Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Semicontinuous)

Daily Bible readings that follow the church liturgical year, with sequential stories told across multiple weeks.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 130

ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்

130 கர்த்தாவே, நான் மிகுந்த துன்பத்திற்குள்ளாயிருக்கிறேன்,
    எனவே நான் உதவிக்காக உம்மைக் கூப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்.
என் ஆண்டவரே, எனக்குச் செவிகொடும்.
    உதவிக்காக எழுப்பும் என் குரலைக் கேளும்.
கர்த்தாவே, ஜனங்கள் செய்கிற எல்லாப் பாவங்களுக்காகவும்
    நீர் அவர்களைத் தண்டித்தால் ஒருவனும் உயிரோடிருக்கமாட்டான்.
கர்த்தாவே, உமது ஜனங்களை மன்னியும்.
    அப்போது உம்மைத் தொழுதுகொள்வதற்கு ஜனங்கள் இருப்பார்கள்.

கர்த்தர் எனக்கு உதவும்படி, நான் காத்துக்கொண்டிருக்கிறேன்.
    என் ஆத்துமா அவருக்காகக் காத்திருக்கிறது. கர்த்தர் கூறுவதை நான் நம்புகிறேன்.
நான் என் ஆண்டவருக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன்.
    காலை வேளைக்கெனக் காத்து நிற்கும் காவலாளரைப்போல் நான் இருக்கிறேன்.
இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு. கர்த்தரிடம் மட்டுமே உண்மையான அன்பைக் காண முடியும்.
    கர்த்தர் நம்மை மீண்டும் மீண்டும் காப்பாற்றுகிறார்.
    கர்த்தர் இஸ்ரவேலை அவர்களின் எல்லாப் பாவங்களுக்காகவும் மன்னிப்பார்.

2 சாமுவேல் 13:37-14:24

37 தாவீது தனது மகனுக்காக (அம்னோனுக்காக) தினசரி அழுதான்.

அப்சலோம் கேசூருக்குத் தப்பிச் செல்லுதல்

அப்சலோம் அம்மியூதின் மகனாகிய தல்மாய் என்னும் கேசூரின் அரசனிடம் ஓடிப் போனான். 38 அப்சலோம் கேசூருக்கு ஓடிப்போன பிறகு, அங்கு மூன்று ஆண்டுகள் தங்கியிருந்தான். 39 தாவீது அரசன் அம்னோனின் மரணத்திற்குப் பின், ஆறுதல் பெற்றான். ஆனால் அப்சலோமின் பிரிவு அவனை மிகவும் வாட்டியது.

யோவாப் புத்திசாலியான ஒரு பெண்ணை தாவீதிடம் அனுப்புகிறான்

14 தாவீது அரசன் அப்சலோமின் பிரிவைத் தாங்கமுடியாமல் வருந்துவதை செருயாவின் மகனாகிய யோவாப் அறிந்தான். எனவே, யோவாப் சிலரைத் தெக்கோவாவிற்கு அனுப்பி, அங்கிருந்து புத்திசாலியான ஒரு பெண்ணை அழைத்து வருமாறு கூறினான். யோவாப் அந்தப் பெண்ணிடம், “மிகவும் துக்கமாயிருக்கிறவளைப்போல் காண்பித்துக்கொள். துக்கத்திற்கு அறிகுறியான ஆடைகளை அணிந்துக்கொள். நல்ல ஆடைகளை அணியாதே. மரித்த ஒருவருக்காக பல நாட்கள் வருந்துகிற ஒருவளைப் போல் நடி. அரசனிடம் போய் நான் உனக்குச் சொல்லித்தரும் சொற்களைப் பயன்படுத்திப் பேசு” என்றான். பின்பு யோவாப் அப்பெண்ணுக்கு அவள் கூற வேண்டியவற்றைச் சொல்லிக்கொடுத்தான்.

பின்பு தெக்கோவாவைச் சேர்ந்த அப்பெண் அரசனிடம் பேசினாள். அவள் தரையில் விழுந்து முகம் நிலத்தைத் தொடும்படி வணங்கினாள். அவள் குனிந்து, “அரசே, எனக்கு உதவுங்கள்!” என்றாள்.

தாவீது அரசன் அவளிடம், “உனக்கு நேர்ந்த பிரச்சனை என்ன?” என்று கேட்டான்.

அப்பெண், “நான் ஒரு விதவை எனது கணவன் மரித்துப்போனான். எனக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவர்கள் களத்தில் போரிட்டனர். ஒருவரும் அவர்கள் சண்டையைச் சென்று நிறுத்தவில்லை. ஒருவன் மற்றவனைக் கொன்றுவிட்டான். இப்போது எனது குடும்பத்தார் எனக்கு விரோதிகளாயிருக்கிறார்கள். அவர்கள் என்னை நோக்கி, ‘சகோதரனைக் கொன்ற உனது மகனை அழைத்து வா, நாங்கள் அவனைக் கொல்லவேண்டும். ஏனெனில் அவன் தனது சகோதரனைக் கொன்றிருக்கிறான்’ என்றனர். எனது மகன் நெருப்பில் மீந்திருக்கும் கடைசி கரிநெருப்பைப் போன்றவன். அவன் மரித்தால் எங்கள் குடும்ப விளக்கு அணைந்துவிடும். தந்தையின் சொத்தை சுதந்தரிக்கும்படி பிழைத்திருக்கும் ஒரே மகன் அவனே. அவன் மரித்தால் மரித்துப்போன எனது கணவனின் சொத்துக்கள் வேறொருவருக்குச் சொந்தமாகும். அவனது பெயரும் தேசத்தில் இல்லாதபடி அழிந்துப்போகும்” என்றாள்.

அப்போது அரசன் அப்பெண்ணை நோக்கி, “வீட்டிற்குப் போ. நான் உன் காரியங்களைக் கவனிப்பேன்” என்றான்.

தெக்கோவாவின் பெண் அரசனை நோக்கி, “பழி என் மீது இருக்கட்டும். எனது ஆண்டவனாகிய அரசனே! நீர் குற்றமற்றவர் உமது சிங்காசனமும் குற்றமற்றது” என்றாள்.

10 தாவீது அரசன், “யாரேனும் உன் மீது தீயவற்றைக் கூறினால் அவனை என்னிடம் அழைத்து வா. அவன் உன்னை மீண்டும் தொல்லைப்படுத்தமாட்டான்” என்றான்.

11 அந்தப் பெண், “தயவு செய்து, உமது தேவனாகிய கர்த்தருடைய பெயரால் ஆணையிட்டு நீங்கள் அந்த ஜனங்களைத் தடுப்பதாக எனக்கு வாக்களியுங்கள். தனது சகோதரனைக் கொலைச் செய்ததற்காக அவர்கள் எனது மகனைத் தண்டிக்க விரும்புகிறார்கள். அவர்கள் என் மகனை அழிக்காதபடி நீர் பாதுகாப்பீராக எனக்கு வாக்கு கொடும்” என்றாள்.

தாவீது, “கர்த்தர் உயிரோடிருப்பது போலவே, யாரும் உன் மகனைத் தாக்கமாட்டார்கள். உன் மகனின் தலையிலிருந்து ஒரு முடிகூட நிலத்தில் விழாது” என்றான்.

12 அப்பெண், “எனது அரசனாகிய ஆண்டவனே, தயவுசெய்து நான் வேறு சிலவற்றை உம்மிடம் பேச அனுமதியும்” என்றாள்.

அரசன், “சொல்” என்றான்.

13 அப்போது அப்பெண், “தேவனுடைய ஜனங்களுக்கு விரோதமாக ஏன் இவ்வாறு திட்டமிடுகிறீர்? இவ்வாறு சொல்லும்போது நீரே குற்றவாளியென்பதைக் காட்டிவிடுகிறீர். ஏனெனில் உமது வீட்டிலிருந்து போகும்படி செய்த உமது மகனை வீட்டிற்குத் திரும்ப அழைத்துவரவில்லை. 14 நாம் எல்லோரும் ஒரு நாள் மரிப்போம். நாம் நிலத்தில் சிந்திய தண்ணீரைப் போன்றவர்கள். யாரும் அத்தண்ணீரை நிலத்திலிருந்து மீண்டும் சேகரிக்க முடியாது. தேவன் மக்களை மன்னிப்பாரென்று உமக்குத் தெரியும். பாதுகாப்பான இடத்திற்கு விரட்டப்பட்ட ஜனங்களுக்காக தேவன் திட்டம் வகுத்திருக்கிறார். தேவன் தம்மிடமிருந்து ஓடிப் போகும்படி அவர்களை வற்புறுத்தமாட்டார். 15 எனது ஆண்டவராகிய அரசனே, நான் இவ்வார்த்தைகளை உம்மிடம் கூற வந்தேன். ஏனெனில் ஜனங்கள் என்னைப் பயமுறுத்தினர். நான் எனக்குள் சொல்லியதாவது, ‘நான் அரசனிடம் பேசுவேன். அரசன் ஒருவேளை எனக்கு உதவலாம். 16 அரசன் நான் சொல்வதைக் கேட்டு, என்னையும் எனது மகனையும் கொல்ல விரும்பும் மனிதனிடமிருந்து காப்பாற்றுவார். அம்மனிதன் தேவன் எங்களுக்குக் கொடுத்த பொருட்களைப் பெறாதபடி செய்கிறான்.’ 17 எனது அரசனாகிய ஆண்டவனின் வார்த்தைகள் எனக்கு ஆறுதலளிக்கும் என்பது எனக்குத் தெரியும். ஏனெனில் நீங்கள் தேவனிடமிருந்து வந்த தூதனைப் போன்றவர். நல்லது எது, கெட்டது எது என்பது உமக்குத் தெரியும். தேவனாகிய கர்த்தர் உம்மோடு இருக்கிறார்” என்றாள்.

18 தாவீது அரசன் அந்த பெண்ணிற்கு உத்தரவாக, “நான் கேட்கவிருக்கும் கேள்விக்கு நீ பதில் சொல்ல வேண்டும்” என்றான். அப்பெண், “எனது அரசனாகிய ஆண்டவனே, தயவுசெய்து உங்கள் வினாவை சொல்லுங்கள்” என்றாள்.

19 அரசன், “இவற்றையெல்லாம் சொல்வதற்கு யோவாப் உனக்குச் சொல்லவில்லையா?” என்று கேட்டான்.

அப்பெண் பதிலாக, “எனது அரசனாகிய ஆண்டவனே, நீங்கள் உயிரோடிருக்குமளவிற்கு நீங்கள் சரியானவர்! உங்கள் அதிகாரியாகிய யோவாப் என்னிடம் இவற்றையெல்லாம் கூறும்படிச் சொன்னார். 20 நடந்த காரியங்களை நீர் வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்ப்பதற்காக யோவாப் இவற்றைச் செய்தார். என் ஆண்டவனே, நீர் தேவதூதனைப் போன்ற ஞானம் உள்ளவர்! உமக்கு இப்பூமியில் நடப்பவையெல்லாம் தெரியும்” என்றாள்.

அப்சலோம் எருசலேம் திரும்புதல்

21 அரசன் யோவாபை நோக்கி, “இதோ, நான் வாக்களித்தபடியே செய்வேன். போய் இளைஞனாகிய அப்சலோமை இப்போதே அழைத்து வாருங்கள்” என்றான்.

22 யோவாப் முகங்குப்புற விழுந்து வணங்கினான். அவன் தாவீது அரசனை வாழ்த்தியபடியே, “நீங்கள் என்னிடம் கருணைக் காட்டுகிறீர்கள் என்பதை இன்று அறிகிறேன். நான் கேட்டதை நீர் நிறைவேற்றுகிறபடியால் அதை நான் அறிகிறேன்” என்றான்.

23 பின்பு யோவாப் எழுந்து கேசூருக்குப் போய் அப்சலோமை எருசலேமுக்கு அழைத்து வந்தான். 24 ஆனால் தாவீது அரசன், “அப்சலோம் தனது வீட்டிற்குப் போகலாம். ஆனால் அவன் என்னைப் பார்க்க வரமுடியாது” என்றான். எனவே அப்சலோம் தனது வீட்டிற்குப் போனான். அப்சலோம் அரசனைப் பார்க்கபோக முடியவில்லை.

ரோமர் 15:1-6

15 விசுவாசத்தில் உறுதியாய் இருக்கிற நாம் பல வீனமானவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். நாம் நமது திருப்திக்காக மட்டுமே வாழ்தல் கூடாது. நம்மில் ஒவ்வொருவரும் மற்றவர்களையும் மகிழ்ச்சியுறச் செய்தல் வேண்டும். இதனை மற்றவர்களுக்கு உதவியாகச் செய்ய வேண்டும். அவர்கள் விசுவாசத்தில் பலமுடையவர்களாக உதவி செய்யவேண்டும். கிறிஸ்து கூட தனது திருப்திக்காக வாழவில்லை. “அவர்கள் உங்களை நிந்தித்தால் என்னையும் நிந்திக்கிறவர்களாகிறார்கள்” [a] என்று எழுதப்பட்டிருப்பதைப் போலாகும் அது. வேதவசனத்தினால் பொறுமையும் ஆறுதலும் உண்டாகிறது. அதனால் நாம் நம்பிக்கை உள்ளவர்களாகும்படிக்கு முன்பு எழுதப்பட்டவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதப்பட்டன. பொறுமையும் பலமும் தேவனிடமிருந்து வந்தன. இயேசு கிறிஸ்து விரும்புகிற வழியை நீங்கள் உங்களுக்குக்குள் ஏற்றுக்கொள்ள தேவனிடம் பிரார்த்திப்பேன். எனவே இதய ஒற்றுமையுடனும் ஒருமித்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனைப் புகழ்வீர்கள்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center