Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Semicontinuous)

Daily Bible readings that follow the church liturgical year, with sequential stories told across multiple weeks.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 68:1-10

இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த துதிப்பாடல்களுள் ஒன்று.

68 தேவனே, எழுந்து உமது பகைவர்களைச் சிதறடிக்கச் செய்யும்.
    அவனது பகைவர்கள் எல்லோரும் அவனை விட்டு ஓடிப் போகட்டும்.
காற்றால் சிதறடிக்கப்படும் புகையைப் போன்று உமது பகைவர்கள் சிதறுண்டு போகட்டும்.
    நெருப்பில் உருகும் மெழுகைப்போன்று உமது பகைவர்கள் அழிந்துபோகட்டும்.
ஆனால் நல்லோர் மகிழ்ச்சியாயிருப்பார்கள்.
    நல்லோர் தேவனோடுகூட மகிழ்ச்சியாய் காலம் கழிப்பார்கள்.
    நல்லோர் களிப்படைந்து மிகவும் மகிழ்ச்சிக்கொள்வார்கள்.

தேவனை நோக்கிப் பாடுங்கள்.
    அவர் நாமத்தை துதித்துப் பாடுங்கள்.
தேவனுக்கு வழியை உண்டுபண்ணுங்கள்.
    அவர் பாலைவனத்தில் அவரது இரதத்தைச் செலுத்துகிறார்.
அவர் நாமம் யேகோவா,
    அவரது நாமத்தைத் துதியுங்கள்.
அவரது பரிசுத்த ஆலயத்தில், தேவன் அநாதைகளுக்குத் தந்தையைப் போன்றவர்.
    தேவன் விதவைகளைக் கவனித்துக்கொள்கிறார்.
தேவன் தனிமையில் வாழும் ஜனங்களுக்கு வீட்டைக் கொடுக்கிறார்.
    தேவன் அவரது ஜனங்களைச் சிறையிலிருந்து தப்புவிக்கிறார்.
அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
    ஆனால் தேவனுக்கு எதிராகத் திரும்பும் ஜனங்களோ கொடிய சிறையிலே உழல்வார்கள்.

தேவனே, உமது ஜனங்களை எகிப்திலிருந்து வழிநடத்தினீர்.
    நீர் பாலைவனத்தின் குறுக்காகக் கடந்து சென்றீர்.

பூமி அதிர்ந்தது,
    இஸ்ரவேலின் தேவன் சீனாய் மலைக்கு வந்தார், வானம் உருகிற்று.
தேவனே, பயனற்ற பாழ்நிலத்தை மீண்டும் பலன்பெறும்படி செய்வதற்காக
    மழையைப் பெய்யப்பண்ணினீர்.
10 உமது ஜனங்கள் அத்தேசத்திற்குத் திரும்பின.
    தேவனே, அங்கு ஏழைகளுக்குப் பல நல்ல பொருள்கள் கிடைக்கும்படி செய்தீர்.

சங்கீதம் 68:19-20

19 கர்த்தரைத் துதியுங்கள்!
    ஒவ்வொரு நாளும் நாம் சுமக்கவேண்டிய பாரங்களைச் சுமப்பதற்கு அவர் உதவுகிறார்.
    தேவன் நம்மை மீட்கிறார்.

20 அவரே நமது தேவன் அவரே நம்மை மீட்கும் தேவன்.
    நமது தேவனாகிய கர்த்தர் நம்மை மரணத்திலிருந்து காப்பாற்றுகிறார்.

யோபு 31:16-23

16 “நான் ஏழைகளுக்கு உதவ ஒருபோதும் மறுத்ததில்லை.
    விதவைகளுக்குத் தேவையானவற்றை நான் எப்போதும் கொடுத்தேன்.
17 நான் உணவைப் பொறுத்தமட்டில் சுய நலம் பாராட்டியதில்லை.
    நான் எப்போதும் அநாதைகளுக்கு உணவளித்தேன்.
18 தந்தையற்ற பிள்ளைகளுக்கு என் வாழ்க்கை முழுவதும், நான் ஒரு தந்தையைப் போன்றிருந்தேன்.
    என் வாழ்க்கை முழுவதும், நான் விதவைகளை ஆதரித்து வந்திருக்கிறேன்.
19 ஆடையில்லாததால் ஜனங்கள் துன்புறுவதைக் கண்டபோதும்,
    மேற்சட்டையில்லாத ஏழையைக் கண்டபோதும்,
20 நான் அவர்களுக்கு எப்போதும் ஆடைகளைக் கொடுத்தேன்.
    என் ஆடுகளின் மயிரைப் பயன்படுத்தி, அவர்கள் குளிர் நீங்கச் செய்தேன். அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடு என்னை ஆசீர்வதித்தார்கள்.
21 வாயிலில் ஒரு அநாதை வந்து உதவி வேண்டி நிற்கும்போது
    நான் என் கைமுட்டியை ஒருபோதும் ஆட்டியதில்லை.[a]
22 நான் எப்போதேனும் அப்படிச் செய்திருந்தால், அப்போது என் கரம் தோளிலிருந்து விழுந்திருக்கும் என நான் நம்புகிறேன்!
    என் கரம் எலும்புக் குழியிலிருந்து அகற்றப்பட்டிருக்கும் என நான் நம்புகிறேன்!
23 ஆனால் நான் அத்தகைய தீயகாரியங்கள் எதையும் செய்யவில்லை.
    நான் தேவனுடைய தண்டனைக்கு அஞ்சியிருக்கிறேன்.
    அவரது மகத்துவம் என்னை அச்சுறுத்துகிறது.

லூக்கா 8:40-56

இறந்த பெண் உயிரடைதலும் நோயாளி குணப்படுதலும்

(மத்தேயு 9:18-26; மாற்கு 5:21-43)

40 இயேசு கலிலேயாவுக்குத் திரும்பிச் சென்றபோது மக்கள் அவரை வரவேற்றனர். ஒவ்வொருவரும் அவருக்காகக் காத்திருந்தனர். 41 யவீரு என்னும் பெயருள்ள மனிதன் இயேசுவிடம் வந்தான். ஜெப ஆலயத்தின் தலைவனாக யவீரு இருந்தான். இயேசுவின் பாதங்களில் விழுந்து வணங்கி யவீரு தன் வீட்டுக்கு வருகை தருமாறு அவரை வேண்டினான். 42 யவீருக்கு ஒரே ஒரு குமாரத்தி இருந்தாள். அவளுக்குப் பன்னிரண்டு வயதாகி இருந்தது. அவள் இறக்கும் தருவாயில் இருந்தாள். யவீருவின் வீட்டுக்குப் போய்க்கொண்டிருக்கும்போது எல்லா பக்கங்களிலிருந்தும் இயேசுவை மக்கள் சூழ்ந்து கொண்டனர். 43 இரத்தப் போக்கினால் பன்னிரண்டு ஆண்டுகள் துன்புற்றுக்கொண்டிருந்த ஒரு பெண்ணும் அவர்களுள் ஒருத்தி ஆவாள். மருத்துவர்களிடம் சென்று அவள் தனது பணத்தை எல்லாம் செலவழித்திருந்தாள். ஆனால் எந்த மருத்துவராலும் அவளைக் குணமாக்க இயலவில்லை. 44 அப்பெண் இயேசுவுக்குப் பின்னாக வந்து அவரது அங்கியின் கீழ்ப் பகுதியைத் தொட்டாள். அந்நேரமே அவளின் இரத்தப் போக்கு நின்றுவிட்டது. 45 அப்போது இயேசு, “என்னைத் தொட்டது யார்?” என்று கேட்டார். எல்லாருமே தாம் இயேசுவைத் தொடவில்லை என்று கூறினர். பேதுரு, “குருவே! உங்களைச் சுற்றிலும் மக்கள் கூட்டம் நெருக்கித் தள்ளிக்கொண்டிருக்கிறது” என்றான்.

46 அதற்கு இயேசு, “யாரோ ஒருவர் என்னைத் தொட்டது உண்மை. என்னிடமிருந்து வல்லமை வெளிப்பட்டதை நான் உணர்ந்தேன்” என்றார். 47 தன்னால் ஒளிக்க முடியாததை உணர்ந்த பெண், நடுங்கியவளாய் இயேசுவின் முன்னே விழுந்து வணங்கினாள். மக்கள் அனைவரும் கேட்கும்படி தான் இயேசுவைத் தொட்டதன் காரணத்தைக் கூறினாள். பின்னர் தான் இயேசுவைத் தொட்டவுடன் குணமடைந்ததையும் சொன்னாள். 48 இயேசு அவளை நோக்கி, “என் மகளே, நீ விசுவாசித்ததால் குணமாக்கப்பட்டாய். சமாதானத்தோடு போ” என்றார்.

49 இயேசு இவ்வாறு பேசிக்கொண்டிருக்கையில் ஜெப ஆலயத்தின் தலைவனின் வீட்டிலிருந்து ஒருவன் வந்து, “உங்கள் குமாரத்தி இறந்துவிட்டாள். போதகரை மேலும் தொல்லைப்படுத்த வேண்டாம்” என்றான்.

50 இயேசு அதைக் கேட்டார். அவர் யவீருவை நோக்கி, “பயப்படாதே, விசுவாசத்துடனிரு, உன் குமாரத்தி குணம் பெறுவாள்” என்றார்.

51 இயேசு வீட்டை அடைந்தார். பேதுரு யோவான், யாக்கோபு, பெண்ணின் தந்தை, தாய் ஆகியோரை மட்டுமே உள்ளே வர அனுமதித்தார். பிறரை உள்ளே விடவில்லை. 52 எல்லா மக்களும் அச்சிறுமி இறந்ததற்காக அழுதுகொண்டும் புலம்பிக்கொண்டும் இருந்தனர். ஆனால் இயேசு, “அழாதீர்கள். அவள் இறக்கவில்லை. அவள் உறங்கிக்கொண்டிருக்கிறாள்” என்றார்.

53 அச்சிறுமி இறந்தாள் என அறிந்திருந்ததால் மக்கள் இயேசுவைப் பார்த்துச் சிரித்தனர். 54 ஆனால் இயேசு அவளது கையைப் பிடித்து, “சிறுமியே, எழுந்து நில்” என்றார். 55 அவள் ஆவி அவளுக்குள் திரும்ப வந்தது. அவள் உடனே எழுந்து நின்றாள். இயேசு, “அவளுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்” என்றார். 56 சிறுமியின் பெற்றோர் ஆச்சரியம் அடைந்தனர். நடந்ததைப் பிறருக்குக் கூறாமல் இருக்கும்படியாக இயேசு அவர்களுக்குக் கூறினார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center