Revised Common Lectionary (Semicontinuous)
146 கர்த்தரை துதி!
என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி!
2 என் வாழ்க்கை முழுவதும் நான் கர்த்தரைத் துதிப்பேன்.
என் வாழ்க்கை முழுவதும் நான் அவருக்குத் துதிகளைப் பாடுவேன்.
3 உதவிக்காக உங்கள் தலைவர்களை சார்ந்திராதீர்கள்.
ஜனங்களை நம்பாதீர்கள். ஏனெனில் ஜனங்கள் உங்களைக் காப்பாற்றமுடியாது.
4 ஜனங்கள் மரித்தபின் புதைக்கப்படுவார்கள்.
அப்போது உதவி செய்வதற்கான அவர்கள் திட்டங்கள் எல்லாம் மறைந்துபோகும்.
5 ஆனால் தேவனிடம் உதவி வேண்டுகிற ஜனங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
அந்த ஜனங்கள் அவர்களின் தேவனாகிய கர்த்தரை சார்ந்திருக்கிறார்கள்.
6 கர்த்தர் பரலோகத்தையும், பூமியையும் உண்டாக்கினார்.
கர்த்தர் கடலையும் அதிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினார்.
கர்த்தர் அவற்றை என்றென்றும் பாதுகாப்பார்.
7 ஒடுக்கப்பட்ட ஜனங்களுக்கு ஆண்டவர் நீதி வழங்குகிறார்.
தேவன் ஏழைகளுக்கு உணவளிக்கிறார்.
சிறைகளில் பூட்டி வைக்கப்பட்ட ஜனங்களை கர்த்தர் விடுவிக்கிறார்.
8 குருடர் மீண்டும் காண்பதற்கு கர்த்தர் உதவுகிறார்.
தொல்லையில் சிக்குண்ட ஜனங்களுக்கு கர்த்தர் உதவுகிறார்.
கர்த்தர் நல்லோரை நேசிக்கிறார்.
9 நம் நாட்டிலுள்ள அந்நியர்களை கர்த்தர் காப்பாற்றுகிறார்.
விதவைகளையும் அநாதைகளையும் கர்த்தர் கவனித்துக் காக்கிறார்.
ஆனால் கர்த்தர் தீயோரை அழிக்கிறார்.
10 கர்த்தர் என்றென்றும் அரசாளுவார்!
சீயோனே, உன் தேவன் என்றென்றும் எப்போதும் அரசாளுவார்!
கர்த்தரைத் துதியுங்கள்!
17 கர்த்தர் மேலும் மோசேயிடம், 18 “இவற்றை இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறு. நான் உங்களை வேறு நாட்டிற்கு அழைத்துச் செல்வேன். 19 அங்கு நீங்கள் விளைந்த உணவை உண்பதற்கு முன்னால், அதில் ஒரு பங்கை, கர்த்தருக்கு காணிக்கையாகக் கொடுக்க வேண்டும். 20 நீங்கள் தானியத்தைச் சேகரித்து, மாவாக அரைக்கவேண்டும். அது அப்பம் செய்வதற்கு ஏற்றதாக இருக்கவேண்டும். முதலில் செய்யப்படும் அப்பத்தை, கர்த்தருக்கு காணிக்கையாகக் கொடுக்கவேண்டும். போரடிக்கிற களத்தில் தானியத்தைக் காணிக்கையாகக் கொடுப்பது போன்று இது இருக்கும். 21 இவ்விதிமுறை எக்காலத்திற்கும் தொடர்ந்திருக்கும். நீங்கள் பிசைந்த மாவின் முதற்பகுதியை, கர்த்தருக்கு அன்பளிப்பாகக் கொடுக்க வேண்டும்.
22 “இந்தக் கட்டளையை மறதியினால் தவறி நீங்கள் அநுசரியாமற்போனால், நீங்கள் அதற்காக என்ன செய்யவேண்டும்? 23 இந்தக் கட்டளைகளை கர்த்தர் உங்களுக்கு மோசே மூலமாகக் கொடுத்தார். உங்களுக்கு கொடுத்த அந்நாளிலேயே இக்கட்டளைகள் செயல்படத் துவங்கியது. அந்நாள் முதல் எல்லாக் காலத்திற்கும் இக்கட்டளைகள் உங்களுக்குத் தொடர்ந்து வரும். 24 எனவே, இஸ்ரவேலின் அனைத்து ஜனங்களும் திட்டமிடாமல் இந்தக் கட்டளைகளை காக்கத் தவறினால் அதற்கு என்ன செய்வீர்கள்? இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் இந்தத் தவறைச் செய்தால், அவர்கள் அனைவரும் சேர்ந்து, ஓர் இளங்காளையைப் பலி கொடுக்க வேண்டும். அதன் மணம் கர்த்தருக்கு மிகவும் விருப்பமானதாகும். அதோடு தானியக் காணிக்கையையும், பானங்களின் காணிக்கையையும் ஒரு காளையோடு காணிக்கையாக கொடுக்கவேண்டும். பாவநிவாரண பலியாக ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் பலி கொடுக்கவேண்டும்.
25 “ஜனங்களைத் சுத்தப்படுத்த ஆசாரியன் அனைத்து சடங்குகளையும் செய்ய வேண்டும். அவன் இவற்றை இஸ்ரவேல் ஜனங்கள் அனைவருக்காகவும் செய்யவேண்டும். தாங்கள் பாவிகள் என்பது அவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், எப்போது அவர்களுக்கு அது தெரிய வருகிறதோ, அப்போதே அவர்கள் கர்த்தருக்கு அன்பளிப்புச் செலுத்த வேண்டும். அவர்கள் தகனபலியையும் பாவ நிவாரண பலியையும் கொடுக்க வேண்டும். அதனால் அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்படும். 26 இஸ்ரவேலின் அனைத்து ஜனங்களும், அவர்களோடு வாழும் மற்ற ஜனங்களும் மன்னிக்கப்படுவார்கள். அவர்களுக்கு நாம் தவறு செய்துகொண்டிருக்கிறோம் என்று தெரியாதிருந்தால் அவர்களும் மன்னிக்கப்படுவார்கள்.
அகிரிப்பா மன்னன் முன் பவுல்
26 அகிரிப்பா பவுலை நோக்கி, “இப்போது உன்னைப்பற்றி நீயே பேசலாம்” என்றான். பின் பவுல் தனது கையை உயர்த்தித் தனக்கு சார்பாகப் பேசத் துவங்கினான். 2 அவன், “அகிரிப்பா மன்னரே, யூதர்கள் எனக்கு எதிராகச் சொன்ன எல்லா வழக்குகளுக்கும் நான் பதில் கூறுவேன். நான் இன்று உங்கள் முன்பாக நின்று இதைச் செய்வதை ஓர் ஆசீர்வாதமாகக் கருதுகிறேன். 3 நீங்கள் எல்லா யூத வழக்கங்களையும் யூதர்கள் வாதிடுகிற காரியங்களையும் மிகுதியாக அறிந்திருப்பதால் நான் உங்களோடு பேசுவதில் மகிழ்ச்சி கொள்ளுகிறேன். தயவு செய்து நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள்.
4 “எனது முழு வாழ்க்கையைக் குறித்து எல்லா யூதர்களும் அறிந்திருக்கிறார்கள். முதலில் எனது சொந்த நாட்டில் நான் வாழ்ந்த வகையையும், பின்னர் எருசலேமில் வாழ்ந்த வகையையும் பற்றி அவர்கள் அறிந்திருக்கிறார்கள். 5 இந்த யூதர்களுக்கு என்னைப் பல காலமாகத் தெரியும். அவர்கள் விரும்பினால் நான் ஒரு நல்ல பரிசேயன் என்று உங்களுக்குக் கூற முடியும். யூத மக்களில் பிற எல்லா பிரிவினரைக் காட்டிலும் பரிசேயர்கள் யூத மதவிதிகளைக் கவனமாகப் பின்பற்றுகிறார்கள். 6 தேவன் நமது முன்னோருக்குக் கொடுத்த வாக்குறுதியை நான் நம்புவதால் இப்போது நான் விசாரணையிலிருக்கிறேன். 7 நமது மக்களில் பன்னிரண்டு குலத்தினரும் பெறவேண்டுமென நம்பும் வாக்குறுதி இதுவே. இந்நம்பிக்கைக்காக யூதர்கள் தேவனுக்கு இரவும் பகலும் சேவை புரிகின்றனர். எனது மன்னரே, நான் இந்த வாக்குறுதியிலே நம்பிக்கை வைத்திருப்பதால் யூதர்கள் என் மீது பழி சுமத்துகின்றனர்! 8 தேவன் மரணத்தினின்று மக்களை எழுப்ப முடியுமென்பது நம்ப இயலாதது என ஏன் மக்கள் எண்ணுகின்றனர்?
9 “நான் பரிசேயனாக இருந்தபோது, நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவின் பெயருக்கு எதிராகப் பல காரியங்களைச் செய்ய எண்ணினேன். 10 எருசலேமில் விசுவாசிகளுக்கு[a] எதிராகப் பல காரியங்களைச் செய்தேன். விசுவாசிகளில் பலரைச் சிறையிலிடும் அதிகாரத்தைத் தலைமை ஆசாரியர் எனக்குக் கொடுத்திருந்தனர். இயேசுவின் சீஷர்கள் கொல்லப்பட்டபோது, அது ஒரு நல்ல செய்கை என்று நான் ஒப்புக்கொண்டேன். 11 ஒவ்வொரு யூத ஜெப ஆலயத்திலும் நான் அவர்களைத் தண்டித்தேன். இயேசுவுக்கு எதிராக அவர்கள் தகாதவற்றைப் பேசச் செய்வதற்கு முயற்சித்தேன். அம்மக்களிடம் நான் கொண்ட அதிக சினத்தால் அவர்களைக் கண்டு பிடித்துத் துன்புறுத்துவதற்காக வேறு நகரங்களுக்கு சென்றேன்.
2008 by World Bible Translation Center