Revised Common Lectionary (Semicontinuous)
135 கர்த்தரைத் துதிப்போம்!
கர்த்தருடைய நாமத்தைத் துதிப்போம்!
கர்த்தருடைய ஊழியர்களே, அவரைத் துதியுங்கள்!
2 தேவனுடைய ஆலய முற்றத்தில்,
கர்த்தருடைய ஆலயத்தில் நிற்கும் ஜனங்களே, அவரைத் துதியுங்கள்.
3 கர்த்தர் நல்லவர், எனவே அவரைத் துதியுங்கள்.
அவரது நாமத்தைத் துதியுங்கள், ஏனெனில் அது இன்பமானது.
4 கர்த்தர் யாக்கோபைத் தேர்ந்தெடுத்தார்.
இஸ்ரவேல் தேவனுக்கு உரியது.
5 கர்த்தர் உயர்ந்தவர் என நான் அறிகிறேன்!
நமது ஆண்டவர் எல்லா தெய்வங்களிலும் மேன்மையானவர்!
6 பரலோகத்திலும், பூமியிலும், கடல்களிலும் ஆழமான.
சமுத்திரங்களிலும், கர்த்தர் அவருக்கு வேண்டியவற்றையெல்லாம் செய்கிறார்.
7 பூமியின்மேல் மேகங்களை தேவன் உண்டாக்குகிறார்.
தேவன் மின்னலையும் மழையையும் உண்டாக்குகிறார்.
தேவன் காற்றையும் உண்டாக்குகிறார்.
8 எகிப்தின் எல்லா முதற்பேறான ஆண்களையும்,
எல்லா முதற்பேறான மிருகங்களையும் தேவன் அழித்தார்.
9 எகிப்தில் தேவன் பல அற்புதங்களையும் அதிசயங்களையும் நிகழ்த்தினார்.
பார்வோனுக்கும் அவனது அதிகாரிகளுக்கும் தேவன் அக்காரியங்களை நிகழப்பண்ணினார்.
10 தேவன் பல தேசங்களை முறியடித்தார்.
தேவன் வல்லமையுடைய ராஜாக்களைக் கொன்றார்.
11 எமோரியரின் ராஜாவாகிய சீகோனை தேவன் தோற்கடித்தார்.
பாஷானின் ராஜாவாகிய ஓகையும் தேவன் தோற்கடித்தார்.
கானானின் எல்லா தேசங்களையும் தேவன் தோற்கடித்தார்.
12 தேவன் இஸ்ரவேலருக்கு அவர்களின் தேசத்தைக் கொடுத்தார்.
அவரது ஜனங்களுக்கு தேவன் அத்தேசத்தைக் கொடுத்தார்.
13 கர்த்தாவே, உமது நாமம் என்றென்றும் புகழ்வாய்ந்ததாயிருக்கும்.
கர்த்தாவே, ஜனங்கள் உம்மை என்றென்றைக்கும் எப்போதும் நினைவுக்கூருவார்கள்.
14 கர்த்தர் தேசங்களைத் தண்டித்தார்.
ஆனால் கர்த்தர் அவரது ஊழியரிடம் தயவுடையவராயிருந்தார்.
15 பிற ஜனங்களின் தெய்வங்கள் வெறும் பொன்னாலும் வெள்ளியாலுமாகிய சிலைகள் மட்டுமே.
அவர்களின் தெய்வங்கள் ஜனங்கள் செய்த வெறும் சிலைகள் மட்டுமே.
16 சிலைகளுக்கு வாய்கள் இருந்தன, ஆனால் பேச முடியவில்லை.
சிலைகளுக்குக் கண்கள் இருந்தன, ஆனால் பார்க்க முடியவில்லை.
17 சிலைகளுக்குக் காதுகள் இருந்தன, ஆனால் கேட்க முடியவில்லை.
சிலைகளுக்கு மூக்குகள் இருந்தன, ஆனால் முகர்ந்துபார்க்க முடியவில்லை.
18 அச்சிலைகளைச் செய்த ஜனங்களும் அவற்றைப் போலாவார்கள்.
ஏனெனில் அச்சிலைகள் அவர்களுக்கு உதவ வேண்டுமென்று அவர்கள் நம்பினார்கள்.
19 இஸ்ரவேலின் குடும்பமே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்!
ஆரோனின் குடும்பமே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்!
20 லேவியின் குடும்பமே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்!
கர்த்தரைப் பின்பற்றுவோரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்!
21 கர்த்தர் சீயோனிலிருந்தும்,
அவரது வீடாகிய எருசலேமிலிருந்தும் போற்றப்படுகிறார்.
கர்த்தரைத் துதியுங்கள்!
எருசலேம் தண்டிக்கப்படும்
12 பிறகு, கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 13 “மனுபுத்திரனே, என்னை விட்டு விலகி எனக்கு எதிராகப் பாவம் செய்யும் எந்த நாட்டையும் நான் தண்டிப்பேன். நான் அவர்களுக்கு உணவு கொடுக்கப்படுவதை நிறுத்துவேன். நான் பசி காலத்திற்குக் காரணம் ஆவேன். அந்நாட்டை விட்டு மனிதர்களையும் விலங்குகளையும் விலக்குவேன். 14 நான் அந்நாட்டை அங்கு நோவா, தானியேல், யோபு போன்றவர்கள் வாழ்ந்தாலும் கூடத் தண்டிப்பேன். தங்கள் நற்குணத்தினால் அம்மனிதர்கள் தம் சொந்த உயிரைக் காப்பாற்றமுடியும். ஆனால் அவர்களால் முழு நாட்டையும் காப்பாற்ற முடியாது.” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.
15 தேவன் சொன்னார்: “அல்லது நான் காட்டு விலங்குகளை அந்நாட்டிற்கு அனுப்புவேன். அவ்விலங்குகள் அனைத்து ஜனங்களையும் கொல்லும், அக்காட்டு விலங்குகளால் எவரும் அந்நாட்டின் வழியாகப் பயணம் செய்ய முடியாது. 16 நோவா, தானியேல், யோபு ஆகியோர் வாழ்ந்தால் நான் அம்மூன்று பேரையும் காப்பாற்றுவேன். அம்மூன்று பேரும் தம் சொந்த உயிரைக் காப்பாற்றுவார்கள். ஆனால் நான் என் வாழ்வில் வாக்களித்தபடி, அவர்களால் மற்றவர்களின் உயிரை காப்பாற்றமுடியாது. அது அவர்களது சொந்த குமாரர்கள் அல்லது குமாரத்திகளாக இருந்தாலும் காப்பாற்றமுடியாது! அத்தீய நாடு அழிக்கப்படும்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.
17 தேவன் சொன்னார்: “அல்லது அந்நாட்டுக்கு எதிராகப் போரிட ஒரு பகைப்படையை அனுப்பலாம். அவ்வீரர்கள் அந்நாட்டை அழிக்கலாம். நான் அந்நாட்டிலுள்ள அனைத்து ஜனங்களையும் விலங்குகளையும் விலக்குவேன். 18 நோவா, தானியேல், யோபு ஆகியோர் அங்கே வாழ்ந்தாலும் நான் அம்மூன்று நல்லவர்களை மட்டுமே காப்பாற்றுவேன். அம்மூன்றுபேராலும் தங்கள் உயிரைத்தான் காப்பாற்ற முடியும். ஆனால் நான் என் உயிரின்மேல் அளித்த வாக்குறுதிப்படி அவர்களால் மற்றவர்களின் உயிரை, அது அவர்களது குமாரர்களாக அல்லது குமாரத்திகளாக இருந்தாலும் காப்பாற்றமுடியாது! அத்தீய நாடு அழிக்கப்படும்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.
19 தேவன் சொன்னார்: “அல்லது அந்நாட்டிற்கு எதிராக நான் கொள்ளை நோயை அனுப்பலாம். நான் என் கடுங்கோபத்தை அதன் மீது இரத்தச் சிந்துதலுடன் ஊற்றுவேன். நான் அந்நாட்டிலுள்ள எல்லா ஜனங்களையும் விலங்குகளையும் விலக்குவேன். 20 நோவா, தானியேல், யோபு ஆகியோர் அங்கு வாழ்ந்தாலும், நான் அம்மூன்று பேரை மட்டும் காப்பாற்றுவேன். ஏனென்றால் அவர்கள் நல்லவர்கள். அம்மூன்று பேராலும் தங்கள் உயிரை மட்டுமே காப்பாற்றமுடியும். ஆனால் நான் என் உயிரின்மேல் வாக்களிக்கிறேன், அவர்களால் மற்றவர்களின் உயிரை, அது அவர்களது குமாரர்களாகவோ, குமாரத்திகளாகவோ இருந்தாலும் காப்பாற்றமுடியாது!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவ்வாறு கூறினார்.
21 பிறகு எனது கர்த்தராகிய ஆண்டவர் மேலும் சொன்னார். “எனவே எருசலேமிற்கு இது எவ்வளவு கேடானது என்று எண்ணிப்பார். நான் இந்த நகரத்திற்கு எதிராக இந்நான்கு தண்டனைகளையும் அனுப்புவேன். நான் பகைவரின் படை, பசி, நோய், காட்டுமிருகங்கள் ஆகியவற்றை நகருக்கெதிராக அனுப்புவேன். நான் அந்நாட்டிலுள்ள ஜனங்களையும் விலங்குளையும் வெளியே அனுப்புவேன்! 22 ஜனங்களில் சிலர் அந்நாட்டிலிருந்து தப்பித்துக்கொள்வார்கள். அவர்கள் உதவிக்காகத் தம் குமாரர்களையும் குமாரத்திகளையும் உன்னிடம் அழைத்து வருவார்கள். பின்னர் அவர்கள் உண்மையில் எவ்வளவு மோசமானவர்கள் என்பதை நீ அறிவாய். நான் எருசலேமிற்குக் கொடுத்த துன்பங்கள் எல்லாம் பரவாயில்லை என்று நீ உணர்வாய். 23 அவர்கள் வாழும் வாழ்வையும் செய்யும் தீமையையும் நீ பார்ப்பாய். பிறகு, நான் அவர்களைத் தண்டித்ததற்குச் சரியான காரணம் உண்டென்று நீ அறிவாய்” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.
யூதரல்லாத பெண்ணுக்கு உதவி
(மத்தேயு 15:21-28)
24 இயேசு அந்த இடத்தைவிட்டு தீரு பகுதிக்குச் சென்றார். அங்கிருந்த ஒரு வீட்டுக்குச் சென்றார். அங்குதான் அவர் இருக்கிறார் என்பதை அங்குள்ள மக்கள் அறிந்துகொள்ளக்கூடாது என்று இயேசு விரும்பினார். ஆனால் அவர் மக்களின் கவனத்திலிருந்து தப்பிக்க முடியவில்லை. 25 அவர் அங்கு இருப்பதை ஒரு பெண் கேள்வியுற்றாள். அவளது சிறு குமாரத்தி, அசுத்த ஆவியை உடையவள். எனவே, அவள் இயேசுவிடம் வந்து அவரது பாதத்தில் விழுந்து வணங்கினாள். 26 அவள் யூதர்குலத்துப் பெண் அல்ல. அவள் கிரேக்கப் பெண். சீரோபேனிக்கேயாவில் பிறந்தவள். அவள் தன் மகளைப் பிடித்த பிசாசை விரட்டுமாறு கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள்.
27 அந்தப் பெண்ணிடம் இயேசு, “பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்களிடம் கொடுப்பது சரியன்று. முதலில் பிள்ளைகள் தேவையான அளவு உண்ணட்டும்” என்றார்.
28 “அது உண்மை தான் ஆண்டவரே. பிள்ளைகள் உண்ணாத உணவுத் துணுக்குகளை மேசைக்கடியில் உள்ள நாய்கள் உண்ணலாமே” என்று அவள் பதில் சொன்னாள்.
29 பிறகு அந்தப் பெண்ணிடம் இயேசு, “இது நல்ல பதில். நீ போகலாம். பிசாசு உன் மகளை விட்டுப் போய்விட்டது” என்றார்.
30 அந்தப் பெண் வீட்டுக்குப் போனாள். தன் குழந்தை படுக்கையில் படுத்திருப்பதைக் கண்டாள். பிசாசு அவளை விட்டு நீங்கி இருந்தது.
2008 by World Bible Translation Center