Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Semicontinuous)

Daily Bible readings that follow the church liturgical year, with sequential stories told across multiple weeks.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 97

97 கர்த்தர் ஆளுகிறார், பூமி மகிழும்.
    தூரத்துத் தேசங்கள் எல்லாம் மகிழ்கின்றன.
அடர்ந்த இருண்ட மேகங்கள் கர்த்தரைச் சூழும்.
    நன்மையும் நீதியும் அவர் அரசை வலிமையாக்கும்.
கர்த்தருக்கு முன்னே ஒரு அக்கினி செல்கிறது,
    அது பகைவரை அழிக்கிறது.
வானத்தில் அவரது மின்னல் மின்னுகிறது.
    ஜனங்கள் அதைக் கண்டு அஞ்சுகிறார்கள்.
கர்த்தருக்கு முன்பு மலைகள் மெழுகு போல உருகும்.
    பூமியின் ஆண்டவருக்கு முன்பாக அவை உருகும்.
வானங்களே, அவரது நன்மையைக் கூறுங்கள்!
    ஒவ்வொருவரும் தேவனுடைய மகிமையைக் காணட்டும்!

ஜனங்கள் அவர்களது விக்கிரகங்களை தொழுதுகொள்கிறார்கள்.
    அவர்கள் தங்கள் “தெய்வங்களைப்” பற்றிப் பெருமைப்படுகிறார்கள்.
ஆனால் அந்த ஜனங்கள் வெட்கமடைவார்கள்.
    அவர்கள் “தெய்வங்கள்” குனிந்து வணங்கி கர்த்தரைத் தொழுதுகொள்வார்கள்.
சீயோனே, செவிக்கொடுத்து மகிழ்வாயாக!
    யூதாவின் நகரங்களே, மகிழ்ச்சிக்கொள்ளுங்கள்!
    ஏனெனில் கர்த்தர் ஞானமுள்ள முடிவுகளை எடுக்கிறார்.
மகா உன்னதமான தேவனே, மெய்யாகவே நீரே பூமியின் அரசர்.
    பிற தெய்வங்களைக் காட்டிலும் நீர் மகத்துவமுள்ளவர்.
10 கர்த்தரை நேசிக்கும் ஜனங்கள் தீமையை வெறுப்பார்கள்.
    எனவே தேவன் தம்மைப் பின்பற்றுவோரைக் காப்பாற்றுகிறார்.
    தீயோரிடமிருந்து தேவன் தம்மைப் பின்பற்றுவோரைக் காப்பாற்றுகிறார்.
11 நல்லோர் மீது ஒளியும், மகிழ்ச்சியும் பிரகாசிக்கும்.
12 நல்லோரே, கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருங்கள்!
    அவரது பரிசுத்த நாமத்தை பெருமைப்படுத்துங்கள்!

யாத்திராகமம் 33:1-6

நான் உங்களோடு வரமாட்டேன்

33 பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி, “நீயும், நீ எகிப்திலிருந்து வழிநடத்திய ஜனங்களும் இவ்விடத்தை விட்டுப் புறப்பட வேண்டும். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்குக் கொடுப்பதாக நான் வாக்குறுதி அளித்த தேசத்திற்குச் செல்லுங்கள். அவர்களின் சந்ததிக்கு அத்தேசத்தைக் கொடுப்பதாகச் சொன்னேன். எனவே உங்களுக்கு முன்பாகச் செல்வதற்கு ஒரு தூதனை அனுப்புவேன். கானானியரையும், எமோரியரையும், ஏத்தியரையும், பெரிசியரையும், ஏவியரையும், எபூசியரையும், நான் தோற்கடிப்பேன். உங்கள் தேசத்தைவிட்டு அவர்கள் போகும்படியாகச் செய்வேன். எனவே உச்சிதமான பொருட்களால் நிரம்பியுள்ள அத்தேசத்திற்குச் செல்லுங்கள். ஆனால் நான் உங்களோடு வரமாட்டேன். நீங்கள் பிடிவாதமான ஜனங்கள். என்னை மிகவும் கோபப்படுத்துகிறீர்கள். நான் உங்களோடு வந்தால் ஒருவேளை வழியிலேயே உங்களை அழித்து விடுவேன்” என்றார்.

ஜனங்கள் இந்தச் செய்தியைக் கேட்டுக் கவலையடைந்தனர். அவர்கள் ஆபரணங்கள் அணிவதை விட்டுவிட்டனர். ஏனெனில் கர்த்தர் மோசேயை நோக்கி, “இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கூறு, ‘நீங்கள் பிடிவாதமான ஜனங்கள். சிறிது காலம் உங்களோடு வந்தாலும் நான் உங்களை அழித்து விடக்கூடும். நான் உங்களுக்கு என்ன செய்வதென முடிவெடுக்கும்வரை உங்கள் அணிகலன்களைக் கழற்றிவிடுங்கள்’ என்று கூறு” என்றார். (சீனாய்) ஓரேப் மலையருகே இஸ்ரவேல் ஜனங்கள் ஆபரணங்களை அணிவதை விட்டுவிட்டனர்.

பிலிப்பியர் 3:13-4:1

13 சகோதர சகோதரிகளே! இன்னும் அந்த இலக்கை நான் அடையவில்லை என்று எனக்குத் தெரியும். ஆனால் எப்பொமுதும் நான் ஒன்றை மட்டும் செய்து வருகிறேன். அதாவது கடந்த காலத்தில் உள்ளவற்றை நான் மறந்துவிடுகிறேன். என முன்னால் உள்ள குறிக்கோளை அடைய எவ்வளவு முயல முடியுமோ அவ்வளவு முயலுகிறேன். 14 குறிக்கோளை அடைந்து பரிசு பெறுவதற்கான முயற்சியையும் விடாமல் தொடர்ந்து நான் கைக்கொண்டு வருகிறேன். அது என்னுடையது. ஏனென்றால் அத்தகைய வாழ்வுக்குத்தான் இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவன் என்னை அழைத்திருக்கிறார்.

15 ஆன்மீகத்தில் வளர்ந்து முழுமை அடைந்துள்ள நாம் அனைவரும் இத்தகைய வழியில் எண்ண வேண்டும். நீங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் மேற்கூறிய விஷயங்களில் ஏதேனும் இருந்தால் தேவன் அதை உங்களுக்குத் தெளிவுபடுத்துவார். 16 ஆனாலும் நாம் ஏற்கெனவே செய்வது போல நாம் அடைந்த உண்மையைப் பின் தொடர்வதைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.

17 சகோதர சகோதரிகளே! நீங்கள் அனைவரும் என்னைப் போன்று வாழ முயல வேண்டும். நாங்கள் காட்டிய சட்டங்களை மேற்கொண்டு வாழ்பவர்களை அப்படியே பின்பற்ற முயலுங்கள். 18 இயேசுவின் சிலுவைக்கு விரோதமாகப் பலர் வாழ்ந்து வருகின்றனர். இத்தகையவர்களைப் பற்றி நான் அடிக்கடி கூறி வருகிறேன். இப்பொழுதும் அவர்களைப் பற்றிக் கூறுவதை எண்ணும்போது எனக்கு அழுகையே வருகிறது. 19 இத்தகையோரின் வாழ்க்கை முறை இவர்களை அழிவின் பாதைக்கே அழைத்துச் செல்லும். அவர்கள் தேவனுக்குச் சேவை செய்வதில்லை. அவர்கள் தம்மைத் திருப்திப்படுத்திக்கொள்வதற்காகவே வாழ்கிறார்கள். அவர்கள் வெட்கப்படத்தக்க செயல்களை செய்வதோடு அதைப் பற்றி பெருமைப்பட்டுக்கொள்ளவும் செய்கிறார்கள். அவர்கள் பூமியில் உள்ளவற்றைப் பற்றி மட்டுமே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். 20 ஆனால், நம் குடியிருப்போ பரலோகத்தில் உள்ளது. நம்முடைய இரட்சகர் பரலோகத்தில் இருந்து வருவார். அவருக்காகவே நாம் காத்திருக்கிறோம். நமது இரட்சகர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே. 21 அவர் இத்தகைய நமது அற்பமான சரீரங்களை மாற்றி தம்முடைய மகிமை மிக்க சரீரம்போல ஆக்கிவிடுவார். அவர் இதனைத் தம் வல்லமையால் செய்வார். அந்த வல்லமையால் அவர் எல்லாவற்றையும் ஆளத்தக்கவர்.

செய்யத்தக்க சில

என்னுடைய அன்பான சகோதர சகோதரிகளே! நான் உங்களை நேசிக்கிறேன். உங்களைப் பார்க்க விரும்புகிறேன். நீங்கள் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தீர்கள். உங்களைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். நான் சொன்னதைப் போன்று நீங்கள் கர்த்தரைத் தொடர்ந்து பின்பற்றி வாழுங்கள்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center