Revised Common Lectionary (Semicontinuous)
நூன்
105 கர்த்தாவே, உமது வார்த்தைகள்
என் பாதைக்கு ஒளி காட்டும் விளக்காகும்.
106 உமது சட்டங்கள் நல்லவை.
நான் அவற்றிற்குக் கீழ்ப்படிவேனென உறுதியளிக்கிறேன்.
நான் என் வாக்குறுதியை நிறைவேற்றுவேன்.
107 கர்த்தாவே, நான் நீண்ட காலம் துன்பமடைந்தேன்.
தயவுசெய்து நான் மீண்டும் வாழும்படி கட்டளையிடும்.
108 கர்த்தாவே, என் துதியை ஏற்றுக்கொள்ளும்.
உமது சட்டங்களை எனக்குப் போதியும்.
109 என் வாழ்க்கை எப்போதும் ஆபத்துள்ளதாயிருக்கிறது.
ஆனால் நான் உமது போதனைகளை மறக்கவில்லை.
110 தீயோர் என்னைக் கண்ணியில் சிக்க வைக்கப் பார்க்கிறார்கள்.
ஆனால் நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமலிருந்ததில்லை.
111 கர்த்தாவே, நான் உமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் பின்பற்றுவேன்.
அது என்னை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது.
112 உமது சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதற்கு நான் எப்போதும் கடினமாக முயல்வேன்.
சோம்பேறியாக இருப்பதில் உள்ள ஆபத்து
6 சோம்பேறியே! நீ எறும்பைப்போல இருக்க வேண்டும். எறும்பு என்ன செய்கிறது என்று பார். அதனிடமிருந்து கற்றுக்கொள். 7 அந்த எறும்புக்கு ஒரு ராஜாவோ, தலைவனோ, எஜமானோ இல்லை. 8 ஆனால் அது கோடைக்காலத்தில் தனக்கு வேண்டிய உணவைச் சேகரித்துக்கொள்ளும். தன் உணவை அது பாதுகாக்கிறது. மழைக்காலத்தில் போதுமான அளவுக்கு அதனிடத்தில் உணவு உள்ளது.
9 சோம்பேறியே! எவ்வளவு நாட்கள் அங்கேயே படுத்துக்கொண்டு கிடப்பாய். உனது ஓய்வை முடித்துக்கொண்டு நீ எப்போது எழப்போகிறாய்? 10 அந்தச் சோம்பேறி, “எனக்கு சிறிது தூக்கம் வேண்டும். நான் இங்கே சிறிதுநேரம் படுத்து ஓய்வு எடுப்பேன்” என்பான். 11 ஆனால் அவன் மீண்டும், மீண்டும் தூங்கிக்கொண்டிருக்கிறான். அவன் மேலும், மேலும் வறுமைக்குள்ளாவான். விரைவில் அவனிடம் ஒன்றுமேயில்லாமற்போகும். ஒரு திருடன் வந்து அனைத்தையும் அபகரித்துக்கொண்டு போனது போல இருக்கும்.
தீய மனிதன்
12 ஒன்றுக்கும் உதவாத தீயமனிதன் பொய்யையும் தீயவற்றையும் கூறுகிறான். 13 அவன் தன் கண்ணைச் சிமிட்டி, கைகளாலும் கால்களாலும் சைகைக்காட்டி ஜனங்களை ஏமாற்றுகிறான். 14 அவன் கெட்டவன். அவன் எப்பொழுதும் தொல்லை செய்யவே திட்டமிடுவான். அவன் எல்லா இடங்களிலும் தொல்லை செய்வான். 15 ஆனால் அவன் தண்டிக்கப்படுவான். எதிர்பாராத நேரத்தில் திடீரென்று அவனுக்குத் துன்பம் வரும். அவன் விரைவில் அழிந்துப்போவான். எவராலும் அவனுக்கு உதவிசெய்ய முடியாது.
கர்த்தரால் வெறுக்கப்படும் ஏழு காரியங்கள்
16 கர்த்தர் இந்த ஆறு அல்லது ஏழு காரியங்களையும் வெறுக்கிறார்.
17 கர்வம் கொண்ட கண்கள், பொய்களைக் கூறும் நாவுகள், அப்பாவி ஜனங்களைக்கொல்லும் கைகள்.
18 தீயவற்றைச் செய்யத் திட்டமிடும் மனது, கெட்டவற்றைச் செய்ய ஓடும் கால்கள்,
19 வழக்கு மன்றத்தில் பொய்யைச் சொல்லுபவன், உண்மையில்லாதவற்றைக் கூறுபவன், விவாதங்களைத் தொடங்கி வைத்து அடுத்தவர்களுக்குள் சண்டை மூட்டுபவன்.
20 என் மகனே, உன் தந்தையின் கட்டளைகளை நினைவுபடுத்திக்கொள். உன் தாயின் போதனைகளையும் மறக்காதே. 21 அவர்களது வார்த்தைகளை எப்போதும் நினைவுபடுத்திக்கொள். அவற்றை உன் கழுத்தைச் சுற்றிலும் கட்டிக்கொள். அவைகளை உன் இருதயத்தின்மேல் வைத்துக்கொள். 22 நீ எங்கே சென்றாலும் அவர்களின் போதனைகள் உனக்கு வழிகாட்டும். நீ தூங்கும்போதும் அவை உன்னைக் கவனித்துக்கொள்ளும். நீ விழித்து எழுந்ததும் அவை உன்னோடு பேசி உனக்கு வழிகாட்டும்.
23 உன் பெற்றோர்களின் கட்டளைகளும் போதனைகளும் உனக்குச் சரியான பாதையைக் காட்டும் விளக்குகளைப் போன்றவை. அவை உன்னைத் திருத்தும்; வாழ்க்கைக்கான பாதையில் நீ செல்ல உனக்குப் பயிற்சி தரும்.
இயேசுவே உலகத்தின் ஒளி
12 மீண்டும் இயேசு மக்களோடு பேசினார். அவர், “நானே உலகத்துக்கு ஒளி. என்னைப் பின்பற்றி வருகிற எவனும் ஒருபோதும் இருளில் வாழமாட்டான். அவன் வாழ்வைத் தருகிற ஒளியைப் பெறுவான்” என்றார்.
13 ஆனால் பரிசேயர்கள் இயேசுவிடம், “உன்னைக்குறித்து நீ பேசும்போது நீ சொல்வதை உண்மையென்று நீ மாத்திரமே கூறுகிறாய். ஆகையால் நீ சொல்லுகின்றவற்றை நாங்கள் ஒத்துக் கொள்ளமுடியாது” என்றனர்.
14 அதற்கு இயேசு, “ஆம், என்னைப்பற்றி நானே பேசிக்கொண்டிருக்கிறேன். ஆனால் நான் சொல்லுகின்றவற்றை மக்கள் நம்ப முடியும். ஏனெனில் நான் எங்கேயிருந்து வந்தேன் என்பது எனக்குத் தெரியும். அதோடு எங்கே போகிறேன் என்றும் எனக்குத் தெரியும். நான் உங்களைப் போன்றவன் இல்லை. நான் எங்கிருந்து வந்தேன் என்றும் எங்கே போகிறேன் என்றும் உங்களுக்குத் தெரியாது. 15 சாதாரணமாக ஒருவனைப் பார்த்து கணிக்கிற விதத்திலேயே நீங்கள் என்னைப்பற்றி கணிக்கிறீர்கள். நான் எவரைப்பற்றியும் கணிப்பதில்லை. 16 ஆனால் நான் கணிக்கும்போது என் கணிப்பு உண்மையுள்ளதாக இருக்கும். ஏனென்றால் தீர்ப்பளிக்கும் காலத்தில் நான் தனியாளாக இல்லை. என்னை அனுப்பிய என் பிதா என்னோடு இருக்கிறார். 17 இரண்டு சாட்சிகள் ஒரே உண்மையைச் சொன்னால் உங்கள் சட்டம் உண்மைதான் என்று ஏற்றுக்கொள்கிறது. 18 நானும் என்னைப்பற்றி சொல்லுகிற ஒரு சாட்சி, அத்துடன் என்னை அனுப்பிய என் பிதாவும் எனது இன்னுமொரு சாட்சி” என்றார்.
19 மக்கள் அவரிடம் “உன் பிதா எங்கே இருக்கிறார்?” என்று கேட்டார்கள். “நீங்கள் என்னைப் பற்றியும் என் பிதாவைப்பற்றியும் அறியமாட்டீர்கள். ஆனால் நீங்கள் என்னை அறிந்துகொண்டால் என் பிதாவையும் அறிந்துகொள்வீர்கள்” என்று பதிலுரைத்தார். 20 இயேசு தேவாலயத்தில் உபதேசம் செய்யும்பொழுது இவற்றைச் சொன்னார். எல்லோரும் பணம் செலுத்துகிற இடத்தில் இயேசு இருந்தார். ஆனால் எவரும் அவரைக் கைதுசெய்யவில்லை. இயேசுவிற்கு அந்த வேளை இன்னும் வரவில்லை.
யூதர்களின் அறியாமை
21 மீண்டும் இயேசு மக்களிடம், “நான் உங்களை விட்டுப் போகிறேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள். நீங்கள் உங்கள் பாவங்களோடு சாவீர்கள். நான் போகிற இடத்துக்கு உங்களால் வரமுடியாது” என்றார்.
22 எனவே யூதர்கள் தங்களுக்குள், “இயேசு தன்னைத்தானே கொன்றுகொள்வாரா? அதனால்தான் நான் போகிற இடத்துக்கு உங்களால் வர முடியாது என்று கூறினாரா?” என்று கேட்டுக்கொண்டனர்.
23 அந்த யூதர்களைப் பார்த்து இயேசு, “நீங்கள் கீழே இருந்து வந்தவர்கள். ஆனால் நான் மேலே இருந்து வந்தவன். நீங்கள் இந்த உலகத்துக்கு உரியவர்கள். ஆனால் நான் இந்த உலகத்தைச் சார்ந்தவன் அல்லன். 24 நீங்கள் உங்கள் பாவங்களிலேயே மரிப்பீர்கள் என்று நான் சொல்லியிருக்கிறேன். ஆம். நானே[a] அவர் என்பதை நம்பாவிட்டால் உங்கள் பாவங்களோடேயே நீங்கள் மரணமடைவீர்கள்.”
25 அதற்கு யூதர்கள், “நீங்கள் யார்?” என்று கேட்டார்கள்.
இயேசுவோ அவர்களிடம், “நான் ஆரம்பத்திலேயே உங்களுக்குச் சொல்லியவர்தான். 26 உங்களைப்பற்றிச் சொல்ல என்னிடம் நிறைய செய்திகள் உள்ளன. நான் உங்களை நியாயம் தீர்க்கவும் முடியும். என்னை அனுப்பினவரிடமிருந்து கேட்டவற்றையே நான் மக்களுக்குச் சொல்கிறேன். அவர் உண்மையைப் பேசுகிறவர்” என்றார்.
27 இயேசு யாரைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறார் என்று யூதர்கள் அறிந்துகொள்ள முடியாமல் இருந்தனர். இயேசு அவர்களிடம் பிதாவைப்பற்றி கூறிக்கொண்டிருந்தார். 28 எனவே இயேசு மக்களிடம், “நீங்கள் மனித குமாரனைக் கொல்லும்போது நான்தான் என்று அறிந்துகொள்வீர்கள். அத்துடன் நான் இதுவரை செய்த செயல்களை என் சொந்த அதிகாரத்தில் செய்யவில்லை என்பதையும் அறிவீர்கள். பிதா எனக்குச் சொன்னவற்றையே நான் உங்களுக்குச் சொன்னேன் என்பதையும் அறிந்துகொள்வீர்கள். 29 என்னை அனுப்பிய ஒருவர் எப்போதும் என்னோடேயே இருக்கிறார். அவருக்கு விருப்பமானவற்றையே நான் எப்போதும் செய்துகொண்டிருக்கிறேன். எனவே, அவர் என்னைத் தனியாக விட்டுவிடவில்லை” என்றார். 30 இவ்வாறு இயேசு சொல்லிக்கொண்டிருந்தபோது ஏராளமான மக்கள் அவரிடம் விசுவாசம் வைத்தனர்.
2008 by World Bible Translation Center