Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Semicontinuous)

Daily Bible readings that follow the church liturgical year, with sequential stories told across multiple weeks.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 104:24-34

24 கர்த்தாவே, நீர் பல அற்புதமான காரியங்களைச் செய்திருக்கிறீர்.
    பூமி, நீர் உண்டாக்கின பல பொருள்களால் நிரம்பியிருக்கிறது.
    நீர் செய்யும் ஒவ்வொன்றிலும் உமது ஞானத்தைக் காண்கிறோம்.
25 சமுத்திரத்தைப் பாருங்கள், அது எவ்வளவு பெரியது!
    பல உயிர்கள் அங்கு வாழ்கின்றன!
    எண்ணமுடியாத சிறியதும் பெரியதுமான உயிரினங்கள் அங்கு வாழ்கின்றன.
26 நீர் உண்டாக்கின கடல் விலங்கான லிவியாதான் கடலில் விளையாடும்போது
    கப்பல்கள் சமுத்திரத்தின் மேல் பயணம் செய்கின்றன.

27 தேவனே, எல்லாக்காரியங்களும் உம்மைச் சார்ந்திருக்கின்றன.
    தக்கநேரத்தில் நீர் அவற்றிற்கு உணவைக் கொடுக்கிறீர்.
28 தேவனே, எல்லா உயிரினங்களுக்கும் அவை உண்ணும் உணவை நீர் கொடுக்கிறீர்.
    நல்ல உணவால் நிரம்பிய உமது கைகளை நீர் திறக்கிறீர், அவை வயிறு நிரம்பும்வரை அவற்றை உண்ணும்.
29 நீர் அவற்றை விட்டு விலகும்போது அவை அஞ்சும்.
    அவற்றின் சுவாசம் அவற்றைவிட்டு நீங்கும்.
அவை சோர்ந்து மரிக்கும்.
    அவற்றின் உடல்கள் மீண்டும் புழுதியாகிவிடும்.
30 ஆனால் கர்த்தாவே, நீர் உமது ஆவியை அனுப்பும்போது அவை ஆரோக்கியம் பெறும்!
    நீர் மீண்டும் நிலத்தைப் புதிதாகமாற்றுவீர்.

31 கர்த்தருடைய மகிமை என்றென்றும் தொடரட்டும்!
    கர்த்தர் தாம் உண்டாக்கின பொருள்களைக் கண்டு களிப்படையட்டும்.
32 கர்த்தர் பூமியைச்சற்றே பார்த்தால் அது அதிரும்.
    அவர் மலைகளைத் தொட நேர்ந்தால் அவற்றிலிருந்து புகையெழத் தொடங்கும்.

33 என் ஆயுள் முழுவதும் நான் கர்த்தரைப் பாடுவேன்.
    நான் வாழும்வரை கர்த்தரைத் துதித்துப் பாடுவேன்.
34 நான் கூறுபவை அவரை மகிழ்ச்சியாக்கும் என நம்புகிறேன்.
    நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருக்கிறேன்.

சங்கீதம் 104:35

35 பூமியிலிருந்து பாவம் மறைந்து போகட்டும்.
    தீயோர் என்றென்றும் அழிந்து போவார்களாக.
என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி!
    கர்த்தரை துதியுங்கள்!

யோவேல் 2:18-29

கர்த்தர் நாட்டை பழைய நிலைக்குக் கொண்டு வருவார்

18 பிறகு கர்த்தர் தனது நாட்டைப்பற்றி பரவசம் கொண்டார்.
    அவர் ஜனங்களுக்காக வருத்தப்பட்டார்.
19 கர்த்தர் தமது ஜனங்களிடம்,
“நான் உங்களுக்குத் தானியம், திராட்சைரசம். எண்ணெய் இவற்றை அனுப்புவேன்.
    உங்களுக்கு ஏராளமாக இருக்கும்.
    நான் உங்களை மற்ற நாடுகளுக்கிடையில் இனிமேல் அவமானம் அடையவிடமாட்டேன்.
20 இல்லை. வடக்கிலுள்ள ஜனங்களை உங்கள் நாட்டைவிட்டு போகும்படி வற்புறுத்துவேன்.
    நான் அவர்களை வறண்ட வெறுமையான நாட்டுக்குப் போகச்செய்வேன்.
அவர்களில் சிலர் கீழ்க்கடலுக்குப் போவார்கள்.
    அவர்களில் சிலர் மேற்கடலுக்குப் போவார்கள் அந்த ஜனங்கள் இத்தகைய பயங்கரச் செயல்களைச் செய்தார்கள்.
ஆனால் அவர்கள் மரித்து அழுகிப்போனவற்றைப் போலாவார்கள்.
    அங்கே பயங்கரமான துர்வாசனை இருக்கும்!”
என்று சொன்னார்.

இந்த நாடு மீண்டும் புதிதாக்கப்படும்

21 தேசமே, பயப்படாதே.
சந்தோஷமாக இரு.
    முழுமையாகக் களிகூரு.
    கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்.
22 வெளியின் மிருகங்களே, பயப்படவேண்டாம்.
    வனாந்திரத்தில் மேய்ச்சல்கள் உண்டாகும்.
மரங்கள் கனிகளைத் தரும்,
    அத்தி மரங்களும் திராட்சைக் கொடிகளும் மிகுதியான பழங்களைத் தரும்.
23 எனவே மகிழ்ச்சியாய் இருங்கள்.
    சீயோன் ஜனங்களே உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் சந்தோஷமாய் இருங்கள்,
அவர் நல்லவர், அவர் உங்களுக்கு மழையைத் தருவார்.
    அவர் உங்களுக்கு முன்போலவே முன்மாரியையும் பின்மாரியையும் அனுப்புவார்.
24 களங்கள் தானியத்தால் நிரம்பும்.
    குடங்கள் திராட்சைரசத்தாலும், என்ணெயாலும் நிரம்பி வழியும்.
25 “கர்த்தராகிய நான் உங்களுக்கு எதிராக எனது படையை அனுப்பினேன்.
    உங்களுக்குரிய எல்லாவற்றையும் வெட்டுக்கிளிகளும்,
    பச்சைக்கிளிகளும்
    முசுக்கட்டைப் பூச்சிகளும்,
    பச்சைப் புழுக்களும் தின்றுவிட்டன.
ஆனால் கர்த்தராகிய நான்,
    அத்துன்பக் காலத்துக்கானவற்றைத் திருப்பிக் கொடுப்பேன்.
26 பிறகு உங்களுக்கு உண்ண ஏராளம் இருக்கும்.
    நீங்கள் நிறைவு அடைவீர்கள்.
நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைப் போற்றுவீர்கள்.
    அவர் உங்களுக்காக அற்புதமானவற்றைச் செய்திருக்கிறார்.
எனது ஜனங்கள் இனி ஒருபோதும் வெட்டகப்பட்டுப்போவதில்லை.
27 நான் இஸ்ரவேலோடு இருப்பதை நீங்கள் அறிவீர்கள்.
    நானே உங்கள் தேவனாகிய கர்த்தர் என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.
    வேறு தேவன் இல்லை.
எனது ஜனங்கள் மீண்டும் அவமானம் அடையமாட்டார்கள்.”

அனைத்து ஜனங்களுக்கும் தேவன் தனது ஆவியை கொடுப்பார்

28 “இதற்குப் பிறகு நான் எனது ஆவியை அனைத்து ஜனங்கள் மேலும் ஊற்றுவேன்.
உங்கள் மகன்களும், மகள்களும் தீர்க்கதரிசனம் உரைப்பார்கள்.
    உங்கள் முதியவர்கள் கனவுகளைக் காண்பார்கள்.
    உங்கள் இளைஞர்கள் தரிசனங்களைக் காண்பார்கள்.
29 அப்போது, நான் பணியாட்கள் மேலும் பணிப்பெண்கள் மேலும்
    என் ஆவியை ஊற்றுவேன்.

ரோமர் 8:18-24

எதிர்காலச் சிறப்பு

18 இப்பொழுது துன்பப்படுகிறோம். ஆனால் நமக்குக் கொடுக்கப்படப் போகும் சிறப்பை நிகழ்காலத் துன்பத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இத்துன்பம் ஒன்றுமில்லாமல் போகும். 19 தேவனால் உருவாக்கப்பட்ட அனைத்தும் தேவன் தன் பிள்ளைகள் யாரென்பதை வெளிப்படுத்தப் போகும் நாளுக்காக ஆவலோடு காத்திருக்கின்றன. அவை அதனைப் பெரிதும் விரும்புகின்றன. 20 தேவனால் படைக்கப்பட்ட அனைத்தும் பயனற்றவையாக மாற்றப்பட்டுள்ளன. அவை மாற்றமடைய விரும்பாவிட்டாலும் தேவன் அவற்றை மாற்றிவிட முடிவு செய்துள்ளார். 21 ஆனாலும் “தேவனால் படைக்கப்பட்டவையெல்லாம் அழிவிலிருந்து விடுதலை பெறும்” என்ற நம்பிக்கையுண்டு. தேவன் படைத்த எல்லாம், தேவனுடைய பிள்ளைகளுக்குரிய விடுதலையையும், மகிமையையும் பெறும் என்ற நம்பிக்கையும் உண்டு.

22 ஒரு பெண், குழந்தை பெறுவதற்கான நேரத்தை வலியோடு எதிர்ப்பார்த்துக்கொண்டிருப்பது போன்று தேவனால் படைக்கப்பட்டவையெல்லாம் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கின்றன. 23 உலகம் மட்டுமல்ல. நாமும் உள்ளுக்குள் வேதனையோடு காத்துக்கொண்டிருக்கிறோம். தேவனுடைய வாக்குறுதியினுடைய முதல் பாகம் போல் நாம் ஆவியின் முதல் பலனைப் பெற்றிருக்கிறோம். நம்மை தேவன் தமது பிள்ளைகளாக்குவார் என்று நாமும் எதிர்பார்க்கிறோம். அதாவது நாம் நமது சரீரத்தின் விடுதலைக்காக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். 24 அந்த நம்பிக்கையால்தான் நாம் பாதுகாக்கப்பட்டுள்ளோம். கண்ணால் காண முடிவதை நம்புவது என்பது உண்மையில் நம்பிக்கையன்று, நம்மிடம் ஏற்கெனவே இருப்பதை மக்கள் நம்பவேண்டியதில்லை.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center