Revised Common Lectionary (Semicontinuous)
93 கர்த்தர் ராஜா.
அவர் மகத்துவத்தையும் வல்லமையையும் ஆடையைப்போல் அணிந்திருக்கிறார்.
அவர் ஆயத்தமாயிருப்பதால் உலகம் பாதுகாப்பாய் உள்ளது,
அது அசைக்கப்படுவதில்லை.
2 தேவனே, உமது அரசு என்றென்றும் தொடருகிறது.
தேவனே, நீர் என்றென்றைக்கும் வாழ்கிறீர்!
3 கர்த்தாவே, ஆறுகளின் ஒலி மிகுந்த இரைச்சலுடையது.
மோதும் அலைகள் இரைச்சலெழுப்புகின்றன.
4 கடலின் மோதும் அலைகள் ஒலிமிகுந்து வல்லமை மிகுந்தவையாக உள்ளன.
ஆனால் மேலேயுள்ள கர்த்தர் இன்னும் மிகுந்த வல்லமையுள்ளவர்.
5 கர்த்தாவே, உமது சட்டங்கள் என்றென்றும் தொடரும்.
உமது பரிசுத்த ஆலயம் வெகு காலம் நிலைநிற்கும்.
20 பிறகு அவன் இல்க்கியாவுக்கும், சாப்பானின் குமாரனான அகிக்காமுக்கும், மீகாவின் குமாரனான அப்தோனுக்கும், சம்பிரதியாகிய சாப்பானுக்கும், ராஜாவின் ஊழியக்காரனாகிய அசாயாவுக்கும் கட்டளையிட்டான். 21 ராஜா, “செல்லுங்கள் எனக்காக கர்த்தரிடம் கேளுங்கள். இஸ்ரவேலிலும், யூதாவிலும் மிச்சமுள்ள ஜனங்களுக்காகக் கேளுங்கள். கண்டுபிடிக்கப்பட்ட புத்தகத்தில் உள்ள சொற்களைப்பற்றி கேளுங்கள். நமது முற்பிதாக்கள் அவரது வார்த்தைகளுக்கு அடிபணியவில்லை என்பதால் கர்த்தர் நம் மீது கோபமாக இருக்கிறார். இந்தப் புத்தகம் செய்ய சொன்னவற்றையெல்லாம் அவர்கள் செய்யவில்லை!” என்றான்.
22 இல்க்கியாவும், ராஜாவின் வேலைக்காரர்களும் உல்தாள் எனும் தீர்க்கதரிசி பெண்ணிடம் சென்றனர். உல்தாள் சல்லூமின் மனைவி. சல்லூம் திக்வாதின் குமாரன். திக்வாத் அஸ்ராவின் குமாரன். அஸ்ரா ராஜாவின் ஆடைகளுக்குப் பொறுப்பாளன். உல்தாள் எருசலேமின் புதிய பகுதியில் வாழ்ந்து வருகிறாள். இல்க்கியாவும், ராஜாவின் வேலைக்காரர்களும் அவளிடம் நடந்ததை எல்லாம் சொன்னார்கள். 23 உல்தாள் அவர்களிடம், “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கூறுவது இதுதான்: ராஜாவாகிய யோசியாவிடம் கூறுங்கள்: 24 ‘நான் இந்த இடத்திற்கும், இங்கு வாழும் ஜனங்களுக்கும் தொந்தரவுகளைத் தருவேன். யூதா ராஜாவின் முன்னிலையில் வாசிக்கப்பட்ட புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள எல்லா கொடூரமானவற்றையும் கொண்டு வருவேன். 25 ஜனங்கள் என்னைவிட்டு விலகி அந்நிய தெய்வங்களுக்கு நறுமணப் பொருட்களை எரிக்க போய்விட்ட காரணத்தால் நான் இவற்றைச் செய்வேன். தம்முடைய தீயச்செயல்களால் அவர்கள் எனக்கு மிகுதியான கோபத்தை மூட்டிவிட்டார்கள். எனவே நான் இந்த இடத்தில் எனது கோபத்தைக் கொட்டுவேன். நெருப்பைப்போன்று கோபம் அவியாது.’
26 “ஆனால் யூதாவின் ராஜாவாகிய யோசியாவிடம் கூறு. அவன் உங்களைக் கர்த்தரைக் கேட்குமாறு அனுப்பியிருக்கிறான். சற்று நேரத்திற்கு முன்னர் நீ கேட்டவற்றைப்பற்றி இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கூறுவது இதுதான்: 27 ‘யோசியா நீ மனம் இளகி பணிந்துகொண்டாய், உனது ஆடைகளைக் கிழித்துக்கொண்டாய், எனக்கு முன்பு நீ அழுதாய். இவ்வாறு உன் மனம் இளகியதால், 28 உன் முற்பிதாக்களுடன் இருப்பதற்கு நான் உன்னை அழைத்துச் செல்வேன். நீ உனது கல்லறைக்கு சமாதானத்தோடு போவாய். அதனால் நான் இந்த இடத்துக்கும், இங்குள்ள ஜனங்களுக்கும் கொடுக்கப்போகும் பயங்கரமான துன்பங்களை நீ காணமாட்டாய்’” என்றார். இல்க்கியாவும், ராஜாவின் வேலைக்காரர்களும் இந்த செய்தியை யோசியா ராஜாவிடம் கொண்டுவந்தனர்.
29 பிறகு யோசியா யூதா மற்றும் எருசலேமில் உள்ள மூப்பர்களை அழைத்து அவர்களைச் சந்தித்தான். 30 ராஜா கர்த்தருடைய ஆலயத்திற்குள் சென்றான். யூதாவிலுள்ள ஜனங்களும், எருசலேமில் உள்ள ஜனங்களும் ஆசாரியர்களும், லேவியர்களும், முக்கியமானவர்களும் முக்கியமற்றவர்களும் ராஜாவோடு சென்றனர். உடன்படிக்கைப் புத்தகத்தில் உள்ள அனைத்தையும் ராஜா அவர்களுக்கு வாசித்துக் காட்டினான். அப்புத்தகம் கர்த்தருடைய ஆலயத்தில் கண்டெடுத்த புத்தகம் ஆகும். 31 பிறகு ராஜா தனது இடத்தில் எழுந்து நின்றான். பிறகு அவன் கர்த்தரோடு ஒரு உடன்படிக்கைச் செய்தான். கர்த்தரைப் பின்பற்றுவதாகவும் அவரது கட்டளைகளுக்கும், சட்டங்களுக்கும் அடிபணிவதாகவும் சொன்னான். முழு இருதயத்தோடும் ஆத்துமாவோடும் அவன் கீழ்ப்படிவதற்கு ஒப்புக்கொண்டான். உடன்படிக்கைப் புத்தகத்தில் எழுதப்பட்ட அனைத்துக்கும் அடிபணிவதாக ஒப்புக்கொண்டான். 32 பிறகு யோசியா எருசலேம் மற்றும் பென்யமீன் நாட்டிலுள்ள அனைத்து ஜனங்களையும் உடன்படிக்கையை ஒப்புக்கொள்கிற வகையில் வாக்குறுதி தரச் செய்தான். தமது முற்பிதாக்கள் கீழ்ப்படிந்த தேவனுடைய உடன்படிக்கையை எருசலேம் ஜனங்களும் கீழ்ப்படிந்தார்கள். 33 இஸ்ரவேல் ஜனங்கள் பல் வேறு நாடுகளிலிருந்து விக்கிரகங்களைக் கொண்டு வந்து வைத்திருந்தனர். ஆனால் யோசியா அந்த கொடூரமான விக்கிரகங்களை எல்லாம் அழித்துவிட்டான். ராஜா இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரையும் தேவனாகிய கர்த்தருக்குச் சேவைசெய்யுமாறுச் செய்தான். யோசியா உயிரோடு இருந்தவரை ஜனங்கள் தமது முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்குச் சேவை செய்தனர்.
சிமியோன் இயேசுவைக் காணல்
25 எருசலேமில் சிமியோன் என்னும் பெயர் கொண்ட ஒரு மனிதன் வாழ்ந்தான். அவன் நல்லவனும், பக்திமானுமாக இருந்தான். தேவன் இஸ்ரவேல் மக்களுக்கு உதவும் காலத்தை சிமியோன் எதிர்பார்த்திருந்தான். பரிசுத்த ஆவியானவர் அவனோடு இருந்தார். 26 கர்த்தரிடமிருந்து வரும் கிறிஸ்துவைக் காணுமட்டும் அவன் மரிப்பதில்லை என்று பரிசுத்த ஆவியனவர் சிமியோனுக்குக் கூறியிருந்தார். 27 ஆவியானவர் சிமியோனை தேவாலயத்திற்குள் அழைத்து வந்தார். செய்யவேண்டியவற்றை நிறைவேற்றுவதற்காக மரியாளும், யோசேப்பும் தேவாலயத்திற்குள் சென்றனர். அவர்கள் குழந்தையாகிய இயேசுவை தேவாலயத்திற்குள் கொண்டு வந்தனர். 28 சிமியோன் குழந்தையைத் தன் கரங்களில் தூக்கிக்கொண்டு,
29 “ஆண்டவரே! இப்போது, உம் ஊழியனாகிய என்னை நீர் கூறியபடியே அமைதியாக மரிக்க அனுமதியும்.
30 நீர் நல்கும் இரட்சிப்பை என் கண்களால் கண்டேன்.
31 நீர் அவரை எல்லா மக்களுக்கும் முன்பாக ஆயத்தப்படுத்தினீர்.
32 யூதரல்லாத மக்களுக்கு உம் வழியைக் காட்டும் ஒளி அவர்.
உம் மக்களாகிய இஸ்ரவேலுக்கு பெருமையை அவர் தருவார்”
என்று தேவனுக்கு நன்றி செலுத்தினான்.
33 இயேசுவின் தந்தையும், தாயும் சிமியோன் இயேசுவைக் குறித்துக் கூறியதைக் கேட்டு வியந்தனர். 34 சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து இயேசுவின் தாயாகிய மரியாளிடம், “இந்தப் பாலகனின் நிமித்தமாக யூதர்கள் விழுவர்; பலர் எழுவர். சிலரால் ஏற்றுக்கொள்ளப்படாத தேவனின் அடையாளமாக இவர் இருப்பார். 35 இரகசியமாக மக்கள் நினைப்பவை வெளியரங்கமாகும். நடக்கவிருக்கும் காரியங்கள் உங்கள் மனதை மிகவும் துக்கப்படுத்தும்” என்றான்.
அன்னாள் இயேசுவைக் காணல்
36 தேவாலயத்தில் அன்னாள் என்னும் பெண் தீர்க்கதரிசி இருந்தாள். அவள் ஆசேர் என்னும் கோத்திரத்தைச் சார்ந்த பானுவேல் என்னும் குடும்பத்தைச் சேர்ந்தவள். அன்னாள் வயது முதிர்ந்தவள். அவள் திருமணமாகித் தன் கணவனுடன் ஏழு ஆண்டுகள் வாழ்ந்தவள். 37 பின் அவள் கணவன் இறந்து போனான். அவள் தனித்து வாழ்ந்து வந்தாள். அவள் எண்பத்து நான்கு வயது முதியவளாக இருந்தாள். அன்னாள் எப்போதும் தேவாலயத்திலேயே இருந்தாள். அவள் உபவாசமிருந்து இரவும் பகலும் தேவனை வழிபட்டுக்கொண்டிருந்தாள்.
38 தேவனுக்கு நன்றி செலுத்தியவண்ணம் அன்னாளும் அப்போது அங்கே இருந்தாள். தேவன் எருசலேமுக்கு விடுதலை அருள வேண்டும் என்று எதிர்பார்த்திருந்த எல்லா மக்களுக்கும் அவள் இயேசுவைக் குறித்துக் கூறினாள்.
2008 by World Bible Translation Center