நான் இந்த வீட்டில் இருக்கும்போதே நீ இராணியைத் தாக்குகிறாயோ?” எனக் கேட்டான்.
ராஜா இவ்வாறு சொன்ன உடனேயே வேலைக்காரர்கள் வந்து ஆமானின் முகத்தை மூடினார்கள். 9 பிரதானிகளில் ஒருவனான ராஜாவுக்கு சேவைச் செய்பவனின் பெயர் அற்போனா. அவன் ராஜாவிடம், “ஆமானின் வீட்டின் அருகில் 75 அடி உயரத்தில் ஒரு தூக்குமரம் கட்டப்பட்டுள்ளது. அதில் மொர்தெகாயைத் தூக்கிலிடவேண்டும் என்றே ஆமான் அதைக் கட்டினான். மொர்தெகாய் உமக்கு உதவிச் செய்த ஆள், உம்மை கொல்லத் திட்டமிட்டத் தீயர்வர்களைப்பற்றி உமக்குச் சொன்னவன்” என்றான்.
ராஜா, “ஆமானை அதே மரத்தில் தூக்கில் போடுங்கள்” என்றான்.
10 எனவே, அவர்கள் ஆமானை அவன் மொர்தெகாய்க்காக கட்டிய தூக்கு மரத்தில் போட்டனர். பிறகு ராஜா தன் கோபத்தை நிறுத்தினான்.
நல்ல வேலைக்காரரும் தீய வேலைக்காரரும்
(லூக்கா 12:41-48)
45 “புத்தியுள்ள நம்பிக்கைக்குரிய வேலையாள் யார்? தன் மற்ற வேலைக்காரர்களுக்குத் தக்க நேரத்தில் உணவளிக்கும் வேலைக்காரனை எஜமானன் நம்புகிறான். எஜமானனின் நம்பிக்கைக்குரிய அவ்வேலைக்காரன் யார்? 46 அவ்வேலைக்காரன் எஜமானன் வரும் நேரத்தில் தன் வேலையை சரியாகச் செய்கிறதைக் கண்டால் அவ்வேலைக்காரன் மகிழ்ச்சியடைகிறான். 47 நான் உண்மையைச் சொல்கிறேன். தனக்குரிய எல்லாவற்றையும் மேற்பார்வை செய்யும் பொறுப்பையும் அந்த வேலைக்காரன் வசம் ஒப்படைப்பான்.
48 “ஆனால், அவ்வேலைக்காரன் தீய எண்ணம் கொண்டு, தன் எஜமானன் விரைவில் வரமாட்டான் என எண்ணினால் என்ன ஆகும்? 49 உடன் வேலைக்காரர்களையெல்லாம் அடித்து உதைத்து எல்லா உணவையும் உண்டுவிட்டு தன்னைப் போன்றவர்களுடன் உண்டு குடிக்க முனைவான். 50 அவன் எதிர்ப்பாராத நேரத்தில் எஜமானன் வருவான். 51 பின்னர் அவ்வேலைக்காரனைத் தண்டிப்பான். மாயமானவர்களின் இடத்திற்கு அவனை அனுப்பி வைப்பான். அங்கே உள்ளவர்கள் கூக்குரலிட்டுக் கொண்டு வேதனையினால் பற்களைக் கடித்துக் கொண்டிருப்பார்கள்.
2008 by World Bible Translation Center