Revised Common Lectionary (Semicontinuous)
99 கர்த்தர் ராஜா.
எனவே தேசங்கள் அச்சத்தால் நடுங்கட்டும்.
கேருபீன் தூதர்களுக்கு மேலே தேவன் ராஜாவாக வீற்றிருக்கிறார்.
எனவே உலகம் அச்சத்தால் நடுங்கட்டும்.
2 சீயோனில் கர்த்தர் மேன்மையானவர்.
ஜனங்கள் எல்லோருக்கும் அவர் பெரிய தலைவர்.
3 எல்லா ஜனங்களும் உமது நாமத்தைத் துதிக்கட்டும்.
தேவனுடைய நாமம் அஞ்சத்தக்கது.
தேவன் பரிசுத்தர்.
4 வல்லமையுள்ள ராஜா நீதியை நேசிக்கிறார்.
தேவனே, நீரே நன்மையை உண்டாக்கினீர்.
யாக்கோபிற்கு (இஸ்ரவேல்) நீர் நன்மையையும் நியாயத்தையும் தந்தீர்.
5 நமது தேவனாகிய கர்த்தரைத் துதியுங்கள்.
அவரது பரிசுத்த பாதப்படியில் தொழுதுகொள்ளுங்கள்.
6 மோசேயும் ஆரோனும் அவரது ஆசாரியர்களில் இருவர்.
அவர் நாமத்தை அழைத்த மனிதர்களில் சாமுவேலும் ஒருவன்.
அவர்கள் கர்த்தரிடம் ஜெபித்தபோது
அவர் அவர்களுக்குப் பதில் தந்தார்.
7 உயர்ந்த மேகத்திலிருந்து தேவன் பேசினார்.
அவர்கள் அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தார்கள்.
தேவன் அவர்களுக்குச் சட்டத்தைக் கொடுத்தார்.
8 எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் அவர்கள் ஜெபங்களுக்குப் பதில் தந்தீர்.
ஜனங்கள் செய்யும் தீய காரியங்களுக்கு அவர்களைத் தண்டிப்பவர் என்பதையும்,
மன்னிக்கும் தேவன் நீரே என்பதையும் அவர்களுக்கு நீர் காட்டினீர்.
9 நமது தேவனாகிய கர்த்தரைத் துதியுங்கள்.
அவரது பரிசுத்த மலையை நோக்கி விழுந்து வணங்கி அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.
நமது தேவனாகிய கர்த்தர் உண்மையிலேயே பரிசுத்தர்.
பெசலெயேலும் அகோலியாபும்
31 கர்த்தர் மோசேயை நோக்கி, 2 “யூதாவின் கோத்திரத்திலிருந்து ஒரு மனிதனை எனது விசேஷ பணிக்காகத் தெரிந்தெடுத்துள்ளேன். அவன் ஊருடைய குமாரனான ஊரியின் குமாரன் பெசலெயேல். 3 தேவ ஆவியால் நான் பெசலெயேலை நிரப்பியுள்ளேன். எல்லாவிதமான கைவேலைகளையும் செய்யக்கூடிய திறமையையும், அறிவையும் அவனுக்குக் கொடுத்திருக்கிறேன். 4 பெசலெயேல் கலைப் பொருட்களை வடிப்பதில் வல்லவன். பொன், வெள்ளி, வெண்கலம் ஆகியவற்றால் பொருட்களைச் செய்ய அவனுக்கு இயலும். 5 பெசலெயேலால் அழகான அணிகலன்களை வெட்டி உருவாக்க முடியும். மரவேலைகளிலும் அவன் கை தேர்ந்தவன். அவன் எல்லாவிதமான வேலைகளையும் செய்யும் ஆற்றல்மிக்கவன். 6 அவனுக்கு உதவி செய்வதற்கு தாண் கோத்திரத்திலிருந்து அகிசாமாக்கின் குமாரன் அகோலியாபை தெரிந்தெடுத்துள்ளேன். நான் உனக்குக் கூறிய எல்லாப் பொருட்களையும் செய்யும் திறமையை எல்லாப் பணியாட்களுக்கும் கொடுத்துள்ளேன். நான் உனக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் செய்வார்கள்.
7 ஆசாரிப்புக் கூடாரம், உடன்படிக்கைப் பெட்டி, கிருபாசனம், கூடாரத்தின் பணி முட்டுகளும்,
8 மேசையும் அதற்குத் தேவையான பொருட்களும், சுத்தமான குத்துவிளக்கையும் அதின் கருவிகளும், நறுமணப் பொருளை எரிக்கும் பீடம்,
9 காணிக்கைகளை எரிக்கும் பலிபீடம், பலிபீடத்தில் பயன்படுத்தப்படும் பொருட்கள், தொட்டியும் அதன் பீடமும்,
10 ஆசாரியனாகிய ஆரோனின் விசேஷ ஆடைகள், ஆரோனின் குமாரர்கள் ஆசாரியராக சேவை செய்ய அவர்களுக்கான உடைகள்,
11 நறுமணம் மிக்க அபிஷேக எண்ணெய், மகா பரிசுத்த இடத்தின் நறுமணப்பொருள் அனைத்தையும்
நான் உனக்குக் கூறிய விதத்திலேயே பணியாளர்கள் செய்ய வேண்டும்” என்றார்.
தேவனுடைய மந்தை
5 உங்கள் குழுவிலுள்ள முதியோருக்கு இப்பொழுது நான் சிலவற்றைக் கூறவேண்டும். நானும் ஒரு முதியவன். நான் கிறிஸ்துவின் துன்பங்களை நேரில் கண்டிருக்கிறேன். நமக்குக் காட்டப்படும் மகிமையிலும் நான் பங்கு கொள்வேன். 2 ஒரு ஆட்டு மந்தையைக் கவனித்துக்கொள்கிற மேய்ப்பர்கள்போல உங்கள் பொறுப்பில் இருக்கிற மக்களின் கூட்டத்தைக் கவனித்துக்கொள்ள வேண்டுமென நான் உங்களை கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் தேவனுடைய கூட்டத்தினர். விருப்பத்தோடு அவர்களைக் கவனித்துக்கொள்ளுங்கள். எவ்விதமான நிர்ப்பந்தத்தின் காரணமாகவும் அப்படிச் செய்ய வேண்டாம். நீங்கள் அதை விருப்பத்தோடு செய்ய வேண்டுமென தேவன் விரும்புகிறார். பணத்துக்காகப் பேராசை பிடித்திருப்பதால் கண்காணிப்பாளர்களைப்போல சேவை செய்யாதீர்கள். சேவை செய்யும் வாஞ்சை இருப்பதால் சேவை செய்யுங்கள். 3 நீங்கள் பொறுப்பேற்றுள்ள மக்களிடம் கொடுமையான அதிகாரியாக நடந்துகொள்ளாதீர்கள். ஆனால் அம்மக்களுக்கு முன்மாதிரியாக இருங்கள். 4 அப்போது, தலைமை மேய்ப்பர் வரும்போது நீங்கள் கிரீடம் பெறுவீர்கள். அக்கிரீடம் மகிமை நிரம்பியதாகவும், ஒருபோதும் அழகு குன்றாததாகவும் இருக்கும்.
5 இளைஞர்களே, நான் உங்களுக்கும் சிலவற்றைச் சொல்லவேண்டும். முதியோரின் அதிகாரத்திற்கு நீங்கள் கட்டுப்பட வேண்டும். ஒருவருக்கொருவர் தாழ்மையோடு சேவை புரிந்துகொள்ள வேண்டும்.
“அகம்பாவம்மிக்க மனிதருக்கு தேவன் எதிரானவர்.
ஆனால் தாழ்மையுள்ள மனிதருக்கு தேவன் கிருபை அளிக்கிறார்.”(A)
2008 by World Bible Translation Center