Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Semicontinuous)

Daily Bible readings that follow the church liturgical year, with sequential stories told across multiple weeks.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 75

“அழிக்காதே” என்னும் பாடலின் இசைத்தலைவனுக்கு ஆசாப் அளித்த துதிப்பாடல்களுள் ஒன்று.

75 தேவனே, நாங்கள் உம்மைத் துதிக்கிறோம்.
    நாங்கள் உம்மைத் துதிக்கிறோம்.
    நீர் அருகாமையில் இருக்க, ஜனங்கள் நீர் செய்யும் அற்புதமான காரியங்களைக் குறித்து கூறுகிறார்கள்.

தேவன் கூறுகிறார்:
    “நியாயத்தீர்ப்பின் காலத்தை நான் தெரிந்தெடுத்திருக்கிறேன்.
    நான் தகுந்தபடி நியாயந்தீர்ப்பேன்.
பூமியும் அதிலுள்ள அனைத்தும் நடுங்கி விழும் நிலையில் இருக்கும்.
    ஆனால் நான் அதைத் திடமாக இருக்கச் செய்வேன்.”

4-5 “சிலர் அதிகமாக பெருமையுள்ளவர்கள், தாங்கள் வலிமை மிக்கவர்கள் என்றும் முக்கியமானவர்கள் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள்.
    ஆனால் நான் அவர்களிடம் ‘வீம்பு பேசாதீர்கள்!’
    ‘பெருமை பாராட்டாதீர்கள்!’ என்று கூறுவேன்” என்கிறார்.

ஒருவனை முக்கியமானவனாக்கும் வல்லமை
    எதுவும் இப்பூமியில் இல்லை.
தேவனே நீதிபதி, யார் முக்கியமானவர் என்பதை தேவன் முடிவெடுக்கிறார்.
    தேவன் ஒருவனை உயர்த்தி அவனை முக்கியமானவனாக்குகிறார்.
    தேவன் மற்றொருவனைத் தாழ்த்தி அவனை முக்கியமற்றவனாக்குகிறார்.
தேவன் தீயோரைத் தண்டிக்கத் தயாராய் இருக்கிறார்.
    கர்த்தர் கையில் ஒரு கோப்பை உள்ளது, அக்கோப்பை விஷம் கலந்த திராட்சைரசத்தால் நிரம்பியுள்ளது.
அவர் அத்திராட்சைரசத்தை (தண்டனையை) ஊற்றுவார்,
    கடைசித் துளிமட்டும் கெட்டஜனங்கள் அதனைக் குடிப்பார்கள்.

நான் எப்போதும் ஜனங்களுக்கு இவற்றைப்பற்றிக் கூறுவேன்.
    இஸ்ரவேலரின் தேவனுக்கு நான் துதிப்பாடுவேன்.
10 கெட்ட ஜனங்களிடமிருந்து நான் வல்லமையை அகற்றிவிடுவேன்.
    நான் நல்ல ஜனங்களுக்கு வல்லமையை அளிப்பேன்.

2 இராஜாக்கள் 3:4-20

மோவாப் இஸ்ரவேலிலிருந்து பிரிந்து போனது

மேசா மோவாபின் ராஜா. அவனுக்கு ஆடு மாடுகள் இருந்தன. அவன் இஸ்ரவேல் ராஜாவுக்கு 1,00,000 ஆட்டுக்குட்டிகளையும் 1,00,000 செம்மறியாட்டுக் கடாக்களையும் கம்பளிக்காகக் கொடுத்து வந்தான். ஆனால் ஆகாப் மரித்ததும் மோவாபின் ராஜா இஸ்ரவேலுக்கு எதிராகப் புரட்சி செய்து தன் நாட்டைப் பிரித்துக்கொண்டான்.

பிறகு யோராம் சமாரியாவிற்கு வெளியே சென்று இஸ்ரவேல் ஜனங்களை ஒன்று சேர்த்தான். அவன் தூதுவர்களை அனுப்பி யூதாவின் ராஜாவாகிய யோசபாத்திடம் பேசினான். யோராம், “மோவாபின் ராஜா எனக்கு எதிராக என் ஆட்சியிலிருந்து விலகிவிட்டான். அவனோடு போரிட என்னுடன் சேர்ந்து வருவீர்களா?” என்று கேட்டான்.

அதற்கு யோசபாத், “சரி, நான் உன்னோடு வருகிறேன். நான் உன்னைப் போன்றவன். எனது ஜனங்களும் உன் ஜனங்களைப் போன்றவர்கள். என் குதிரைகளும் உனது குதிரைகளைப் போன்றவைதாம்” என்றான்.

மூன்று ராஜாக்களும் எலிசாவை ஆலோசனைக் கேட்கிறார்கள்

யோசாபாத் யோராமிடம், “நாம் எந்த வழியில் போவது?” என்று கேட்டான்.

அதற்கு யோராம், “நாம் ஏதோம் பாலைவனத்தின் வழியாகப் போகவேண்டும்” என்று பதில் சொன்னான்.

எனவே இஸ்ரவேல் ராஜா யூதாவின் ராஜாவோடும் ஏதோமின் ராஜாவோடும் பயணம் செய்தான். அவர்கள் ஏறக்குறைய ஏழு நாட்கள் பயணம் செய்தனர். பிறகு படைவீரர்களுக்கும் மிருகங்களுக்கும் குடிக்க தண்ணீரில்லை. 10 இறுதியாக இஸ்ரவேலின் ராஜா, “ஓ! கர்த்தர் நமது மூன்று ராஜாக்களையும் ஒன்றுகூடி அழைத்து நம்மை மோவாபியர்களிடம் ஒப்படைத்து நம்மை தோற்கடித்தார்!” என்றான்.

11 ஆனால் யோசபாத், “கர்த்தருடைய ஒரு தீர்க்கதரிசி இங்கே இருக்கவேண்டும். நாம் என்ன செய்ய வேண்டும் என்று கர்த்தர் சொல்கிறார் என அவரிடமே கேட்போம்” என்றான்.

இஸ்ரவேல் ராஜாவின் வேலைக்காரர் ஒருவன், “சாப்பாத்தின் குமாரனான எலிசா இங்கே இருக்கிறார். அவர் எலியாவின் வேலைக்காரர்” என்றான்.

12 யோசபாத்தும், “கர்த்தருடைய வார்த்தை எலிசாவோடு உள்ளது” என்று கூறினான்.

எனவே இஸ்ரவேலின் ராஜாவும் யோசபாத்தும் ஏதோமின் ராஜாவும் எலியாவைப் பார்க்கப் போனார்கள்.

13 எலிசா இஸ்ரவேல் ராஜாவாகிய யோராமிடம், “நான் உங்களுக்கு செய்வதற்கு எதுவுமில்லை. உங்கள் தந்தை மற்றும் தாயின் தீர்க்கதரிசிகளிடம் செல்லுங்கள்!” என்றான்.

அதற்கு இஸ்ரவேலின் ராஜா, “இல்லை, நாங்கள் உங்களைப் பார்க்கவே வந்துள்ளோம். ஏனென்றால் கர்த்தர் மோவாப் மூலம் எங்களைத் தோற்கடிக்க எங்கள் மூவரையும் ஒன்றாகக் கூட்டியுள்ளார். எங்களுக்கு நீங்கள் உதவவேண்டும்” என்றான்.

14 அதற்கு எலிசா, “சர்வவல்லமையுள்ள கர்த்தருக்கு நான் ஊழியம் செய்கிறேன். அவர் இருப்பது எந்த அளவிற்கு உண்மையோ, அதே அளவுக்கு நான் உம்மிடம் உண்மையைப் பேசுகிறேன். யூதாவின் ராஜாவாகிய யோசபாத் இங்கே இல்லாவிட்டால் உங்களை நான் பார்த்திருக்கவோ கவனித்திருக்கவோமாட்டேன்! 15 இப்போது சுரமண்டலம் வாசிக்கிற ஒருவனை அழைத்து வாருங்கள்” என்றான்.

அவன் வந்து சுரமண்டலத்தை வாசித்தபோது, கர்த்தருடைய வல்லமை எலிசாவின் மேல் இறங்கியது. 16 பிறகு எலிசா, “இப்பள்ளத்தாக்கிலே துளைகளைப் போடுங்கள். கர்த்தர் இதைத்தான் கூறுகிறார்: 17 நீங்கள் காற்றையும் மழையையும் பார்ப்பதில்லை. ஆனால் பள்ளத்தாக்கு தண்ணீரால் நிறையும். பின் நீங்களும் உங்கள் பசுக்களும் மற்ற மிருகங்களும் குடிக்க தண்ணீர் கிடைக்கும். 18 இதனை கர்த்தர் எளிதாகச் செய்வார். மோவாப் ஜனங்களை நீங்கள் வெல்லும்படியாகவும் செய்வார்! 19 நீங்கள் பலமுள்ள (கோட்டை அமைந்த) நகரங்களையும், தேர்ந்தெடுத்த (நல்ல) நகரங்களையும் தாக்குவீர்கள். நல்ல மரங்களையெல்லாம் வெட்டுவீர்கள். தண்ணீரின் ஊற்றுகளை அடைப்பீர்கள். வயல்களைக் கற்களால் அழித்துவிடுவீர்கள்” என்றான்.

20 காலையில், பலியைச் செலுத்தும் போது ஏதோம் சாலை வழியாக தண்ணீர் வந்து பள்ளத்தாக்கை நிரப்பிற்று.

எபேசியர் 5:6-20

உங்களிடம் உண்மை இல்லாதவற்றைச் சொல்லி உங்களை எவரும் முட்டாளாக ஆக்கிவிட அனுமதிக்காதீர்கள். கீழ்ப்படியாதவர்கள் மீது தேவனைக் கோபம் கொள்ள அத்தீய செயல்கள் செய்கிறது. எனவே அவர்களோடு இத்தகைய தீய செயல்களைச் செய்யாதீர்கள். கடந்த காலத்தில் நீங்கள் இருளில் இருந்தீர்கள். இப்பொழுது தேவனுடைய வெளிச்சத்தில் இருக்கிறீர்கள். எனவே நீங்கள் வெளிச்சத்தின் பிள்ளைகளைப் போன்று நடக்கவேண்டும். வெளிச்சமானது எல்லாவகையான நன்மைகளையும், சரியான வாழ்க்கையையும், உண்மையையும் கொண்டு வரும். 10 தேவனுக்கு விருப்பமானது எது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள். 11 இருட்டில் வாழ்பவர்கள் செய்கின்ற பாவங்களை எல்லாம் நீங்கள் செய்யாதீர்கள். அவற்றைச் செய்வதால் உங்களுக்கு நன்மை வருவதில்லை. இருட்டில் செய்யப்படுபவை எல்லாம் தவறானவை என்பதை எடுத்துக்காட்ட நீங்கள் நற்செயல்களைச் செய்யுங்கள். 12 அவர்கள் இருட்டில் இரகசியமாகச் செய்பவற்றைக் குறிப்பிடுவது கூட வெட்கப்படத்தக்கது ஆகும். 13 அவற்றை நாம் தவறானவை என்று காட்டும்பொழுது அவற்றை எளிதாகப் பார்ப்பதற்கு வெளிச்சம் உதவும். 14 எளிதாகப் பார்ப்பதுபோல் இருக்கிற எல்லாப் பொருள்களும் தமக்குள் வெளிச்சமுடையதாகிவிடும். அதனால்தான் நாம் கூறுகிறோம்.

“தூங்குகிறவர்களே எழும்புங்கள்,
    மரணத்திலிருந்து எழும்புங்கள்.
கிறிஸ்து உங்கள் மீது பிரகாசமாயிருப்பார்.”

15 எனவே எப்படி வாழ்வது என்பதில் எச்சரிக்கையாய் இருங்கள். ஞானம் இல்லாதவர்கள் வாழ்வது போன்று வாழாதீர்கள். ஞானத்தோடு வாழுங்கள். 16 நீங்கள் உங்களுக்குக் கிடைத்துள்ள ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி நற்செயல்களைச் செய்யுங்கள். ஏனென்றால் நாம் கெட்ட காலங்களில் வாழ்கிறோம். 17 ஆகையால் முட்டாள்தனமாக உங்கள் வாழ்க்கையை வீணாக்கிவிடாதீர்கள். பிதா உங்களிடம் என்ன விரும்புகிறார் என்பதை அறிந்துகொள்ளுங்கள். 18 மதுபான வெறிகொள்ளாதீர்கள். உங்கள் ஆன்மீக வாழ்வை அது அழித்துவிடும். ஆவியால் நிரப்பப்பட்டவர்களாக இருங்கள். 19 சங்கீதங்களினாலும், கீர்த்தனைகளினாலும், பக்திப் பாடல்களினாலும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளுங்கள். உங்கள் இதயத்தில் கர்த்தருக்காக இசையுடன் பாடுங்கள். 20 பிதாவாகிய தேவனுக்கு எப்போதும் எல்லாவற்றிற்காகவும் நன்றி செலுத்துங்கள். அதனைக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரில் செலுத்துங்கள்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center