Revised Common Lectionary (Semicontinuous)
ஆசாபின் துதிப் பாடல்களுள் ஒன்று.
82 தேவன் தேவர்களின் சபையில்[a] நிற்கிறார்.
தேவர்களின் கூட்டத்தில் அவரே நீதிபதி.
2 தேவன், “எத்தனைக் காலம் நீங்கள் ஜனங்களைத் தகாதபடி நியாயந்தீர்ப்பீர்கள்?
தீயவர்களைத் தண்டனை இல்லாமல் எவ்வளவு காலம் தப்பிக்கச் செய்வீர்கள்?”
3 “ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் ஆதரவளியுங்கள்.
அந்த ஏழைகளின் உரிமைகளுக்குப் பாதுகாப்பளியுங்கள்.
4 ஏழைகளுக்கும் திக்கற்றோருக்கும் உதவுங்கள்.
அவர்களைத் தீயோரிடமிருந்து காப்பாற்றுங்கள்.
5 “அவர்கள் நிகழ்வது என்னவென்று அறியார்கள்.
அவர்கள் புரிந்துகொள்ளார்கள்!
அவர்கள் செய்துகொண்டிருப்பதை அவர்கள் அறியார்கள்.
அவர்கள் உலகம் அவர்களைச் சுற்றிலும் வீழ்ந்து கொண்டிருக்கிறது!” என்கிறார்.
6 நான் (தேவன்),
“நீங்கள் தேவர்கள். மிக உன்னதமான தேவனுடைய குமாரர்கள்.
7 ஆனால் நீங்கள் எல்லா ஜனங்களும் மடிவதைப்போல மடிவீர்கள்.
பிற எல்லாத் தலைவர்களையும்போல நீங்களும் மடிவீர்கள்” என்று சொல்லுகிறேன்.
8 தேவனே! எழுந்தருளும்! நீரே நீதிபதியாயிரும்!
தேவனே, தேசங்களுக்கெல்லாம் நீரே தலைவராயிரும்!
12 “ஆனால் நீங்கள் நசரேயர்களை மது குடிக்கச் செய்தீர்கள். நீங்கள் தீர்க்கதரிசிகளை தீர்க்கதரிசனம் சொல்லவேண்டாம் என்று சொன்னீர்கள். 13 நீங்கள் எனக்குப் பெரிய பாரத்தைப் போன்றவர்கள். நான் பாரம் ஏற்றப்பட்ட வண்டியைப்போன்று வளைந்திருக்கிறேன். 14 என்னிடமிருந்து எவரும், வேகமான ஓட்டக்காரன் கூடத் தப்பிக்க முடியாது. பலவான்களுக்குப் போதுமான பலம் இருக்காது. படைவீரர்கள் தம்மைத்தாம் காப்பாற்றிக்கொள்ள முடியாது. 15 ஜனங்கள் வில்லோடும் அம்போடும் இருந்தும் உயிர் பிழைப்பதில்லை. வேகமாக ஓடுபவனும் தப்ப முடியாது. குதிரையில் வருகிறவர்களும் உயிரோடு தப்ப முடியாது. 16 அப்போது மிகத் தைரியமான வீரனும் ஓடிப்போவான். அவர்கள் தம் ஆடைகளை அணிந்துகொள்ளக் கூட நேரம் எடுத்துக்கொள்ளமாட்டார்கள்” என்று கர்த்தர் கூறினார்.
இஸ்ரவேலுக்கான எச்சரிக்கை
3 இஸ்ரவேல் ஜனங்களே, இந்தச் செய்தியைக் கவனியுங்கள். இஸ்ரவேலே உங்களைபற்றி கர்த்தர் இவற்றைக் கூறினார். இந்த செய்தி நான் எகிப்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த எல்லாக் குடும்பங்களையும் (இஸ்ரவேல்) பற்றியது. 2 “பூமியில் அநேகக் குடும்பங்கள் இருந்தன. ஆனால் உன்னுடைய ஒரே குடும்பத்தைதான் சிறப்பான வழியில் அறிந்துகொள்ள நான் தேர்ந்தெடுத்தேன். நீ எனக்கு எதிராகத் திரும்பினாய். எனவே, நான் உனது எல்லா பாவங்களுக்காக உன்னைத் தண்டிப்பேன்.”
இஸ்ரவேலின் தண்டனைக்கான காரணம்
3 இரண்டு பேர் ஒத்துப்போனாலொழிய
ஒரே வழியில் நடக்க முடியாது.
4 காட்டிலுள்ள சிங்கம்,
ஒரு மிருகத்தைப் பிடித்த பிறகுதான் கெர்ச்சிக்கும்.
ஒரு இளஞ்சிங்கம் தன் குகையில் கெர்ச்சிக்கிறது என்றால்,
அது ஏதோ ஒன்றைப் பிடித்துவிட்டது என்று அர்த்தம்.
5 கண்ணிக்குள்ளே உணவு இல்லாவிட்டால்
ஒரு பறவை தரையிலுள்ள கண்ணிக்குள் பறக்காது.
கண்ணி மூடினால்
அது பறவையைப் பிடிக்கும்.
6 எக்காளம் எச்சரிக்கையாக ஊதினால்,
ஜனங்கள் நிச்சயம் பயத்தால் நடுங்குவார்கள்.
நகரத்திற்கு துன்பம் வந்தால்,
அதற்கு கர்த்தர் காரணமாவார்.
7 எனது கர்த்தராகிய ஆண்டவர் சிலவற்றைச் செய்ய முடிவுசெய்வார். ஆனால் அவர் எதையும் செய்யும் முன்னால் அவர் தனது தீர்க்கதரிசிகளிடம் சொல்வார். 8 ஒரு சிங்கம் கெர்ச்சித்தால் ஜனங்கள் பயப்படுவார்கள். கர்த்தர் பேசினால் தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனம் சொல்வார்கள்.
16 “ஆம்! தேவன் இவ்வுலகினைப் பெரிதும் நேசித்தார். எனவே தனது ஒரே குமாரனை இதற்குத் தந்தார். தேவன் தன் குமாரனைத் தந்ததால் அவரில் நம்பிக்கை வைக்கிற எவரும் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனைப் பெறுவர். 17 தேவன் தன் குமாரனை உலகிற்கு அனுப்பினார். உலகின் குற்றங்களை நியாயம் விசாரிக்க தனது குமாரனை அனுப்பவில்லை. இவ்வுலகம் தேவனுடைய குமாரனால் இரட்சிக்கப்படுவதற்கென்று தேவன் தன் குமாரனை அனுப்பினார். 18 தேவகுமாரன் மீது நம்பிக்கை வைக்கிறவர்கள் தண்டிக்கப்படுவதில்லை. ஆனால், அவர் மீது நம்பிக்கைகொள்ளாதவர்கள் ஏற்கெனவே தண்டிக்கப்பட்டுவிட்டார்கள். ஏன்? ஏனென்றால் அவர்களுக்கு தேவனுடைய ஒரே குமாரன் மீது நம்பிக்கை இல்லை. 19 இந்த உலகத்துக்கு ஒளி (நன்மை) வந்திருக்கிறது. ஆனால் அந்த ஒளியை மக்கள் விரும்பவில்லை. அவர்கள் இருளை (பாவத்தை) விரும்பினார்கள். ஏனென்றால் அவர்கள் தீய செயல்களைச் செய்துகொண்டிருந்தார்கள். இந்த உண்மையை வைத்தே அவர்கள் நியாயம் விசாரிக்கப்படுகிறார்கள். 20 தீமைகளைச் செய்கிற ஒவ்வொரு மனிதனும் ஒளியை வெறுக்கிறான். அவன் வெளிச்சத்துக்குள் வரமாட்டான். ஏனென்றால் ஒளி அவன் செய்த தீமைகளை வெளிப்படுத்திக்காட்டும். 21 ஆனால் உண்மை வழியைப் பின்தொடர்ந்து செல்கிறவர்கள் ஒளியிடம் வந்தடைகிறார்கள். பிறகு, அந்த ஒளி அவர்கள் செய்த செயல்கள் தேவன் மூலமாகச் செய்த நற்செயல்கள் எனக் காட்டும்[a] என்று இயேசு கூறினார்.”
2008 by World Bible Translation Center