Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Semicontinuous)

Daily Bible readings that follow the church liturgical year, with sequential stories told across multiple weeks.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 95

95 வாருங்கள், நாம் கர்த்தரைத் துதிப்போம்!
    நம்மைக் காப்பாற்றுகின்ற பாறையை நோக்கி துதிகளை உரக்கக் கூறுவோம்.
கர்த்தருக்கு நன்றி கூறும் பாடல்களைப் பாடுவோம்.
    அவருக்கு மகிழ்ச்சியான துதி பாடல்களைப் பாடுவோம்.
ஏனெனில் கர்த்தர் மேன்மையான தேவன்!
    பிற “தெய்வங்களை” எல்லாம் ஆளுகின்ற பேரரசர் ஆவார்.
ஆழமான குகைகளும் உயரமான பர்வதங்களும் கர்த்தருக்கு உரியவை.
சமுத்திரம் அவருடையது. அவரே அதைப் படைத்தார்.
    தேவன் உலர்ந்த நிலத்தைத் தமது சொந்த கைகளால் உண்டாக்கினார்.
வாருங்கள், நாம் தாழ்ந்து குனிந்து அவரைத் தொழுதுகொள்வோம்.
    நம்மை உண்டாக்கின தேவனை நாம் துதிப்போம்.
அவரே நமது தேவன்!
    நாம் அவரது ஜனங்கள்.
    அவரது சத்தத்திற்கு நாம் செவிகொடுத்தால் இன்று நாம் அவரது ஆடுகளாயிருப்போம்.
    தேவன்: “பாலைவனத்தில் மேரிபாவில் செய்தது போலவும், மாசாவில் செய்தது போலவும் அடம்பிடிக்காதீர்கள்” என்று கூறினார்.
உங்கள் முற்பிதாக்கள் என்னை சோதித்தார்கள்.
    அவர்கள் என்னை சோதித்தபோது நான் செய்யக்கூடியவற்றைக் கண்டார்கள்.
10 நாற்பது ஆண்டுகள் அந்த ஜனங்களிடம் நான் பொறுமையாக இருந்தேன்.
    அவர்கள் உண்மையில்லாதவர்கள் என நான் அறிவேன்.
    அந்த ஜனங்கள் என் போதனைகளைப் பின்பற்ற மறுத்தார்கள்.
11 எனவே நான் கோபமடைந்தேன்,
    எனது இளைப்பாறுதலின் தேசத்தில் அவர்கள் நுழைவதில்லை என ஆணையிட்டேன்.

யாத்திராகமம் 16:9-21

மோசே ஆரோனை நோக்கி, “இஸ்ரவேலின் ஜனங்களிடம் பேசு. அவர்களிடம், ‘கர்த்தருக்கு முன்பாக ஒருமித்து வாருங்கள். ஏனெனில் அவர் உங்கள் முறையீட்டைக் கேட்டார் என்று சொல்’” என்றான்.

10 ஆரோன் இஸ்ரவேல் ஜனங்களிடம் பேசினான். அவர்கள் எல்லோரும் ஓரிடத்தில் கூடியிருந்தார்கள். ஆரோன் பேசும்போது, எல்லா ஜனங்களும் திரும்பிப் பாலைவனத்தை நோக்கினார்கள். மேகத்தில் கர்த்தரின் மகிமை வெளிப்படுவதைக் கண்டார்கள்.

11 கர்த்தர் மோசேயை நோக்கி, 12 “இஸ்ரவேல் ஜனங்களின் முறையீட்டைக் கேட்டேன். எனவே அவர்களிடம் ‘இன்றிரவு நீங்கள் இறைச்சி உண்பீர்கள், காலையில் உங்களுக்கு வேண்டிய ரொட்டி கிடைக்கும். பிறகு உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்பலாம் என்று அறிவீர்கள்’ என்று சொல்லுங்கள்” என்றார்.

13 அன்றிரவு, காடைப் பறவைகள் அவர்கள் தங்கியிருந்த இடத்தைச் சுற்றிலும் வந்து விழுந்தன. ஜனங்கள் இறைச்சிக்காக அவற்றைப் பிடித்தனர். காலையில் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகே பனிபடர்ந்திருந்தது. 14 பனி மறைந்ததும் மெல்லிய அப்பம் போன்ற ஒரு பொருள் நிலத்தின் மேல் காணப்பட்டது. 15 இஸ்ரவேல் ஜனங்கள் ஒருவரையொருவர் நோக்கி, “இது என்ன?” [a] என்றனர். அப்பொருள் என்ன என்று அவர்களுக்குத் தெரியாததினால், ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர். மோசே அவர்களை நோக்கி, “கர்த்தர் உங்களுக்கு உணவாகக் கொடுப்பது இதுவே. 16 ஒவ்வொருவனும் அவனவனுக்குத் தேவையான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். உங்கள் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவனுக்கும் எட்டு கிண்ண அளவின்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லுகிறார்” என்றான்.

17 எனவே இஸ்ரவேல் ஜனங்கள் அவ்வாறே செய்தார்கள். ஒவ்வொருவனும் இந்த உணவைச் சேகரித்துக்கொண்டான். சிலர் மற்றவர்களை விட அதிகமாக எடுத்துக்கொண்டனர். 18 ஜனங்கள் இந்த உணவைக் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் கொடுத்தார்கள். உணவை அளந்தபோது ஒவ்வொருவருக்கும் போதுமான அளவு இருந்தது. ஆனால் ஒருபோதும் அதிகப்படியான உணவு இருந்ததில்லை. ஒவ்வொருவனும் அவனுக்கும் அவனது குடும்பத்திற்கும் தேவையான உணவை மாத்திரம் சேகரித்துக்கொண்டான்.

19 மோசே அவர்களை நோக்கி, “மறுநாள் உண்பதற்காக உணவை வைக்காதீர்கள்” என்றான். 20 ஆனால் ஜனங்கள் மோசேக்குக் கீழ்ப்படியவில்லை. சிலர் அடுத்த நாளுக்காகச் சிறிது உணவை எடுத்து வைத்தார்கள். அந்த உணவைப் புழுக்கள் அரித்தபடியால் துர்நாற்றம் வீச ஆரம்பித்தது. இவ்வாறு செய்தவர்கள்மேல் மோசே கோபங்கொண்டான்.

21 ஒவ்வொரு நாள் காலையிலும் உணவைச் சேகரித்துக்கொண்டனர். ஒருவன் தான் சாப்பிடக் கூடிய அளவு உணவை எடுத்துக்கொண்டான். வெயில் ஏறினதும் உணவு உருகி மறைந்துபோனது.

எபேசியர் 2:11-22

கிறிஸ்துவில் ஒன்றாகுதல்

11 நீங்கள் யூதர் அல்லாதவர்களாகப் பிறந்தீர்கள். உங்களை யூதர்கள் “விருத்தசேதனம் செய்யாதவர்கள்” என்று அழைக்கிறார்கள். அவர்கள் தங்களை “விருத்தசேதனம் செய்தவர்கள்” என்று அழைத்துக்கொள்கிறார்கள். இந்த விருத்தசேதனம் என்பது யூதர்கள் தங்கள் சரீரத்தில் செய்துகொள்ளும் ஏதோ ஒன்று தான். 12 கடந்த காலத்தில் கிறிஸ்து இல்லாமல் நீஙகள் இருந்தீர்கள் என்பதை நினைவுகூருங்கள். நீஙகள் இஸ்ரவேலின் மக்கள் அல்ல. தேவன் தம் மக்களுக்குச் செய்து கொடுத்த ஒப்பந்தத்தில் உங்களுக்கு எவ்விதப் பங்கும் இல்லை. உங்களுக்குத் தேவனைப்பற்றித் தெரியாது. அவர் மீது நம்பிக்கையும் இல்லை. 13 ஆமாம், ஒரு முறை தேவனைவிட்டு வெகு தொலைவில் நீங்கள் இருந்தீர்கள். ஆனால் இப்பொழுது தேவனோடு நெருக்கமாக இருக்கிறீர்கள். கிறிஸ்துவின் இரத்தமே உங்களை தேவனின் அருகில் கொண்டு வந்தது.

14 இப்பொழுது கிறிஸ்துவால் நமக்குச் சமாதானம் கிடைத்தது. கிறிஸ்து யூதர்களையும், யூதர் அல்லாதவர்களையும் ஒரே மக்களாக்கினார். இவர்களுக்கு இடையில் ஒரு சுவர் இருப்பது போலப் பிரிக்கப்பட்டிருந்தனர். ஒருவரை ஒருவர் வெறுத்தனர். கிறிஸ்து தமது சரீரத்தைக் கொடுத்து பகை என்னும் சுவரை உடைத்தெறிந்தார். 15 யூதர்களின் சட்டங்கள் ஏராளமான கட்டளைகளையும், விதிகளையும் உடையன. ஆனால் கிறிஸ்து அச்சட்டத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தார். யூதர், யூதர் அல்லாதவர் என்னும் இந்த இரு பிரிவுகளையும் ஒன்றாக்குவது அவர் நோக்கம். இதை அவர் சிலுவையில் இறந்ததன் மூலம் செய்து சமாதானத்தைக் கொண்டு வந்தார். 16 இரு பிரிவுகளுக்கும் இடையே இருந்த பகையைச் சிலுவையின் மூலம் முடிவடையச் செய்தார். 17 தேவனை விட்டு வெகு தொலைவில் இருந்த யூதர் அல்லாத உங்களிடம் கிறிஸ்து வந்து சாமாதானத்தை அறிவித்தார். அவர் தேவனுக்கு மிக நெருக்கமாய் இருந்த யூதர்களுக்கும் சமாதானத்தை அறிவித்தார். 18 ஆமாம்! கிறிஸ்து மூலமாக நாம் அனைவருக்கும் ஒரே ஆவிக்குள் பிதாவாகிய தேவனிடம் வருவதற்கு உரிமை பெற்றோம்.

19 ஆகவே யூதர் அல்லாதவர்களாகிய நீங்கள் இப்பொழுது அந்நிய தேசத்தில் பார்வையாளர்களோ அல்லது தற்காலிக குடிமக்களோ அல்ல. தேவனின் பரிசுத்தமான மக்களோடு நீங்களும் ஒரே குடிமக்களாகிவிட்டீர்கள். 20 விசுவாசிகளான நீங்கள் அவருக்குச் சொந்தமான கட்டிடத்தை போன்றவர்கள். அக்கட்டிடத்தில் அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசிகளும் அஸ்திபாரக்கல் [a] போன்றவர்கள். கிறிஸ்து ஒருவர்தான் இக்கட்டிடத்தின் மிக முக்கியமான கல்லாவார். 21 அந்த முழுக் கட்டிடமும் கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்து அதனை வளர்த்து கர்த்தருக்குள் புனிதமான ஆலயமாக ஆக்கிவிடுகிறார். 22 கிறிஸ்துவுக்குள் நீங்களும் யூதர்களோடு சேர்ந்து கட்டப்பட்டிருக்கிறீர்கள். ஆவியால் தேவன் வாழும் ஆலயமாக நீங்களும் கட்டப்பட்டு வருகிறீர்கள்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center