Revised Common Lectionary (Semicontinuous)
96 கர்த்தர் செய்த புதுகாரியங்களைப்பற்றி ஒரு புதுப்பாடலைப் பாடுங்கள்!
உலகம் முழுவதும் கர்த்தரை நோக்கிப் பாடட்டும்.
2 கர்த்தரை நோக்கிப் பாடுங்கள்!
அவரது நாமத்தை ஸ்தோத்தரியுங்கள்!
ஒவ்வொரு நாளும் அவர் நம்மை பாதுகாப்பதைப் பற்றிச் சொல்லுங்கள்!
3 தேவன் உண்மையிலேயே அற்புதமானவர் என்பதை ஜனங்களுக்குக் கூறுங்கள்.
தேவன் செய்கிற வியப்பிற்குரிய காரியங்களை எங்குமுள்ள ஜனங்களுக்குச் சொல்லுங்கள்.
4 கர்த்தர் மேன்மையானவர், துதிகளுக்குரியவர்.
வேறெந்த “தெய்வங்களைக்” காட்டிலும் அவர் அஞ்சத்தக்கவர்.
5 பிற தேசங்களின் “தெய்வங்கள்” எல்லாரும் வெறும் சிலைகளே.
ஆனால் கர்த்தரோ வானங்களை உண்டாகினவர்.
6 அவருக்கு முன்னே அழகிய மகிமை ஒளி வீசும்.
தேவனுடைய பரிசுத்த ஆலயத்தில் பெலனும் அழகும் விளங்கும்.
7 குடும்பங்களும் தேசங்களும்
கர்த்தருக்கு மகிமையும், துதியும் நிரம்பிய பாடல்களைப் பாடுவார்கள்.
8 கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்.
உங்கள் காணிக்கைகளோடு ஆலயத்திற்குச் செல்லுங்கள்.
9 கர்த்தருடைய அழகான ஆலயத்தில் அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.
கர்த்தரைப் பூமியிலுள்ள ஒவ்வொருவரும் தொழுதுகொள்ளுங்கள்.
10 கர்த்தரே அரசரென்று தேசங்களுக்கெல்லாம் அறிவியுங்கள்!
அதனால் உலகம் அழிக்கப்படுவதில்லை.
கர்த்தர் ஜனங்களை நியாயமாக அரசாளுவார்.
11 விண்ணுலகங்களே!
மகிழ்ச்சிகொள்ளுங்கள்.
பூமியே! களிகூரு.
கடலும் அதிலுள்ளவையும் களிப்பால் குரல் எழுப்பட்டும்!
12 வயல்களும் அதில் விளைந்துள்ள அனைத்தும் மகிழ்ச்சிகொள்ளட்டும்!
வனத்தின் மரங்களே, பாடி மகிழுங்கள்!
13 கர்த்தர் வருகிறார், ஆதலால் மகிழ்ச்சியடையுங்கள்.
கர்த்தர் உலகை ஆளுகை செய்ய வந்துகொண்டிருக்கிறார்.
நீதியோடும் நியாயத்தோடும்
அவர் உலகை ஆளுகை செய்வார்.
இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப்
29 யூதாவின் ராஜாவாகிய ஆசா 38வது ஆண்டில் இருக்கும்போது ஆகாப் இஸ்ரவேலின் புதிய ராஜாவானான். இவன் சமாரியாவில் இருந்து 22 ஆண்டுகள் ஆண்டான். 30 இவனும் கர்த்தருக்கு விரோதமாகப் பாவங்களைச் செய்தான். அவனுக்கு முன்னால் உள்ளவர்களைவிட மோசமாக இருந்தான். 31 நேபாத்தின் குமாரனான யெரொபெயாம் செய்த அதே பாவங்களைச் செய்வது இவனுக்குப் போதுமானதாயிருக்கவில்லை. அவன் சீதோனியரின் ராஜாவாகிய ஏத்பாகாலின் குமாரத்தி யேசபேலை மணந்து பாகாலையும் தொழுதுகொண்டான். 32 சமாரியாவில் பாகாலுக்கு ஆலயத்தைக் கட்டினான். ஆலயத்தில் பலிபீடமும் அமைத்தான். 33 ஒரு சிறப்பான தூணையும் அஷெராவை தொழுதுகொள்ள உருவாக்கினான். அவனுக்கு முன்பு இஸ்ரவேலின் ராஜாவாக இருந்த மற்றவர்களைவிட இவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை அதிகமாகக் கோபப்படுத்தினான்.
34 இவனது காலத்தில், ஈயேல் எனும் பெத்தேல் ஊரான் எரிகோவைக்கட்டினான். அப்போது, அவனது மூத்தகுமாரனான அபிராம் மரித்தான். நகர வாயில்களை அமைக்கும் போது, இளைய குமாரன் செகூப் மரித்தான். நூனின் குமாரனான யோசுவாவின் மூலமாகப் பேசியபொழுது இது நடக்குமென்று கர்த்தர் சொன்னைதைப்போலவே இது நடந்தது.
பவுலும்-போலி அப்போஸ்தலர்களும்
11 நான் கொஞ்சம் முட்டாளாக இருந்தாலும் என்னை நீங்கள் பொறுத்துக்கொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன். ஏற்கெனவே என்னை நீங்கள் பொறுத்துக்கொண்டிருக்கிறீர்கள். 2 நான் உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன். இது தேவனிடமிருந்து வந்த பெருமை ஆகும். நான் உங்களைக் கிறிஸ்துவுக்குத் தருவதாய் வாக்குறுதி கொடுத்தேன். கிறிஸ்துவே உங்களது ஒரே மணவாளன். அவரது தூய மணப் பெண்ணாக உங்களை அவருக்குக் கொடுக்க விரும்புகிறேன். 3 எனினும் கிறிஸ்துவிடமுள்ள உங்கள் முழு அர்ப்பணிப்பில் இருந்து விலகும்படி உங்கள் மனம் கெடுக்கப்படுமோ என்று அஞ்சுகிறேன். பாம்பின் (சாத்தான்) தந்திர வழிகளின் மூலம் ஏவாள் வஞ்சிக்கப்பட்டதைப்போல உங்களுக்கும் நேரும். 4 நாங்கள் சொன்னதற்கு மாறாக இயேசுவைப் பற்றி போதிக்க வரும் எவரையும் நம்பி சகித்துக்கொள்கிறீர்கள். நீங்கள் எங்களிடமிருந்து பெற்ற ஆவிக்கும் நற்செய்திக்கும் மாறுபட்ட ஆவியையும் நற்செய்தியையும் ஏற்றுக்கொள்கிறீர்கள். ஆகவே என்னையும் சகித்துக்கொள்ளுங்கள்.
5 மகாபிரதான அப்போஸ்தலரைவிட நான் ஒன்றிலும் குறைவு உள்ளவன் அல்லன் என எண்ணுகிறேன். 6 நான் பயிற்சி பெற்ற பேச்சாளன் இல்லை என்பது உண்மைதான். ஆனால் எனக்குப் போதிய ஞானம் உண்டு. நாங்கள் அவற்றை உங்களுக்கு எல்லா வழிகளிலும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளோம்.
2008 by World Bible Translation Center