Revised Common Lectionary (Semicontinuous)
நன்றி கூறும் பாடல்.
100 பூமியே, கர்த்தரைப் பாடு.
2 கர்த்தருக்குப் பணிவிடை செய்யும்போது மகிழுங்கள்!
மகிழ்ச்சியான பாடல்களோடு கர்த்தருக்கு முன்பாக வாருங்கள்!
3 கர்த்தரே தேவனென்று அறியுங்கள்.
அவரே நம்மை உண்டாக்கினார்.
நாம் அவரது ஜனங்கள். நாம் அவரது ஆடுகள்.
4 நன்றி நிறைந்த பாடல்களோடு அவரது நகரத்தினுள் நுழையுங்கள்.
துதிப் பாடல்களோடு அவரது ஆலயத்திற்குள் வாருங்கள்.
அவரைப் பெருமைப்படுத்தி, அவர் நாமத்தைத் துதியுங்கள்.
5 கர்த்தர் நல்லவர்.
அவர் அன்பு என்றென்றும் உள்ளது.
என்றென்றைக்கும் எப்போதும் நாம் அவரை நம்பமுடியும்.
23 “இது யூதா ஜனங்களின் மேய்ப்பர்களுக்கு (தலைவர்களுக்கு) மிகவும் கெட்டதாகும். அம்மேய்ப்பர்கள் ஆடுகளை அழித்துக்கொண்டிருக்கிறார்கள். எல்லா திசைகளிலும் என் மேய்ச்சல் நிலத்திலிருந்து ஆடுகளை ஓட வைக்கிறார்கள்” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது.
2 எனது ஜனங்களுக்கு அம்மேய்ப்பர்களே பொறுப்பானவர்கள். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அம்மேய்ப்பர்களுக்கு இதனைச் சொல்கிறார்: “மேய்ப்பர்களாகிய நீங்கள் எனது ஆடுகளை எல்லாத் திசைகளிலும் ஓடச்செய்கிறீர்கள். அவை போகுமாறு நீங்கள் பலவந்தப்படுத்துகிறீர்கள். நீங்கள் அவற்றைப்பற்றி அக்கறை எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், நான் உங்களைப்பற்றி அக்கறை எடுத்துக்கொள்வேன். நீங்கள் செய்த தீமைக்காக நான் உங்களைத் தண்டிப்பேன்.” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. 3 “நான் எனது ஆடுகளை வேறு நாடுகளுக்கு அனுப்பினேன். ஆனால், விடுபட்ட ஆடுகளை நான் சேகரிப்பேன். நான் அவற்றை மீண்டும் அவற்றின் மேய்ச்சல் நிலத்திற்குக் கொண்டுவருவேன். எனது ஆடுகள் தம் மேய்ச்சல் நிலத்திற்குத் திரும்பியதும், அவற்றுக்கு நிறைய குட்டிகள் வர அவை எண்ணிக்கையில் பெருகும். 4 நான் எனது ஆடுகளுக்குப் புதிய மேய்ப்பர்களை ஏற்படுத்துவேன். அம்மேய்ப்பர்கள் எனது ஆடுகளை அக்கறையோடு பார்த்துக்கொள்வார்கள். எனது ஆடுகள் பயப்படவோ, கலங்கவோ செய்யாது. எனது ஆடுகள் எதுவும் காணாமல் போகாது” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது.
நீதியுள்ள “துளிர்”
5 இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது:
“காலம் வந்துக்கொண்டு இருக்கிறது.
நான் ஒரு நல்ல ‘துளிரை’ எழுப்புவேன்.
அவன் ராஜா ஆவான்.
அவன் ஞான வழியில் ஆள்வான்.
நாட்டில் எது சரியோ நியாயமானதோ, அதைச் செய்வான்.
6 நல்ல ‘துளிருள்ள’ காலத்தில், யூதாவின் ஜனங்கள் காப்பாற்றப்படுவார்கள்.
இஸ்ரவேலர்கள் பாதுகாப்பாக வாழ்வார்கள்.
இது அவரது நாமமாக இருக்கும்:
கர்த்தர் நமது நன்மை.
7 “எனவே, காலம் வந்துக்கொண்டிருக்கிறது” இச்செய்தி கர்த்தரிடமிருந்து வந்தது. “ஜனங்கள் பழைய வாக்குறுதியை எப்பொழுதும் சொல்லமாட்டார்கள். பழைய வாக்குறுதியானது: ‘கர்த்தர் உயிரோடு இருப்பது எவ்வளவு உறுதியானதோ அவ்வளவு உறுதியாக, கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டு வந்தவர் ….’ 8 ஆனால் ஜனங்கள் புதிதாகச் சொல்வார்கள்: ‘கர்த்தர் உயிரோடிருப்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மையாக, இஸ்ரவேல் ஜனங்களை வட நாட்டிலிருந்து கொண்டுவந்தார். ஏற்கனவே, அவர்களை அனுப்பிய அனைத்து நாடுகளிலிருந்தும் அழைத்துக்கொண்டுவந்தார் ….’ பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் தம் சொந்த நாட்டில் வாழ்வார்கள்.”
தமது மரணத்தைப் பற்றி பேசுதல்
(மாற்கு 10:32-34; லூக்கா 18:31-34)
17 இயேசு எருசலேமுக்குத் தம் சீஷர்களுடன் சென்று கொண்டிருந்தார். அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தபொழுது, இயேசு தம் சீஷர்களை அழைத்துத் தனியாகப் பேசினார். இயேசு அவர்களிடம், 18 “நாம் எருசலேமுக்குப் போய்கொண்டிருக்கிறோம். தலைமை ஆசாரியர்களிடமும் வேதபாரகர்களிடமும் மனித குமாரன் ஒப்படைக்கப்படுவார். அவர்கள் மனித குமாரன் இறக்க வேண்டும் என்பார்கள். 19 யூதர்கள் அல்லாத வேற்று மனிதர்களிடம் மனித குமாரனை ஒப்படைப்பார்கள். அவர்கள் அவரைக் கேலி செய்து சவுக்கால் அடித்து சிலுவையில் அறைந்து கொல்வார்கள். ஆனால், மூன்றாவது நாள் மரணத்திலிருந்து மனித குமாரன் உயிர்த்தெழுவார்” என்று கூறினார்.
ஒரு தாய் விசேஷ உதவி கேட்டல்
(மாற்கு 10:35-45)
20 பின்னர், செபதேயுவின் குமாரர்களுடன் அவர்களின் தாய் இயேசுவைத் தேடி வந்தாள். அவள் இயேசுவின் முன் மண்டியிட்டு தனக்கு ஒரு உதவி செய்ய வேண்டினாள்.
21 இயேசு அவளிடம், “உனக்கு என்னவேண்டும்?” என்று கேட்டார்.
அவள், “எனது ஒரு குமாரன் உங்கள் இராஜ்யத்தில் உங்களது வலது பக்கம் இருக்கவும், மற்றொரு குமாரன் உங்கள் இராஜ்யத்தில் உங்களது இடது பக்கம் இருக்கவும் வாக்களியுங்கள்” என்று கேட்டாள்.
22 அதைக் கேட்ட இயேசு அவளது குமாரர்களிடம், “நீங்கள் என்ன வேண்டுகிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளவில்லை. நான் அனுபவிக்கப்போகும் துன்பத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ள முடியுமா?” என்று கேட்டார்.
“ஆம், எங்களால் முடியும்” என்று அவர்கள் பதில் சொன்னார்கள்.
23 இயேசு அவர்களிடம், “மெய்யாகவே எனக்கு ஏற்படும் துன்பம் உங்களுக்கும் ஏற்படும். ஆனால் என் வலது இடது பக்கங்களில் உட்காரப்போகிறவர்களை என்னால் முடிவு செய்ய இயலாது. அந்த இடம் யாருக்கு என்பதை என் பிதா முடிவு செய்துவிட்டார். அவர்களுக்காகவே அந்த இடங்களை அவர் தயார் செய்துள்ளார். அந்த இடங்கள் அவர்களுக்கே உரியவை” என்றார்.
24 இந்த உரையாடலைக் கேட்ட மற்ற பத்து சீஷர்களும் அவ்விரு சகோதரர்களின் மீதும் கோபம் கொண்டார்கள். 25 இயேசு எல்லா சீஷர்களையும் ஒன்றாக அழைத்து, அவர்களிடம், “யூதரல்லாத மக்களின் ஆட்சியாளர்கள் தங்கள் அதிகாரத்தை காட்டிக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். அவர்களின் முக்கியமான தலைவர்கள் மக்களின் மீது முழு அதிகாரத்தை செலுத்த விரும்புகிறார்கள். 26 ஆனால், நீங்கள் அப்படி இருக்கக் கூடாது. உங்களில் ஒருவன் பெரியவனாக ஆக விரும்பினால், அவன் உங்களுக்கு ஒரு வேலைக்காரனைப் போல ஊழியம் செய்ய வேண்டும். 27 உங்களில் ஒருவன் முதலாவதாக வர விரும்பினால், அவன் உங்களுக்கு ஓர் அடிமையைப் போல் ஊழியம் செய்ய வேண்டும். 28 மனித குமாரனும் அப்படியே. தனக்கு மற்றவர்கள் ஊழியம் செய்வதற்காக அவர் வரவில்லை. மற்றவர்களுக்கு ஊழியம் செய்யவே மனித குமாரன் வந்தார். பலரது வாழ்வை இரட்சிப்பதற்கு தன் உயிரைக் கொடுக்கவே மனித குமாரன் வந்தார்” என்று கூறினார்.
2008 by World Bible Translation Center